Tuesday, October 13, 2009

பெரியார் தீபாவளியைப் பற்றி பேசுகிறார்

தீபாவளி தமிழர் விழாவா?
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?


சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

(விடுதலை பிறந்தநாள் விழா மலர் -94 )


துன்பம் தரும் தீபாவளி

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.

இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்ச்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப் போய் இராட்சதனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம்.

அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் அவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணு இடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும் படி செய்தாராம். இது தான் தீபாவளியாம்!

தோழர்களே, ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில் பூமியை இராட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான். சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும். கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவஉரு எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது. அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும். பூமிதேவியும், சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும், அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள், தமிழர்களைத் தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அன்னிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா?

இந்தி ஆரிய மொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிகத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால் அதற்காகத் தமிழ்மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உண்மையானால் தமிழ்மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா?

(குடிஅரசு கட்டுரை: 31.10.1937)


அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும், நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள். இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு நஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பவைகளை நம் மக்கள் நினைப்பதேயில்லை. அப்பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து துன்பப்படுகிறான். தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது. கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது.

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போவதாலும், பட்டாசு சுடும்போது திடீரென்று வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம் வருவதும் அல்லாமல், இந்தப்பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனை பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள். இவைகளை எந்த இந்தியப் பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்.

(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் சொற்பொழிவு 'குடிஅரசு' 20.10.1929)

தீபாவளிப் பண்டிகை தமிழர்களுக்கு மானக்கேடு

வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன. நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா? கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசியமென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாடவேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.

சாதாரணமாக நம்மைப் போல் உள்ள ஒரு மனிதனை நாம் பிராமணன் என்று கருதி அவனை பிராமணன் என்றே அழைக்கின்றோம் என்றால் அதன் கருத்தென்ன? என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை. ஒருவனை நாம் பிராமணன் என்றால் நாம் யார்? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட தன் கருத்து என்ன ஆகியது? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நாம் நம்மை சூத்திரன் என்றே ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது. இந்த அறிவுத் தெளிவு இல்லாததனாலேயே நம்மைப் போன்ற ஒரு மனிதனை பிராமணன் என்று அழைக்கின்றோம்.

நாம் ஏன் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடாமல் வெறுத்து ஒதுக்க வேண்டுமென்பதுமான விஷயங்களைப் பற்றிய பிரசாரங்களும் வேண்டுகோள்களும் செய்து வருவதன் நிலையுமாகும். அது போலவே இக்காரணத்தினால்தான் அதாவது நம்மை இந்த இழிநிலையிலேயே அழுத்தி வைத்திருக்க வேண்டுமென்ற காரணத்தால்தான் இந்த நடத்தைகளால் பலனடைந்து நம்மை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்திருக்கும் பார்ப்பனர்கள் என்பவர்களின் உற்சவம், பண்டிகை, வர்ணாசிரம சாதிக்கிரமம், அவற்றை அனுசரித்த ஆதராங்களாகிய வேதசாஸ்திர புராண இதிகாசம், அவை சம்பந்தமான இலக்கியம் முதலியவை காப்பாற்றப்படவும் பிரசாரம் செய்வதும், இயல், இசை, நாடகம் மூலம் அவற்றைப் பரப்பி வருவதுமான எதிர் முயற்சிகளும் ஆகும்.


இது பழைய போராட்டமே

இந்த இரண்டு போராட்டங்களும் இந்த நாட்டில் இன்று நேற்றல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கின்றன என்பதை நாம் இன்று அதிகாரப் பூர்வமாக காணலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கிறது என்பதைக் காட்டுவது தான், அதை ஆதிரிக்கத் தூண்டுவதுதான், அந்தத் தன்மையை நிலைத்திருக்கச் செய்வதுதான் இன்றைய உற்சவம், பண்டிகை முதலிய காரியங்களாகும். எதனால் இதை இந்தப்படி நாம் சொல்கிறோம் என்றால் ஏறக்குறைய 100 க்கு 90 க்குக் குறையாத உற்சவங்கள், பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள், ஏற்பாடுகள், கொண் டாட்டங்கள், விரதங்கள், நோன்புகள் முதலிய அனேக காரியங்களுக்கும் இந்தப் புராண இதிகாசங்களும், சமுதாய நடப்புகளுக்கான சாஸ்திர தர்மங்களுமே காரணங்களாக இருந்து வருவதாலேயே இப்படிக் கூறுகிறோம்.


இந்தக் காரணங்களால், பிராமணன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும், சூத்திரன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும் நாமே இடங்கொடுத்து உதவி செய்தவர்களாகி விடுகிறோம். இதனால் பார்ப்பனர்கள், தாங்கள் பிராமணர்கள் (உயர்சாதி) என்று எண்ணிக் கொண்டு நம்மை சூத்திரர்கள் என்றே கருதி மற்றெல்லா விஷயங்களிலும் நம்மைக் கீழ்ச் சாதி மக்களாகவே நடத்தி வருகிறார்கள்.

