Saturday, May 30, 2009

போர்க் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பல் மீதுஅய்.நா.வே., நடவடிக்கை எடு!

ஈழத் தமிழர்கள் உரிமைக்காக உருவாக்கப் பட்ட தமிழர் ஒருங்கிணைப்பு, கடந்த 24.05.09 அன்று திருச்சிராப்பள்ளியில் கூடி தற்போது உருவாகியுள்ள சூழல் குறித்து விவாதித்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெ. மணியரசன் (பொதுச் செயலாளர், தமிழ் தேசப் பொது வுடைமை இயக்கம்), தியாகு (பொதுச் செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்) ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூறப்பட் டுள்ளதாவது:


ஈழத்தமிழர்கள் உயிரையும், உரிமையையும் காக்க உடனடியாகச் செய்ய வேண்டிய பணிகள் பற்றி விவாதித்துப் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப் பட்டன. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக 9.6.2009 சென்னையிலும், 10.6.2009 சேலத்திலும், 11.6.2009 ஈரோட்டிலும், ‘ஈழம் - நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்ற தலைப்பில் பெருந்திரள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இப்பெருந்திரள் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். ஒத்த கருத்துள்ள பிற அமைப்பு களையும் தமிழின உணர்வாளர்களையும் இணைத் துக் கொண்டு இப் பொதுக் கூட்டங்கள் நடை பெறும்.


தீர்மானங்கள்


• சிங்கள இனவெறி அரசு நடத்தும் மிகக் கொடிய தமிழின அழிப்புப் போரில் கடந்த ஓராண்டில் இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்படப் பல்லாயிரக்கணக் கானோர் படுகாயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உரிய முறையில் உடனடி மருத்துவம் கிடைக்காததால் படுகாயமுற்ற பல்லாயிரம் பேர் இறந்துவிட்டனர். எஞ்சியிருக் கும் பல்லாயிரம் பேரையாவது பாதுகாக்கும் உடனடிப் பொறுப்பு ஐ.நா. மன்றத்துக்கும் உலக நாடுகளுக்கும் உள்ளது.
படுகாயமடைந்தோர் மட்டுமின்றி, இந்தப் போரினால் உற்றார் உறவினரையும், தங்கள் விடுதலைக்குப் போராடிய போராளிகளையும் பறிகொடுத்து மன அதிர்ச்சிக்கு ஆளாகி ஏராளமானோர் உள்ளனர். இவர்களுக்கும் உடனடி மருத்துவம் தேவைப்படுகிறது. எனவே ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும்.


• போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நடைபெறும் அனைத்து வகை துயர்துடைப்புப் பணிகளும் ஐ.நா. மன்றம் அல்லது பன்னாட்டுக் குழுவினரின் நேரடி மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.
இத்துயர் துடைப்புப் பணி, இனவெறிப் போரை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் மூலம் நடந்தால் உதவிகள் பாதிப்புற்ற மக்களுக்குப் போய்ச் சேர மாட்டா. சிங்கள இனவெறி அரசு இவற்றையும் தன் இனவெறி நலன்களுக்கே பயன்படுத்திக் கொள்ளும் என அஞ்சுகிறோம்.

• இடைத்தங்கல் முகாம் என்றும் நல்வாழ்வுக் கிராமம் என்றும் பெயர் சூட்டி இராஜபக்சே அரசு தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் முகாம்கள் அனைத்தும் இட்லரின் வதை முகாம்களை ஒத்தவை என்பதை உலகு அறியும். இம்முகாம்களில் பல்லாண்டுகளாகத் தமிழர் களை அடைத்து வைக்க இராஜபக்சே திட்டமிட்டிருக்கிறார். இவ்வாறு தமிழர்களை இடம்பெயர்த்து அடைத்து வைத்துவிட்டு, அவர்களின் சொந்த ஊர்களில் சிங்களர்களைக் குடியேற்றுவது இராஜபக்சேயின் திட்டம். வரலாற்று வழியில் நிலைத்துள்ள தமிழர் தாயகப் பகுதிகளை ஒழித்துக் கட்டி அவற்றைச் சிங்களப் பகுதி ஆக்குவதே அவரது நோக்கம்.


எனவே ஐ.நா. மன்றமும் உலக நாடுகளும் தலையிட்டு தமிழ் மக்களை முகாம்களிலிருந்து விடுவித்து, அவர்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆவன செய்ய வேண்டும். மீள் குடியமர்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.


• இப்போது ஏற்பட்டுள்ள பேரழிவைப் பயன் படுத்தித் தமிழர் தாயகப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடைபெறவிடாமல் ஐ.நா. மன்றமும் உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.


• இராஜபக்சே அரசு தமிழீழ மக்களுக்கு எதிராக நடத்தி வருவது இன அழிப்புப் போராகும். இந்தப் போரில் சிங்கள இராணுவம் கொத்துக் குண்டுகளையும், வேதிக் குண்டுகளையும் வீசியும் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்திலிருந்த பொதுமக்களை பீரங்கிகள், எறிகணைகள், வான்வழி குண்டுவீச்சு இவற்றால் தாக்கியும் கொலை செய்தும், வெள்ளைக் கொடியோடு பேச்சு நடத்த வந்தவர்களைப் படுகொலை செய்தும் பன்னாட்டுச் சட்டங்களையும் போர்நெறி முறைகளையும் மீறியுள்ளது.


ஆகவே, இலங்கையின் அதிபர் இராஜபக்சே, பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய இராஜபக்சே, படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் போர்க் குற்றங்களுக்காகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும், இனப் படுகொலைக் குற்றங்களுக்காகவும் தளைப்படுத்தி பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்புக் குழுவைக் கேட்டுக் கொள்கிறோம்.


• தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் உலக அளவில் ஏற்புடைய நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணை யும் நடத்தி உயிரிழப்புகள், உடைமையிழப்புகள் தொடர்பான கணக்குப் பொறுப்பைத் தீர்வு செய்வதற்கு ஐ.நா. மன்றம் ஆவன செய்ய வேண்டும்.

• தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்கு மாறும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அத்தடையை நீக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Monday, May 25, 2009

ஈழம் - நாம் என்ன செய்ய வேண்டும்

தமிழர்ஒருங்கிணைப்பு
நாள்:24.05.09
இன்று(24.05,09) திருச்சிராப்பள்ளியில் தமிழர் ஒருங்கிணைப்பு அமைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன். தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈழத்தமிழர்கள் உயிரையும். உரிமையையும் காக்க உடனடியாகச் செய்யவேண்டிய பணிகள் பற்றி விவாதித்துப் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக 09.06.2009 சென்னையிலும், 10.06.2009 சேலத்திலும் 11.06.2009 ஈரோட்டிலும் ஈழம் - நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற தலைப்பில் பெருந்திரள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இப்பெருந்திரள் பொதுக்கூட்டங்கள் நடை பெறும். ஒத்த கருத்துள்ள பிற அமைப்புகளையும் தமிழின உணர்வாளர் களையும் இணைத்துக்கொண்டு இப்பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

தீர்மானங்கள்-

1. சிங்கள இனவெறி அரசு நடத்தும் மிகக்கொடிய தமிழின அழிப்புப் போரில் கடந்த ஓராண்டில் இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உரிய முறையில் உடனடி மருத்துவம் கிடைக்காத தால் படுகாயமுற்ற பல்லாயிரம்பேர் இறந்துவிட்டனர். எஞ்சியிருக்கும் பல்லாயிரம் பேரையாவது பாதுகாக்கும் உடனடிப் பொறுப்பு ஐ.நா மன்றத்துக்கும் உலக நாடுகளுக்கும் உள்ளது.


படுகாயமடைந்தோர் மட்டுமின்றி, இந்தப் போரினால் உற்றார் உறவினரையும், தங்கள் விடுதலைக்குப் போராடிய போராளிகளையும் பறிகொடுத்து மன அதிர்ச்சிக்கு ஆளாகி ஏராளமானோர் உள்ளனர். இவர்களுக்கும் உடனடி மருத்துவம் தேவைப்படுகிறது. எனவே ஐ.நா மன்றத்தின் மேற்பார்வையில் ஈழத்தமிழர்களுக்கு மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்கவேண்டும்.


2. போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நடைபெறும் அனைத்துவகை துயர்துடைப்புப் பணிகளும் ஐ.நா மன்றம் அல்லது பன்னாட்டுக் குழுவினரின் நேரடி மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.


இத்துயர் துடைப்புப் பணி, இனவெறிப்போரை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் மூலம் நடந்தால் உதவிகள் பாதிப்புற்ற மக்களுக்குப் போய்ச்சேரமாட்டா. சிங்கள இனவெறி அரசு இவற்றையும் தன் இனவெறி நலன்களுக்கே பயன்படுத்திக்கொள்ளும் என அஞ்சுகிறோம்.


3. இடைத்தங்கல் முகாம் என்றும் நல்வாழ்வுக் கிராமம் என்றும் பெயர்சூட்டி இராஜபக்சே அரசு தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் முகாம்கள் அனைத்தும் இட்லரின் வதை முகாம்களை ஒத்தவை என்பதை உலகு அறியும். இம்முகாம்களில் பல்லாண்டுகளாகத் தமிழர்களை அடைத்து வைக்க இராஜபக்சே திட்டமிட்டிருக்கிறார். இவ்வாறு தமிழர்களை இடம்பெயர்த்து அடைத்து வைத்து விட்டு, அவர்களின் சொந்த ஊர்களில் சிங்களர்களைக் குடியேற்றுவது இராஜ பக்சேயின் திட்டம். வரலாற்று வழியில் நிலைத்துள்ள தமிழர் தாயகப் பகுதிகளை ஒழித்துக்கட்டி அவற்றைச் சிங்களப்பகுதி ஆக்குவதே அவரது நோக்கம்.


எனவே ஐ.நா மன்றமும் உலக நாடுகளும் தலையிட்டு தமிழ்மக்களை முகாம்களிலிருந்து விடுவித்து, அவர்களது சொந்த ஊருக்குத் திரும்பிச்செல்ல ஆவன செய்ய வேண்டும். மீள் குடியமர்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.


4. இப்போது ஏற்பட்டுள்ள போரழிவைப் பயன்படுத்தித் தமிழர் தாயகப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடைபெறவிடாமல் ஐ.நா மன்றமும் உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.



5. இராஜபக்சே அரசு தமிழீழ மக்களுக்கு எதிராக நடத்தி வருவது இன அழிப்புப் போராகும். இந்தப் போரில் சிங்கள இராணுவம் கொத்துக் குண்டுகளையும் வேதிக்குண்டுகளையும் வீசியும் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்திலிருந்த பொதுமக்களை பீரங்கிகள், எறிகணைகள், வான்வழி குண்டுவீச்சு இவற்றால் தாக்கியும் கொலை செய்தும், வெள்ளைக் கொடியோடு பேச்சு நடத்த வந்தவர்களைப் படுகொலை செய்தும் பன்னாட்டுச் சட்டங்களையும் போர்நெறிமுறைகளையும் மீறியுள்ளது.


ஆகவே, இலங்கையின் அதிபர் இராஜபக்சே, பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய இராஜபக்சே, படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் போர்க் குற்றங்களுக்காகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும், இனப்படுகொலைக் குற்றங்களுக்காகவும் தளைப்படுத்தி பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நா பாதுகாப்புக்குழுவைக் கேட்டுக்கொள்கிறோம்.


6. தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் உலக அளவில் ஏற்புடைய நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்தி உயிரிழப்புகள். உடைமையிழப்புகள் தொடர்பான கணக்குப் பொறுப்பைத் தீர்வு செய்வ தற்கு ஐ.நா மன்றம் ஆவன செய்ய வேண்டும்.


7. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அத் தடையை நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Sunday, May 24, 2009

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

காங்கிரஸ் கூட்டணி 261 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 157 இடங்களையும், இடதுசாரிகள் உருவாக்கிய மூன்றாவது அணி 59 இடங்களையும், லாலு - பஸ்வான் - முலாயம் சிங்கின் சிங்கின் 4வது அணி 27 இடங்களையும் பிடித்துள்ளது. தமிழ் நாட்டில் புதுவை உட்பட தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயகம் என்பது இந்தியாவில் பார்ப்பன நாயகமாகவே இருக்கிறது என்றார் பெரியார். பார்ப்பனியம் எப்போதுமே சமத்துவத்திற்கான வாய்ப்புகளை மறுக்கும்; தமிழ்நாட்டில் இப்போது நடந்து முடிந்திருக்கிற தேர்தல், ஜனநாயகத்தை விலைபேசி வாங்கிய தேர்தலேயாகும். இது தமிழ் நாட்டில் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் தெரிந்த செய்தி தான். வாக்காளர்களுக்கு அடையாளச் சீட்டுகள் வழங்கப்படுவதுபோல், தி.மு.க. அணி பணத்தை சிவகாசியில் அச்சடிக்கப்பட்ட கவர்களில் போட்டு வழங்கியது. வழமையாக 65 சதவீத வாக்குகள் பதிவாகும் தேர்தலில், இம்முறை 76 சதவீதம் வாக்குகள் பதிவானதற்கான ‘ரகசியம்’ இதுதான். 10 சதவீத வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டு வெற்றிகளை தட்டிப் பறித்துள்ளார்கள்.
தேர்தல் நேர்மையாக நடந்தது என்றோ, வாக்குகளுக்கு பணம் தரவில்லை என்றோ தி.மு.க. கூட்டணி வெளிப் படையாக அறிவிக்கவே முடியாது. அப்படி அறிவித்தால் மக்களே சிரிப்பார்கள். அரசு அதிகாரங்கள் முறைகேடாகப் பயன் படுத்தப்பட்டன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், அதிகாரிகள் முழு ஒத்துழைப்போடு 25 சதவீத கள்ள ஒட்டுகள் போடப்பட்டன. ஓட்டுப் பதிவு எந்திரங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. கரூர் தொகுதியில் பெண்கள் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் குடும்பத்தினர் பதிவு செய்த வாக்கு எந்திரத்தில் எண்ணிக்கையில் இல்லாமல் போயிருக்கிறது.
எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த பெண்களை காவல்துறை கைது செய்துள்ளது. வைகோ போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் எண்ணிக்கையை விட 22000 வாக்குகள் கூடுதலாக விழுந்திருக்கும் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. ப. சிதம்பரம் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றுவிட்டதாக பி.டி.அய். செய்தி நிறுவனம். அறிவித்த பிறகு முடிவுகள் அறிவிப்பது நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, இறுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அணியினர் வென்ற இடங்களில் அதிகாரிகள் வெற்றி பெற்ற சேதியை அறிவிப்பதற்கே நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர்.
காங்கிரசுக்கு எதிர்ப்புப் பரப்புரை நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே, கழகத்தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், ம.தி.மு.க. பிரச்சார செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தி.மு.க. ஆட்சி கைது செய்தது. ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளை விளக்கிடும் பெரியார் திராவிடர் கழகம் தயாரிந்த குறுந்தகட்டை, தேர்தல் ஆணையம் தடை செய்ய மறுத்த நிலையில், காவல்துறை, அதை ஒளிபரப்ப தடை செய்ததோடு, குறுந்தகடுகளை விநியோகித்தற்காக பெரியார் திராவிடர் கழக ஈரோடு மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன், கோவை மாநகர கழகத் தோழரும், பெரியார் படிப்பக பொறுப்பாளருமான கதிரவன் ஆகியோரை தேச விரோத சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்தது.
கடந்த மூன்று வாரங்களாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கழகத் தோழர்களின் வீடுகளில் காவல் துறையினர் நள்ளிரவில் புகுந்து சோதனைகளை நடத்தினர். பெரியார் திராவிடர் கழகம் தயாரித்த ஈழத் தமிழர் படுகொலைக் காட்சிகளை சித்தரிக்கும் துண்டறிக்கைகளை வழங்கவும், காவல்துறை மறுத்ததோடு துண்டறிக்கை வழங்கிய தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மத்திய சென்னை தொகுதியில் துண்டறிக்கைகளை வழங்கிபரப்புரை செய்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீதும் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தின் மீதும் அங்கே இருந்த பெரியார் சிலை மீதும் தி.மு.க. ஆதரவு குண்டர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு உள்ளான கழகத்தினர் மீதே தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை தாக்கியதாக பொய் வாக்குப் போட்டு காவல்துறை கைது செய்தது. இனி தேர்தல் என்றால் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்ற மிக மேசாமான முன் உதாரணத்தை தி.மு.க.வினர் உருவாக்கி விட்டார்கள்.
இதற்கு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் பச்சைக் கொடி காட்டி அழிக்கப்பட முடியாத களங்கத்தை ஏற்படுத்திவிட்டார். தமிழ்நாட்டில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உட்படஅனைவரும் முன் வைத்த ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்க விடாப்பிடியாக மறுத்த சோனியாவின் காங்கிரசுக்கு மீண்டும் அதிகாரத்தை தி.மு.க. கூட்டணி வழங்கி மகிழ்ச்சியடைந்து நிற்கிறது. போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று கலைஞர் கருணாநிதி தனது 6 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில அறிவித்தது உண்மைதானா என்பது மக்களுக்கே தெரியும். ஆனாலும், ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு எதிராக ஆணவத்தோடு பேசிய ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன், மணிசங்கர அய்யர், தங்கபாலு போனற் காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் இந்தத் தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்பட்ட மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது.
பெரியார் திராவிடர் கழகம் வலிமையாக உள்ள பகுதிகளான சேலம், ஈரோடு, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை தொகுதிகளில் கழகம் மேற்கொண்ட தீவிர பரப்புரையால் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளதை குறிப்பிட விரும்புகிறோம். சென்னையில் காவல்துறை கழகத்தினரின் பரப்புரையை அடக்குமுறைகளால் முடக்கிவிட்டது. தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் கிராமங்களிடையே ஈழத்தமிழர் பிரச்சினை கொண்டு செல்லப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் பாரதிராஜா, சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட இயக்குனர்கள் மேற்கொண்ட பரப்புரை இயக்கம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெரியார் திராவிடர் கழகம், தமிழின உணர்வாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மேற்கொண்ட தீவிரமான பரப்புரைக்கு கிடைத்த வெற்றியே காங்கிரஸ் தலைவர்களின் தோல்விக்கு காரணம். தி.மு.க. - காங்கிரஸ் அணி வெற்றி பெற்றுவிட்டது என்பதாலேயே தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்கான ஆதரவு உணர்வுகள் மங்கிவிட்டதாக கருதுவது தப்புக்கணக்கேயாகும்.
அந்த உணர்வுகள் அப்படியே நீடிக்கின்றன. தேர்தல் நாடகம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்ற அரசியல் சமூக சக்திகள் மரணத்தோடு போராடிக் கொண்டு எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களையாவது காப்பாற்றிடுமாறு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இட்லர் நடத்திய இனப் படுகொலைகளையும் மிஞ்சிவிட்டது இராஜபக்சேயின் இனப் படுகொலை. இதற்கு முழு ஆதரவு வழங்கிய இந்தியாவின் துரோகத்தை வரலாறு ஒரு போதும் மன்னிக்கப் போவது இல்லை. இதை நியாயப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது இல்லை என்பதால், இனியாவது தமிழர்களைக் காப்பாற்ற தி.மு.க.வினர் முன்வரவேண்டும். தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து அதை வலியுறுத்தினால்தான், மக்கள் மன்றம் அந்த அம்மையாரின் ஈழத் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை நம்பும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அத்துடன் - தேசிய கட்சிகளை மாநிலக் கட்சிகள் வளர்த்து விடுவது தமிழர்களுக்கு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முறைகளில் ஏற்கனவே வெகு மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். நடந்து முடிந்த தேர்தல் இதை மேலும் உறுதியாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

Saturday, May 23, 2009

இனப்படுகொலையை மறைக்க சிங்கள - பார்ப்பன சூழ்ச்சி நாடகம்!

பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்களை அழித்தொழிக்க இறுதி முடிவு எடுத்துவிட்ட சிங்கள ராணுவம் - அதை சர்வதேசப் பார்வையிலிருந்து திசை திருப்ப நாடகமாடுகிறது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னணி தளபதிகள் கொல்லப் பட்டு விட்டார்கள் என்றும், போர் முடிந்து விட்டது என்றும் அறிவித்து, சர்வதேச தலையீட்டை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். அதன் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாபா செல்வராசா இதை அறிவித்துள்ளார். ஆனால் பல்வேறு முன்னணி தளபதிகள், வீரமரணத்தை தழுவியிருக்கலாம். இந்தப் போராளிகள் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிரை இழக்க உறுதி கொண்டு இயக்கத்துக்கு வந்தவர்கள். இதுவரை ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் உயிரைத் தந்து மாவீரர் களாகியுள்ளனர். போராட்டம் உறுதியாகத் தொடருகிறது. இப்போது முதன்மையாகக் கவலைக் கொள்ள வேண்டிய பிரச்சினை, சிங்கள ராணுவத்திடம் சிக்கியுள்ள மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுதான். 25000 பேர் மருந்தின்றி காயம் பட்டு, மரணத்தை சந்திக்கிறார்கள். 30000 மக்கள் எரித்துக் கொல்லப்படவிருக்கிறார்கள். உலக வரலாற்றில் நிகழ்ந்திடாத இந்தக் கொடுமையை சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்தவில்லை.
முன்னணித் தளபதிகள் வீரமரணத்தைத் தழுவியதால் போராட்டம் ஓய்ந்துவிடப் போவதில்லை. எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் அதற்கான நியாயங்கள் இருக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் வரலாறு கூறும் உண்மை. ஈழத்தில் நடக்கும் தேசிய இன விடுதலைப் போராட் டத்தை ஆதரிப்போர் இதற்காக நிலை குலைந்து விடாமல் உறுதியான ஆதரவினை தொடர்ந்து வழங்குவதே இப்போதுள்ள கடமை.
தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன், ஏற்கனவே உளவு நிறுவனங்களால் பலமுறை சாகடிக்கப்பட்டவர் தான். 1989 ஜூலை 24 ஆம் தேதி பிரபாகரன், மற்றொரு விடுதலைபுலி தளபதி மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற வதந்தியை பரப் பினார்கள். ‘இந்து’ நாளேடும் செய்தி வெளி யிட்டது.
2005 ஆம் ஆண்டு ஜன. 8 ஆம் தேதி சுனாமி பேரலையில் பிரபாகரன் இழுத்துச் செல்லப் பட்டு, மரணமடைந்துவிட்டதாக இலங்கை அரசு வானொலி அறிவித்தது. ‘இந்து’ நாளேடு செய்தி வெளியிட்டதோடு, தலையங்கமும் தீட்டியது. பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என்றே அப்போதும் கூறினார்கள். இப்போது மீண்டும் அதே புரளியை பார்ப்பன ஆங்கில ஊடகங்கள் மட்டுமின்றி, இந்திய அரசும் சேர்ந்து பரப்புகிறது.
மானங்கெட்ட இந்த கும்பல்கள் மீண்டும் மூக்கறுபட்டுள்ளது. மீண்டும் புலிகள் இயக்கம் உயிர்த்தெழும்; விடுதலைப் போர் மேலும் தீவிரமாகத் தொடங்கும்; இது காலம் உணர்த்தப் போகும் உண்மை!

Thursday, May 21, 2009

புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல், 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர்

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள இராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்.

புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்:
களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன்.

அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்:
தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல,அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 60க்கும் அதிகமான கரும்புலிவீரர்கள்: 3000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 60-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.
சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள் :
சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள் புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன.

இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள்:
புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்தூவிய கடற்புலிகள்:
சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.

ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

“மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்” என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா
வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி:
இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

கமலின் “தசாவதாரம்” திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது.

