Friday, June 26, 2009

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்,மற்றும் தமிழுணர்வாளர்களை கைது செய்ததை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்

பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், பெரம்பலூர் மாவட்ட பெரியார்திராவிடர் கழக செயலாளர் இரா.இலட்சுமணன், ம.தி.மு.க கோவை மாவட்ட மாணவரணிச்செயலாளர் புதூர்சந்திரசேகர் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்த தமிழக அரசைக்கண்டித்தும், தமிழுணர்வாளர்களை விடுதலைசெய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் 26-06-2009 வெள்ளிக் கிழமை மாலை 4.00மணிக்கு சேலம் மத்திய தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர்மார்ட்டின் தலைமை தாங்கினார். ஈழ தமிழர்களை படுகொலை செய்ய இந்திய அரசால் சிங்கள ராணுவத்திற்கு வழங்கு வதற்குக்காக ஆயுதுங்கள் ஏற்றி சென்ற லாரிகளை கோவையில் பொதுமக்கள்ஆதரவோடு தடுத்து நிறுத்தி போராடிய பெரியார் திராவிடர் கழகப் பொதுசெயலாளர் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் தோழர்களை தேசிய பாதுகப்பு சட்டத்தில்கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் கோகுல கண்ணன் மற்றும் ஆத்தூர் சண்முகம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் , சேலம் காமராசு ஆகிய தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள் .
நன்றியுரை தோழர் டேவிட் கூறினார் 100 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கழந்து கொண்டனர்.























































Thursday, June 25, 2009

பார்ப்பன வலையில் சிக்கிய மாயாவதி

உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது தொடர்பான கட்டுரை ஒன்றை ‘இந்து’ நாளேட்டில்
(ஜூன் 5) வித்யா சுப்ரமணியம் என்பவர் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள சில கருத்துகள்:

ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தில் பிறந்த மாயாவதி, தனது சொந்த வலிமையால், உ.பி.யில் முதல்வர் பதவி வரை உயர்ந்தது உண்மையிலே முன் எப்போதும் நடந்திடாத ஒரு சாதனை தான். தலித் மக்களுக்கான கட்சி என்ற தளத்தை - அவர் விரிவுபடுத்தினார். இதனால் தலித் அல்லாதவர்களின் வாக்குகள் அவருக்கு கிடைத்தன. அதுதான் அவரது வெற்றிக்கு வழிவகுத்தது. ஆனால், மாயாவதிக்கு கூடுதலாக வாக்களிக்க வந்த தலித் அல்லாத ஓட்டர்கள் - சரித்திர காலம் தொட்டு, தலித் விரோதிகள். அதுவே மாயாவதிக்கு நெருக்கடியை உருவாக்கிவிட்டது.
தலித் அல்லாதோரின் வாக்குகளையே தனது வெற்றிக்கு சார்ந்து நிற்க வேண்டியிருந்ததால் மாயாவதி மனுவாதிகளின் பிடிக்குள் சிக்கிக் கொண்டார். பகுஜன் சமாஜ் கட்சியை கன்சிராம் தொடங்கியதே மனுவாதிகளுக்கு எதிராகத்தான். மனுவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டிய நிலை உருவானது. தமது தேர்தல் சின்னமான யானைக்குக்கூட மதச் சாயம் பூசினார். “இது சாதாரண யானை அல்ல; கணேசன், பிரம்மா, விஷ்ணு, மகேஷ் பகவான்களின் குறியீடு” என்று பேசத் தொடங்கினார். போர்க் குணமிக்கதாக முன் வைக்கப்பட்ட யானை குறியீடு - மதவாதக் குறியீடாக மாறிப் போனது. பதவிக்கு வந்த மாயாவதி - தனது செல்வாக்கையும், புலமையையும் வளர்த்துக் கொண்டு இந்தியாவின் பிரதமர் பதவியில் அமருவதில் ஆர்வம் காட்டினார். அவரது இரண்டு வருட கால ஆட்சி மக்களிடையே அதிருப்தியைத்தான் பெற்றுத் தந்தது. 5 ஆண்டு மன்மோகன்சிங் ஆட்சி மீதான வெறுப்பைவிட இரண்டு ஆண்டு மாயாவதி ஆட்சி மீதான வெறுப்பு அதிகமாகவே இருந்தது.
தனது கடந்த கால ஆட்சிக் காலங்களில் தலித் தலைவர்களுக்கு சிலை, நினைவிடங்கள் அமைத்த அவர்களின் தொண்டினை அங்கீகரித்த மாயாவதி - அதன் வழியாக தலித் மக்களின் ஆதரவைப் பெற்றார். தீண்டாமை தடுப்புச் சட்டங்களை உறுதியாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். ஆனால், அடுத்து டெல்லியில் பிரதமர் பதவியை குறி வைத்து செயல் தொடங்கியபோது அவரது செயல் திட்டங்கள் மாறத் தொடங்கின. அவரது ஆலோசகர்களும் தவறான வழிகாட்டினர். மக்களுக்கு பயன் தராத திட்டங்களுக்கு அரசு பணம் விரயமாக்கப்பட்டன. உருப்படியான திட்டங்கள் ஏதும் இல்லை. தனக்கு வைக்கப்பட்ட சிலைகளைக்கூட - அதில் தனக்கு திருப்தி இல்லாததால் புதிய சிலைகளை வைப்பதற்கு உத்தரவிட்டார்.
தனது உறுதியான ஆதரவாளர்களான சமான்ய மக்களான தலித் மக்களை ஓரம் கட்டி விட்டு, பார்ப்பன முன்னேறிய சாதியினரை பதவிகளில் அமரவைத்தார். தலித் மக்கள் தங்கள் மீது உயர்சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதை மாயாவதியிடம் எடுத்துக் கூறியும் அவர் காது கொடுக்கவில்லை. உயர்பதவிகளில் பார்ப்பனர்களை அமர வைத்த மாயாவதி 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 20 பார்ப்பன வேட்பாளர்களை நிறுத்தினார்.
மாநிலத்தில் 9 சதவீத எண்ணிக்கையுள்ள பார்ப்பனர்களுக்கு 20 இடங்களை வழங்கி, 21 சதவீதமுள்ள தலித் மக்களுக்கு 17 இடங்களை மட்டுமே ஒதுக்கினார். ‘குண்டர்களின் ராஜ்யம்’ நடத்தியதாகக் கூறப்பட்ட முலாயம் சிங் கட்சியிலிருந்து ஏராளமான குண்டர்கள் மாயாவதி கட்சிக்குத் தாவினர். பார்ப்பன உயர்சாதியினரும், முலாயம் கட்சி குண்டர்களும் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தியதை தலித் மக்கள் விரும்பவில்லை. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத மாயாவதி, தன்னுடைய புகழைப் பரப்பும் முயற்சிகளிலே ஆர்வம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் தனது மாநிலத்தைவிட பிற மாநிலங்களில் பிரச்சாரம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினார். பிரதமரின் கனவு தகர்ந்தது மட்டுமல்ல; ஒவ்வொரு தேர்தலிலும் அவருக்கு அதிகரித்துக் கொண்டே வந்த ஓட்டு சதவீதம் - நடந்து முடிந்த தேர்தலில் 27.42 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்று ‘இந்து’ ஏடு கட்டுரை கூறுகிறது.

தோல்விக்குப் பிறகு - தலித் மக்கள் மீது மீண்டும் தனது கவனத்தை செலுத்த தொடங்கியிருப்பதாகவும், அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. அத்துடன் உ.பி.யில் சிறப்புத் திட்டத்தின் கீழ் கன்னோஜ் மற்றும் ஜலான் மாவட்டங்களில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 70 சதவீத இடங்கள் தலித் மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவீத இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கும் 3 சதவீத இடங்கள் திறந்த போட்டிக்கும் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 97 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்துள்ள அவரது அறிவிப்பு பார்ப்பனர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Wednesday, June 17, 2009

ஆயுத வாகனங்களை மறித்தது குற்றம் என்றால்...

ஆயுத வாகனங்களை மறித்தது குற்றம் என்றால்...
நாடாளுமன்ற அனுமதியே இல்லாமல் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது ஏன்?
கோவை கூட்டத்தில் வைகோ கேள்வி
ஆயுத வாகனங்களை மறித்ததாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தோழர்கள் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து 8.6.2009 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க. நடத்திய மாபெரும் பொதுக் கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை:

உலகெங்கும் பல்வேறு நாடுகளில் துன்பத்திலும் துயரத்திலும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிற இதயத்தோடு இனி விடியல் எப்போது? இருள் எப்பொழுது விலகும் என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிற தமிழர்கள்; அவர்களின் பார்வை கவனம் ஆறரைக் கோடி தமிழ்மக்கள் வாழுகிற தமிழகத்தின் பக்கம் திரும்பி இருக்கிற நேரத்தில், இனி அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதை வளரும் இளம் தலை முறையினரிடம் எடுத்துச் சொல்லும்வகையில் அருமைச் சகோதரர் கொளத்தூர் மணி அவர்கள், அரிய பல கருத்துகளை காலத்தின் அருமைகருதி இரத்தினச் சுருக்கமாக கூறி அமர்ந்து இருக்கின்றார்.

விடுதலை இராஜேந்திரன் சிலவினாக்களை எழுப்பினார். பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அதனுடைய பொதுச்செயலாளர் சிறைப்பறவை என்று விளிக்கத்தக்க வகையில் அடக்குமுறைக்கு பலமுறை ஆளாகிய கோவை இராமகிருஷ்ணன் அவர்கள்மீது - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கோவை மாநகர் மாவட்டம் மாணவர் அணி அமைப்பாளர் அருமைத்தம்பி புதூர் சந்திரசேகர் மீது - பெரம்பலூர் மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் அருமைச் சகோதரர் லட்சுமணன் அவர்கள்மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு இருக்கிறது. இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த தோழர்கள் பலர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த மண்ணின் வழியாக - எங்கள் பூமியின் வழியாக - ஈழத்தில் எங்கள் சொந்த சகோதர, சகோதரி களைக் கொன்று ஒழிப்பதற்கு இனக்கொலையை தீவிரப்படுத்துவதற்கு ஆயுதங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன என்ற செய்தி காட்டுத் தீயாக பரவியபோது, அதைத் தடுக்கவேண்டும் என்ற தன்மானத் தமிழ் உணர்வோடு, அறவழியில் தடுத்து நிறுத்தியதற்கு தேசப்பாதுகாப்புச் சட்டத்தை ஏவி இருக்கிறார் தமிழக முதல் அமைச்சர்.