இது போலவே நாம், இந்த தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் நாம், நம் இழிநிலையை உணராத - மான உணர்ச்சியற்ற மக்களாக ஆகி வேறு யாராவது நமது இழிநிலை ஒழிப்புக்காகச் செய்யும் முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டைப் போட்டவர்களாகி நம் பின் சந்ததிகளுக்கும் மான உணர்ச்சி ஏற்டாமலும் இழிவு படுத்தப்படவும் ஆதரவு தேடி வைத்தவர்களாகி விடுகிறோம்.


இன்று நம் நாட்டில் அரசியல், பொருளியல், கல்வி இயல், சமய, சமுதாய இயல் என்பவைகளின் பேரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், குறிப்பாக திராவிடர் கழகத்தாரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், மற்றும் பல பொது முயற்சிகளும் எதை அடிப்படையாகக் கொண்டவை என்று சிந்திப்போமே யானால், உண்மையில் அதன் அடிப்படைத் தத்துவம்., நம் மக்கள் பெரும்பாலோருக்கு அதாவது 100-க்கு 90 பேருக்கு இருந்து வரும் பிறவி இழிவும், அவ்விழிவு காரணமாக நமக்கு இருந்து வரும் பல உரிமை மறுப்புகளும், முன்னேற்றத் தடைகளும் ஒழிய வேண்டும், ஒழிக்கப்பட வேண்டுமென் பதும், நம் எதிரிகளால், அதாவது நம்மை இழிவுபடுத்தி வைத்து நம் உழைப்பால் சுகம் அனுபவத்துக் கொண்டு மக்களின் இந்த நிலையை இப்படியே நீடித்து இருத்தி வைத்திருக்க வேண்டும் என்பதுமான, ஒரு போட்டா போட்டி முயற்சியேயாகும் என்பது புரியும்.

இம்முயற்சி காரணமாகத்தான் நாம் ஏன் ஒருவனை பிராமணன் என்று அழைக்கக்கூடாது என்பதும், நாம் ஏன் உற்சவாதி பண்டிகைகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும் ஆகும். உதாரணமாக கடவுள் அவதாரங்கள், கடவுள் செய்த யுத்தங்கள், கடவுள் செய்த

(சம்மாரக்) கொலைகள், கடவுள் செய்த வஞ்சக (கபடநாடக)ச் செயல்கள், கடவுள் காலடியில் அழுத்தி மிதித்துக் கொண்டு இருக்கும் சூர, அசுர, ராட்சதாதிகள் முதலியன யாவும் எதற்காக என்று பார்த்தோமானால், இது நன்றாக விளங்கிவிடும்.

கந்த புராணம், பாகவத புராணம், இவை சம்பந்தமான மற்ற இதிகாசங்கள் முதலியன யாவும் சாதிப் போராட்டமாகவும், பிறப்புப் போராட்டமாகவுமே இருந்து வருவதோடு மேல் சாதி என்பதை ஒப்புக் கொள்ளாமல், மேல் சாதி சம்பிரதாயத்தையும், உரிமையையும், நடப்புக்களையும், கீழ்ச்சாதியார் எதிர்த்துச் செய்த புரட்சியான போராட்டங்களாகவே இருந்து வரும்.

இதுதான் தேவாசுர (சுரர் - அசுரர்) போராட்டமாகவும், இராட்சத சம்மாரங்களாகவும் இன்றும் கருதப்பட்டு வருவதாகும். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சிவன், கந்தன், காளி, விஷ்ணு அவதாரமான ராமன், கிருஷ்ணன், பலராமன், நரசிம்மன், வராகமூர்த்தி, முதலானவர்களும், சுரர் - அரக்கர் முதலியவர்கள் பிராமண தர்மத்தை எதிர்த்ததற்காகவே தோன்றி, எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்தக் கொலைச் செய்கையைப் பாரட்டவும், கொலையைப் பற்றி மகிழ்ச்சியடையும்தான் பண்டிகை உற்சவம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறலாம்.


ராட்சதர்கள் யார்?

புராண இதிகாச அசுரர்கள், சூரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? தேவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? என்று பார்த்தோமேயானால் முறையே இந்த சூத்திரர்களும், பார்ப்பனர்களும் என்பவரல்லாமல் வேறு யாரைக் குறிக்கிறது? என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? என்று பார்த்தால் முடியவே முடியாது என்பது அநேக அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்களால் மேதாவிகளால் எழுதப்பட்டிருக்கும் இன்றைய ஆராய்ச்சி நூல்களிலே அறியலாம்.