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, May 19, 2009

பிரபாகரன் 2 ஆயிரம் போராளிகளுடன் பத்திரமாக இருக்கிறார்:செ.பத்மநாதன்

தற்போது பிரபாகரன் குறித்து வெளிவரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து இலங்கையில் போரை நிறுத்த முயற்சிக்கவில்லை, இதனால் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர், மீதமுள்ள 60,000 பேரயும் கொல்ல முயற்சிக்கின்றனர். அவர்களை காப்பாற்ற அமெரிக்கா போன்ற நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
------------------

பிரபாகரன் 2 ஆயிரம் போராளிகளுடன் பத்திரமாக இருக்கிறார்:செ.பத்மநாதன்
on 18-05-2009 03:19

படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள பகுதியிலேயே 2 ஆயிரம் போராளிகளுடன் பிரபாகரன் இருக்கின்றார் - செ.பத்மநாதன் தகவல் :
"தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பகுதியிலேயே இப்போது இருக்கின்றார். அவருடன் 2 ஆயிரம் போராளிகளும் இருக்கின்றார்கள்" எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருக்கத் தயாராகவிருக்கின்றார்கள் என்ற அறிவித்தல் கூட பிரபாகரனின் உத்தரவின் பேரிலேயே வெளியிடப்பட்டது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது சரணடைவதோ ஆயுதங்களைக் கையளிப்பதோ அல்ல. அப்பகுதியில் படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களையும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எனவும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சிச் சேவையான 'சனல் - 4' தொலைக்காட்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அளித்த பிரத்தியேகப் பேட்டியின்போது பத்தமநாதன் தெரிவித்தார். அவரது பேட்டியின் விபரம் :

விடுதலைப் புலிகளின் பிந்திய நிலைப்பாடு என்ன?

பதில் : எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.

எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

பதில் : 2 ஆயிரத்துக்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக்கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித்தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.

அவர்கள் பொதுமக்களா?

பதில் : ஆம்.

சிறிலங்கா அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கேட்கின்றீர்கள்?

போரை நிறுத்துவது தொடர்பாகவும், உடனடிப் போர் நிறுத்தம் தொடர்பாகவுமே நாம் நேற்று தொடக்கம் பேசிக்கொண்டிருக்கின்றோம். நாம் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

இந்த போர்கள் எல்லாவற்றுக்கும் பின்னர் போர் இப்போது முடிவுக்கு வந்துவிட்டதா?

பதில் : ஆம். நாம் இந்த போரை நிறுத்திக்கொள்வதற்கே விரும்புகின்றோம்.

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்... விடுதலைப் புலிகள் கொரில்லா போர் போன்ற முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?

பதில் : நான் நினைக்கின்றேன், கடந்த 38 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்திவருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்... நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக்காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.

புலிகள் தலைவர் பிரபாகரனிடம் இருந்து எவ்வாறான உத்தரவுகள் வந்திருக்கின்றன?

பதில் : பிரபாகரன்தான் உண்மையில் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். நான்கு மணித்தியாலங்களாக நான் அவருடன் பேசினேன். அவர்தான் இந்தச் செய்தியை சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் தந்திருக்கின்றார். அதற்கான பதிலுக்காக நாம் காத்திருக்கின்றோம். இதுவரையில் இதற்கான பதிலை யாரும் தரவும் இல்லை. யாரும் போரை நிறுத்தவும் இல்லை.

பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியிலா இருக்கின்றார்?

பதில் : ஆம்.

நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?

பதில் : சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப்போவதில்லை.

ஏன் கையளிக்க மாட்டடீர்கள்?

பதில் : உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் விடுதலைப் போராட்டத்துக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் கையளிக்க வேண்டும்?

விடுதலைப் புலிகள். ஏன் இவ்வளவு மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியது? அவர்களை வெளியே செல்ல ஏன் அனுமதிக்கவில்லை?

பதில் : நாம் பொதுமக்களை ஒருபோதும் எம்மிடம் வைத்திருக்கவில்லை. அந்தப் பொதுமக்கள் எங்களுடைய உறவினர்கள் அல்லது குடும்பத்தவர்கள். அல்லது சிறிலங்கா இராணுவம் தமக்குப் பாதுகாப்பை ஒருபோதும் தராது என நம்புபவர்களாக அவர்கள் இருக்கலாம். முகாம்களுக்குச் செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் சிறிலங்கா படைகளிடம் செல்வதற்கு விரும்பவில்லை. அரசாங்கம் அவர்களுக்கான மருந்துகளையும் உணவுப் பொருட்களையும் நிறுத்தியது. அவை இல்லாமல் மக்கள் மரணமடைந்தார்கள். நாம் மனிதர்களை ஒருபோதும் கேடயங்களாகப் பயன்படுத்துவதில்லை. அது தவறான தகவல். தவறான பிரச்சாரம்.

பொதுமக்கள் வெளியே செல்வதைத் தடுப்பதற்காக விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள் என்ற செய்தியில் உண்மையில்லையா?

பதில் : உண்மையில் நாம் அவர்களைச் சுடவில்லை. துப்பாக்கிச் சண்டையின் இடையில் அவர்கள் அகப்பட்டிருக்கலாம். எமது மக்களை எதற்காக நாம் கொல்ல வேண்டும்?

வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டிகளைக் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு மருத்துவர்கள் காணாமல் போய்விட்டனரா?

பதில் : கடந்த இரவு ஒரு மருந்துவர் காயமடைந்தார். நாம் அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பிவைத்தோம். இப்போது நாம் அறியும் தகவலின்படி மருத்துவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். மற்றவர் இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.

போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?

பதில் : போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணிநேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாம் சொல்கின்றோம். ஆயுதங்களைக் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக்காண விரும்புகின்றோம்.

Monday, May 18, 2009

தமிழின அழிப்பு கொலைக் களத்தின் இறுதிக் கட்டம்

கனரக பீரங்கிகளின் தாக்குதலோடு தொடங்கிவிட்டது சிங்களப் படை! காயமடைந்து வீழ்ந்தோரின் மரண ஓலத்தில் முள்ளிவாய்க்கால்!!
[திங்கட்கிழமை, 18 மே 2009, 08:34 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக - தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து 'புதினம்' செய்தியாளர் செய்மதி தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும் எனவும், இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டு, தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட 'புதினம்' செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே: பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன. கனரக மற்றும் சிறுரக துப்பாக்கி சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன. தாக்குதல் நிகழும் இந்த பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின் மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன.
விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும் - சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களாலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரினது உடலங்களும் நாலா புறமும் சிதறிக்கிடக்கின்றன. திரும்பிய பக்கம் எல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடலங்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாத காரணத்தினால் அந்த பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது.
இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறிலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர். படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதி எங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர். படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள் மக்கள் - அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக்கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர். அதேபோல - காயமடைந்து, சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள் தமக்கு 'சையனைட்' வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர். பதுங்கு குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடலங்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காய் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது.
இவ்வாறு கூறிய எமது செய்தியாளர், கடைசியாக - "இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண்முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டுவிடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சொல்லிவிட்ட பின்பு - யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும் போது - மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது?" என்று தழுதழுத்த குரலில் கேள்வி எழுப்பினார்.
2003 ஆம் ஆண்டில் இருந்து 'புதினம்' நிறுவனத்தின் வன்னிச் செய்தியாளராய்ப் பணிபுரிந்து - உண்மையான செய்திகள் மட்டுமே வெளிவர உழைத்து - 'புதினம்' நிறுவனத்தின் இரத்தமும், சதையுமாக இயங்கிய அந்த செய்தியாளர், கடைசியாக - "என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இதுதான் கடைசியாகவும் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்" என்று கூறினார்.

Friday, May 15, 2009

வன்னியில் இறுதிக்கட்ட போரை சிறீலங்கா ஆரம்பித்திருப்பதால் பாரிய மனித அவலம் - மக்களைக் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

வன்னியில் சிறீலங்கா படையினர் தமது முழுப்படைக்கல கூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

ஆட்டிலறி எறிகணை, பல்குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், துப்பாக்கித் தாக்குதல் என்பவற்றின் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வெள்ளை பாஸ்பரஸ் (phosphorous) குண்டுகளையும் பாவித்து, மக்களை பெரும் எண்ணிக்கையில் அழிப்பதற்கு படையினர் திட்டமிட்டிருப்பதாக, படைப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முன்னோடியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறான குண்டுகளைப் பாவித்து சிறீலங்கா படையினரையும், பொதுமக்களையும் படுகொலை செய்ய இருப்பதாக, முன்னெச்சரிக்கைச் செய்தி ஒன்றை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு நேற்று வெளியிட்டிருந்தது.

சிறீலங்கா படையினரது இன்றைய மிகக்கொடூரமான தாக்குலால், ஒரு இலட்சத்து 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாரிய மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.தமது இறுதிக்கப்பட்ட படை நடவடிக்கை எனக் கூறிவிட்டே, படையினர் இன்றைய தாக்குதலை ஆரம்பித்திருப்பதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரும் என அஞ்சப்படுகின்றது.
ஏற்கனவே கொல்லப்பட்ட பொதுமக்களின் பல நூற்றுக்கணக்கான உடலங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாகவும், படுகாயமடைந்த மக்களிற்குரிய மருத்துவ உதவிகளை வழக்க முடியாது பதுங்ககழிகளுக்குள் அனைவரும் முடங்கிக் கிடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அனைத்துலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க முன்னரும், இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னரும் வன்னியிலுள்ள மக்களை முற்றாகத் துடைத்தழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், சிங்களப் படைகள் மிகக்கொடூரமான தக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தடுத்து பாரிய மனிதப் பேரவலத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஒருங்கிணைந்து போராடி, அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வன்னி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெ.வுக்கு தற்காலிகமாகவே ஆதரவு தருகிறோம் - கொளத்தூர் மணி

தனி ஈழம் தொடர்பான ஜெயலலிதாவின் நிலைப்பாடு நடிப்பு என்றாலும் கூட, அந்த நடிப்புக்காக கூட கருணாநிதி தனி ஈழம் என்று சொல்லவில்லையே. ஜெயலலிதாவை இந்த விவகாரத்தில் தற்காலிகமாகவே ஆதரிக்கிறோம் என பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

ஆனந்த விகடன் இதழுக்கு இதுதொடர்பாக பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அளித்துள்ள பேட்டி..

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது.ஆதரவாகச் செயல்படுவதுதான் குற்றம் என்று முன்பு வைகோ, நெடுமாறன் ஆகியோர் பொடாவில் கைது செய்யப்பட்டபோதே உச்சநீதிமன்றம் தெளிவாகத் தன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், மறுபடியும் மறுபடியும் வெறும் பேச்சுக்காகக் கைது செய்யப்படுகிறோம்.வைகோவின் பொடா வழக்கு விடுதலைக்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்த, செயலாற்றிய அதே கலைஞர்தான் இப்போது மூன்று பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறார்.


ஒரே சட்டத்தை ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரியும், எதிர்க்கட்சியாக மாறினால் வேறு மாதிரியும் கையாள்கிறார் கலைஞர்!நாங்கள் தேர்தலில் பங்கேற்பது இல்லை. ஆனால், அரசியலைப் புறந்தள்ள முடியாது. நீங்கள் சொல்வது மாதிரி அது காங்கிரசுக்கு எதிரான சிடி என்பதைவிட ஈழத் தமிழனுக்கு ஆதரவான சிடி. ஒரு திட்டமிட்ட இன அழித்தொழிப்பு இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்படுகிறது. சிங்கள இராணுவம் தமிழர்களை விதவிதமான குண்டுகளால் கொலை செய்கிறது. பட்டினி போடுகிறது. கொட்டாங்குச்சிகளைக் கையில் ஏந்திய படி ஒரு கவளம் சோற்றுக்காகவும், ஒரு குவளைத் தண்ணீருக்காகவும் தமிழர்கள் கையேந்தி முண்டியடிக்கிறார்கள்.


இந்த உண்மைகளை எடுத்துச் சொல்வதில் என்ன பிழை? அதுவும் நாங்கள் தயாரித்திருந்த சிடி-யில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளைத்தான் தொகுத்திருந்தோம். அதையே கூடாது என்கிறார்கள்.ஒரு கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வது எப்படி ஜனநாயக உரிமையோ, அதுபோல இன்ன கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்வதும் ஜனநாயக உரிமைதான். ஆனால், கலைஞர் அரசு இந்த ஜனநாயகத்தை அடியோடு மறுக்கிறது.கோவைச் சம்பவத்தைத் தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடாது. அது ஒட்டுமொத்த தமிழர் கொந்தளிப்பின் ஒரு துளி வெளிப்பாடு.


