Monday, September 11, 2017

கட்டுரையை வாசிக்கும் முன்னரான சிறு குறிப்பு:
ராஜீவ் காந்தி படுகொலை பற்றி முன்பொருமுறை திருச்சி வேலுசாமியின்
புத்தகத்தை வாசித்த கையோடு எழுதியது இக்கட்டுரை.  இவ்வழக்கு விசாரணையில்இருக்கின்ற மிக மிக வெளிப்படையான சிலஅபத்தங்களைச்சுட்டிக்காட்டஇக்கட்டுரையை இப்போது மீளப்பகிர்கின்றேன்.இந்தக் கொலையை யார் செய்தார்கள் / செய்யவில்லை என்பதைவிட இவ்வழக்குவிசாரணையின் அபத்தங்களும், வேண்ட்மென்றே சில விடயங்கள் கடந்துசெல்லப்பட்டதன் பின்னால் இருக்கக்கூடிய சதிவலையும் கவனிக்கப்படவேண்டும்என்பதும் மரண தண்டனை ஒழிப்பு மீதான அக்கறையுமே இப்போது என்னிடம் மேலோங்கி நிற்கின்றது என்றென்றும்  அன்புடன்அருண்மொழிவர்மன்
அவிழ்க்கப்படாத மர்மங்களுடன் இருக்கின்ற அரசியற் படுகொலைகள்
தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.  அந்த வகையில் ராஜீவ் காந்தி
படுகொலையும் ஒன்று.  அதுவும் ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு இனத்தின்
தலையெழுத்தையே மாற்றி எழுதியதில் பெரும்பங்கு வகித்தது என்பதை நாம் கடந்த
காலங்களில் கண்கூடாகவே கண்டிருக்கின்றோம்.
1991ம் ஆண்டு மே 21ம் திகதி இரவு கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின்
கொலை வழக்கின் விசாரணைகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதுடன், 5 ஆண்டுகாலம்
விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி மாற்றப்பட்டு புதிதாகப் பொறுப்பேற்ற
நீதிபதி சில மாதங்களிலேயே ஐந்தாண்டுகால விசாரணை பற்றிய ஆவணங்களையெல்லாம்
படித்தறிந்து 26 பேருக்குத் தூக்குதண்டனையும் வழங்கினார்.  இந்தக்
கொலையில் எந்த விதமான சட்ட நுணுக்கங்களும், துப்புத் துலக்கவேண்டிய
தேவைகளும் இல்லாமல் இந்த விசாரணை நடத்தபட்ட முறையிலும், அதில்
சாட்சியங்களைச் சேர்த்தது, குறிப்பிட்ட சிலரை விசாரணை செய்யாமல்
தவிர்த்தது போன்ற மிகச் சாதாரணமாக வெளித்தெரிகின்ற ஓட்டைகளை முன்வைத்து
திருச்சி வேலுசாமி ஜெயின் கமிஷன் முனிலையில் தனது மனுவினைத் தாக்கல்
செய்திருந்தார்.  தனது மனுவில் சுப்ரமணிய சாமியையும், சந்திரசுவாமியையும்
குற்றம் சாற்றி இருந்த வேலுச்சாமி அதற்கான மிக எளிதான ( கணித பாடத்தில்
வெளிப்படை உண்மை என்று படிப்போமே அதை விட வெளிப்படையான உண்மைகள் இவை)
காரணங்களையும் பட்டியல் போட்டிருந்தார்,  ஆனால் துரதிஸ்ட வசமாக
சுவாமியும் சாமியும் சரியான முறையில் விசாரிக்கப்படாததுடன் வழக்கு
தனக்கேயுரிய எல்லாவிதமான ஓட்டைகளுடன் அப்படியே மூடிக்கட்டப்பட்டது.
இது பற்றி குமுதம் இணையத்தில் பேட்டி ஒன்றினைக் கொடுத்திருந்த திருச்சி
வேலுச்சாமி, பின்னர் அந்தப் பேட்டியையே “ராஜீவ் காந்தி படுகொலை வெளிவராத
மர்மங்கள்” என்ற பெயரில் ஒர் சிறு புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.
நாம் வாழ்ந்த காலத்திலேயே நடந்து, நம் இனத்தின் தலைவிதியையும் பாதித்த
இந்தக் கொலைவழக்கு கொண்டு செல்லப்பட்ட விதம் பற்றிய மர்மங்களை நிச்சயம்
எல்லாரும் படிப்பதும் தொடர்ந்து கேள்வி எழுப்புவதும் முக்கியமானதாகும்.
இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்று பேசுவதற்கு முன்னர் இந்தக்
கொலைக்குப் பின்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சதிவலையையும், சதிவலையில்
இன்னும் நிறையப் பேர் பங்குபற்றி உள்ளனர் என்றும் ஆராயவேண்டியது
முக்கியமானது என்று நினைக்கின்றேன்.  மாறாக கொலை நடந்து காவல்துறை
ஆரம்பகட்ட விசாரணையையே ஆரம்பிக்க முன்னரே எல்லா உள்நாட்டு, வெளிநாட்டு
ஊடகங்களும் சுப்பிரமணியசுவாமியையே மேற்கோள்காட்டி இந்தக் கொலையை புலிகள்
செய்தனர் என்ற செய்தியை வெளியிட்டனர் என்பதில் தொடங்கி ஆரம்பிக்கின்றது
இந்த கொலை தொடர்பான மர்மமுடிச்சுகள்.
திருச்சி வேலுச்சாமி எழுப்புகின்ற எளிய கேள்விகள் சில

   1. ராஜீவ்காந்தி படுகொலையை விசாரித்த ஜெயின் கமிஷனின் இறுதி
அறிக்கையில் கடைசியாக “இந்தக் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும்
கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்த கமிஷன் கருதுகின்றது.  ஆகவே உண்மையான
குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும்”
என்று சொன்ன ஜெயின் கமிஷன் அதற்கு காரணமாக திருச்சி வேலுச்சாமி கொடுத்த
வாக்குமூலத்தையும் குறிப்பிட்டிருந்தது.  அந்த வாக்கு மூலத்தில் திருச்சி
வேலுச்சாமி சுப்ரமணிய சுவாமியையும் சந்திரசாமியையுமே குற்றஞ்சாற்றி
இருந்தார். (பக்கம் 13)
   2. மே 21ம் திகதி இரவு 10 15 மணிக்கு ராஜீவ் கொலைசெய்யப்பட்டு பின்னர்
அது தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மறுநாள் காலை 9 மணிக்குத்தான்
ஆரம்பமாகின.  ஆனால் இரவு 11 மணிக்கு முன்னரே சுப்ரமணிய சுவாமி
ஊடகங்களுக்கு ராஜீவ் காந்தி படுகொலையை விடுதலைப்புலிகளே நிகழ்த்தியதாக
சொல்லி இருக்கின்றார் (பக்கம் 14)
   3. கொலை நடந்த இடத்தில் இருந்த ஜெயந்தி நடராஜனும் மூப்பனாருமே கூட
கொலை நடந்து 30 நிமிடங்களின் பின்னரே ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டதை
உறுதி செய்திருக்கின்றனர்.  ஆனால் 10;20க்கே அதாவது 5 நிமிட நேரத்தில்
வேலுச்சாமி சுப்ரமணியசுவாமியுடன் மறு நாள் நடைபெற உள்ள கூட்டம் பற்றி
பேசிய போது ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்று சுப்ரமணிய சுவாமி
கூறுகிறார்.  (இது நேர்காணல் ஒளிவடிவத்தில் உள்ளது)
   4. மே 22ம் திகதி சுப்ரமணிய சுவாமி மதுரையில் பேச இருந்த கூட்டம்
ராஜீவ் கொலை காரணமாக ரத்துச் செய்யப்படுகின்றது.  ஆனால் ராஜீவ் கொலை
ஆகும் முன்னரே அதற்கான விமான டிக்கட்டை சுப்ரமண்ய சுவாமி ஏன் உறுதி
செய்யவில்லை / ஏன் ரத்துச் செய்தார்.
   5. ராஜீவ் இறந்த போது அவருக்கு மிக அருகில் இருந்து உயிர் தப்பிய
அனுசுயா என்கிற காவல்துறை அதிகாரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் தா.
பாண்டியன் போன்றோரிடம் சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இது போன்ற மிக எளிய கேள்விகளின் மூலம் ராஜீவ் காந்தி கொலையிலும் வழக்கு
விசாரணையிலும் அனேக மர்மங்கள் இருக்கின்றன என்கிற நியாயமான கேள்விகளை
முன்வைக்கின்றார் திருச்சி வேலுச்சாமி.  இது தொடர்பான வீடியோ
இணைப்புகளையும் கீழே தருகின்றேன்