புராணங்களையே எடுத்துக் கொண்டாலும் பாகவத புராணத்தில் இரண்யன் வதைக் கதையில் இரண்யன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இக்கருத்தைத் தெளிவாய் விளக்குகின்றன. அதாவது இரண்யன் பார்ப்பனர்களுக்கு எதிரி, பார்ப்பனர்களின் உயர் சாதித் தத்துவத்தையும், அவர்களுடைய ஜப, தப மந்தரத் தத்துவத்தையும், ஒப்புக் கொள்ளாதவன், பார்ப்பனர்களை அடிமையாக்கிக் கொண்டு அவர்களிடம் வேலை வாங்குகிறவன், இரண்யன் பிராமணர்களை ஆதரிப்பதற்கு ஆக இவர்களால் ஆக்கப்பட்ட விஷ்ணுவின் சகாயத்தினால் இவ்வளவு அக்கிரமங்கள் செய்வதால் இந்த விஷ்ணுவை முதலில் ஒழிக்க வேண்டும். இந்த விஷ்ணுவுக்கு ஆராதனம், எக்கியம், அவிர்ப் பாகம் செய்யும் பிராமணர்களை அடியோடு ஒழித்து ஆக வேண்டும். ஆதலால், ஓ! தானவர்களே (ஏவலாளர்களே) மண்வெட்டி, கோடரி, கடப்பாரை கொண்டு புறப்படுங்கள் ! பிராமணர்கள் ஜபதபம் ஓமம் செய்யுமிடத்தை அணுகுங்கள்!

அவைகளைத் தரை மட்டமாக்குங்கள்! புறப்படுங்கள் ! என்று சொன்னதாக இரண்யன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது.

இப்படியே இரண்யன் தம்பி மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவன் பூமியையே பாயாகச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது போலவே இராவணன் மீதும், அவன் தேவர்களுக்கு விரோதமாக அவர்களின் யாகாதிகளை அழித்ததாகவும், பார்ப்பனர்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டு வேலை வாங்கியதாகவும், தேவர்களுக்குக் கேடு செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது போலவே கந்த புராணத்தில் சூரன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இவைகள் நடந்தனவோ, இல்லையோ, உண்மையோ, பொய்யோ எப்படி இருந்தாலும் மேல் சாதி - கீழ்ச் சாதி, சூரர்-அசுரர், தேவர்-ராட்சதர்கள் என்னும் பேரால் யுத்தங்களும் தேவர்களால் மற்றவர்கள் கொல்லப்பட்டதுமான கருத்துக்களையும் சங்கதிகளையும் கொண்டதாக இருக்கின்றன என்பதும் யாராலும் மறுக்கமுடியாது. பாகவதத்தில் இரண்யன், பிராமணர்கள் மோசக்காரர்கள், பிராமணர்களை அழிக்க வேண்டும் என்றும் சாதி குறிப்பிட்டுச் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மற்றும் கந்தபுராணமும், இராமாயணமும் பார்த்தால் அவற்றில் வரும் பெயர்கள் மட்டும் வேறு வேறாக இருக்கின்றனவேயொழிய இரண்டும் ஒரே கதையைத்தான் குறிக்கின்றன. கருத்தும் தேவாசுர யுத்தம்தான் என்று எவரும் உணரலாம்.

எனவே இப்படிப்பட்ட அதாவது நமக்குக் கேடும் இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள், அதாவது சூத்திரர்கள் என இழித்துக் கூறப்படுபவர்களாகிய நாம் கொண்டாடலாமா? என்பதுதான் இன்றையப் பிரச்சினையாகும்.


தீபாவளி

இப்படிப்பட்ட தத்துவம் கொண்ட பண்டிகைகளில் ஓன்றுதான் தீபாவளி! முதலாவதாக இந்தப் பண்டிகைக்கும், அதன் பெயருக்கும் சம்பந்தமே இல்லையெனலாம். தீபாவளி என்ற சொல்லுக்கு தீப வரிசை (விளக்கு வரிசை) என்றுதான் பொருள். கார்த்திகை மாதத்தில் இது போன்ற ஒரு பண்டிகை கொண்டாடுகின்றார்களே அது இந்தப் பெயருக்குப் பொருத்தமாகலாம். இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடவேண்டிய அவசியத்துக்காக குறிப்பிடும் நிகழ்ச்சி என்னவெனில், நரகாசுரன் என்ற ஒரு அசுரன் ஒரு தெய்வப் பெண்ணைச் சிறை பிடித்துக் கொண்டான். (கந்த புராணம் - இந்திரன் மனைவியை சூரன் சிறைப் பிடித்த கதை. இராமாயணம் - சீதையை இராவணன் சிறைப் படித்த கதை. தீபாவளி - நரகாசுரன் கசேரு என்ற பெண்ணை சிறை பிடித்த கதை). மற்றும் வேறொரு தெய்வப்பெண் அதிதி என்பவளின் காதணியை கவர்ந்து கொண்டவன். (எதற்காக எப்படிக் கவர்ந்தானோ தெரியவில்லை).