உண்மையில், கோவையில் அன்று எங்கள் இயக்கத் தோழர்களின் எண்ணிக்கை 30 பேரோ, 40 பேரோதான்.விஷயத்தைக் கேள்விப்பட்டு சாலையில் நின்றிருந்தவர்களும், பேருந்துகளில் அமர்ந்திருந்தவர்களும், கிராமத்து மக்களும் தோழர்களுடன் இணைந்துகொண்டனர். அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் இந்திய அரசாங்கத்தின் மீது தமிழர்களுக்குக் கோபம் இருக்கிறது.தேர்தல் அரசியல் வழியாக அமைகிற எந்த அரசும் உழைக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தித் தராது என்று நாங்கள் தெளிவாக நம்புகிறோம். ஆனால், நடப்பில் தேர்தல் அரசியல் என்ற சீரழிந்த வடிவம் மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது. இதில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. ஒப்பீட்டு அளவில் குறைந்த கேடுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.


ஈழப் பிரச்னையில் கருணாநிதி யை விடக் குறைந்த கேடுள்ளவராக ஜெயலலிதாவை நினைக்கிறோம். ஜெயலலிதா நடிப்புக்காகத்தான் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்கிறார் என்றே வைத்துக்கொண்டாலும், அதே நடிப்புக்காகக்கூட கருணாநிதி அந்த வார்த்தையை உச்சரிக்கத் தயாராக இல்லையே! எனவேதான், நாங்கள் ஒரு தற்காலிக நிலைப்பாடாக ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம். செயல் உத்தியை மட்டுமே மாற்றிக்கொண்டு இருக்கிறோம். போர் உத்தி அப்படியேதான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Wednesday, May 13, 2009

ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்

ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டிக்க உலக நாடுகள் தலையீடு தேவையா? என்ற கருத்துக்கணிப்பில் CNN INTERNATIONAL DESK என்ற நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்துகிறது. இதில் பெருமளவிலான சிங்களர்கள் உலக நாடுகள் தலையீடு தேவையில்லை என்று வாக்களித்து வருகின்றனர். நாமும் நம் இனத்தை காக்க http://internationaldesk.blogs.cnn.com/ இணையதளத்தில் வாக்களித்து தமிழினத்தை காப்போம். தயவுசெய்து வாக்களியுங்கள் தோழர்களே....

