Saturday, November 28, 2009

தளபதி பொன்னம்மான் நினைவிடத்தில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு

தமிழீழத்தில் ஆயுதப்போராட்டம் எழுச்சி பெற தொடங்கிய காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தமிழீழத்தில் சிங்கள பேரினவாதிகளின் கொடூரங்கள் அதிகரிக்க தொடங்கிய காலமான 1983 இல் தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு அடைக்கலம் தந்து அனைத்து உதவிகளை புரிந்த சேலம் மாவட்ட கொளத்தூர் மக்கள் மாவீரர் நாளான 2009 நவம்பர் 27 அன்று தமிழீழ விடுதலைபோராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுகு பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் வீரவணக்கம் செலுத்தினர்.
நேற்று மாலை சரியாக 6.05 மணியளவில் கொளத்தூர் அருகில் 1983 இலிருந்து 1989 வரை விடுதலைப்புலிகள் பயிற்சி எடுத்த இடத்தில் தளபதி பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட "புலியூர் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில்" பெரியார் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்டத்தலைவர் செ.மார்ட்டீன் தலைமையேற்க மாவீரர் பாடல்கள் ஒலிக்க வீரவணக்க நிகழ்வு ஆரம்பம் ஆனது.
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயர் கொண்ட இரு மாணவர்களும் , பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியின் சகோதர் தா.செ.பழனிச்சாமியும் தீபம் ஏற்றி வீரவணக்க நிகழ்வினை தொடங்கிவைத்தனர்.கொளத்தூர் பொதுமக்கள் பெண்கள், முதியவர்கள் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் திரளாக திரண்டு வந்து வரிசையில் நின்று அமைதியாக தீபம் ஏற்றி மலர் தூவி தங்கள் வீரவணக்கத்தினை செலுத்தினர்.
இந்நிகழ்வினை பெரியார் திராவிடர் கழகத்தின் டைகர் பாலன் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார். ஒன்றியத்தலைவர் சூரியகுமார், ஒன்றிய அமைப்பாளர் காவை ஈசுவரன், ஒன்றியச்செயலாளர் காவை இளவரசன், மாவட்ட இளைஞரணிச்செயலாளர் விசயக்குமார், நகரச்செயலாள இளஞ்செழியன், காவை சசிக்குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை கவனித்தனர்.
முன்னதாக சேலம் கோவிந்தப்பாடி அருகில் "பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் நகர்" பெயர்ப்பலகையை தோழர்கள் காவை ஈசுவரன் சேலம் டேவிட் ஆகியோர் திறந்துவைத்தனர்.













Wednesday, November 25, 2009

மாவீரர் நாள் நவம்பர் -27 -2009

உலகமெல்லாம் தமிழினத்தை அறியச்செய்து அடையாளப்படுத்தி பழந்தமிழ்ச்சங்க இலக்கியங்கள் கூறும் வீர வரலாறுகளை நிலைநிறுத்தி சுதந்திரமான வாழ்வுக்காக யாரும் செய்யமுடியாத எண்ணற்ற உயிர்கொடைகளை வழங்கியோர் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆவர் .

ஈழமண்ணில் நடந்த விடுதைலைப்போரில் இதுவரை வீரமரணம் அடிடைந்து வரலாறாகியுள்ள மாவீரர்களின் நினைவு நாள் நவம்பர் -27.1982 ல் சங்கர் என்கிற சத்தியநாதன் முதல் விடுதலை வீர விதையாக அந்த நாள் தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் மாவீரர் நாளாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த நாள் தமிழர்களின் வரலாற்றில் பதிவுசெய்து தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய நாள் ஆகும்.