அந்தச் செய்தி வந்தநேரத்தில் நான் கோவை இராமகிருஷ்ணனிடம் தொலைபேசியில் பேசி னேன். செல்லும் வாகனங்களை நாங்கள் அறவழியில் தடுக்கிறோம் என்று சொன்னார். வன்முறைக்கு துளியளவும் இடம்கொடுக்காத வகையில் நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம் அறப்போர் நடத்துகிறோம் என்று சொன்னார். தமிழகத்தில் மான உணர்ச்சி செத்துப்போய்விடவில்லை என்பதற்கு அடையாள மான போராட்டம் உங்கள் போராட்டம். வாழ்த்து கிறேன். என் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இதில் என்ன தவறு? இனி மேலும் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு வாகனங்கள் ஈழத் தமிழ்மக்களைக் கொல்வதற்கு புறப்படுமானால், அதைத்தடுப்போம் - மறிப்போம் - பறிப்போம் என்று நானே சொன்னேன். வழக்கு போடு. இன்னும் சொல்வேன் நான். இந்திய அரசு இங்கிருந்து ஆயுதங்களைத் தந்து ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்வதற்கு -
நான் இராஜபக்சேவுக்கு இந்த மண்ணில் இருந்து தெரிவிக்கிறேன். விடுதலைப் புலிகளை ஆதரித்த வர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று நீ கொக்கரிக்கிறாய் விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று உன் சகோதரர் கொத்தபயா ராஜபக்சே கொக்கரிக்கிறான் - இப்பொழுதுதான் நீங்கள் வினையை விதைத்து இருக்கிறீர்கள் இனிமேல்தான் விபரீதத்தை அறுவடை செய்வீர்கள்.

தமிழகத்தில் உணர்ச்சி செத்துப்போய்விட வில்லை. 14 பேர் தீக்குளித்து மடிந்து இருக்கிறார்கள். வீரத்தியாகி முத்துக்குமார் எடுத்துவைத்த அந்த நெருப்பு 14 வீரத் தமிழ் இளைஞர்கள் தணலுக்கு தங்கள் உயிர்களைத் தந்து இருக்கிறார்கள். அந்த நெருப்பு சுடுகாட்டில் அணைந்து போய் இருக்கலாம். எங்கள் நெஞ்சில் எரிகிறது. தன்மான உணர்வுள்ள வாலிபர்கள் நெஞ்சில் எரிந்து கொண்டு இருக்கிறது.

கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிட்டத்தைப் போல, என்றோ நடந்த சம்பவங்கள் 1960, 1970 தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு ஈழத்து இளம் பிள்ளைகளை கொண்டுவந்து நிறுத்தியது. புதிய புலிகள் தமிழ் ஈழ விடுதலை புலிகளானார்கள். அதைவிட ஆயிரம் மடங்கு கொடுமை இப்பொழுது நடத்தப்பட்டு இருக்கிறது. இதைத்தமிழக மக்கள் மனதில் விதைக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு.

அப்படியானால் இந்தத் தேசத்தின் பாதுகாப்புக்கு எதிராக வாகனங்களைக் குறுக்கே மறித்தது சரிதானா? என்று சிலமேதாவிகள் கேட்கலாம். ஈழத்தமிழ் மக்களைப் படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுதம் அனுப்பியது - ராடார் கொடுத்தது - தமிழர்களைக் கொலைசெய்வதற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து அவர்களுக்கு ஆதரவு தந்தார்களா? யார் அந்த அனுமதியைக் கொடுத்தது? நாடாளுமன்றத்தில் அதற்குரிய அனுமதி கிடைத்ததா?

1998 ஆம் ஆண்டு அடல்பிகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கிறபோது ஈழத்தில் தமிழர்கள் இரத்தம் ஓடுகிறது. படுகொலை செய்யப்படுகிறார்கள் என்ற குரல் வேதனைக் குரலாக எழுந்தபோது அவர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவு ஆயுதங்கள் தருவதில்லை ஆயுதங்கள் விற்பதில்லை என்று ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு.

இலங்கை அரசுக்கு இவ்வளவு ஆயுதங்களையும் கொடுத்ததற்குப்பிறகு இந்த யுத்தத்தை இந்திய அரசு நடத்தியது. இந்திய அரசின் துரோகத்தை நாங்கள் மக்கள் மன்றத்தில் சொன்னோம். இன்றைக்கு நாதியற்றுப் போய்விட்டார்கள் தமிழர்கள் என்ற நிலையை உருவாக்குகிறார்கள். நாங்கள் பாதுகாப் புக்கு விரோதமானவர்கள் அல்ல. இந்தியாவின் பாதுகாப்புக்கு இராமகிருஷ்ணன் விரோதமானவர் அல்ல - இலட்சும ணனோ, சந்திரசேகரோ இந்தியா வின் பாதுகாப்புக்கு விரோதமானவர்கள் அல்ல. இந்த அடக்குமுறைக்கு அவர்கள் பயப்படுகிறவர்களும் அல்ல.

மூன்றரை ஆண்டுகள் தடா கைதியாக சிறையில் அடக்குமுறையை ஏற்றவர்தான் கோவை இராம கிருஷ்ணன். இந்த மேடையில் கூட்டத்துக்கு தலைமை தாங்குகின்ற சகோதரர் கொளத்தூர் மணி எண்ணற்றமுறை சிறைக்கு சென்றவர்தான். பாது காப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இப் பொழுதுதான் விடுதலை ஆகிவந்திருக்கிறார். எங்களாலா இந்த நாட்டுக்கு ஆபத்து? இந்த நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து? கிடையாது.

இந்தநாட்டின் பாதுகாப்புக்கு கேடுவிளைவித்தது மன்மோகன் சிங் அரசு. 1965 மொழிப் போராட் டத்தை இராஜேந்திரன் நினைவூட்டினார். 1967 இல் அண்ணா முதல்வரானார். மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது. இரயில் பெட்டிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வன்முறை பரவி விட்டது என்று காங்கிரஸ்காரர்கள் கூச்சலிட்டனர். சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப் பட்டது. இத்தனை இரயில்பெட்டிகளை மாணவர்கள் தீயிட்டுக் கொளுத்தி இருக்கிறார்களே இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? ஏன் நீங்கள் காவல் துறையைப் பயன்படுத்தவில்லை? எதற்கு உங்களுக்கு அரசாங்கம் எதற்கு உங்களுக்கு அதிகாரம் என்று கேட்டார்கள்.

அதற்கு அண்ணா அவர்கள் சொன்னார்கள் முதலமைச்சராக நான்கு இரயில் பெட்டிகளைக் கொளுத்தினால் திரும்ப நான்கு இரயில் பெட்டிகளைத் தயாரிக்க முடியும். ஒரு மாணவன் உயிர்போய்விட்டால் அவனது உயிரை திரும்பக்கொடுக்க முடியாது என்றார். இருதயத்தில் ஏற்படுகிறவேதனை அங்கே பச்சிளம் குழந்தை களும் கொல்லப்படுகிறார்கள் - நமது சகோதரிகள் கொல்லப்படுகிறார்கள் - தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறார்கள்.
இந்திய அரசின் ஆயுதங்கள் போகின்ற காரணத்தினால் தமிழர்கள் கொல்லப்படு கிறார்கள் என்ற செய்தி பரவிய காரணத்தினால் தடுக்கின்ற உணர்வு வராதா? ஆயுதத்தோடு ஒருவன் வருகிறான் பச்சிளம் குழந்தைகளையும் தாய்மார்களையும் கொல்வதற்கு ஒருவன் வருகிறவனைத் தடுக்க நினைப்பதுதான் மனிதநேயம். தடுக்கின்ற முயற்சியில் ஈடுபடும்போது அது எல்லைமீறிக்கூடப் போகலாம்.

இந்த உணர்வில்தானே இராமகிருஷ்ணனும் தோழர்களும் இந்த கோவை மாநகரத்து வீதிகளில் திரண்டார்கள். அவர்களை சிறையில் நீங்கள் வைத்து இருக்கலாம். உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்கள் கோடிக்கணக்கான தமிழர்கள் தரணி எங்கும் பல கண்டங்களில் சிதறிக்கிடக்கின்ற தமிழர்கள் அந்த ஒருசெய்தி வந்தவுடன் கோயம்புத்தூரில் ஆயுதங்கள் ஏற்றிச்செல்கின்ற இராணுவவண்டிகளைத் தமிழர்கள் தடுத்தார்கள் என்ற ஒருசெய்தி இந்தத் தமிழனின் தன்மானத்தைத் தரணியில் தாய்த் தமிழகத்தில் தன்மானம் செத்துவிடவில்லை என்ற உணர்வை உண்டாக்கிக் காட்டியது.

இந்திய அரசு நடந்து முடிந்திருக்கிற படுகொலைகளுக்கு முழுமுதல் காரணம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம். ஐ.நா. மன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு அந்தத் தீர்மானத்தை வெற்றிபெற வைத்தது என்ற செய்தியை இங்கே குறிப்பிட்டார்கள். ஏனென்றால் இந்த யுத்தத்தை நடத்திய குற்றவாளி இந்திய அரசு. ஆதாரம் இல்லாமல் நான் எதுவும் பேசவில்லை. அவசரப்பட்டு நான் எதையும் பேசவில்லை.

இது ஒரு முக்கியமான கூட்டம் நாங்கள் தேர்தலுக்காகவும் பதவிகளுக்காகவும் கட்சி நடத்துகிறவர்கள் அல்ல. பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல அதை ஒரு கருவியாகப் பயன்படுத்துவோம். அதை பயன்படுத்தாவிடில் என் சகோதரர் கணேச மூர்த்தி நாடாளுமன்றத்துக்குச் சென்றார். இன்று பேசியிருக்கிறார் அவருக்குக் கிடைத்த குறைந்த நேரத்தில் - இந்திய அரசுதான் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

சோனியா காந்தி காங்கிரசுஸ் கட்சிக்குத் தலைமை தாங்குகிறார். காங்கிரசுஸ் தோற்கடிக்கப் பட்ட கோவையில் நின்றுநான் பேசுகிறேன். 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் இருந்தபோது சோனியாகாந்தியின் திட்டம் நிறைவேறவில்லை. இந்தக் காங்கிரசுஸ் கட்சிக்குத் தலைமை தாங்கி வழிகாட்டுகின்ற தகுதி அவருக்குக் கிடையாது என்று இன்று மண்டியிட்டுக் கொண்டிருக்கிற சங்மா அன்று சொன்னார். இன்று சலுகைக்குக் காத்துக்கிடக்கின்ற சரத்பவார் சொன்னார் - கோபித்துக் கொண்டு கதவை ஓங்கி அடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றார் சோனியாகாந்தி. சீதாராம் கேசரி பின்னாலே சென்று கெஞ்சினார் மன்றாடினார்.