இது தவிர இவன் பிறப்பு வளர்ப்பும் அதிசயமானது. பூமியைப் பாயாகச் சுருட்டிய இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு பன்றியாகத் தோன்றி பூமாதேவியுடன் கலந்து பெற்ற பிள்ளை இவன்! பின் கிருஷ்ணனாலும் அவன் மனைவியாலும் கொல்லப்பட்ட பின் தேவர்கள் சுகமடைந்தார்கள் என்பது கதை! அந்த சுகத்துக்காகத்தான் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமாம். அதற்காக தீபாவளி கொண்டாட வேண்டுமாம்.

இதுதான் தீபாவளித் தத்துவம். கதையைக் கவனித்தால் இது சிறிதாவது மனிதத் தன்மைக்கோ, பகுத்தறிவுக்கோ ஏற்றதாக இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? இத்தனை ஆபாசமும், அசிங்கமும் கொண்ட கதையை நாம் தெய்வீகத் தன்மை கொண்டதாக ஏற்று, ஏன் கதைவிட அல்லாமல் உண்மையில் நடந்த தெய்வக் கதையாக ஏற்றுக் கொண்டாடுவதா என்பது யோசிக்கத் தக்கதல்லவா?

நரகாசுரன் ஒரு திராவிட அரசனாகவும் திராவிடத்தை (வங்கத்தை)ச் சேர்ந்த ஒரு பிராகஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகின்றான். கதை எப்படியிருப்பினும், இவனும் - நரகாசுரனும், இரண்யாட்சன், இரண்யன், இராவணன், சூரபதுமன் முதலிய திராவிடர் தலைவர்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவன் ஆவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர் களுக்குத் தொல்லை கொடுத்ததால் என்கிறது புராணம். ஆகவே இன்று நாம் (திராவிடர்கள் - தமிழர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கின்றோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு நாம் துக்கப்பட வேண்டுமே ஒழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவும், மான ஈனமுமாகும்.

ஆதலால், திராவிட மக்கள் அனைவரும், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடக்கூடாது என்று வேண்டிக் கொள்வதோடு, திராவிடர் கழகத்தவர் கண்டிப்பாகக் கொண்டாடக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசுரனுக்கு (திராவிடர் தலைவனுக்கு) வாழ்த்துக் கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காக துக்கப்பட வேண்டியதை விளக்கி துக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை -"விடுதலை" 7.11.1963)

தீபாவளி தேவையா?

வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 10 கோடியும் அனாவசியமாய் - துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசன் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த - சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

(‘குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931)

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்!

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து - புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.

பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவது ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது ஏழு; மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன் படவேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் - மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக்கொண்டாய்விட்டது. அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரகணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாராட்டுதலும் செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்லவேண்டும்?

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று. அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் - நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை - தீபவாளி என்று கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

- ‘பகுத்தறிவு’, 1936

Monday, September 21, 2009

கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!


இலங்கையில் தமிழர்கள் வதை முகாம்களுக்குள் வைத்து சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் நடாத்தப்படவுள்ள 'உலகத் தமிழ் மாநாடு' என்ற கலைஞர் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இதழ் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்பில் ஈழநாடு (பாரிஸ்) வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 9-வது உலகத் தமிழ் மாநாடு எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை கோவையில் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


முதலாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ 1966 ஏப்ரல் மாதத்தில் ஈழத்துத் தமிழரான வணக்கத்திற்குரிய தனிநாயகம் அடிகளாரால் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968-ம் வருடத்தில் அன்றைய தமிழக முதல்வரான அண்ணா அவர்களால் நடாத்தப்பட்டது.

மூன்றாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970-ம் ஆணடு பாரிஸ் நகரில் நடாத்தப்பட்டது. அதன் பின்னர் 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி ஈழத் தமிழினத்தின் மாநாடு பெரும் சோகமாக நிறைவுற்றது. தமிழ் மக்களால் கோலாகலமாக நடாத்தப்பட்ட இந்த மாநாட்டில் அன்றை சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு கலகத்தை விளைவித்தனர்.

இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த இறுதிநாள் நிகழ்வில் திட்டம்போட்டு உள்நுழைந்த காவல்த்துறையினர் கணணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தடியடி நடதத்தியும் கலகம் விளைவித்ததால் ஏற்பட்ட நெரிசலிலும், மின்சாரக் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததாலும் 9 தமிழர்கள் பலியானார்கள். அந்த அரச பயங்கரவாதமே தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நோக்கி நகர்த்தியது.

அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த வேளை, 1981-ம் ஆண்டு 5-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1987 இல் கோலாலம்பூரிலும், ஏழாவது மாநாடு 1989 இல் மொரிசியசிலும் நடைபெற்றது.


அதன் பின்னர் ஆறு வருடங்கள் கடந்த நிலையில், 1995-ம் ஆண்டில் அப்போது தமிழக முதல்வராகப் பதவி வகித்த செல்வி ஜெயலலிதா அவர்களால் தஞ்சாவூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளச் சென்ற தமிழீழ அறிஞர்கள் வெல்வி ஜெயலலிதா அவர்களால் அவமானப்படுத்தப்பட்டு, அனுமதி மறுக்கப்பட்டது.