தமிழர்களே இந்நாளில் ஈழத்தில் நம் உறவுகள் முள்வேலிக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள். இந்தியாவின் தமிழ் இன எதிரிகளும், தமிழ்நாட்டில் தமிழின துரோகிகளும் சிங்களவனின் பாதணிக்கு கூட மெருகூட்டும் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன மானமுள்ள மக்களே ! நம் தமிழினத்தின் மான வாழ்வுக்காகவும் , விடுதலைக்காகவும் போராடி களத்தில் வீரமரணம் எய்திய மாவீரர்கள் நம் உறவுகள் அல்லவா? உலகையே வியப்பில் ஆழ்த்தி தமிழன் யார் என அடையாளப்படுத்தியவர்கள் அல்லவா? அவர்களை மரியாதை செய்யும் நாளில் விடுதலைப் போரில் தம்முயிர் ஈத்த அம் மாவீரர்கள் நம் தொப்புள்கொடி உறவுகளே என்ற உணர்வோடு நவம்பர் -27 , மாலை 6.06 க்கு மெழுகுவர்த்தி ஏந்தியோ- மௌனமாய் நின்றோ கடைகளிலோ, வீதியிலோ, வீட்டிலோ எங்கிருந்தாலும் ஒரு நிமிடம் வீரவணக்கம் செலுத்துவோம்.

இவன் ,
பெரியார் திராவிடர் கழகம்


Friday, November 13, 2009

திராவிடரும் - தமிழரும்: பெரியார் தரும் விளக்கம் குழம்பி நிற்போர், தெளிவு பெறுவார்களா?

திராவிடரும் - தமிழரும்: பெரியார் தரும் விளக்கம் குழம்பி நிற்போர், தெளிவு பெறுவார்களா? திராவிட எதிர்ப்பு என்ற குரல் பெரியாருக்கு எதிராக மீண்டும் சில மேடைகளில் ஒலிக்கத் தொடங்கி யிருக்கிறது. பெரியார்திராவிடர்என்ற குறிப்புச் சொல்லை பயன் படுத்த நேர்ந்ததை விளக்குகிறார், இக்கட்டுரையில்!

கன்னட, மலை யாளிகள் சுயமரியாதை உணர்வற்ற வர்கள் என்று கூறும் பெரியார், தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயரில்லாததால், தமக்கு நேர்ந்த மனத் துயரையும் சுட்டிக் காட்டுகிறார். பெரியாருக்கு எதிரான விமர்சனங் களை முன் வைப்போருக்கு, இந்த அறிக்கை உரிய பதிலைத் தருகிறது.

நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததி லிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலை யாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங் களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது.

என்ன காரணம் என்றால், ஒன்று - கன்னடியனுக்கும், மலை யாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை.

ஆகவே, இவ்விரு துறை யிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம். மூன்றாவது - இவர்கள் இருநாட்ட வர்களும் பெயரளவில் இருநாட்ட வர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள். 1. சென்னை, 2. செங்கல்பட்டு, 3. வட ஆர்க்காடு, 4. சேலம், 5. கோவை, 6. நீலகிரி, 7. திருச்சி, 8. மதுரை, 9. ராமநாதபுரம், 10. திருநெல்வேலி, 11. தஞ்சை 12. தென்னார்க்காடு, 13. தென் கன்னடம், 14. மலபார். அப்படி 14-ல் 7-ல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்யோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந் திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற் கிறேன். இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும் அதை, மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டு கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும் இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனி நாடாக ஆகிவிட்டால் - நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும் அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்கு பலமும், ஆதரவும் இருக்காதென்றும் கருதுகிறேன்.

நிற்க, இந்தப் பிரிவினை அமைப்பு ஏற்பாட்டில் எனக் கிருக்கும் சகிக்க முடியாத குறை என்ன இருக்கிறது என்றால், நாட் டினுடையவும், மொழியினுடை யவும் பெயர் அடியோடு மறைக்கப் பட்டுப் போய்விடுகிறது என்கின்ற குறைபாட்டு ஆத்திரம்தான். நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கர்நாடக, கேரள நாட்டு மக்கள் அல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த் தார்கள்.

பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்தால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களை யும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவை இல்லை என்றாலும், திராவிடன் என்று சொல்லை விட்டுவிட்டு, தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன் தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.

இந்த சங்கடத்திற்கு - தொல்லைக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, இப்போது மற்றொரு மாபெருந் தொல்லை நெஞ்சில் இடிவிழுந்தது போன்று வந்து தோன்றியிருக்கிறது. அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனனாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ் - மேல் சபை அங்கத்தினர்களையும், மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என்பதோடு, மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன்.

நம்நாடு எது நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன். - பெரியார்,

விடுதலை’ 12.10.55