அதன்பிறகு ஐந்து ஆண்டுகள் கழிந்தன அடுத்தத் தேர்தலில் தேவகௌடா பிரதமரானார். காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. அவர் நினைத்ததை நடத்தக்கூடிய இடத்தில் இல்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் அந்த அரசில் பங்கெடுத் தது. ஒருவரி அதுவும்கூட நேரடிக் குற்றச்சாட்டல்ல ஜெயின்கமிஷன் அறிக்கை. சந்தேகத்தை எழுப்புகின்ற ஒருவாக்கியம் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அமைச்சரவையில் நீடிக்குமானால் காங்கிரசுஸ் ஆதரவுதராது என்று காங்கிரசுஸ் கட்சி அறிவித்தது. சோனியா காந்தி அறிவிக்கச் செய்தார். அந்த அரசு கவிழ்ந்தது. தி.மு.க. மீது அவ்வளவு ஆத்திரம் இருந்தது அல்லவா சோனியா காந்திக்கு.

அதன்பிறகுதான் 1998 ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமரானார். மீண்டும்
1999 ஆம் ஆண்டு அதே வாஜ்பாய் மீண்டும் பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டு
5 ஆண்டுகள் அவர் ஆட்சி நடத்தியபோது மிக சாதுர்யமாக ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டார். 2003 ஆம் ஆண்டு இறுதியில் 2004 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்துடனே கூட்டணி அமைப்பது என்ற முடிவுக்கு வந்தார்.

துரதிருஷ்டவசமாக அந்தக் கூட்டணியில் இணைய வேண்டிய துர்பாக்கி யத்துக்கு நாங்களும் ஆளானோம். ஆனால், அமைச்சர் அவையில் சேர்வதில்லை என்று முடிவெடுத்தோம். எந்த அழுத்தம் கொடுத்தாலும் சரி நாங்கள் மந்திரி சபையில் சேர்வதில்லை என்று முடிவெடுத்தோம்.

தமிழ்நாட்டில் தமிழ் இனத்தின் தலைவர் என்று தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொண்ட கருணாநிதி, சோனியா காந்தி அம்மையாருடைய சலுகைகளை எதிர்பார்க் கின்ற இடத்துக்கு வந்தார். மந்திரி சபையில் அவர் கேட்ட இலாக்காக்கள் கிடைத்தது. சோனியா காந்தியைப் பொறுத்தவரை மிகசாதுர்யமாக திட்டமிட்டார். நாம் எது செய்தாலும் கருணாநிதி தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எதிர்க்கப் போவதில்லை இதுதான் தமிழர்களின் வரலாற்றில் நேர்ந்த மிகப்பெரிய அழிவுக்கான காரணங்களில் ஒன்றாகும்.

எடுத்த எடுப்பிலேயே இலங்கையோடு இராணுவ ஒப்பந்தம்போட திட்ட மிட்டார். அதுமுதலில் நமக்குத் தெரியாமற்போயிற்று. எதிர்ப்புக் காட்டினோம். நேரடியாகச் சந்தித்தோம். சோனியாகாந்தியிடமே கேட்டேன் எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாதுஎன்றார் இன்றைக்கு தமிழர்களின் இரத்தத்தில் குளித்துவிட்டு கொக்கரித்து கொண்டு இருக்கின்ற ராஜபக்சே இலங்கை பிரதமராக வந்தான் தில்லிக்கு. இந்தியா - இலங்கை இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது இலங்கை அதிபர் சந்திரிகா வருகிறார் கையெழுத்தாகும் என்றார்.

நான் பதறி அடித்துக் கொண்டு ஓடி மன்மோகன் சிங்கிடம் கேட்டேன். அப்படி ஒன்றும் நடக்காது என்றார். சந்திரிகா வந்தார் இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்றார்கள். மீண்டும் சென்று கேட்டோம் மன்றாடினேன் முறையிட்டேன் பல தலைவர்களின் வீடுகளுக்குச் சென்றேன். கம்யூனி°ட் தலைவர்களிடம் சென்றேன். அவர்கள் இதுகூடாது என்றார்கள்.
ஆனால், ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகா விட்டாலும் அதன் சரத்துகள் நிறைவேற்றப்படும் என்று கொழும்புக் குச் சென்று நமது வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் சொன்னார். மறுநாள் பிரதமரைச் சந்தித்து இது அக்கிரமம் அல்லவா என்றபோது அது அவருடைய தனித்த கருத்து என்று சொன்னார்.

நீங்கள் பலாலி விமானதளத்தையா பழுதுபார்த்துக் கொடுக்கப்போகிறீர்கள். அங்கி ருந்து ஏவப்பட்ட விமானங்கள்தானே நவோலியில் புனிதபீட்டர் தேவாலயத்தில் குண்டுவீசி 168 பேர் குழந்தைகளும் பெண்களும் கொல்லப் பட்டார்கள். எங்கள் தமிழ் மக்கள் சாடிக்கப்பட்டார்கள். அந்த விமானதளத்தைப் பழுதுபார்த்துக் கொடுக்காதீர்கள் என்று சொன்னோம். பழுதுபார்த்துக் கொடுத்தீர்கள்.

கோவையில் இராமகிருஷ்ணன் ஆயுதம் தாங்கிவந்த வாகனத்தை தடுத்தார் என்று வழக்கு போடுகிற கருணாநிதியைக் கேட்கிறேன். நாங்கள் செல்கிற வாகனத்தில் எங்கள் மக்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை எடுத்துச் செல்கிறாயா என்று சந்தேகம் வந்தது. இந்தியாவைப் பாதுகாக்க ஆயுதம் என்றுநாங்கள்நினைக்கவில்லை. எங்கள்மக்களைக்கொன்று குவிக்கப்படுவதற்கு இந்த ஆயுதம் அனுப்பப்படுகிறது என்ற எண்ணம் வலுத்ததனால் நாங்கள் தடுத்தோம்.

காரணமில்லாமல் தடுக்கவில்லையே? இந்த ஐந்தாண்டு காலத்தில் நீங்கள்
செய்த தொடர்ந்து அடுத்தடுத்து அனுப்பி வைத்தீர்கள் ஆயுதங்களை!
அந்த அடிப்படையில் மீண்டும் இங்கிருந்து ஆயுதங்கள் செல்கின்றன
பீரங்கிகள் செல்கின்றன கனரக ஆயுதங்கள் செல்கின்றன என்ற செய்திவந்த
போது நாங்கள் நம்பினோம். இதில் என்ன தவறு? நீ யோக்கியனா? ஆயுதம் கொடுக்காத யோக்கியனா? நாங்கள் தடுத்தது தவறு என்றால். நீ ஆயுதமே ஐந்தாண்டுகளாக கொடுக்கவில்லை என்றால் நாங்கள் நடுவீதியில் மறித்தது தவறு என்று சொல்.

நீ கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுதங்களைக் கொடுத்தாய் - விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தாய் - விமானதளத்தைப் பழுதுபார்த்துக் கொடுக்க மாட்டோம் என்றார் பிரணாப் முகர்ஜி என்னிடம். மன்மோகன் சிங் நல்லமனிதர் என்று நினைத்தேன். நாணயமானவர் என்று நினைத்தேன். மன்மோகன் சிங்கும் சரி நட்வர் சிங்கும் சரி பிரணாப் முகர்ஜியும் சரி எல்லோரும் பொய்சொன்னார்கள். அந்த விமான தளம் புதுப்பித்துக் கொடுக்கப்பட்டது என்ற உண்மை 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி டொமினிக் பெராரே என்கின்ற இலங்கை விமானப்படைத் துணைத்தளபதி சர்வதேச செய்தியாளர்களை அழைத்துக் கொண்டுபோய் பலாலி விமானதளத்தைச் சுட்டிக் காட்டி இது பழுதுபார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டது இதை செய்து கொடுத்தது இந்தியவிமானப்படை இதை செய்து கொடுத்தது இந்திய விமானப்படை நிபுணர்கள். இதற்கு செலவழிக்கப் பட்ட பணம் இந்திய அரசின் பணம் என்று கூறினான்.

நான் கேட்கிறேன் இது என்ன சோனியா காந்தியின் பாட்டன் வீட்டுப்பணமா? யாருடைய பணம்? ஆக, எங்கள் வரிப்பணத்தில் நீ பழுதுபார்த்துக் கொடுத்தாய்.
நீ பழுதுபார்த்துக் கொடுத்த இடத்தில் இருந்து புறப்பட்ட விமானம் செஞ் சோலையில் குண்டு வீசியது. நீ கொடுத்த பணத்தில் இ°ரேல் நாட்டுக்காரனிடம் வாங்கிய விமானம் குண்டுவீசியது அதில் 61 சின்னஞ்சிறு அநாதைச்சிறுமிகள் தாயை தந்தையை யுத்தக்களத்தில் இழந்துவிட்ட அனாதைச் சிறுமிகளை செஞ்சோலையில் துடிக்கத் துடிக்கக் கொன்றாய். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றார்கள். அதை நான் செலவழித்துக்கொடுத்த பழுதுபார்த்துக் கொடுத்த விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானங்கள் குண்டுவீசின.

இந்தக் குற்றச்சாட்டுக்கு உன்னுடைய பதில் என்ன? நீ மறுக்கமுடியாது. இதை எழுத்துமூலமாக பிரதமரிடம் தந்திருக்கிறேன் மறுக்க முடியாதபடி ஆவணங் களோடு நாங்கள் தந்திருக்கிறோம்.
(தொடரும்)

Wednesday, June 10, 2009

ஈழத் தமிழர் மறுவாழ்வுத் திட்டங்களை சர்வதேச அமைப்புகள் வழியே நிறைவேற்ற வேண்டும்! கோவை கூட்டத்தில் - தா. பாண்டியன் வற்புறுத்தல்

ஈழத் தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை இலங்கை அரசு மூலம் நிறைவேற்றாமல் அய்.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் வழியாகவே செயல் படுத்த வேண்டும் என்று கோவையில் நடந்த கூட்டத் தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில பொதுச் செயலாளர் தா. பாண்டியன் வற்புறுத்தினார். அவரது உரை: நம்மோடு இந்த மேடையில் இருக்க முடியாது சிறையில் இருக்கும் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ம.தி.மு.க. மாணவரணி பொறுப்பாளர் சந்திரசேகர், பெரம்பலூர் மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் இலட்சுமணன் மற்றும் வேறு பல தோழர்கள் அநியாயமாக கைது செய்யப்பட் டுள்ளதை கண்டிக்க நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