அதன் பின்னர் 14 வருடங்கள் கடந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற பதம் மாற்றம் செய்யப்பட்டு, ‘உலகத் தமிழ் மாநாடு’ என்ற நாமத்துடன் அரங்கேற்றப்பட உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டப்பட்டிருக்க வேண்டிய இந்த மாநாடு கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தை ஆண்ட 14 வருட காலத்தில் முதல் தடவையாக உலகத் தமிழர் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. கலைஞர் அவர்களது தமிழ்ப் பற்றுக்கு இதுவும் ஒரு மைல் கல்லாகப் பதிவு செய்யப்படவுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுக்குச் செய்ததை விட அதிகமாகவே தமிழ் அவருக்குச் செய்துள்ளது.

வெறும் தகரப் பெட்டியுடன் திருக்குவளையிலிருந்து சென்னை வந்த கருணாநிதி அவர்களுக்கு தமிழ் சோறு போட்டது. தமிழ் அரசியலைக் கற்றுக் கொடுத்தது. தமிழ் அவரைக் கோடீஸ்வரனாக உயர்த்தியது. தமிழ் அவரை தமிழக முதல்வராக 14 வருடங்கள் பதவியில் அமர்த்தியுள்ளது. தமிழ் வேறொருவருக்கும் இந்த அளவுக்கு வாரி வழங்கியதும் இல்லை வாரி வழங்கப் போவதும் இல்லை.

‘வீழ்வது தமிழாக இருந்தாலும், வாழ்வது நானாக இருக்கவேண்டும்’ என்ற அர்த்தத்தில் தமிழக முதல்வர் அடிக்கடி சொல்லும் வார்த்தையை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு தமிழ் தாழ்ந்த அளவிற்கு கலைஞர் உயர்ந்துவிட்டார். ‘தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்’ என்று கலைஞர் தொலைக்காட்சியில் தமிழ் விற்கப்படுகின்றது.

தமிழர்கள் ஏமாளிகளாக ஆக்கப்படுகின்றார்கள். சிங்களக் கொடும்பாவிகள் தமிழீழ மக்கள் மீது தமிழின அழிப்பு யுத்தத்தை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த காலத்தில், அந்த வேதனை தெரியாத வகையில் ‘மானாட மயிலாட’ வழங்கி மகத்தான தமிழ்ப் பணி ஆற்றியவரல்லாவா எங்கள் கலைஞர்.

ஈழத் தமிழர்களின் வேதனைகளால் தமிழக மக்கள் துன்பப்பட்டு விடக்கூடாது என்ற அவாவினால், இன்றுவரை சண் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் அத்தனை செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து தமிழ்ப் பணியாற்றியதை தமிழகத் தமிழர்கள் உணர்ந்திருப்பார்களோ தெரியாது, ஆனால், ஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள்.


சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்தபோது, சோனியாவிற்கும் மன்மோகன் சிங்கிற்கும் எழுதிய கடிதங்கள் எவ்வளவு அற்புதமானவை. அவையும் நாளை நெஞ்சுக்கு நீதியாகி, கருணாநிதியின் கல்லாப் பெட்டியை நிறைக்கத்தான் போகின்றது. மூன்று வேளையும் உண்டு வசதியாக வாழ்ந்த மக்கள், சிங்கள தேசத்திடம் அடிபணிய மறுத்து முள்ளிவாய்க்கால் வரை இடம் பெயர்ந்து, அதற்கும் அப்பால் செய்வது எதுவென்று தெரியாமல், ஒருவாய் தண்ணீருக்கும் வழியில்லாமல் ஏங்கித் தவித்தபோது, அப்போதும் தத்துவம் பேசத் தமிழ்தான் கலைஞரின் நாவில் நின்றது.

தலைமாட்டில் மனைவியும், கால்மாட்டில் துணைவியுமாக அண்ணா சிலையருகே அரைநாள் உண்ணாவிரதம் இருந்தபோது, அதையும் மந்தைகள் போல் தமிழக மக்களைத் தலையாட்ட வைத்ததும் அதே தமிழ்தான். தமிழகத்திலேயே மிகப் பெரிய செல்வந்தக் குடும்பமாக கவைஞரை உருவாக்கி, அரசியலில் அந்தக் குடும்பமே உச்ச நிலைக்குச் செல்ல, இன்னமும் மேலே செல்ல உறுதுணையாக இருக்கும் தமிழுக்கு கலைஞர் விழா எடுப்பது மிகப் பொருத்தமானதே.

ஆனால், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்தது முதல், அதன் நிமித்தம் உயிர்களையும் பலி கொடுத்த ஈழத் தமிழினம் இத்தனை கொடுமைகளை அனுபவிக்கும் இன்னைய காலத்தில், ஆயிரம் ஆயிரமாகக் கொல்லப்பட்டு, எஞ்சியவர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக சிறை முகாம்களில் சிக்கித் தவிக்கும்போது போலியாக ஆவது கலைஞர் கவலை கொண்டிருந்தால் உலகத் தமிழினம் தமது சினத்தைக் குறைத்திருக்கும்.