Tuesday, May 12, 2009

யாருக்கு நம் வாக்கு? - இனத் துரோகிகளை வீழ்த்த கிடைத்திருக்கும் வாய்ப்பு

தமிழீழத் தமிழர்களைக் காக்கவும், தமிழகத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம்.
‘இலங்கைத் தமிழர் பாது காப்பு இயக்கம்’ தோற்றம் பெற்றது குறித்தும், அதன் செயல் பாடுகள் குறித்தும் மண் மொழி 26வது இதழில் வெளிவந்தது தேர்தல் அறிவிப்பால் இந்த கூட்டணி சிதறி விடக் கூடாது, மாறாக தமிழீழ ஆதரவுக் கூட்டணியே தேர்தல் கூட்டணி யாகவும், பரிணமிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை யும் வெளியிட்டுள்ளது.
ஆனால் அந்த வேண்டுகோள் முழுமையடைய வாய்ப்பில்லாமல் பா.ம.க., ம.தி.மு.க., இ.க.க, அ.தி.மு.க. அணியிலும், வி.சி.க. தி.மு.க. அணியிலுமாக இடம் பெற தமிழீழ ஆதரவு கட்சிகள் இருவேறு அணியாகப் பிரிய வேண்டியதொரு கெடு வாய்ப்பான சூழல் நேர்ந்துள்ளது.இப்படிப்பட்ட சூழல் உருவாகக் காரணமென்ன? எந்தப் பின்னணியில் இப்படிப்பட்ட அணி சேர்க்கைகள் உருவாயின என்பதெல்லாம் ஒரு புறம் நமக்குக் கேள்வியானாலும், அதற்கும் அப்பால் இப்படி உருவாகியுள்ள கூட்டணிகளில் தமிழ் உணர்வாளர்கள் ஈழ விடுதலை ஆதரவாளர்கள், மனித நேயப் பற்றாளர்களது நிலை என்னவாக இருக்க வேண்டும், எதிர் வர இருக்கும் தேர்தலில் அவர்கள் எப்படிப்பட்ட நிலையை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலருக்கும் முக்கிய கேள்வி.
எனவே, இதுகுறித்து நம் ஆழ்ந்த சிந்தனைக்காக சில கருத்துகள் :
1. தேர்தலின் இலக்கு : பொது வாகத் தேர்தல் என்றால் யாரை வெற்றி பெறச் செய்வது என்பதுதான் முக்கிய மான கேள்வியாயிருக்கும். ஆனால் இந்தத் தேர்தலில் யாரை வீழ்த்துவது என்பதுதான் முக்கிய கேள்வி.ஏன் இந்த வீழ்த்த வேண்டிய கேள்வியை நாம் முன் வைக்க வேண்டி யிருக்கிறது என்றால், முதலில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈழச் சிக்கலில், தமிழக மக்கள் உரிமைக் காப்பு நடவடிக்கையில் உடனடியாக எந்தவித பெரிய மாற்ற மும் நிகழ்ந்து விடப் போவதில்லை.
மாறாக இச் சிக்கல்கள் தொடரவே செய்யும் என்பது ஒன்று.அதேவேளை களத்தில் நிற்கும் மூன்று சக்திகளில் ஒப்பு நோக்கில் எந்த சக்தி குறைவான கெடுதி விளைவிப்ப தாக இருக்கும் என்கிற நோக்கிலான கணிப்பு மற்றொன்று.இதில் முதலாவது கேள்விக்கான பதில், இந்தத் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டிய சக்திகள், தமிழீழத்துக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து துரோகம், வஞ்சகம் செய்து வருகிற காங்கிரசும் தி.மு.க.வும் தான்.கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஈழ ஆதரவுப் போராட்டங்களையும், அவற்றைத் தணிக்கவும், திசை திருப்பவும், தமிழக மக்களை ஏமாற்றவும் இவ்விரு கட்சிகளும் கையாண்டுவரும் உத்திகளையும்,இது மட்டுமல்ல, சிங்கள இனவெறி அரசின் தமிழீழ அழிப்பு இனவெறிப் போருக்கு தில்லி காங்கிரஸ் அரசு இராணுவ உதவிகள், படைப் பயிற்சி கள் அளித்து வருவதுடன் நேரடி யாகவே இந்திய இராணுவத்தினரையும் களத் துக்கு அனுப்பி சிங்களர்களின் தமிழின அழிப்புப் போருக்கு துணை நிற்பதை யும், அதில் சொந்த ராணுவத்தையே பலி கொடுத்து வருவதையும், தி.மு.க. அரசு இதை மூடி மறைத்து தில்லி அரசு ஏதோ தமிழீழ மக்கள்பால் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது போல படம் காட்ட முயன்று காங்கிரஸ் அரசுக்கு காவடி தூக்கி வருவதையும் நோக்க எவரும் இதைப் புரிந்து கொள்ளலாம்.
எனவேதான் இந்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்கிறோம்.ஆனால், இதில் காங்கிரசை வீழ்த்தவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரிய வில்லை. காங்கிரஸ் போட்டியிடும்16 தொகுதிகளிலும் அதை வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூடத் தோர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் எல்லாரும் குறியோடும், மிகுந்த வெறியோடும் இருக்கிறார்கள்.எனில், தி.மு.க. வையும் இந்த நிலையில் வைத்துப் பார்க்க வேண் டுமா.
காங்கிரசோடு சேர்ந்து அதையும் வீழ்த்த வேண்டுமா என்பதில் தான் சிலருக்குக் கேள்வியிருக்கிறது. ஆயிரம் தான் தி.மு.க. தமிழர்களுக்குக் துரோக மிழைத்தாலும், சில தமிழ் உணர் வாளர்கள் அதன் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான அறியாமை வயப் பட்ட பற்று, தி.மு.க.வை விட்டால் வேறு யாரைத் தேர்ந்தெடுப்பது என்ப தான தயக்கம் ஆகியனவே இந்த கேள்விக்குக் காரணம்.அதாவது காங்கிரஸ் நிற்கும் .
16 தொகுதிகளிலும், அதைத் தோற்கடிக்க அதை எதிர்த்து வீழ்த்த எந்தக் கட்சிக் கும் வாக்களிக்கத் தயாராயிருக்கும் மனம், தி.மு.க.வை மட்டும் எதிர்க்கத் தயங்குகிறது. குறிப்பாக தி.மு.க. -வும், அ.தி.மு.க.வும் நேரடியாக மோது மிடங்களில், தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தயக்கம் காட்டுகிறது.இந்த தயக்கத்திற்கு காரணம், கருணாநிதி ஆட்சியிலாவது ஈழ மக் களுக்கு ஆதரவாக பேச, கூட்டம் போட, போராட்டம் நடத்த அனுமதி கிடைக்கிறது. ஜெ. ஆட்சி வந்தால் அந்த உரிமைகூட இருக்காதே என்கிற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். இதனால் இரண்டையும் ஒப்பு நோக்க தி.மு.க.வுக்கு வாக்களிப்பதுதானே சரியாயிருக்கும் என்று கருதுகிறார்கள்.
இந்தக் கருத்தோட்டத்திற்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சலிப்பூட்டும் அளவுக்கு விளக்கம் அளித் திருக்கிறோம். முதலில் ஜெ. ஆட்சி சர்வாதிகார ஆட்சி, கருணாநிதி ஆட்சி சனநாயக ஆட்சி என்று கருதுவதே மயக்கமானது. இருவரது ஆட்சியி லுமே தமிழ் உணர்வாளர்கள், தமிழீழ ஆதாரவாளர்கள் சிறை வைக்கப்பட் டிருக்கிறார்கள். அவர்களது சனநாயக உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என் பதே அனுபவம்.அப்படியே ஒரு வாதத்துக்கு மேற் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்வ தானாலும், கருணாநிதி ஆட்சி சனநாயக உரிமை என்பதன் பேரால் மக்களுக்கு பராக்கு காட்டி வருகிறதே தவிர, போராடும் மக்களின் எந்தக் கோரிக்கை யையும் வலியுறுத்தி அதைப் பெற்றுத் தரமுயலாமல் மக்களை ஏமாற்றி வஞ்சித்து, வருகிறது.
இதையே தொழி லாகக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. எனவே உதவி செய்வதாகக் கூறி படம் காட்டி வஞ்சித்து வரும் கட்சிக்கும், நேரடியாகவே எதிர்ப்புக் காட்டும் கட்சிக்கும் பெரும் வேறுபாடு எதுவுமில்லை. இத்துடன் கூட இருந்து குழி பறிக்கும் துரோகியை விட, நேரடி யாக வரும் எதிரி எவ்வளவோ தேவ லாம் என்றே தொடர்ந்து சொல்லி வந் திருக்கிறோம்.அந்த வகையில் துரோகியை வீழ்த்தி எதிரியை முன் நிறுத்த வேண் டும் என்பதே நம் வேண்டுகோள்.இதில் இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழக மக்களுக்கு ஆதரவான உணர்வு தமிழகமெங்கும் பொங்கி எழுந்துள்ள இத்தருணத்தில் தான் தனிமைப்பட்டு விடக்கூடாது என்கிற அச்சத்திலோ, வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டு விடுமோ என்கிற பயத்திலோ, ஈழச் சிக்கலுக்காக ஒரு நாள் பட்டினிப் போராட்டம் இருந்தார் ‘ஜெ’. அவர் ஈழப் போராளிகளுக்கு எதிரான கருத்து கொண்டவராக இருந்தும் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை - தன்னுரிமை அங்கீ கரிக்கப்பட வேண்டும் என்றிருக் கிறார். இதை அவர் உண்மையாகச் சொன் னாரா, கண் துடைப்பாகச் சொன்னாரா என்பதெல்லாம் மிகுந்த ஆராய்ச்சிக் குரியதாகக் கொண்டாலும், தமிழக மக்களுக்கு எதிராகக் கருத்து கொண்டு தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்கிற கட்டாயத்துக்கு அவர் ஆளாகி யிருக்கிறார் என்கிற அளவி லேனும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
ஆக, இந்த நிலையில் நம் எதிரில் உள்ள கட்சிகள் இரண்டு. தமிழக மக்களை என்ன சொல்லியும் ஏமாற்றலாம், எப்படியும் வஞ்சிக்கலாம் என்ற நிலை யில் இருக்கும் தி.மு.க., தமிழகத்தில் தமிழீழ மக்களுக்கு எதிரான நிலை எடுத்து அரசியல் நடத்த முடியாது என்கிற அச்சத்தில் இருக்கும் அ.தி.மு.க. இவ்விரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதே தற்போது உணர்வாளர்கள் மத்தியில் உள்ள கேள்வி.இந்தக் கேள்விக்கு விடைகாணும் முன் இப்படி யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் தி.மு.க. அணி வெற்றி பெற்றால், இதைத் தங்கள் நிலைப் பாட்டுக்குத் தமிழக மக்கள் கொடுத்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்வார்கள்.
காங்கிரஸ் - தி.மு.க. நெருக்கம் மேலும் அதிகமாகும். தமிழ் மக்களுக்கு எதி ரான வஞ்சகம் மேலும் தீவிரமாகும். அ.தி.மு.க. அணி வென்றால் ஈழ எதிர்ப்பு நிலைபாடு எடுக்கத் தயங்கும். ஏற்கெனவே ஈழ எதிர்ப்பு நிலைபாடு எடுத்து அதனால் தமிழக மக்களால் தோற்கடிக்கப்பட்ட தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளின் அனுபவம் அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். ஈழச் சிக் கலின் தீர்வுக்கான தன் நிலைப்பாட்டில் ஓரளவேனும் மாற்றம் வரும். அத்துடன் தேற்கடிக்கப்பட்ட தி.மு.க.வும் தன் தோல்வியிலிருந்து ஓரளவு பாடம் கற்று, உண்மையாகவே ஈழ மக்களுக்கு ஆதர வாகக் குரல் கொடுக்க முயலும். இரண்டு கட்சிகளுமே அடுத்த இரண் டாண்டுகளில் வர இருக்கிற சட்ட மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு சற்றேனும் ஈழ ஆதரவு நடவடிக்கை களை, அதற்கான போராட்டங்களை மேற்கொள்ள முயலும்.
ஆகவே, இப்படி எந்த நோக்கில் பார்த்தாலும் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டில் தி.மு.க.வை தோற்கடிப் பதே, அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்வதே பயனுள்ளதாயிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.ஆக, காங்கிரஸ் நிற்கும் 16 தொகுதிகளிலும் காங்கிரசை வீழ்த்து வது, தி.மு.க. நிற்கும் 21 இடங்களிலும் தி.மு.கவை எதிர்த்து யார் நிற்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்படாமல் தி.மு.க.வுக்கு எதிராக அதை வீழ்த்தும் அணிக்கு வாக்களிப்பது என்கிற நிலை யையே நாம் மேற்கொள்ள வேண்டும்.
மீதமுள்ள மூன்று தொகுதிகளில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடம். இது தி.மு.க. அணியில் கூட்டணியாயி ருப்பதால் வீழ்த்த வேண்டிய கட்சி என்பதில் எவருக்கும் தயக்கம் இருக்க முடியாது. ஆனால் வி.சி.க. நிற்கும் இரு தொகுதிகள்தான் பலருக்கும் என்ன செய்வதென்று பிரச்சனை.வி.சி.க. தொடர்ந்து ஈழ விடு தலைக்கு ஆதரவாக, கருத்துரிமைப் பறிப்புக்கு எதிராக போராடி வந்த கட்சி. நியாயமாய் அது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வந்து ஜெ. அணியில் பங்கேற்றிருக்க வேண்டும்.
ஆனால் என்ன நெருக் கடியோ, என்ன நிர்ப்பந்தமோ, அது தி.மு.க. அணியிலேயே தங்கி விட்டது. காங்கிரசை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வந்த வி.சி.க. காங்கிரசோடு சமரசமாகி அதனோடு குழையும் அவலத்துக்கு ஆளாகியிருக்கிறது.இந்நிலையில் தி.மு.க. காங்கிர சோடு சேர்ந்து அதையும் எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.என்றாலும், வி.சி.க. தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால், தாங்கள் பதவிக்கு வரக் கூடாது என் பதால் தங்களை ஓரம் கட்ட முனையும் முயற்சியிலேயே தங்களைத் தோற் கடிக்க முயல்கிறார்கள் என்று குறைப் பட்டுக் கொள்ள அது சார்ந்த பிரச்சாரத் தில் ஈடுபடலாம். தவிர, என்னதான் அது காங்கிரஸ் - தி.மு.க. அணியில் இருந் தாலும் அதன் ஈழ ஆதரவு உணர்வு முற்றாக மங்கிவிட்டது.
இத்தேர் தலையொட்டிய பிளவு, பிரிவும் என் றென் றைக்கும் நிரந்தரமானதல்ல. தேர்தல் முடிந்தபின் நாளைக்கே ஈழச் சிக்கலின் தீர்வுக்காக பழையபடியே அனைவரும் ஒன்று சேர்ந்து போராட லாம் என்கிற நிலையும் ஏற்படலாம்.எனவே, இதெல்லாம் கருத்தில் கொண்டு இரண்டு ஆலோசனைகளை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. சிதம் பரத்தில் களத்தில் நிற்கும் இரண்டு கட்சிகளுமே ஈழ ஆதரவு கட்சிகள் என்ப தால் உணர்வாளர் கள் எவரும் அவர வர்கள் விரும்பும் கட்சிக்கு வாக் களித்துக் கொள் ளட்டும் எனலாம்.அதேபோல பிரச்சார களத்திலும் ஒருவரை யொருவர் கடுமையாக விமர்சனம் செய்து சாடிக் கொள்ளா மல், நேரடியாக வும், மோதிக் கொள்ளாமல், கண்ணியமாகவும், நாகரிகமாகவும் பிரச்சாரம் செய்து நேர்மையாக அவரவர்களுக்குள்ள செல்வாக்கிற்கு யார் வருகிறார்களோ வரட்டும் என்கிற அளவில் விட்டு விடலாம் என்றும் சொல்லலாம்.ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால், வி.சி.க. என்கிற இதை இங்கு தனிப்பட்ட ஒரு கட்சியாகப் பார்க்காமல் அதைத் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் ஒரு அங்க மாகவே பார்க்க வேண்டியுள்ளது. வி.சி.க. விற்கு அளிக்கும் வாக்கு காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்கு அளிக்கும் வாக்காகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.அதாவது வி.சி.க. என்கிற ஒரு தனிப்பட்ட கட்சியின் பால் நாம் கருணை கொண்டு அனுதாபத்தோடு பார்த்து நாம் அளிக் கும் வாக்கு, இதுநாளும் ஈழத் தமிழர் களைப் படுகொலை செய்து வந்த காங்கிரஸ் அரசுக்கு அதற்குத் துணை போகும் தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்காக ஆகிற நிலை உள்ளது.ஏன், அ.தி.மு.க. கூட்டணியாக பா.ம.க. வென்றால் நாளை அது தில்லிக்கு ஆதரவாகப் போகாதா, போகாது என்பது என்ன நிச்சயம் என்கிற கேள்வியும் சிலருக்கு எழலாம்.
நியாயம்.தேர்தல் முடிந்த பிறகு தில்லியில் யார் ஆட்சியமைக்க வாய்ப்பிருக் கிறதோ அவர்களுக்கு அது காங்கிரசா, பா.ஜ.க.வா, மூன்றாவது அணியா என்பது பற்றிக் கவலைப்படாமல் தமிழகக் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறது. ஆதரவளிக்கும் என்பதுதான் உண்மை. ஆகவே எந்தக் கூட்டணி வென்றாலும் தில்லிக்குத் துணை போவதும், தில் லிக்கு ஆதரவளிப்பதும் நிச்சயம்.என்றாலும், வெற்றி பெற்ற பிறகு தில்லியில் பேரம் பேசும் வாய்ப்போடு நிபந்தனை விதித்து அதற்கு ஆதர வளிக்க முன் வருவது என்பது வேறு. போட்டியிடும் தருணத்திலேயே காங் கிரசுக்கு கொத்தடிமை போல சேவகம் செய்து கொண்டிருப்பது என்பது வேறு. இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
இதில் பா.ம.க. நிலை முதல் நிலை என்றால், வி.சி.க.வின் நிலை இரண் டாவது நிலை. இந்த இரண்டாவது நிலையே இப்போது நாம் எதிர்க்க வேண்டியது. இந்த அடிப்படையில் நோக்க தெள்ளத் தெளிவாக தற்போதே காங்கிரஸ் ஆதரவு, காங்கிரஸ் கூட்டு என காங்கிரசின் தோளில் கை போட்டு வரும், வி.சி.க.வை உணாவாளர்கள் ஆதரிக்க முடியது.ஆகவே, இந்த அடிப்படையில், ஏற்கெனவே தமிழினத்தை ஏமாற்றி வஞ்சித்து துரோகமிழைத்த தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதும், எந்த அளவு முடியுமோ அந்த அளவு ஈழ ஆதரவுச் சக்திகளை நாடாளுமன்றம் அனுப்புவதுமே இத்தேர்தலில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை யாக, நடைமுறையாக இருக்க முடியும்.
எனவே, அதற்கேற்பவே நாம் வாக் களிக்கவும், மற்றவர்களை வாக்களிக்கச் செய்யவும் வேண்டும்.இதற்கடுத்து இன்னும் இரண்டு கேள்விகள். ஒன்று, இரண்டு அணிகளில் எது வுமே சரியில்லை. ஆகவே உணர்வா ளர்களாகிய நாம் மூன்றாவது அணி யாக வாய்ப்புள்ள இடங்களில் ஒரு சில வேட்பாளர் களை நிறுத்த லாமே என்கிற ஒரு கருத்தும், அடுத்து இரண்டு அணிகளுமே சரியில்லாதவை, ஆகவே இரண் டையுமே புறக் கணித்து யாருக் கும் வாக்களிக்காமல் இருந்து விட லாமே என்கிற ஒரு கருத்தும் சிலரிடம் நிலவுகிறது.
மூன்றாவது அணி : தமிழகத்தில் தமிழீழ உணர்வாளர்கள் கொண்ட மூன்றாவது அணி என்பது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க., இ.க.க. ஆகிய கட்சிகள், தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்புகள் கொண்ட அணியாக உருப்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி உருவாக வாய்ப்பற்ற சூழலில், இக்கட்சிகள் இருவேறு முகாம்களில் இடம் பெற்றுள்ள நிலையில், வெறும் உணர்வாளர்கள், ஆதரவாளர்களை மட்டுமே கொண்ட அணி, மிகச்சிறிய பலவீனமான அணியாகவே அமையும். இந்த அணியால் தி.மு.க. - காங்கிரஸ் அணியை வீழ்த்த முடியாது என்பதோடு மட்டுமல்ல, வீழ்த்தும் வாய்ப்புள்ள அணியையும் இது பலவீனப்படுத்து வதாகவும் அமையும்.
காரணம், இந்த உணர்வாளர்கள் அணி எந்த வாக்குகளைப் பெற முடி யும். காங்கிரஸ் தி.மு.க. அணியி லிருந்து இதற்கு வாக்குகள் கிடைக் காது. பா.ம.க., தி.மு.க., வி.சி.க., அணியிலிருப்பவர்கள் மட்டுமே இதற்கு ஆதரவாகச் செயல் படுவார்கள். வாக்களிக்கவும் முன் வருவார்கள். இந்நிலையில் இது தி.மு.க. எதிர்ப்பு அணியை வலு விழக்கச் செய்வதாக, எதிர்ப்பு வாக்குகளைக் கலைத்து, அதை சிதறடிக்கச் செய்வதாகவே, இதன் மூலம் ஆளும் தி.மு.க. காங் கிரஸ் ஆதிக்கக் கூட்டணிக்கு வலு சேர்ப்பதாகவே முடியும் என்பதால் இந்த யோசனை தேவையற்றது, நமது இலக்குகளுக்கு எதிரானது என்பதை உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் புறக்கணிப்பு : ஒவ்வொரு தேர்தலிலும் சராசரியாக 25 விழுக்காடு முதல் 40, 50 விழுக்காடு வரையான மக்கள் ஏதாவதொரு காரணம் பற்றி வாக்களிக்காமல் தான் இருந்து வருகிறார்கள். இதற்கு வாக் களிக்க விரும்பாமை, இயலாமை, ஈடுபாடின்மை என பலத் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். பகுதிக்கு உரிய நலத்திட்டங்களை நிறைவேற்ற வில்லை என்கிற முடிவிலான காரணங் களும் இருக்கலாம். இதற்கு அப்பால் கொள்கை, கோட்பாடு சார்ந்த ஒட்டு மொத்தப் புறக்கணிப்புகளும் காரண மாக இருக்கலாம். எனில், இப்படிப் பட்ட புறக்கணிப்பு என்பது எதிர்ப்பைக் காட்டும் நடவடிக்கை என்பதாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட லாமே அன்றி பெரும் விளைவை ஏற்படுத்தும் என்று கொள்ள முடியாது.
பெரும் போராட்டமும் கொந்தளிப்பும் நிலவுகிற காலங்களில், தேர்தல் வெற்றி பெற்றாலும் வெற்றி பெற்ற கட்சியால் ஆட்சி நடத்த முடியாது என்கிற நிலையில், பெருவாரியான மக்கள் செல்வாக்கு நிலவுகிற சூழலில் தான் இந்தப் புறக்கணிப்பு என்பது அர்த்த முள்ளதாகவும் ஒரு விளைவை ஏற் படுத்துவதாகவும் இருக்கும்.ஆனால், இன்று, இப்போதுள்ள மக்களின் விழிப்புணர்வு, அரசியல் நிலை சார்ந்த சூழலில் இந்தப் புறக் கணிப்பு குறிப்பாக எந்த விளைவையும் ஏற்படுத்தி விடாது. இது, இந்தப் புறக்கணிப்புக்கு அப்பால் மக்கள் எப்போதும் போல் வாக்களிக்கவும், வெற்றி தோல்விகள் வழக்கம் போல் நிகழவும்தான் வாய்ப்பளிக்குமேயல் லாது, மாறுபட்ட எந்த விளைவு எதையும் ஏற்படுத்தாது.
இந்நிலையில் சாதாரண காலங்களிலானால் ஒரு எதிர்ப்பு நட வடிக்கை, மறுப்பின் வெளிப்பாடு என்கிற அள வில் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நாசகார சக்திகள் ஒரு இனத்தின் அழிவே இலக்காகச் செயல்படும் போது, அப்படிச் செயல்பட்ட முகத் தைத் தூக்கிக்கொண்டு வந்து வாக்குக் கேட்கும்போது, அதை வீழ்த்தவும், முறியடிக்கவும் என்னென்ன வாய்ப்பு கள் உண்டோ அனைத்தையும் பயன் படுத்திக் கொண்டு அதை வீழ்த்தும் இலக்கு ஒன்றே சரியான நிலைப் பாடாய் இருக்க முடியும்.தவிர, புறக்கணிப்பு என்றால் யார் புறக்கணிப்பாளர்கள்? தி.மு.க. காங் கிரஸ் அணியாளர்கள் யாரும் புறக் கணிக்க மாட்டார்கள்.
மூன்றாவது அணி போல், மாற்று அணியில் உள்ள உணர்வாளர்கள்தான் புறக்கணிப்பார் கள். இதுவும் மூன்றவாது அணி மாதி ரியே தி.மு.க. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை குறைக்கவே, அதைப் பலவீனப்படுத்தவே பயன்படும்.ஆகவே, கொள்கைப் புனிதம், கோட்பாட்டுத் தூய்மைக் காக்க பரி சுத்த ஆவிகளாய்த் திரிய முயல்வது ஆதிக்க சைத்தான்களுக்கே துணை போவதாய் முடியும் என்பதை உணர்ந்து புறக் கணிப்பு நோக்கத்தை கொண்ட வர்கள் அந்நிலையைக் கைவிட்டு ஆதிக்க அணியை வீழ்த்த மாற்று அணிக்கு அது குறைவான ஆபத்து கொண்ட அணி எனக் கருதியேனும் இதற்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழீழத்துக்கு ஜெ. ஆதரவுஇக்கட்டுரை ஜெ. தனி ஈழம் என்கிற கருத்தை முன் வைப்பதற்கு முன் எழுதியது. தற்போது அவர் தனி ஈழம் என்கிற கருத்தை ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் உறுதிபடத் தெரி வித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நம்முடைய வாதங்களுக்கான நியாயத் துக்கு மேலும் வளம் கூட்டுகிறது. ஆகவே அனைத்தையும் கருத் தில் கொண்டு காங். - தி.மு.க. கூட்டணியை வீழ்த்தும் முனைப்பில் நாம் இயங்க வேண்டும்.இ.க.க.(மா)-வுக்கும் நமது வாக்கா?எல்லாம் சரிதான்.
ஆனால் காங். - திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என் பதற்காக தனி ஈழத்துக்கு எந்த நாளிலும் ஆதரவு தராத, எப்போதும் அதை எதிர்க்கும் இ.க.க.(மா)வுக்கு நாம் எப்படி வாக்களிக்க முடியும் என்று பலருக்குத் தயக்கம் இருக்கலாம். என்றாலும் வேறு வழியில்லை. இதற்கு வாக்களிக்காமல் விட்டால் ஆதிக்க அணி துரோக அணி, வஞ்சக அணிதானே ஜெயிக் கும் என்பதால் அந்த அணியை வீழ்த்த இ.க.க.மா.வுக்கும் அது ஜெ. அணியில் உள்ளது என்பதால் அதற்கு வாக்களிக்க வேண்டியது தான். தி.மு.க. காங்கிரஸ் அணியை வீழ்த்தி பின் இதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான்.மாறாத கூட்டணி புனிதமானதா?சில தலைவர்கள், தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுகிறார்கள் என்று சில பேர் அதையே ஒரு கேலியாகவோ, மலிவாகவோ பேசி வருகிறார்கள்.
தேர்தல் அரசியல் என்று வந்து விட்ட பிறகு அடிக்கடி கூட்டணி மாற்றம் என்று அது குறித்து பேசுவது அர்த்தமற்றது.காரணம், ஒரே கூட்டணியில் நிரந்தரமாய் இருப்பது புனிதமானது, பத்தினித் தனமாது என்றோ, அடிக்கடி அணி மாறுவது, புனிதம் கெட்டது, சோரம் போவது என்றோ அர்த்தமாகி விடாது.எந்தக் கூட்டணியிலும் எவரும் நிலையாக இருந்தாலும் சரி, கூட்டணி மாறினாலும் சரி, அவர் எந்த சந்தர்ப்பத்தில், ஏன் இருக்கிறார், மாறுகிறார், எந்த நோக்கத்திற்காக மாறுகிறார்.
தற்போதைய பொது இலக்கு என்ன என்பதை வைத்தே அதை நாம் மதிப்பிட முடியும்.இந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் கூட்டணி பற்றி யோசிப்போம். தற்போது தமிழக மக்களின் உயிரும் உணர்வுமாய் இருக்கிற பிரச்சினை, பொதுவில் எல்லோருடைய கவனத்திலும், கவலையிலும் உறைந்திருக்கிற பிரச்சினை ஈழப்பிரச்சினை.இதில் ஜெ. கூட்டணியில் அங்கம் வகித்திருக்கிற கட்சிகளில் இ.க.க.மா. தவிர அனைத்தும் ஈழ ஆதரவுகட்சிகள். ஆகவே இக்கூட்டணியில் ஏதும் முரண் இல்லை. ஆனால் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஈழ ஆதரவு கூட்டணி அல்ல, எதிர் கூட்டணி. வி.சி.க. ஆதரவு அணி. ஆகவே முரண்பட்ட கூட்டணி.
எனவே, இந்தக் கூட்டணி வேறுபாட்டையும் நாம் வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டும்.துரோகம்தமிழக அரசியலின் மிகப் பெரும் சோகம் கருணாநிதியின் துரோக, வஞ்சக குடும்ப அரசியலை வீழ்த்துவதற்கு வலுவான ஒரு மாற்று அணி இல்லை என்பதுதான். இடையில் ஜெ. முதல்வராக வந்தார். வந்து என்ன பயன்? கருணாநிதி ஆட்சியில் கோபாலபுரம் குடும்ப ஆதிக்கம் என்றால், ஜெ. ஆட்சியில் மன்னார்குடி குடும்ப ஆதிக்கம். ஜெ. மட்டும் இந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைத்து நல்லாட்சி தந்திருந்தால் கருணாநிதி குடும்ப ஆட்சியை என்றென்றும் தலையெடுக்க வொட்டாமல் தடுக்கலாம்.
ஆனால் அந்த வாய்ப்பு கிட்டாமல் போயிற்று. அடுத்து இருக்கிற பிற கட்சிகள், பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க., இ.க.க., ஆகிய ஒன்றிணைந்து ஒரு மாற்று அணியை உருவாக்கும் என்று பார்த்தால் அதுவும் கை கூடி வரவில்லை. அதனால் தனக்கு நிகராக யாரும் இல்லை என்கிற எக்காளத்தில் தில்லியின் கூட்டோடு தில்லியின் பின்புலத்தோடு, காங்கிரஸ் - தி.மு.க. பரஸ்பர உதவியில் நடந்து கொண்டிருக்கிறது கருணாநிதி ஆட்சி. எனவே, இந்த சூழலையும் நாம் கருத்தில் கொண்டு இப்போது கிடைத்திருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தி.மு.க. காங்கிரசின் துரோகத்துக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.