நாமும் சரி, சிறைக்குள் இருப்போரும் சரி, கடந்த சில ஆண்டுகளாகவே அண்டை நாடு என்றால் மட்டுமல்ல, நம்முடைய சொந்த உறவுகள் என்ற அடிப்படையிலும் தமிழ் மக்களின் உரிமை களுக்காக சில கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்திருக்கிறோம். போரை நிறுத்தச் சொல்லியும், தமிழர்களைக் கொன்று குவிக்கும் அரசுக்கு, ஆயுதங்களை வழங்காதே என்று வற்புறுத்தியும், சமஉரிமையை வழங்க மறுத்தாலும் முதலில் அடிப்படை உரிமைகளையாவது கொடுக்கத் தயாரா என்று கேட்டும் அல்லது போராடும் இயக்கத்துக்கு எதிராக, ஆயுதங்களை வழங்காமலாவது இருங்கள் என்றும், நாம் வற்புறுத்தி வந்தோம். தனித்தும் கேட்டோம். மத்திய அரசிடம் இணைந்தும் கூட - இலங்கைக்கு கோரிக்கை வைத்தோம். வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமானால் நாம் ஆத்திரப் பட்டு, கடுமையான போராட்டங்கள்கூட எதையும் நடத்தவில்லை. சுவீடனில் ஒரு சாமியார் அடித்துக் கொல்லப்பட்டார். மற்றொரு சாமியார் அடித்துக் காயப்பட்டார் என்றவுடன், பஞ்சாபில் நான்கு நாட்கள் நாடே நிலைகுலைந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, ரயில் பெட்டிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
ரயிலைக் கொளுத்தினால்தான், டெல்லிக்காரன் காதுக்கு எட்டும் என்று பஞ்சாப் காரன் புரிந்து வைத்திருக்கிறான். ஆனால் தமிழர்கள் புரிந்து கொள்வதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்படுகிறது. (கைதட்டல்) ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப் படுகிறார்கள் என்றவுடன், உடனே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. தாக்குதலை நிறுத்தப் போகிறாயா, இல்லையா? என்று கேட்கப்படுகிறது. கேட்கப்பட வேண்டியது நியாயம்தான். ஆனால், இந்தத் தமிழன் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்படும்போது ஒரு கண்டனக் குரல்கூட கேட்கவில்லையே ஏன், என்று என் இதயம் கேட்குமா? கேட்காதா? அரை நூற்றாண்டுக்கு மேல் நடக்கும் இந்தப் போராட்டம் நேர்மையான போராட்டமா? இல்லையா, என்பதையாவது சொல்!
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் ஒப்பந்தம் போட்டு அங்கே படையை அனுப்பி வைத்தார். அது ஒரு காலகட்டம். அப்போது படையை அனுப்பினாய், இப்போது படைக்கலன்களை அனுப்பி வைத்தாய். நான் இந்த நாட்டின் வரி செலுத்தக்கூடிய ஒரு குடிமகன்.
என்னுடைய வரிப்பணத்தில் எனது சொந்தத் தாயைக் கொல்லுவதற்கு ஏனடா, துப்பாக்கியை அனுப்பி வைக்கிறாய் என்று கேட்கக்கூடிய உரிமை எனக்கு உண்டா? இல்லையா? தமிழினத் தலைவர் என்று மகிழும் கலைஞர் கருணாநிதி, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி டெல்லிக்கு அழைத்த போது நானும் வந்தேனே! பிரதமரிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு என்னைக் கேட்டபோது, நானும் பிரதமரிடம் வலியுறுத்தினேனே! உடனே - ராஜீவ் படுகொலைக்குப் போய்விடு வார்கள். விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டு பட்டியலை வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். எத்தனை காலத்துக்கு இதைத் திரும்பத் திரும்ப கூறப் போகிறார்கள்? பன்னாட்டுப் படை உதவிகளோடு - ராஜபக்சே என்ற கொடுங்கோலன் தமிழர்களைக் கொன்று குவிக்கிறானே, உலக நாடுகளும், மனித குலமும் கண்டிக்கிறதே, நீ மட்டும் ஏன் கண்டிக்க மறுக்கிறாய்? டெல்லிக்குப் போனதுபோது மருத்துவர் ராமதாசு கோரிக்கைகளை எழுதிக் கொண்டே வந்து எல்லோருக்கும் கொடுத்தார். அப்போது அவர் மகன் மத்திய அமைச்சர். நான் கூட கேட்டேன், மிகுந்த நம்பிக்கையோடு வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே என்று, அவர் சொன்னார். இவர்கள் மீது நம்பிக்கை இல்லை. எனவே தான் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன் என்று (சிரிப்பு) அப்போது நான் பிரதமரிடம் கேட்டேன்.
பாவமன்னிப்பு வழங்கக் கூடிய உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப் கூட போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் போது, பிரதமராகிய நீங்கள், உத்தரவாகக்கூட கூற வேண்டாம். ஒரு பொது வேண்டுகோளாக, போரை நிறுத்த இந்தியா விரும்புகிறது என்று கூறக் கூடாதா என்று கேட்டேன். அதற்கு பிரதமர், அப்படிச் சொன்னால், இரு நாடுகளுக்கும் நல்லுறவு பாதிக்கும் என்றார். தமிழர்களைக் கொன்று குவிக்கும் எலும்புக் கூடுகளின் மீதுதான், இரு நாடுகளின் நல்லுறவு கட்டப்படுகிறதா என்று கேட்கிறேன்.

இப்போது இலங்கைக்கு எதிராக அய்.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட் டுள்ளது. நியாயமாக இந்தியா தானே, இத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். இதற்கு இந்தியாவுக்கு சகல உரிமையும் இருக்கிறதே. பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கே நடந்த கலவரத்தால் இங்கே அகதிகள் வரத் தொடங்கி விட்டார்களே. இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்களே. இந்தக் காரணத்தைக் காட்டி, இந்தியா, இலங்கைக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கலாமே! அவன் அடிப்பான், அடி வாங்கிக் கொண்டு அநாதையாக ஓடி வருகிறவர்களுக்கு சோறு போட இந்தியாவா? அடிப்பதை நிறுத்து; இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களை திருப்பி எடுத்துக் கொள் என்று கேட்க இந்தியாவுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? கிளிநொச்சியைப் பிடித்த பிறகு இன்னும் 400 மீட்டர் பாக்கி; மூன்றே நாளில் போர் முடிந்து விடும் என்று ராஜபக்சே அறிவித்தான். ஆனால், 400 மீட்டரை பிடிப்பதற்கு 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
முற்றாக போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பிறகு, இந்திய அரசு என்ன கோரிக்கையை வைத் திருக்க வேண்டும்? சர்வதேச பத்திரிகையாளர்களை தொலைக்காட்சியினரை போர் நடைபெற்ற7 பகுதிக்கு உடனே அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டுமா? வேண்டாமா? தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாவது நேரில் சென்று பார்வையிட அனுமதி கோரியிருக்க வேண்டாமா? இதைச் செய்யாமல், 20000 மக்களை இனப்படுகொலை செய்த அரசோடு இந்தியாவின் நல்லுறவு கெட்டு விடக் கூடாது என்று கூறுகிறீர்களே; இது நியாயம் தானா?

விடுதலைப்புலிகள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாகக் கூறி தடை போட்டவர்கள். இனப் படுகொலை செய்யும் இராஜபக்சே அரசை கொலை வெறி பிடித்த அரசு என்று அறிவித்திருக்க வேண்டாமா? இன்று உலகம் முழுதும் இலங்கையில் நடந்தது ‘இனப்படுகெலை’ என்று கூறுகிறது. இனப்படு கொலை செய்யும் நாடு எப்படி ஒரு நட்பு நாடாக இருக்க முடியும்? அது ஒரு ஜனநாயக நாடுமல்ல; மனித உரிமைகளை மதிக்கும் நாடுமல்ல; அது ஒரு காட்டுமிராண்டி நாடு. அந்த நாட்டோடு பேசி - தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வாங்கித் தரப் போவதாக இப்போது கூறுகிறார்கள். இதையும் நீ தான் கூறிக் கொண்டிருக்கிறாயே தவிர, அவன் இது பற்றி ஒரு வரியாவது சொன்னானா? அவன் சொல்ல மாட்டான். அவனை உன்னால் பேச வைக்க முடியாது. அவனை பேச வைக்க - சர்வதேச நாடுகள் அய்.நா. வழியாக எடுத்த முயற்சிகளுக்கும் நீ முட்டுக் கட்டைப் போட்டு விட்டாய். நீயும் அவனைப் பேச வைக்க மாட்டாய். பேச வைக்க முயலுவோரையும் செய்ய விட மாட்டாய். ஆக - இலங்கைத் தமிழர் களுக்கு முன்பைவிட தமிழர்களாகிய நாம், ஆற்ற வேண்டிய பெரும் கடமை இப்போது நமக்கு வந்து விட்டது. வரலாறு நம்மீது அதை சுமத்தியிருக்கிறது.

இப்போது கோவை இராமகிருட்டிணன் உள்ளிட்டோர் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. முதலில் - அடிப்படையான கேள்வி, யாரிடமிருந்து யார், இந்த தேசத்தைப் பாதுகாப்பது? பா.ம.க.வைச் சார்ந்த காடுவெட்டி குரு மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தைப் போட்டபோது, நான் முதலமைச்சரை சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது குரு என்ன குற்றம் செய்தார் என்று கேட்டபோது, உடனே வீட்டில் தயாராக வைத்திருந்த ஒரு திரையில் அவரது உரையை முதலமைச்சர் எனக்கு போட்டுக் காட்டினார். அவரும் ஏதேதோ, “செந்தமிழில்” தான் பேசியிருந்தார். எல்லாம் குடும்பத்தைப் பற்றிய கதைகளாக இருந்தன. எனக்கு எதுவுமே புரியவில்லை என்பதால் நிறுத்தச் சொன்னேன். முதலமைச்சர் அதற்கு மேல் என்னால் பார்க்க முடியாத மனநிலைக்கு வந்துவிட்டதாகக் கருதிக் கொண்டார். அப்போது நான் கேட்டேன் - குரு பேச்சில், ஏதேதோ, தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றி எல்லாம் பேசுகிறார். அவர் பேச்சிலே அம்மா வருகிறார். பிள்ளை வருகிறார். எங்கே தேசம் வருகிறது? பாதுகாப்பு வருகிறது? என்று கேட்டேன். அப்போது முதல் தான் முதல்வருக்கு என் மீது கோபமே வந்தது. என்னுடைய காருக்கு தீ வைக்கப் பட்டது. இதுவரை தீ வைத்த எந்தக் குற்றவாளியை யாவது பிடித்து கூண்டில் நிறுத்தினார்களா? தீ வைத்த குற்றவாளியைப் பிடித்து, தண்டிக்காதவர்கள், தீ வைப்பதைத் தடுக்கப் போன, கோவை இராமகிருட்டிணனையும், தோழர்களையும் பிடித்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வார்கள் என்றால், அந்தச் சட்டத்தைத்தான் தீ வைத்துப் பொசுக்க வேண்டும். அப்படி ஒரு சட்டமே தேவையில்லை.

அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரை தேசப் பாதுகாப்புக்கு தொடர்பே இல்லாமல் கைது செய்துள்ளார்கள் என்று நீதிமன்றம் விடுதலை செய்த பிறகும் இந்த அரசு திருந்தவில்லை. எனவே தேசப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற்று கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனி°ட் கட்சி சார்பில் வற்புறுத்துகிறேன். இதை வலியுறுத்தி எங்கள் கட்சியில் தீர்மானமும் நாளை வரவிருக்கிறது. போர் முடிந்த பகுதியில் உடனே சர்வதேச பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் நேரில் சென்று பார்வையிட இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை ராஜபக்சே அரசு மூலம் செய்யக் கூடாது. அய்.நா. சர்வதேச அமைப்புகள் வழியாக மட்டுமே மறுவாழ்வுத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். தாயைக் கொன்றவனே பிள்ளைக்குப் பாலூட்ட அனுமதிப்பதா? கொல்லப்பட்ட மக்களின் பட்டியலை தயாரித்து, அதற்குக் காரணமானவர்களை யுத்தக் குற்றவாளிகள் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும். சிந்திய ரத்தத்துக்கு நியாயம் கேட்க வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் - ரசிகர் மன்றங்களின் ரசிகர்களாகி விடாமல் போர்க்குணம் கொண்ட வர்களாக போராட வேண்டும் என்று கூறி முடித்தார்.
- நமது செய்தியாளர்

வவுனியா இராணுவ முகாம் ஆயுத களஞ்சியசாலையில் திடீர் தீ விபத்து

வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் வெடித்து நாசமாகியுள்ளன.

இந்த தீ விபத்து இன்று மாலை 5.15 மணியளவில் ஏற்பட்டதாகவும் தொடர்ச்சியாக அரை மணித்தியாலத்திற்கு வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் நகரமே அதிர்ந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. இராணுவத்தின் 211 ஆவது படை தலைமையகத்தின் ஆயுத களஞ்சிய சாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தலைமையகம் இராணுவ முகாமிற்கும் விமான படை முகாமிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ச்சியாக வெடிச்சத்தங்கள் கேட்டமையினால் நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் மத்தியில் பெரும் பீதியும் அச்சமும் ஏற்பட்டது.
நகரத்திற்கு வருகை தந்திருந்தவர்கள் அவசர அவசரமாக தங்களது வீடுகளை நோக்கி விரைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பெண் ஜனனி ஜனநாயகம் தோல்வி: அதிக வாக்குகள் பெற்று சாதனை

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் ஜனனி ஜனநாயகம் வெற்றி பெறத் தவறினார். எனினும் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாகப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

லண்டன் பகுதியிலிருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டிருந்தார் ஜனனி. அவருக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் பேராதரவு தெரிவித்திருந்தனர். இலங்கைப் பெண்ணான பிரபல பாடகி மாதங்கி மாயா அருள் பிரகாசம் (எம்.ஐ.ஏ.) வும் ஆதரவு தெரிவித்திருந்தார். ஜனனி வெற்றி பெற்றால் இலங்கைத் தமிழர்களின் அவலம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவர் மூலமாக ஒலிக்கும், விடிவு காலம் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக ஜனனி தோல்வியுற்றார். இருப்பினும் கூட, 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்து விட்டார் ஜனனி.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகள் இதுவரை கிடைத்ததில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஜனனி வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த சில கட்சிகளின் வேட்பாளர்களை விட ஜனனி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார். லண்டன் பகுதியில் எட்டு எம்.பி. இடங்கள் உள்ளன. இதில், 3 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சியும், ஆளும் தொழிலாளர் கட்சி 2 இடங்களையும் பெற்றன. லிபரல் டெமாக்ரட்ஸ், கிரீன் கட்சி, இங்கிலாந்து சுயேச்சைக் கட்சி ஆகியோருக்கு தலா ஓர் இடம் கிடைத்தது. ஜனனிக்கு 1 இலட்சம் வாக்குகள் கிடைத்திருந்தால் அவர் எம்.பி. ஆகியிருப்பார்.

Sunday, June 7, 2009

இன்று முல்லைத்தீவு, அன்று "நான்கிங்'

லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் நியூஸ் நாளேடு சிங்கள இராணும் நடத்திய கொடுமையான இன ஒழிப்பை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, உலகம் முழுதும் இது பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. போரில்லாத பகுதியாக சிறிலங்கா இராணுவம் அறிவித்த பகுதியில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் அகதிகளாக தஞ்சமைடந்திருந்தனர்.
ஆனாலும் அங்கே கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதை தொடர்ந்து சிறிலங்கா இராணும் பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டது. ஆனால் மக்களை படுகொலை செய்தது சிங்கள இராணுவம் தான் என்றும் ஏப்ரல் இறுதியில் தொடங்கிய இந்த படுகொலை மே 14ம் தேதி வரை நீடித்தது என்றும் அய்.நா.வின் ரகசிய ஆவணங்களை ஆதாரமாகக் காட்டி, அந்த நாளேடு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த மூன்று வார காலத்தில் ஒவ்வொரு நாளும் 1000 தமிழர்கள் படுகொலைக்கு உள்ளாக்கியதாக அதிர்ச்சியான செய்தியை அந்த ஏடு வெளியிட்டிருக்கிறது. இப்படி படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள் எண்ணிக்கை 20,000த்துக்கும் அதிகமாகும். இது இலங்கை அரசு கூறுவதைவிட மூன்று மடங்கு அதிகம். செயற்கைக்கோள் வழியாக எடுக்கப்பட்ட படங்கள், அய்.நா.வின் ஆவணங்கள், நேரில் பார்த்த சாட்சிகள், நிபுணர்களின் கருத்துகளை அந்த நாளேடு ஆதாரங்களாக முன்வைத்து செர்பியன் இனப்படுகொலை, டார்ஃபசுர் இனப்படுகொலைகளோடு இது ஒப்பிடக்கூடியது என்று எழுதியுள்ளது.

இந்தப் படுகொலைக்கு உதவிய நாடுகளில் ஒன்று சீனா, ஆனால் சீனாவே இத்தகைய இனப்படுகொலையை சந்தித்த வரலாறுகளை அந்த நாடு மறந்துவிட்டது போலும், அந்த வரலாற்று சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறோம்.

சீனாவின் தலைநகரமாக இருந்த நான்கிங் நகரத்தின் மீது ஜப்பானிய இராணுவம், 1937ல் ஆக்கிரமித்தது. அந்நகரத்தில் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, உடைமைகளை சூறையாடி அதிகாரிகளையும், பொதுமக்களையும், ஆக்கிரமித்து ஜப்பானிய இராணுவம் கொன்று குவித்தது. 6 வாரங்களில் நடத்திய இந்தப் படையெடுப்புக்கு பிறகு, 1937ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நான்கிங்#கை கைப்பற்றிவிட்டதாக ஜப்பான் அறிவித்தது. இப்போது சிங்களராணுவம் அறிவித்த போரில்லாப் பகுதி என்ற நாடகம் தான் அன்றும் ஜப்பான் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டு அந்தப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் கொன்று புதைக்கப்பட்டனர். இதில் அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம், வரலாற்று ஆசிரியர்கள் இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 40,000 என்று குறிப்பிடுகிறார்கள்.

1937ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி நான்கிங் நகரை ஆக்கிரமிக்க ஜப்பான் இராணும் வந்தபோது இராணுவ அதிகாரிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அந்நிய நாட்டின் தலைநகரம் ஒன்றை ஆக்கிரமிப்பது இதுவே ஜப்பான் இராணுவத்துக்கு முதல் முறை. எனவே இராணுவத்தினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இராணுவத்தின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும். மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்று அந்த இராணுவ அறிவிப்பு கூறியது. இது ஒரு ஏமாற்று அறிவிப்பாக இருந்தாலும், அப்படி ஒரு அறிப்பை கூட சிங்கள இராணும் வெளியிடத் தயாராக இல்லை. மாறாக சிங்கள இராணுவத்திடம் ""பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலுக்கு என்று வெளிப்படையாகவே சிங்கள உயர் அதிகாரிகள் கூறினார்கள்.

1937 டிசம்பர் 9ம் தேதி இராணுவத்திடம் சரணடைந்து விடுமாறு, விமானத்திலிருந்து துண்டுப் பிரசுரங்களை வீசியது. அப்போது இந்த ஆக்கிரமிப்பு நடந்த பகுதியில் சர்வதேச பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இப்போது சர்வதேச ஊடகங்களையோ, தொண்டு நிறுவனங்களையோ அனுமதிக்காமல் சாட்சிகளே இல்லாத இனப்படுகொலையை சிறிலங்கா செய்து முடித்திருக்கிறது. அப்போது சர்வதேசப் பார்வையாளர் குழு ஜப்பானோடு அவசரமாக தொடர்பு கொண்டு மூன்று நாள் போரை நிறுத்துமாறு கோரியது. போர் நிறுத்தம் செய்யப்பட்டால் இன அழிப்பை நிறுத்தலாம். சீன இராணுவத்தினர் நான்கிங்கை விட்டு வெளியேறுவார்கள், ஜப்பான் அந்தப்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்ளட்டும் என்ற யோசனையை முன் வைத்தது. ஜப்பான் அதை ஏற்றுக்கொள்ள முன்வந்தது. ஆனால் சீனாவின் சர்வாதிகாரி சியாங்கே ஷேத்தான் ஏற்கவில்லை. ஆனால் இப்போது போரை நிறுத்தக்கோரி எத்தனையோ வேண்டுகோள் இலங்கை அரசின் முன் வைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளலும் போர்நிறுத்தத்திற்கு முன்வந்தனர். ஆனால் பேரினவெறி பிடித்த இலங்கை ஏற்க மறுத்துவிட்டது.

இராணுவத்தின் படுகொலையிலிருந்து உயிர்பிழைக்க ஏராளமான அகதிகள் யாங்க்ஸ்டி ஆற்றில் நீந்தி உயிர்தப்ப கருதி கரை வந்து சேர்ந்து போது ஆற்றின் கரையிலேயே இராணும் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 50,000 உடல்கள் ஆற்றின் கரையில் கிடந்ததாக ஜப்பானிய இராணுவத்தினர் தங்கள் தலைமை அதிகாரியிடம் தெரிவித்தனர்.