ஈழத் தமிழர்களது இத்தனை அழிவுக்கும், அவர்களது அவலங்களிற்கும் கலைஞர் கருணாநிதி அவர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை உலகத் தமிழினம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. ஈழத் தமிழர்களின் அவலங்ங்கள் தொடர்வதால் உலகம் சிறிலங்காமீது கோபப் பார்வை பார்க்க ஆரம்பித்துள்ள நிலையில், அந்த அக்கினித் தீ தமிழகத்தையும் தொட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக, தமிழக மக்களை மந்தைகளாக்கி மலிவு விலையில் கொள்முதல் செய்யவே கலைஞர் ‘உலகத் தமிழ் மாநாடு’ ஏற்பாட்டைச் செய்கிறார் என்பது நன்றாகவே புரிகின்றது.

இப்போது கலைஞரது தலைக்குப் பின்னால் பிரகாசித்த ஒளி வட்டம் மங்கி வருவது நன்றாகவே தெரிகின்றது. அதை மீண்டும் துலக்குவதற்கு கலைஞர் முயற்சிக்கிறார்.

தமிழகத்து முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழாலும், பணத்தாலும், சினிமாவாலும், தொலைக்காட்சியாலும் அப்பாவிப் பாமர தமிழகத்து மக்களுக்குத் தன்னை பரமாத்மாவாகக் காட்டிக் கொள்ளலாம். நடந்து முடிந்த, நடக்கின்ற அத்தனையையும் பகுத்தறிவோடு பார்த்துக்கொண்டிருக்கும் உலகத் தமிழினம் அவரின் மகுடிக்கு மயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

சிங்கள தேசத்தின் இன அழிப்பு யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு, எஞ்சிய தமிழர்கள் வதை முகாம்களுக்குள் வைத்து சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் நடாத்தப்பட உள்ள ‘உலகத் தமிழ் மாநாடு’ மிகக் கொடுமையான ஈனச் செயல் என உலகத் தமிழர்கள் எண்ணுகிறார்கள். சினம் கொள்கிறார்கள்.

தமிழுக்கு அரியாசனம் பெற்றுக் கொடுக்கவும், உலகத் தமிழினத்திற்கு ஒரு நாடு உருவாக்கவும் களத்தில் நின்று போராடி பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் தமது இன்னுயிரை ஈகம் செய்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் இலட்சியத்திற்குப் பக்கபலமாக நின்று, இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளார்கள். இந்த விடுதலைத் தீ அணைந்து போகாமல் தடுக்கவும், விடுதலை அவா கொண்ட அந்த மக்களைக் காப்பாற்றவும் முத்துக்குமார் தொடக்கம் பல தமிழர்கள் தம்மைத் தீக்கு இரையாக்கித் தீபங்களாக மாறியுள்ளார்கள்.

அத்தனை நடந்தும் எதையும் கண்டு கொள்ளாமல் பச்சைத் துரோகம் செய்த தமிழக முதல்வர் அவர்கள் ஈழத் தமிழரால் உருவாக்கப்பட்ட ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற உயரிய சிந்தனைக்கு விளக்கு ஏற்றுவதும் விழா எடுப்பதும் பொருத்தமற்ற காலத்தில் செய்யப்படும் வெட்கக்கேடான செயலாகவே கணிக்கப்படுகின்றது.

இந்த அரசியல் சித்து விளையாட்டில் கலந்து கொண்டு, வரலாற்றுத் தவறை மேற்கொள்ள உலகத் தமிழர்கள் தயாராவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழ் மீதான அளவற்ற பற்றுக் காரணமாக, இதனைக் கவனத்தில் கொள்ளத் தவறிய அனைத்துத் தமிழ்ப் பெரு மக்களும், அறிஞர்களும் இந்த ‘உலகத் தமிழர் மாநாடு’ என்ற கலைஞர் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்பதே, தமிழுக்காக வீழ்ந்த, வாழ்விழந்த ஈழத் தமிழர்களின் அவாவாகும்.






நன்றி: ஈழநாடு – பாரிஸ்

Friday, September 18, 2009

தந்தை பெரியார் 131வது பிறந்தநாள் சேலம் மாவட்டம் முழுவதும் கொடியேற்றம் மற்றும் இருசக்கர ஊர்வலம்

தந்தை பெரியார் 131வது பிறந்தநாளான இன்று சேலத்தில் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் சேலத்தில்உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மேலும் கழகத்தோழர்களுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் 131 இருசக்கர வாகனங்களுடன் ஊர்வளமாக சென்று கழக கொடிகளை ஏற்றினார்கள்.