Monday, May 11, 2009

நேற்றிரவு 1,000 ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை: நாசகார பீரங்கி குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்

முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட தாக்குதலில் 1,112 க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் எறிகணைகள், ஆட்லறி எறிகணைகள், கனோன் ரக பீரங்கிகள் மற்றும் பல்குழல் ரொக்கட் லோஞ்சர் ஆகிய கனரக நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் தார்ப்பாள் கூடாரங்களிலும் உறக்கத்திலிருந்த பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்தும் உள்ளனர். பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுவதுடன், வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் சிதறிய நிலையில் காணப்படுவதாகவும்,சிறிலங்காபடையினரின் கண்மூடித்தனமான தொடர் தாக்குதல்கள் காரணமாக அவ்வுடலங்களை மீட்க முடியாதிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுவரை 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசகாரத் தாக்குதல்களினால் உயிரிழந்த உடலங்களை மீட்க முடியாத நிலை காணப்படுவதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 க்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு இன்று ஞாயிறு காலை 9.25 மணிவரை காயமடைந்த நிலையில் 112 சிறுவர்கள் அடங்கலாக 814 பேர் கொண்டு வரப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியட்சகர் வீரகத்தி சண்முகராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுவரை மருத்துவமனைக்கு 257 பேரின் இறந்த உடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் இதில் 67 பேர் சிறுவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேநேரம், சிறிலங்கா படையினரின் தாக்குதலில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday, May 9, 2009

இலங்கை தமிழர் நிலைமையை ஆய்வு செய்ய மனித உரிமை கவுன்சிலுக்கு ஐ.நா. உத்தரவு

இலங்கையில் பரிதவிக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக சர்வதேச விசாரணை கமிட்டி அமைக்குமாறு மனித உரிமை கவுன்சிலுக்கு ஐ.நா. வல்லுனர் குழு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் கடுமையாக போர் நடந்து வருகிறது. விடுதலைப்புலிகளின் வசம் இருந்த ஏராளமான பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டது. அந்த பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை நிவாரண முகாம்களில் இலங்கை அரசு தங்க வைத்துள்ளது. அவர்களுக்கு போதுமான உணவு வழங்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

அதே நேரத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளிடம் எஞ்சியுள்ள 4 சதுர கி.மீ. பரப்பளவில் இன்னும் 50 ஆயிரம் மக்கள் இருப்பதாக ஐ.நா. மதிப்பிட்டு இருக்கிறது. அந்த பகுதியிலும் ராணுவம் தீவிரமாக குண்டுகளை வீசி வருகிறது. இதனால், இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவருடைய நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.

