ஆபத்தான கதிர்வீச்சை கக்கும் அணுவுலைகளை நாடுமுழுவதும் நட்டுவைத்துவிட்டு, செல்போன் டவர்களின் கதிர்வீச்சை கட்டுப்படுத்துகிறேன் இந்தஅரசு நாடகமாடுவது, மக்களை ஏமாற்றும் பித்தலாட்டம், அயோக்கியத்தனம்.
இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் செல்போன் டவர்களில் இருந்து வரும் மின்காந்த அலை கதிர்வீச்சின் ஆற்றல் அளவை ஏற்கனவே இருக்கும் வரம்பை விட பத்து மடங்கு குறைத்து உத்தரவிட்டிருக்கிறது. செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிவிச்சினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய ஒருகுழுவை அமைத்து, அந்த குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
செல்போன் கம்பெனிகள் தங்கள் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவை இந்த புதிய வரம்பிற்குள் வைத்திருப்பதை சுயசான்றிதழ்(!!!) மூலம் அரசுக்கு உறுதி செய்ய வேண்டும். அரசின் கண்காணிப்பு குழு திடீர் சோதனைகள் நடத்தி இதை கண்காணிக்கும். இதன் மூலம் உலகின் மற்ற 90% நாடுகளை விட இந்தியாவில் பத்து மடங்கிற்கும் குறைவான ஆற்றல் அளவை நிர்ணயித்துள்ளது அரசு.
கதிர்வீச்சில் இரண்டு வகைகள் உள்ளன, அவை அயனியாக்கும் தன்மை கொண்ட கதிர்வீச்சு (Ionizing Radiation), அயனியாக்கும் தன்மையற்ற கதிர்வீச்சு(Non-Ionizing Radiation). அயனியாக்காத கதிவீச்சு (Non-Ionizing) என்பவை, ரேடியோ அலைகள், செல்போன் அலைகள், மைக்ரோவேவ் அலைகள் போன்றவைகளாகும். இவை உயிர்செல்கள் மற்றும் மரபணுக்களில் வேதிப்பிணைப்பை உடைக்கும் சக்தியை பெற்றிருக்கவில்லை. இந்த வகை அலைகளின் கதிர்வீச்சின் ஆற்றல் குறிப்பிட்ட அளவு அதிகரிக்கும் போது, மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்த கருத்தில் அறிவியலாளர்களே முரண்படுகின்றனர். ஆயினும் ‘அயனியாக்காத கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான சர்வதேச ஆணையம்’ இந்த வகை கதிர்வீச்சு ஆற்றல் அளவை வறையறுத்துள்ளது, அதையே உலகின் பல நாடுகளும் பின்பற்றுகின்றன. இந்தியாவும் இதுவரை அதையே பின்பற்றிவந்தது.
அயனியாக்கும் கதிர்வீச்சுகள் (ஆல்பா, காமா கதிர்கள் போன்றவை) உயிர் செல்களின், மரபணுக்களின் வேதிப்பிணைப்பை, உடைக்கவல்லவை. இத்தகைய கதிர் வீச்சு புற்றுநோய், தைராய்டு, மற்றும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அறிவியியல் பூர்வமான உண்மையாகும். இத்தகைய கதிவீச்ச்சு தான் அணுவை பிளக்கும் போது ஏற்படுகின்றது, இவ்வகை கதிர்வீச்சையே அணு உலைகள் வெளியிடுகின்றன, இவை மிக மிக அபாயகரமானவை என்று விஞ்ஞானத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
அணு உலைகளில் விபத்து ஏற்படாவிட்டாலும், அவை சாதாரணமாக இயங்கும் நிலையில் கூட கதிவீச்சு கசிவுகள் அதன் சுற்றுப்பகுதியை மாசுபடுத்திவிடும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சென்னையை அடுத்த கல்பாக்கம் அணு உலையினால் அதை சுற்றியுள்ள பகுதியில் தைராய்டு, புற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய் பாதிப்பால் பலர் மரணமடைந்திருப்பது கண்கூடான உண்மை. மேலும் கல்பாக்கம் அணு உலையால், சென்னையின் சுற்றுவட்டாரப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களிலும் அணுக்கதிர்வீச்சு இருக்க சாத்தியம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட மிக ஆபத்தான கதிர்வீச்சை கக்கும் அணுவுலைகளை கூடங்குளம் உட்பட நாடுமுழுவதும் நட்டுவைத்துவிட்டு, செல்போன் டவர்களின் கதிர்வீச்சை கட்டுப்படுத்துகிறேன் என்று தனக்கும் மக்கள் நலனில் அக்கறை இருப்பதாக இந்தஅரசு நாடகமாடுவது, மக்களை ஏமாற்றும் பித்தலாட்டம், அயோக்கியத்தனம்.