சேலம் மாநகராட்சி

1. அம்மாபேட்டை

2.அம்மாபேட்டை(ரவுண்டானா)

3.பெரியார் படிப்பகம்

4.தாதக்காபட்டி

5.தாதக்காபட்டி கேட்

6.மணியனூர்

7.அண்ணதானப்பட்டி

8.குகை

9.குகை பாலிடெக்னிக் ரோடு

கிராம பகுதி

10. பெத்தாம்பட்டி

11.முருகப்பட்டி

12.இலகுவம்பட்டி

13.இராசிகவுண்டனூர்

14.பவளத்தானூர்

15.வனவாசி

16.மேச்சேரி

17.மல்லிகுந்தம்

மேட்டூர் பகுதி

18.ஆர்.எஸ்

19.தேசாய் நகர்

20.தங்கமாபுரிபட்டிணம்

21.தர்மல்

22.மாதையன் குட்டை

23.பெரியார் தெரு

24.புதுகாலணி

25.தூக்கனாம்பட்டி

26.காவேரி நகர்

27.சின்னபார்க்

28.நேருநகர்

29.வீரபாண்டிய கட்டபொம்மன் நகர்

30.பாரதி நகர்

31.பொண் நகர்

32குமரன் நகர்







Saturday, September 12, 2009

வந்துவிட்டது தி.க வின் குடி அரசு / பெரியார் திராவிடர் கழகத்துக்கு” கிடைத்துள்ள மகத்தான வெற்றி

கழகத்துக்கு வெற்றி! பெரியார் திடலில் ‘குடிஅரசை’ தொகுக்கிறார்களாம்!
பெரியார் திடலில் இப்போது இரவு பகலாக சுறுசுறுப்பாக வேலைகள் நடக்கிறதாம். என்ன வேலை தெரியுமா? தங்களிடம் இல்லாத ‘குடிஅரசு’ இதழ்களை தேடத் தொடங்கியிருக்கிறார்களாம். இருக்கிற இதழ்களிலிருந்து பெரியார் எழுத்துக்களை தொகுத்து அச்சேற்றுகிறார்களாம். ‘குடிஅரசு களஞ்சியம்’ தொகுதிகளாக வெளியிடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ பெரியார் எழுத்துப் பேச்சுகளை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் போனவர்கள், இப்போது தாங்களே வெளியிடப் போவதாக காட்டுவதற்கு இவ்வளவு முயற்சிகளும் நடக்கிறதாம். திருச்சி பெரியார் மாளிகையில், 1983 ஆம் ஆண்டில் பெரியார் பற்றாளர்கள் தொகுத்து கி. வீரமணியிடம் தந்த தொகுப்பை தூசி தட்டி வெளியே எடுப்பதற்கு 26 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. மண்டல் பரிந்துரைக்கூட காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகாலம்தான் அலமாரியில் தூங்கியது.

இது “பெரியார் திராவிடர் கழகத்துக்கு” கிடைத்துள்ள மகத்தான வெற்றி.

பெரியாரியலை பெரியார் திடலிலிருந்து அச்சிட்டு வெளிக் கொணர, ‘பெரியார் திராவிடர் கழகம்’ என்ற இயக்கத்தின் களச் செயல்பாடுகளும், அதன் ‘குடி அரசு’ தொகுப்புப் பணியும் தான் காரணமாக அமைந்துள்ளன என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் நன்றாக இப்போது புரிந்து கொள்ளும்.

26 ஆண்டுகளாக பெரியார் எழுத்து பேச்சுகளை முடக்கிப் போட்டவர்கள் -

பெரியார் திராவிடர் கழக முயற்சியை ஏளனம் பேசியவர்கள் -

நூற்றுக்கணக்கான பக்கங்களில் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டால், எவன் படிப்பான்;
அலமாரியில்தான் தூங்கும் என்று எழுதித் தீர்த்தவர்கள் -

பெரியார் திராவிடர் கழகத்தைப் பார்த்து, “லேசான ஏளனப் புன்னகையோடு புறந்தள்ளுகிறோம்” என்று ஏகடியம் பேசியவர்கள் -

இப்போது ‘குடிஅரசு களஞ்சியங்’களை சுறுசுறுப்பாக தொகுக்கிறார்களாம்.
நல்லது! தாராளமாக தொகுக்கட்டும்.

எப்போதோ, அவர்கள் மறந்துவிட்ட ‘சுயமரியாதை சுடரொளி’ புலவர் இமயவரம்பன் படத்தோடு தொகுப்புகள் வெளிவருகிறதாம். வெளிவரட்டும்; நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான்!

- பெரியார் முழக்கம் 13.08.2009

Wednesday, August 26, 2009

சிறை எங்களை சிதைக்கவில்லை; செதுக்கி இருக்கிறது இளைஞர்களே, சிறை செல்ல அஞ்சாதீர்!

கோவை இராமகிருட்டிணன் அறைகூவல்!