இலங்கை தமிழர்களின் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட மேலை நாடுகளும் ஐ.நா.சபையின் பல்வேறு உறுப்புகளும் வருத்தம் அடைந்துள்ளன. இந்த சூழ்நிலையில், இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து ஆராய சர்வதேச விசாரணை கமிட்டி அமைக்குமாறு மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஐ.நா. வல்லுனர்கள் குழு அறிவுறுத்தி இருக்கிறது.

இது குறித்து ஐ.நா. சபையின் உடல் நல உரிமைகள் கவுன்சில் தலைவர் பிலிப் ஆல்ஸ்டன், உணவுகள் உரிமை தலைவர் ஆனந்த் குரோவர், குடிநீர் உரிமை தலைவர் ஆலிவர், அடிப்படை சுகாதார உரிமைகள் கேதரின் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தற்போது நடந்து வரும் மனித துன்புறுத்தல்கள் சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்க கூடியவையாக உள்ளன. இவ்வளவு மக்கள் பலியாகி விட்டனர் என்று கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு படுகொலை தொடருகிறது. பொறுப்புணர்ச்சியும், வெளிப்படையான தன்மையும் இல்லாததால் உண்மை நிலவரம் தெரியவில்லை.

கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு நம்பும்படியான சரியான காரணம் எதுவும் கிடையாது. போர் பகுதிக்குள் சர்வதேச கண்காணிப்பு குழு மற்றும் பத்திரிகையாளர்களை இதுவரை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்து வருகிறது.

எனவே, கடந்த சில மாதங்களாக நடந்த சம்பவங்கள் குறித்த ஆதாரங்களை திரட்டவும், தற்போது நடைபெறும் சம்பவங்களை கண்காணிக்கவும் உடனடியாக ஒரு சர்வதேச கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சேலதத்தில் பெரியார் தி.க தோழர்கள் கைது

09.05.2009 இன்று சேலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கொளத்தூர் செழியன் மற்றும் நங்கவள்ளி கோபால் இருவறும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழின துரோக காங்கிரசின் முகத்திரியை கிழிக்கும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் துரோக காங்கிரசை தோக்கடிக்கும் வகையில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவான துண்டரிக்கையை கொடுத்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பெரியார் தி.க தோழர்கள் கொளத்தூர் செழியன் மற்றும் நங்கவள்ளி கோபால் இருவரும் துரோக காங்கிரசியின் கைக்கூலியான திமுக அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழத்தில் வாழ துடித்த குழந்தைகள் , வழியில் துடித்து கொண்டிருந்த கைகளை, சிங்கள கைகள் கொன்றது அந்த கைக்கு ஆயுதம் கொடுத்த கைகள் காங்கிரஸ் கைகள் , அந்த கைகளுக்கு நமது ஓட்டு இல்லை . என்று வினியோகம் செய்கிற பொழுது துரோக திமுக அரசால் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளுக்கு ஆதரவான துண்டறிக்கையை கொடுத்தாக கூறி பொய்ப்புகார் கொடு்த்து தோழர்களை கைது செய்துள்ளனர். இந்த வரம்பு மீறிய துரோக செயலை வண்மையாக கண்டிக்கதக்கதாகும் .

கொளத்தூர் மணி அறிக்கை


Friday, May 8, 2009

தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு 2 ஆண்டு முடிந்து விட்டது. வெளிவராத சில தகவல்கள்

தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த சம்பவம் பற்றி பேசுவதே தமிழகத்தில் குற்றம் என்றாகிவிட்டது. பத்திரிகை சுதந்திரம் பற்றி வாயகிழிய பேசும் பத்திரிகையாளர்கள் யாரும் அதுபற்றி பேசவில்லை.வெளிவராத சில உண்மைகள் பற்றி வலைப்பூ வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய தருணத்தில் தி.மு.க.வுக்கு எந்த பத்திரிகையுமே ஆதரவு தரவில்லை. எல்லா பத்திரிகைகளும் அந்த தருணத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு அலையும் இல்லாத நிலையில் தி.மு.க., ஆதரவை பெருக்க பிரசார பீரங்கியாக பயன்படுத்தவே தினகரன் வாங்கப்பட்டது. திட்டமிட்டது போல தேர்தல் பிரசார பீரங்கியாக செயல்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். அப்போதே தயாநிதிக்கும் அழகிரிக்குமான பனிப்போர் தொடங்கிவிட்டது.

2006ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே இரு தரப்புக்கும் புகைச்சல் ஆரம்பித்தது. இது தினகரனில் பணியாற்றிய எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. குறிப்பாக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தினகரன் நிருபர்களுக்கு கல்வி துறை பற்றிய செய்தி கொடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார். அந்த அமைச்சரிடம் ஒரு நிருபர் கேட்டதற்கு ஆமாம் நாங்கள் அப்படித்தான் சொல்லியிருக்கிறோம் என்றும் ஒத்துக்கொண்டார். இதிலிருந்தே அழகிரி, மாறன் சகோதரர்கள் பனிப்போர் இருந்து வந்தது என்பது தினகரன் ஊழியர்களுக்கு அப்பட்டமாக தெரிந்ததுதினகரனில் தயாரான சர்வே கேள்வி பட்டியல்திடீரென ஒரு நாள் தினகரனின் மூத்த நிருபர் என்று அழைக்கப்பட்ட ஒருவர் தினகரன் நிருபர்களிடம் ஒரு தாள் ஒன்றை நீட்டினார். தினகரன் நிர்வாகம் ஒரு சர்வே வெளியிடப்போவதாகவும் கேள்வி என்னமாதிரி கேட்கலாம் என்றும் எழுதி தரக்கூறினர். ஆளாளுக்கு ஒன்று எழுதி தந்தனர். அப்படி எழுதப்பட்டதுதான் வாரி அரசியல் பற்றிய கேள்வியும். இத்தகைய சர்வே இந்த நோக்கத்துடன் வரப்போகிறது என்று யாருக்குமே தெரியாது.

மே மாதம் தொடக்கத்தில் இருந்தே இந்த சர்வேக்கள் வந்த போது பா.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போதெல்லாம் இதுபற்றி அவர் கண்டு கொள்ளவில்லை. தி.மு.க.வில் அடுத்த வாரிசு சர்வேயில் ஸ்டாலினுக்கு 70 சதவீதமும், கனிமொழி, அழகிரிக்கு 2 சதவீதமும் என வந்த 2007ம் ஆண்டு மே 10ம் தேதி வந்த அதிகாலையிலேயே அழகிரி மதுரையில் இருந்து தன் தந்தைக்கு போன் போட்டு என்னப்பா? என்றார். நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் கேட்கல என்றார். ஆனால் அடுத்தது தீவிரம் அதிகரித்தது. மதுரை தினகரன் அலுவலகம் நோக்கி அழகிரி படை சென்று அடித்து நொறுக்கி பெட்ரோல் குண்டுகள் வீசியது. எம்.வினோத் குமார்(23), ஜி.கோபிநாத்(25), முத்துராமலிங்கம்(42) ஆகியோர் உள்ளே மாட்டிக்கொண்டு பலியாயினர்.உடனே அங்கே பறந்து வந்த கலாநிதி நீதி கிடைக்கும் வரை விடமாட்டேன் என்று நாடகமாடினார். அதை நம்பி தினகரன் ஊழியர்கள் ஏமாந்தனர்.

மே 10ம் தேதி சன்டிவியில் அழகிரி ரவுடி, அழகிரி ரவுடி என்று திரும்ப திரும்ப ஒளிபரப்பினார்கள். தமிழ் முரசிலும் தலைப்பு செய்தியாக்கினார்கள். மறுநாள் தினகரனிலும் தலைப்பு செய்தியாக்கினார்கள். சன்டிவியில் எடுக்கப்பட்ட வீடியோ ஜெயாடிவிக்கும் தரப்பட்டது என்பதும் ஊரறிந்த விஷயம்மே 10ம் தேதி தினகரன் ஊழியர்கள் எல்லோருக்கும் உத்தரவு பறந்தது. காலையில் எல்லோரும் ஆபீசில் இருக்க வேண்டும். கலாநிதிமாறன் வந்து ஊழியர்களிடம் பேசப்போகிறார் என்றனர். ஆனால் ஊழியர்கள் காத்திருந்ததுதான் மிச்சம். அவர் வரவேயில்லை. அப்போதே சில ஊழியர்களுக்கு இந்த பிரச்னை எப்படி போகும் என்று தெரிந்து விட்டது. மறு நாள் சட்டசபையில் பேசிய முதல்வர் கருணாநிதி, நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். தினகரன் நிர்வாகம் நான் சொல்லியதை கேட்கவில்லை என்று ஒரே போடாக போட்டார். இதற்கு தினகரன் தரப்பில் எந்த விளக்கமும் தரவில்லை. இதன் பின்னர் மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் ஏற்படட் பிளவு ஊரறிந்த விஷயம். எல்லாம் சில நாட்களுக்குத்தான்.தாத்தாதான் சொன்னார்பிரச்னை குறித்து வார இதழ்கள் கட்டுரை வெளியிட்ட போது. தயாநிதி ஆப் த ரிக்கார்டாக நக்கீரன் நிருபர் ஒருவரிடம் கூறுகையில் சர்வே பற்றிய எல்லா தகவல்களும் தன் தாத்தாவுக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறினார். பின்னர் பிரச்னை முற்றிய பிறகு தினகரனில் கலாநிதி வெளியிட்ட ஒரு பக்க கடித்திலும் இது குறிப்பிடப்பட்டது.

அரசியல் சண்டைகளை தூண்டிவிட்டு குளிர்காயும் முதல்வர் கருணாநிதி தன் குடும்ப சண்டையையும் பின் இருந்து தூண்டிவிட்டாரா? என்று நமக்கு கேள்வி எழுகிறது.கலைஞர் டிவி தொடங்கியபிறகு, அரசு கேபிள் டிவி வெளியான பிறகு, அரசுக்கு எதிரான செய்திகளை தினகரனில் வெளியிட்டும், சன்டிவியில் ஒளிபரப்பியும் தாத்தா கருணாநிதிக்கு பீதியை பயத்தை ஏற்படுத்தி திரும்பவும் மாறன் சகோதரர்கள் இணைந்து விட்டனர். ரவுடி அழகிரி என்று தினகரனில் செய்தி போட்டவர்கள், அழகிரியோடு இணைந்து நிற்கும் படம் வெளியானது.

மவுனம் காப்பது ஏன்?

தினகரன் எரிப்பு வழக்கின் சிபிஐ விசாரணை என்ன ஆனது? அது குறித்து எந்த பத்திரிகையும் வாய்திறக்காதது ஏன் என்பதுதான் நம் கேள்வி?மதுரையில் பலியான ஒருவரின் நெருங்கிய உறவினர் தினகரனில் இப்போது செய்தி ஆசிரியராக இருக்கிறார். அவரது மனசாட்சியாவது இதை பொறுக்குமா? தினமலரில் இருந்து கூட்டத்தை தினகரனுக்கு கூட்டிப்போய் தலைக்கு இவ்வளவு என மாறனிடம் பெற்றது மட்டுமின்றி மாதம் லட்சகணக்கில் சம்பளமும், இலங்கை தமிழர்கள் பற்றி செய்தி வரக்கூடாது என்பதற்காக இலங்கை தூதர் அம்சாவின் கொள்கை பரப்புகளை வெளியிடும் தினகரன் பொறுப்பாசிரியருக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?கலாநதி மாறன் தரப்பில் பலியானர்களுக்கு பல லட்சம் கொடுக்கப்பட்டது. பல லட்சம் கொடுத்தால் போதுமா?

குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? கிடைத்தது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அடித்து கொன்று விட்டு இந்தா பணத்தை வச்சுக்கோ என்று சொலலிவிடலாமா?இன்றுடன் தினகரன் ஊழியர்கள் எரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து விட்டது. என் மனதில் நீண்டநாட்களாக தொக்கி நின்ற நினைவுகள் கேள்விகளை கொட்டி தீர்த்து விட்டேன். வலைப்பூ வாசகர்கள் என்ன நினைக்கிறீர்கள்?