நான்கிங் இனப்படுகொலையை வரலாறு மன்னித்துவிடவில்லை.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது யுத்த குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இந்தப் படுகொலை விசாரணைக்கு வந்தது. சர்வதேச இராணுவ நடுவர் மன்றம் இந்த இன அழிப்பில் உயிரிழந்தோர் 2,60,000 பேர் என்று அறிவித்தது. இரண்டாம் உலகப்போரில் தோல்வியை தழுவிய ஜப்பான் தனது குற்றத்தை நீதி மன்றத்தின் முன் ஒப்புக்கொண்டது. டோக்கியோவில் ஜப்பான் இராணுவ தலைமையத்தில் நடந்த விசாரணையில் இந்த இன அழிப்புக்கு தலைமையேற்று நடத்திய இராணுவ தளபதிகள் யுத்தக் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.

மூத்த இராணுவ அதிகாரியான மட்சூயி இனப்படுகொலைகளைத் தடுக்கவேண்டிய கடமையிலிருந்து தவறிய முதற்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அப்போது ஜப்பான் வெளிநாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஹிரோட்டா கோக்கி சர்வதேச யுத்த நெறிமுறைகளை மீறியதாக இரண்டாவது குற்றவாளியாக்கப்பட்டார். 1948 நவம்பர் 12ம் தேதி மேற்குறிப்பிட்ட இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

இதற்குப் பின்னர், சீனாவுக்கு உருவாக்கிய இழப்புகளுக்காக ஜப்பான் இழப்பீட்டுத் தொகை தரவேண்டும் என்று சீனா வலியுறுத்தியது. ஜப்பான் இழப்பீடு எதையும் வழங்க முடியாது என்று அறிவித்தது. அண்மைக் காலங்களில் பதவிக்கு வந்த ஜப்பான் பிரதமர்கள் நடந்த சம்பவத்துக்காக வருத்தம், மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும் அவை அதிகாரபூர்வமற்றவை என்று கூறி சீனா ஏற்கவில்லை. இறுதியாக 1995 ஆகஸ்ட் 15ம் தேதி அன்று (இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரண் அடைந்த நாள்) ஜப்பான் பிரதமர் தோமிச்சி முறாயமா, ஜப்பான் செய்த தவறுக்காக தேசத்தின் சார்ப்பில் மன்னிப்புக் கோரினார்.

வரலாறு உணர்த்தும் பாடம் இது, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப் படுகொலைசெய்த இராபக்சே, கோத்த பயராஜபக்சே, சரத் பொன்சேகா உள்ளிட்ட இனப்படுகொலையாளர்கள் யுத்தக் கைதிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெரும் காலம் வந்தே தீரும்.

ஈழப் பிரச்சினை, இனி செய்ய வேண்டியது என்ன? பிரபாகரன் பற்றிய தகவல்: எது உண்மை?

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற கேள்விக்காண விடையை தரும் இந்த ஆய்வுக் கட்டுரை, நடந்து முடிந்துள்ள கடும் பின்னடைவிலிருந்து அடுத்தக் கட்டத்துக்கு போராட்டத்தை நகர்த்தும் செயல் உத்திகளையும் முன்வைக்கிறது. கொழும்பு வீரகேசரி நாளேட்டில் வெளிவந்த இக்கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி வெளியிடுகிறோம்.

விடுதலைப்புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கடந்த 18ஆம் தேதி தெரிவித்திருந்தது. அது மட்டுமல்லாது கடந்த 18ஆம் தேதியிலிருந்து தென்னிலங்கையில் பெரும்பான்மை மக்கள் பல வகையான வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.

போரில் வெற்றி கண்டுவிட்டதாகக் கூறி மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள் சிறுபான்மை தமிழ் இனத்தை மேலும் அந்நியப்படவே வைத்துள்ளன. பாரிய மோதல்கள் கடந்த 18ஆம் தேதி முடிவடைந்த பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவந்த கருத்துக்களை உற்று நோக்கும் போது சில தகவல்களைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

அதாவது நாலாம் கட்ட ஈழப்போரானது இலங்கை அரசினால் மட்டும் முன்னெடுக்கப் படவில்லை. அகில உலகத்தினதும் ஆதரவுகளுடன் தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தப் போரில் இலங்கை அரசுக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா என்பன ஆயுதங்களை வழங்கியிருந்தன. ஜப்பான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், வியட்நாம், தமிழகத்தின் தற்போதைய ஆளும் கூட்டணி, முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் என்பன நேரடியான ஆதரவு களை வழங்க மேற்குலகம் உட்பட ஏனைய நாடுகள் மறைமுகமான ஆதரவுகளை வழங்கியிருந்தன.

அகில உலகத்தின் இந்த போர் முனைப்புக்களை விடுதலைப்புலிகளும் அறிந்திருந்தனர். 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட போது நாலாம் கட்ட ஈழப்போரில் இந்திய மத்திய அரசு கொண்டிருந்த தீவிரத்தை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

அந்தநிலையில் தான் வவுனியா வான்படைத் தளத்தின் மீதான வான்புலிகளின் தாக்குதல் மூலம் இந்தியாவின் பின்புலத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருந்தனர். (அந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் இரண்டு இந்தியப் பொறியாளர்கள்)

இந்திய பின்புலம் வெளிக்கொண்டுவரப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகளின் சமர்க்கள உத்திகளில் அதிக மாறுதல்களை அவதானிக்க முடிந்திருந்தது. அதாவது, விடுதலைப்புலிகள் தமது நிலங்களை தக்கவைப்பதற்கு அதிக சிரத்தை எடுக்கவில்லை. மறுவளமாக நிலங்கள் குறுகிய போதும் ராணுவத்துக்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்தும் தாக்குதல்களிலேயே அவர்கள் அதிக அக்கறை செலுத்தியிருந்தனர்.

இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து அனைத்துலகத்தினதும், ஐ.நா. சபையினதும் ஆதரவுகளுடன் நடத்திய இந்தப் போரை முறியடிப் பதற்கு விடுதலைப்புலிகள் தனியாக ஆயுதங்களை மட்டும் நம்பியிருக்கவில்லை. அதனை முறியடிப்பதற்கு தந்திரங்களும், இராஜதந்திர அணுகுமுறைகளும் பெருமளவில் கையாளப்பட்டுள்ளன.

அனைத்துலக சமூகம் மீதான இராஜதந்திர அழுத்தங்களின் பெரும் பகுதியை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டிருந்தனர். தந்திரமான உத்திகளை விடுதலைப்புலிகள் களத்தில் பயன்படுத்திக் கொண்டனர். அதனூடாகத்தான் இந்த போரின் இறுதிக்கட்டம் பயணிக்கத் தொடங்கியது. ஆனால் விசுவமடுவை படையினர் கைப்பற்றும் வரையில் அதிகளவில் பொதுமக்களின் இழப்புகளின்றி நகர்ந்த இந்தப் போர் அதன் பின்னர் பெரும் மனிதப்பேரவலங்களை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை அரசுக்கும், இந்திய அரக்கும், அனைத்துலகின் அழுத்தங்களுக்கும் எதிராக முப்பத்து மூன்று வருடங்கள் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ் மக்கள் எத்தகைய அவலங்களைச் சந்தித்தி ருந்தனர் என்பதை கடந்த ஐந்து மாதகாலப்பகுதியில் அனைத்துலக சமூகம் புரிந்து கொண்டது. ஆனாலும் போரைத் தூண்டியதில் அவர்கள் காண்பித்த அக்கறைகளை மனிதப்பேரவலத்தை நிறுத்துவதில் காண்பிக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே 18ஆம் தேதி வரையிலும் 7500 தொடக்கம் 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், 20,000இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்திருக்கலாம் எனவும் ஐ.நாவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் 20,000இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும், 50,000இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும், 30,000 பேர் அங்கவீனமாகி இருப்பதாகவும் வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் போர் மோசமான மனிதப்பேரவலங்களுடன் ஓய்வுக்கு வந்ததே தவிர அதனை நிறுத்துவதற்கு யாரும் முன்வரவில்லை.

பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் இறுதியான மூன்று நாட்களும் முக்கியமானவை. சனிக்கிழமை (16) தொடக்கம் திங்கட்கிழமை (18) வரையிலும் பல சம்பவங்கள் மிகவும் குறுகிய நேரத்தில் நடைபெற்றிருந்தன. பெருமளவான மக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான காயப்பட்ட மக்களையும், போராளிகளையும் பாது காப்பாக ஒரு மூன்றாம் தரப்பின் ஊடாக சரணடையவைக்கும் முயற்சிகளும் புலிகளால் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தன.

காயப்பட்ட போராளிகளை பாதுகாப்பாக நகர்த்தும் பொறுப்புகள் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசனிடமும், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடமும், கட்டணைத் தளபதி கேணல் ரமேஸிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஏனைய போராளிகளும் பெருமளவான தளபதிகளும் 17ஆம் தேதி இரவு வரையிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதல்களில் வெளியேறிருந்தனர்.

ஆனால் இந்த அணுகுமுறைகளை அனைத்துலக சமூகமும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளும் புறந்தள்ளியிருந்தன. மேற்குலகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்த போதும் இந்தியா அதனை தடுத்துவிட்டது.

தமிழக முதல்வர் கருணாநிதி, அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களம், இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரோபேட் ஓ பிளேக், ஐ.நாவின் செயலாளருக்கான முதன்மை அதிகாரி விஜய் நம்பியார், நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அனைத்துலகத்தின் மூத்த ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரிடமும் காயமடைந்த மக்களினதும், போராளிகளினும் பாதுகாப்புகளை உறுதிப்படுத்தும் உதவிகள் கேட்கப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருந்தார் ஐ.நா. செயலளாருக்கான முதன்மை அதிகாரி விஜய் நம்பியார். அதாவது சரணடைபவர்களின் பாதுகாப்புகளை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என நம்பியார் தெரிவித்திருந்தார். அதற்கு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ''த டைம்ஸ்'' இதழின் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என்பவரின் தகவல் சாட்சியாக உள்ளது. (அவரது கட்டுரை தனியே வெளியிடப் பட்டுள்ளது).