புலிகளின் மீதான தடையை நீக்குங்கள் தமிழீழம் மலரும் 6 மாதத்தில்: தென்காசியில் சீமான்

விடுதலைப்புலிகள் மீது உலக நாடுகள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும், நீக்கினால் அடுத்த 6 மாதத்தில் தமிழீழம் மலரும் என்று தென்காசியில் நடந்த கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசியுள்ளார்.

இயக்குநர் சீமான் பேசியதாவது:-
எனது ஒரே தலைவன் பிரபாகரன், எனது இனத்திற்கான விடுதலை தனித்தமிழ் ஈழத்தில் தான் உள் ளது. ஆரம்பத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்த தா.பாண் டியன் பின்னர் வரலாற்று புரிதல் காரண மாக தனது கொள்கையை மாற்றிக்கொண்டு ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.


ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் மாற்று கருத்து உள்ளது. காலம் உங்களையும் மாற்றும். இந்தியாவில் தமிழன் ஒருவன் பிரதமராகலாம். ஆனால் இலங்கையில் ஒரு தமிழன் பிரதமர் ஆக முடியாது. இலங்கையில் தமிழ் மாணவன் 80 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் தேர்வில் தேர்ச்சி பெறமுடியும். ஆனால் சிங்களன் 35 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றுவிடுவான்.


இந்திய ராணுவத்தில் தமிழன், கன்னடன், யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் இலங்கை ராணுவத்தில் ஒரு தமிழன் சேர முடியாது. தலாய் லாமா சீனாவிலிருந்து தனி நாடு பிரித்து கேட் டால் அடைக்கலம் கொடுக்கிறீர்கள். பாகிஸ் தானிலிருந்து பங்களாதேசத்தை பிரித்து கொடுத்தீர்கள். ஆனால் இலங்கையில் தமிழன் தனி நாடு கேட் டால் ஆதரவு தர மறுக்கிறீர்கள். இலங்கையில் தீராத பகையை மூட்டியது இந்திய தேசம் தான். நடைபெறவுள்ள தேர்தலில் பணமா அல்லது இனமா என்பதை தீர்மானித்து தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும்.


ஜெயலலிதா வெற்றி பெற்றால் ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத்தருவோம் என்று அறிவித்துள்ளார். ராணுவம் எங்களுக்கு வேண்டாம். மாறாக உலக நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையை நீக்கித்தாருங்கள். 6 மாதத்தில் தனி ஈழம் மலரும். இவ் வாறு அவர் பேசினார்.


இயக்குனர் செல்வ மணி பேசுகையில், “ராஜீவ் காந்தி கொலை ஏன் நடந்தது என்று படம் எடுத்த காரணத்தால் 18 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை என்ற எனது படத்தை திரையிட அனுமதிக்கவில்லை. தமிழக மக்களின் முதல் எதிரி காங்கிரஸ். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முதன்முதலில் குரல் கொடுத்த தேசிய கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான். எனவே தென்காசி தொகுதி வாக்காளர்கள் கதிர், அரிவாள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகிறோம்” என்றார்.

Thursday, May 7, 2009

இலங்கை அரசு கூறுகிறது: இந்தியா போர் நிறுத்தம் கோரவில்லை

இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது குறித்து இந்திய அதிகாரிகள் வலியுறுத்தவில்லை என்று இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும், அதிபர் ராஜபட்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச தெரிவித்தார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் 24 ஆம் தேதி இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். அதிபருடன் அவர்கள் பேச்சு நடத்தினர்.

அவருடன் நடத்திய பேச்சு குறித்து விவரம் எதுவும் அப்போது தெரிவிக்கப்படவில்லை. இந் நிலையில், ‘சண்டே அப்சர்வர்’ பத்திரிகைக்கு கோத்தபய ராஜபட்ச அளித்த பேட்டி ஞாயிற்றுக் கிழமை வெளியாகியுள்ளது. அதில் சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தியதாக கோத்தபய ராஜபட்சே தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் நிர்பந்தம் காரணமாகவே இந்திய அரசு, இலங்கைக்கு நெருக்குதல் அளித்து வருவதாக செய்தி வெளியானது குறித்து கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது:

விடுதலைப் புலிகள் மீதான ராணுவ நட வடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் எவ்வித நெருக்குதலும் தரவில்லை. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவே அவர்கள் ஆலோசனை நடத்தினர். போரில் அப்பாவி தமிழர்கள் உயிரிழப்பது குறித்து இந்திய அரசு சார்பில் அவர்கள் அப்போது கவலை தெரிவித்தனர். மனிதாபிமான உதவிகளை இந்திய அரசு எப்படி வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

போர் பகுதியிலிருந்து அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகள் இருவரும் அப்போது திருப்தி தெரிவித்தனர். மேலும் இந்தியா சார்பில் நிவாரண உதவியாக ரூ.200 கோடி அளிக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர் என்றார்.

தேர்தல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் தமிழக அரசு இலங்கைப் பிரச்சினையை எழுப்பி வருகிறது. அதனால் இந்திய அரசும் அதை கவனத்தில் எடுத்துக் கொண்டு அவ்வப்போது இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது. இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகளும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டே போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் அளிக்கின்றன.
புலம் பெயர்ந்த மக்கள் அளிக்கும் நிதியை அந்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றுக்கொள்கின்றன. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள் என்றார் கோத்தபய.

Wednesday, May 6, 2009

இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு

இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா முழு ஆதரவு அளித்து வருகிறது என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை ராணுவ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:உலக அளவில் மனித உரிமைகளுக்கான காவலனாக தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ள சில மேலை நாடுகளிடம் இருந்து போர் நிறுத்தம், பொது மன்னிப்பு போன்ற வெட்கங்கெட்ட கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வரும் மூன்றாவது ஏழை உலக நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்றன.ஆனால், இலங்கையில் தீவிரவாதத்தை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதில் இந்தியா முழு ஆதரவு அளித்து வருகிறது. அதுபோல சீனா, பாகிஸ்தான், ரஷியா, ஈரான், லிபியா, ஜப்பான் போன்ற நாடுகளும் இலங்கை அரசை ஆதரிக்கின்றன. அந்த நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிக்கிறது.இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : ‘தினத்தந்தி’ 4.5.2009

இராயப்பேட்டையில் நடந்தது என்ன?

ஈழத் தமிழர் பிரச்சினையை பேசியதற்காக கழகத்தினர் மீது தாக்குதல்; பொய் வழக்கு
தயாநிதிமாறன் போட்டி யிடும் மத்திய சென்னை தொகுதி யில் ஈழத் தமிழர் இனப்படு கொலையை முன்னிறுத்திப் பேசிய பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை காவல்துறையும், தயாநிதி மாறன் ஆட்களும் இணைந்து தாக்கியதோடு கழகத் தோழர்கள் மீதே பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்.
இதுபற்றி பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

மத்திய சென்னை நாடாளு மன்ற தொகுதியில் பெரியார் திராவிடர் கழகம் ஈழத் தமிழர் பிரச்சினையை முன் வைத்து செய்து வரும் தேர்தல் பிரச் சாரத்தை தி.மு.க.வினர் காவல் துறையுடன் இணைந்து அடக்கு முறையால் முடக்கி வரு கிறார்கள். கடந்த 25 ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வேன் வழியாக பிரச்சாரம் செய்தபோது பாதி வழியில் நிறுத்தி ஈழத் தமிழர் பிரச்சினையை பேச அனுமதிக்க முடியாது என்று கூறி வேனை பறிமுதல் செய்ததோடு 5 பேர் மீது தேச துரோக வழக்கு தொடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மீண்டும் 02.05.09 அன்று கழகத்தினர் பிரச்சாரத்தை நடத்தியதால் தி.மு.க வினர் இரவு 10 மணி அளவில் காவல் துறையினருடன் வந்து ‘பெரியார் படிப்பகத்தை’ அடித்து நொறுக்கி அருகில் இருந்த பெரியார் சிலையையும் சேதப்படுத்தினர், தாக்குதலில் மூன்று பேர் படுகாயத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இரவு முழுவதும் வி.எம். சாலையில் பொது மக்கள் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல் துறை இழிவாக நடத்தியுள்ளது.
உண்மை குற்றவாளிகளை கைது செய்ததற்கு பதிலாக தாக்கு தலுக்கு உள்ளான பெரியார் திராவிடர் கழகத்தினர் மீதே தி.மு.க.வினரையும், காவல்துறை யினரையும், தி.மு.க. தேர்தல் அலுவலகத்தையும் தாக்கியதாக பொய் வழக்கு போட்டு மீண்டும் 5 பேரை கைது செய்து பிணை யில் வர இயலாத பிரிவுகளில் வழக்கு தொடுத்து சிறையில் அடைந்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் பெண்கள். கழக குடும் பத்தைச் சேர்ந்த சுதா, வயது 35, தமிழ்ச்செல்வி வயது 25 ஆகிய தமிழ்ச் செல்வியின் ஒரு வயது கை குழந்தையை உடன் கொண்டு செல்ல காவல் துறை அனுமதிக்க வில்லை.

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான எந்த பிரச்சாரமும் நடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு, பெரியார் தி.க.வினர்மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் காவல்துறை தி.மு.க.வினர் ஆதரவோடு வன்முறையை கட்டவிழ்த்து உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் பெரியார் தி.க.வினரை கைது செய்து பெரியார் தி.க. வினரின் பணியை முடக்கிவிட காவல்துறை மேற்கொண்டு வருகிறது. கருத்துரிமைக்கு எதிரான இந்த ஒடுக்குமுறையை கண்டிக்க தமிழ் இன உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும் முன் வருமாறு கேட்டுக் கொள் கிறோம்.

Tuesday, May 5, 2009

பெரியார் சிலையை உடைத்த தயாநிதி ஆதரவாளர்கள்

பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தமிழ்ச் செல்வியை ஓர் ஆண் போலீஸ் ஏதோ கிரிமினலைப் போல் கரங்களைப் பிடித்து இழுத்து வருகிறார். பின்னால் பெண் போலீசார் அணி வகுத்து நிற்கிறார்கள். இந்த பெண்கள் செய்த குற்றம் என்ன?

இராயப்பேட்டை கழக அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலையை மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறனின் தி.மு.க. ஆதரவாளர்கள் உடைத்து சேதப்படுத்தியதை தட்டிக் கேட்டதுதான் இவர்கள் செய்த குற்றம். பெரியார் கரம் பிடித்து வளர்ந்ததாகக் கூறும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தான் பெரியார் சிலை உடைக்கப் படுகிறது. சிலையை உடைத்தது பார்ப்பனர்கள் அல்ல, மதவெறிச் சக்திகள் அல்ல, பெரியார் அண்ணா கொள்கை வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் கட்சி யினரே இதைச் செய்கிறார்கள்.
சிலைகளை சேதப்படுத்துவோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயும் என்றார் தமிழக காவல்துறை இயக்குனர். ஆனால், சிலையை உடைத்ததை தட்டிக் கேட்டவர்களுக்கு, அதுவும் பெண்களுக்கு இந்த ஆட்சியில் சிறை. பிணையில் வெளி வராத வழக்குகளில் கழகத்தைச் சார்ந்த 2 பெண்கள் சுதாவும், தமிழ்ச்செல்வியும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பெரியார் சிலையை உடைத்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அது மட்டுமல்ல, இரவில் படிப்பகத்துக்குள் நுழைந்து, அங்கே இருந்த பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் எழுதிய நூல்களையும் தூக்கிச் சென்று விட்டனர்.
கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் உட்பட அத்தனை நூல்களையும், தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆயிரம் விளக்கு உசேன் அன்பளிப்பாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.பெரியார் சிலை உடைப்பாளர்களாகவும், கலைஞர் கருணாநிதி எழுதிய நூல்களை அப்புறப்படுத்தக் கூடியவர்களாகவும் தி.மு.க.வினர். “பரிணாம வளர்ச்சி” பெற்று நிற்கிறார்கள்.
தி.மு.க. எங்கே போகிறது? காவல்துறையின் இந்த அத்துமீறல்களுக்கு எதிராக பேசும் கழகம் மனித உரிமை ஆணையத்திடம் புகார் தர இருப்பதோடு காவல்துறையினர்மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது.
நன்றி :பெரியார் முழக்கம்