ஆனால் 18ஆம் தேதி அதிகாலை அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் போன்றோர் உட்பட சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் இது ஒரு திட்டமிட்ட படுகொலை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு ஆதரவான இந்தியாவும், ஐ.நாவும் செயற்பட்டுள்ளதும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இருந்த போதும் அனைத்துலகத்தின் ஆதரவுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

ஆனால் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வாதங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்து. அதற்கு ஏதுவாக இலங்கை மீதான சிறப்பு விவாதம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 26 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு ஜெனிவாவில் கூடியிருந்தது. ஆனால் அதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கொண்டுவரப் பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அனைத்துலக சமூகம் மீது தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த சிறு நம்பிக்கையும் சிதறடிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆதரவாகவும், மேற்குலகத்திற்கு எதிராகவும் ஆசிய நாடுகள் பல ஒருங்கிணைந்து குரல் கொடுத்தமை மேற்குலகத்தின் இந்திய கடல் பிராந்தியத்தின் மீதான கொள்கைகளுக்கு விழுந்த சாட்டை அடியாகும். அதாவது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட போரானது தமிழ் மக்களை விட மேற்குலகத்திற்கே அதிக தோல்வியைக் கொடுத் துள்ளது என்பது தான் தற்போதைய நிலையின் சுருக்கமான முடிவு.

இதனிடையே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக ஒன்றுக்கு பின் ஒன்றாக முரண்பட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17ஆம் தேதி வீர மரணத்தை தழுவிக்கொண்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கை களுக்கு பொறுப்பான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக புலனாய்வுப் பிரிவின் தலைவர் அறிவழகன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இரண்டு அறிக்கைகளிலும் பல இராஜதந்திர நகர்வுகளின் தாக்கங்கள் உள்ளன.

இவ்விருவரும் விடுதலைப்புலிகளின் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள். அறிவழகன் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவின் இரண்டாம் நிலை தளபதிகளில் ஒருவர். பத்மநாதன் கடந்த ஜனவரி மாதம் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர். விடுதலைப்புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர்.
எனவே எந்த தகவல் சரியானது. எது தவறானது என்பது தொடர்பான குழப்பங்கள் எழுவது நியாயமே. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையும், அரசியல் முதிர்ச்சியும் தேவை. விடுதலைப்புலிகளின் தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவிலான இராஜதந்திர நகர்வுகள் பொதிந்துள்ளன. அதன் பின்னால் ஓர் அனைத்துலக வலைப்பின்னலை விடு விக்கும் நடவடிக்கைகளும் உள்ளன.

அவர்கள் உலகிற்கு ஒரு தகவலை சொல்ல முற்பட்டுள்ளனர், அதே சமயம் தமிழ் மக்களுக்கும் அதனூடாக பிறிதொரு தகவலை கூறமுற்பட்டுள்ளனர்.

பல அழுத்தங்களும் அதன் மூலம் தேவையான பல அனுகூலங் களும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன என்பதே இந்த இரு தகவல்களினதும் பொருள்.

இந்த இரு தகவல்களையும் உள்வாங்கிக்கொண்டு அரசியல் நகர்வுகளின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டிய பாரிய கடமை ஒன்று தமிழ் மக்களுக்குள்ளது என்பது மட்டுமே உண்மை. ஒரு விடுதலைப்போரில் சில தகவல்கள் நடைபெற்ற சம்பவங்களால் தோற்றுவிக்கப்படுபவை.
ஆனால் சில தகவல்கள் ஒரு சம்பத்தை உருவாக்கு வதற்காக தோற்றுவிக்கப்படுபவை.

வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற தகவல்கள் வெளிவருவது இது முதல் தடவை யல்ல. 1989களில் இந்திய இராணுவம் அவர் இறந்துவிட்டதாக தகவல்களை பரப்பியிருந்ததுடன் ஆதாரங்களையும் முன்வைத்திருந்தது. ஆனால் 1990களில் தான் அவர் மீண்டும் மக்கள் முன் தோன்றினார். அதனைப் போலவே 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் புலிகளின் தலைவர் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது.

இலங்கைக் கடற்படையினர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை தேடும் பணியையும் முடுக்கிவிட்டிருந் தனர். ஆனால் பிரபாகரன் மீண்டும் வெளிவந்தார்.

நான்காம் கட்ட ஈழப்போரை பொறுத்த வரையில் அதன் இறுதிக் கட்டம் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி கிளிநொச்சி நகரம் படையினரால் கைப்பற்றப்பட்டதிலிருந்து ஆரம்பமாகி யிருந்தது. ஆனால் அதன் நகர்வுப் பாதை புரியாத புதிராகவே பலருக்கும் தோன்றியது.

புலிகள் விட்டுச்சென்ற சான்றுகள் மேலும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடங்கள் தொடர்பான தெளிவான சான்றுகள் பலவற்றை விடுதலைப்புலிகளின் தமது தளங்களில் விட்டும் சென் றிருந்தனர். அதாவது கடந்த பிப்ரவரி மாதம் விசுவமடு பகுதியை படையினர் கைப்பற்றிய போது நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த இல்லம் ஒன்றில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தும் மேற்சட்டையையும், சில மருந்துப் பொருட்களையும், கோல்ட் கொமாண்டோ ரக துப்பாக்கியையும் விட்டு சென்றிருந்தனர்.

அதன் பின்னர் ஆனந்தபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தலை வர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பி னர்களின் பல சிறப்பான ஆவணங்களை விட்டு சென்றிருந்தனர். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவரின் குடும்ப புகைப் படங்களும் வேறு சில பொருட்களும் தவறவிடப்பட்டிருந்தன. இந்த சம்பவங் கள் மூலம் இராணுவமும் இலங்கை அரசாங்கமும் ஒரு முடிவுக்கு வந்திருந் தன. அதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது முற்றுகைக்குள் இருப்பதாக அவர்கள் கருதினர்.

எனவே அவர்களின் முழுப் படைப்பலமும், கவனமும் அங்கு செறிவாகியிருந்தது. கடற்படையின் முழு வளங்களும், வான்படையின் வேவு அணிகளின் முழுப்பலமும் அங்குதான் மையம் கொண்டிருந்தன. உண்மையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத் தின் முற்றுகைக்குள் சிக்கியிருப்பின் அவர் தொடர்பான தகவல்களை யாரும் அவரைத்தேடி வருவோரின் கண்ணில் படுமாறு பின்னால் விட்டு சென்றிருப் பாரா என்ற கேள்வியும் எழுப்பப்படு கிறது. 122மி.மீ பீரங்கிகளை எடுத்து செல்பவர்களுக்கு ஒரு கோல் கொமோண்டோ துப்பாக்கியை கொண்டு செல்வது கடினமானது அல்ல.

இராணுவம் வீட்டின் கொல்லைப் புறத்திற்குள் நுழைந்தபோதுதான் புலிகளின் தலைவர் தப்பியோடியிருப்பார் என்ற வாதங்களும் பலவீனமானவை. எனவே சில சம்பவங்கள் அங்கு தோற் றுவிக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. அதற்கான காரணங்கள் என்ன?

18ஆம் தேதி காலை இலங்கை நேரம் 8.00 மணியளவில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து ஒரு மூன்றாம் நிலை பொறுப்பாளரினதும், போராளியி னதும் குரல்கள் அனைத்துலகத்தை எட்டியிருந்தன. அவர்களின் குரல்களில் இருந்து அவர்கள் மரணத்தின் இறுதி மணித்துளிகளை நெருங்கிக்கொண்டு இருக்கின்றனர் என்பது தெளிவாகியது.

இந்த உரையாடலில் பங்குபற்றிய வர்களால் புலிகளுக்கு சில நூறு மீற்றர் தொலைவில் இராணுவத்தின் வெடியோ சைகளை தொலைபேசியூடாக கேட்க முடிந்தது. எந்த வினாடியும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படலாம் என்ற நிலை, அவர்களின் உறவுகளை பற்றி கேட்கவில்லை, எமது உறவுகளைப் பற்றி கேட்கவில்லை, மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்றபோதும் இறுதியாக எஞ்சியிருந்த ஒரு சில வினாடிகளில் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தான். தலைவர் எங்கே?

பதில் தெளிவானது. தலைவர் பாதுகாப்பாக உள்ளார். நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள் என்பதுதான் அது.
இன்று உலகெங்கும் ஒருங்கி ணைந்து ஒரு குரலாக ஒலிக்கும் தமிழ் தேசியத்தின் “ஆன்மாவை’’ தமிழ் மக்கள் அணையவிடமாட்டார்கள், அதன் அழுத்தம் உலகின் நகர்வுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்ததை யும் நாம் புறந்தள்ள முடியாது.

Monday, June 1, 2009

முகாம்களை சுற்றி மின்சாரம் பாய்ச்சிய முள்வேலிவடக்கு - கிழக்கில் நடக்கும் ராணுவ ஆட்சி

ராணுவப் பிடியில் யாழ்ப்பாணம் - மட்டக் களப்பில் - தமிழர்கள் சந்திக்கும் துயரங்கள்

‘ஆனந்த விகடன்’ (மே 27) வெளியிட்டுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:


போரை முடித்துவிட்டதாக அறிவித்திருக்கிற அரசாங்கம், அந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதை உலகம் உற்றுக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது.

கொழும்பில் ஆறு லட்சம் தமிழர்கள் இருக் கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே எண்ணிக்கை யிலான மக்கள் இருப்பார்கள். கிழக்கு மாகாணத்தில் நான்கு லட்சம் பேரும், போர் முனையின் கொடுமையைக் கடந்த ஒராண்டாக அனுபவித்த வடக்கு மாகாணத்தில் இரண்டரை லட்சம் பேரும் இருக்கிறார்கள். சிங்களர்களின் பண்டிகை, இலங்கை சுதந்திர தினம், தேர்தல் வெற்றிகளின்போது கொழும்புத் தமிழர்களின் நிம்மதி மொத்தமாகப் பறிபோய்விடும். வெள்ளை வேன்களில் கடத்தப் பட்டும், காவல்துறையால் அச்சுறுத்தப்பட்டும் வாழும் மக்கள் அவர்கள். தமிழன் என்பதற்கான அடையாளமான பொட்டு வைக்காமல் வாழப் பழகிவிட்டார்கள் அங்கு. யாழ்ப்பாணம், கடந்த 14 ஆண்டுகளாக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட பகுதியாகத்தான் இருக்கிறது. அங்கு உறவினர்கள் யாரும் வந்து பார்க்க முடியாது. இவர்களும் வெளியூர் போக முடியாது. எங்கு வேலைக்குப் போனாலும், மாலை ஆறு மணிக்கு முன்னதாக வீட்டுக்குள் போய் அடங்கிவிட வேண்டும் என்ற அடக்குமுறை தொடர்கிறது.


கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் இடங்களில் சிங்களவர்கள் வலுக்கட்டாயமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இடஒதுக்கீட்டின்படி, சுகாதாரப் பணியாளர் வேலைக்கு 100 பேர் எடுத்தால், ஐந்து தமிழர்களுக்குத்தான் அங்கு வேலை கிடைக்கும். அந்த அளவுக்கு சிங்களக் குடியேற்றம் அதிகமாகிவிட்டது. புலிகளிடம் இருந்து கைப் பற்றியதும் ‘கிழக்கின் உதயம்’ என்று ஒரு திட்டத்தை மகிந்தா அறிவித்தார். பள்ளிக் கூடம், தொழிற்சாலை, மருத்துவமனை ஆகியவை கட்டித் தரப்படும் என்றார். எதுவும் நடக்கவில்லை. அங்கு நடத்தப் பட்ட தேர்தலில், பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். ‘என் மாகாணத்தின் வளர்ச்சிக்குச் சொன்ன படி பணத்தை ஒதுக்கவில்லை’ என்று அவர் புகார் சொன்னார். உடனே சிங்கள அதிகாரிகளால் மிரட்டப்பட்டு, இப்போது அமைதியாக இருக் கிறார். வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றியதும் ‘வடக்கில் வசந்தம்’ என்ற திட்டம் கொண்டு வரப் படும் என்று மகிந்தா அறிவித்துள்ளார். கிளி நொச்சியைப் பிடித்ததும் தமிழர்களுக்கான தீர்வு அறிவிக்கப்படும் என்று சொன்னார். ஆனால், ஐந்து மாதங்கள் ஆகியும் அப்படி எதுவும் அறிவிக்கப் படவில்லை.


‘தமிழர்கள் கொல்லப்படுகிறார்களே?’ என்று டெல்லி பத்திரிகையாளர்கள் மாறி மாறிக் கேட்டபோது கோபமான மகிந்தா ராஜபக்சே, “என் நாட்டு மக்களைப் பற்றி என்னைவிட உங்களுக்கு அதிகமான அக்கறை இருக்குமா?” என்று கேட்டார். அந்த அக்கறையை ராஜபக்சே காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதலில் அவர் கவனிக்க வேண்டியது வன்னி பகுதியில் உள்ள முகாம்களை போரின் பெருவாய் தின்று தீர்த்த மக்கள் போக, இன்றும் லட்சக்கணக்கான தமிழ்மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது சிங்கள அரசு. மாற்றுடுப்புகள் சிலவற்றுடன் தலைச் சுமையாக ஒரு பையைச் சுமந்தபடி உயிர்ப் பிச்சை கேட்டு வரும் மக்களை வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியின் அடர் காட்டுக்குள் அமைந்திருக்கும் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டு செல்கிறார்கள்.


சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான இந்த முகாமில், அரசின் கணக்குப் படி 1 லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இதுவரை 2 லட்சத்துக்கும் மேலானவர்கள் வந்திருப்பதாகச் சொல்கிறது. ஆனால், அந்த முகாம்களில் குடியிருப்பு என்று எதுவும் இல்லை. செஞ்சிலுவை சங்கம் வழங்கிய தற்காலிகக் கூடாரங்கள் மட்டுமே எங்கும் நிறைந்திருக்கின்றன. சின்னஞ்சிறிய கூடாரம் ஒவ்வொன்றிலும் மூன்று குடும்பங்கள் நெருக்கியடித்து வசிக்கின்றன.


முகாம் அமைக்கப்பட்டு மாதக் கணக்காகிவிட்ட நிலையில், இதுவரை லாரிகள் மூலமாகவே குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. அது குடிக்க மட்டுமே! குளிக்கவும் அன்றாடத் தேவை களுக்கும் தண்ணீர் கிடையாது. அவர்கள் அனைவரும் குளித்து வாரக் கணக்கில், மாதக் கணக்கில் ஆகின்றன. இப்போதுதான் முகாமில் கிணறு தோண்டும் பணி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு தடவை லாரிகள் மூலம் ஏதோ உணவு விநியோகிக்கிறார்கள். பசியால், பட்டினியால் வாடித் துடிக்கும் அம்மக்கள் அந்த உணவை வாங்க லாரி களின் முன்னால் கையேந்தி முண்டியடிக்கின்றனர். கூட்டம் அதிகமாகும் நாட்களில் நாய்களுக்கு பிஸ்கட் வீசுவது போல மக்களை நோக்கி உணவுப் பொட்டலங்கள் தூக்கி வீசப்படுகின்றன. மக்கள் அதை ஓடி ஓடிப் பொறுக்கிக் கொள்ள வேண்டும். அந்த உணவையும் பெற வாய்ப்பற்ற வயது முதிர்ந்த பெரியவர்கள் மரணத்தைச் சந்திக்கின்றனர். மே 1 முதல் மே 11 வரைக்கும் மட்டும் பூந்தோட்டம் முகாமில் 61 முதியவர்கள் பட்டினியால் செத்துப் போயிருக்கிறார்கள்.


முகாமுக்கு வந்த சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இப்போது வவுனியா முகாமைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டு, அதில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருப்பதாகச் சொல்லப் படுகிறது.


தப்பிக்க நினைத்தால் மரணமே பரிசு.


“இப்போது எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. அடித்தா லும், சுட்டாலும், சிதைத்தாலும், கற்பழித்தாலும், என்ன சித்ரவதை செய்தாலும் எங்களால் வாய் திறந்து பேச முடியாது. துப்பாக்கிகளின் கண் காணிப்பில் சோறு உண்ணவும், உடுப்பு மாற்றவும் நிர்பந்திக்கப்படுகிறோம். சின்ன பாதுகாப்புக்கூட இல்லாமல் ஒரு திறந்தவெளி சித்ரவதைக் கூடத்தில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். இலங்கை அரசாங்கம் எங்களைப் போர்க் கைதிகளாகவே பாவிக்கிறது. எங்களைச் சிரிக்கச் சொல்லி புகைப்படம் எடுத்து, நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பிரச்சாரம் செய்கிறது. அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு எங்களை நிச்சயம் இந்த முகாமைவிட்டு அனுப்ப மாட்டார்கள். வெளியில் வேலைக்குப் போகக்கூட அனுமதிக்க மாட்டார்கள். அரசாங்கம் கொடுக்கும் சோற்றைத் தின்றுகொண்டு, அவர்கள் கொடுக்கும் தண்ணீரைக் குடித்துக் கொண்டு, வெறும் பிணங்களாக, அடிமைகளாக வாழ்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.


இனி வரும் நாட்கள் எங்களுக்கு இன்னும் மிக மோசமானதாக இருக்கும். கேட்க நாதியற்ற எங்களை, இலங்கை அரசாங்கம் என்னவும் செய்யும். கடும் சித்ரவதைகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும். அதையும் தாண்டி, எங்களின் பூர்வீகப் பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தினாலும் அந்த வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எங்களின் குறைந்தபட்சப் பாதுகாப்பு அரணாக இருந்த புலிகளும் இல்லாத நிலையில், இனி நாங்கள் யாரை நம்பி வாழ முடியும்? உலகத்து நாடுகளே... தயவு செய்து எங்களை இலங்கையில் இருந்து மீட்டுச் செல்லுங்கள்.


இந்த தேசத்தை சிங்களனே வைத்துக் கொள்ளட்டும். அவர்களே ஆளட்டும். எங்களை விடுவியுங்கள். வேறு ஏதோ ஒரு நாடு... ஏதோ ஒரு வேலை... இலங்கை மட்டும் வேண்டாம். அரசியல் தஞ்சம் கேட்கிறோம், உயிர் தஞ்சம் கேட்கிறோம். தயவு செய்து செவிமடுங்கள்... எங்களை மீட்டுச் செல்லுங்கள்” - வவுனியா முகாமில் அடைக்கப்பட்டு இருக்கும் ஒரு பெண், அங்கு பணிபுரியும் சேவை நிறுவன ஊழியரின் உதவியுடன் நம்மிடம் பேசிய வார்த்தைகள் இவை.


இன்று பிச்சைக்காரர்களைவிடக் கேவலமான நிலையில், மேலாடை இல்லாமல், உடம்பு வற்றி கையேந்தி நிற்க வைக்கப்பட்டு இருக்கும் ஈழத் தமிழர்கள் அத்தனை பேரும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்திலும் இப்போது எண்ணிப் பார்த்தாலும்கூட, 50க்கு மேல் பிச்சைக்காரர்கள் இருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம். தமிழகம் போல ஈழத் தமிழர்களிடம் இத்தனைப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. 90 சதவிகிதம் பேர் மத்திய தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வறுமையையும், பட்டினியையும் கண்டறியாதவர்கள். இந்தக் கொடிய போர் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போலக் கையேந்த வைத்திருக்கிறது.


உச்சகட்ட சித்ரவதைக் கூடமாக இருக்கும் இந்த கதிர்காமர் இடைத்தங்கல் முகாமைத்தான் ‘நலன்புரி மையங்கள்’ என்றும், ‘உலகின் முன்மாதிரி நிவாரணக் கிராமம்’ என்றும் வர்ணிக்கிறது இலங்கை அரசு. ‘உலகின் மிகப் பெரிய பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கை’ என இதைப் பிரசாரம் செய்கிறது. இம் மக்களை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக ஸ்ரீரவிசங்கர் மீது கோபப் பட்டார் கோத்தபய ராஜபக்சே. கொழும்பிலும் இதே போன்ற நிலைமைதான்.


கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). “எங்கள் பல்கலைக் கழக வளாகம் எங்கும் தமிழர்கள் பிணமாகக் கிடக்கும் காட்சிகள் புகைப்படங்களாக மாட்டி வைக்கப்பட்டுள்ளன. ‘இதே நிலைமைதான் நாளைக்கு உங்களுக்கும்’ என்று அந்தப் புகைப் படங்களைக் காட்டி சிங்கள மாணவர்கள் எங்களை எச்சரிக்கின்றனர். நடந்து செல்லும்போது மாடிக் கட்டடத்தில் இருந்து எச்சில் துப்புகின்றனர். எங்களால் எந்தச் சிறு வார்த்தையும் பேச முடிய வில்லை.


சிங்களம் கற்றுக் கொண்டு சிங்களனாக மாறுவது ஒன்றுதான் இங்கு உயிர் தரித்திருப்பதற்கான ஒரே வழி!” என்று தொலைபேசியில் கதறுகிறார்.


“கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டவை 56 ஆயிரம் வீடுகள். இப்படி தமிழர் வாழும் 10 மாவட்டங்களிலும் புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டு புனரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதில் தொடங்கி, உயிரோடு இருக்கும் அப்பாவி மக்களைக் கொண்டு போய் அந்த வீடுகளில் குடியமர்த்தி, நிம்மதியான தேசத்தில் தான் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை விதைப்பதில் முடிய வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வேலைகள் தொடங்கப்பட வேண்டும். யாழ்ப் பாணத்து எமர்ஜென்சி விலக்கப்பட வேண்டும். கொழும்புத் தமிழர்கள், தங்கள் தொழிலைத் தொடர உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர் அமைப்புகள் சொல்ல ஆரம்பித்துள்ளன.