ஆக. 18 அன்று நடந்த சென்னை பாராட்டுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் கோவை இராம. கிருட்டிணன் ஆற்றிய உரை.
சைமன் கொஞ்சம்கூட அச்சப் படாமல் ஒவ்வொரு முறையும் கூறுவார், “மானங்கெட்ட இந்திய மே 2 ஆம் தேதி சேலத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு ஒரு தகவல் வருகின்றது. இராணுவ வாகனங்களில் ஆயுதம் செல்கின்றது. நாங்கள் தடுத்துப் பார்த்தோம்; நிறுத்தவில்லை. எப்படியாவது தடுக்க வேண்டும். அது ஈழத்துக்கு கொச்சி வழியாக செல்கின்றது என அறிகின்றோம் என்று சொன்னார்கள். எங்களுக்கு வேறு சிந்தனையே வரவில்லை. காரணம் இதற்கு முன்பு மார்ச் மாதம் ஈரோட்டிலிருந்து இரயில் வேகன்களில் 30க்கும் மேற்பட்ட இராணுவ டேங்குகள் கொச்சி வழியாக ஈழத்திற்கு சென்றிருக்கின்றது. செய்தித் தாள்களிலும் (‘தினத்தந்தி’), தொலைக் காட்சிகளிலும் அந்த செய்திகள் வந்தன.
அந்தச் செய்தியை பார்த்தவுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டார்கள், இப்படி ஒரு படம் வந்திருக்கின்றதே பார்த்தீர்களா? அது எங்கு செல்கின்றது தெரியுமா? தடுக்க முடியுமா? என்று கேட்டார்கள். ஆனால் செய்திகள் எங்களுக்கு எட்டுகின்றபோது ஒரு நாள் முடிந்துவிட்டது. ஆனால், அவர்கள் அதற்குள் கடந்திருப்பார்கள். நாங்கள் ஈரோட்டுத் தோழர்களைக் கேட்டோம், ‘இப்படி வாகனங்கள் சென்றதை உடனே எங்களுக்கு சொல்ல வேண்டாமா? சொல்லியிருந்தால் ஈரோட்டி லிருந்து கோவை வரை மக்களை திரட்டி, அந்த வாகனம் ஈழத்திற்கு செல்லாமல் தடுத்திருப்போமே, தெரியாமல் போய்விட்டதே’ என்று வேதனைப் பட்டோம்.

அந்த வேதனையில் இருந்த எங்களுக்கு, மீண்டும் ஆயுதம் ஏற்றிக் கொண்டு 80 இராணுவ லாரிகள் செல்கின்றன என்ற செய்தி கிடைத்தவுடன், நாங்கள் என்ன பாடுபட்டிருப்போம்? எங்களுக்கு வேறு சிந்தனையே இல்லை. இராணுவ வாகனங்கள் எங்கே வருகின்றன என்று சேலம் தோழர்களை கேட்ட போது, இன்னும் 2 மணிநேரத்தில் கோவை வந்து விடும் என்று சொன்னார்கள். நாங்கள் உடனடியாக தோழர்களுக்கு தகவல் தந்தோம். ஏறக்குறைய 300 பேர் கூடினோம். எங்கள் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை. ஆனால் இருந்த ஆயுதமெல்லாம் தமிழ் ஈழத்திலே இந்த இராணுவம் கொன்று குவிக்கின்றதே அதைத் தடுக்க வேண்டுமே என்ற உணர்வு மட்டுமே எங்களிடமிருந்த ஆயுதம். உடனே தடுத்தோம். உணர்வுள்ள தோழர்கள் வாகனங்களின் கண்ணாடி களை உடைத்தார்கள். உள்ளே இராணுவ வீரர்கள் துப்பாக்கிகளோடு இருந்தார்கள்.

தோழர்களே ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள். சிலர் அப்பாவித்தனமாக கேட்கின்றார்கள். இந்த இராணுவம் தானே இந்திய நாட்டை காக்கின்றது. அப்பேர்பட்டவர்களை தாக்கலாமா? என்று. ஆனால், அந்த இராணுவ வீரர்களை தாக்குவது எங்கள் நோக்கமல்ல, அவர்கள் குற்றவாளிகள் அல்ல. இந்த ஆயுதங்கள் எங்கே போகிறது என்பதுகூட அவர்களுக்கே தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் வந்த பின்னால்தான், அடுத்து எங்கே செல்ல வேண்டும் என்பதையே அவர்களிடம் சொல்லுவார்கள். இது இராணுவ கட்டுப்பாடு.

அந்த இராணுவ வீரன் நமது இனத்தைச் சார்ந்தவன். அவர்கள் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அத்தனை பேரும் சூத்திரர்கள். ஒருவன்கூட பூணூல் போட்டவன் கிடையாது. இராணுவமாக இருந்தாலும், காவல் துறையாக இருந்தாலும் ஆட்கள் தேர்வு செய்கின்ற போது மைதானத்தில் உள்ளவர்களை படம் பிடித்துப் போடுவார்கள் பாருங்கள், மேல் சட்டை யில்லாமல் இருப்பார்கள். ஒருவர் உடம்பிலும் பூணூல் இருக்காது. சிப்பாய்களாக வருபவர்கள் இராணுவமாக இருந்தாலும், காவல் துறையாக இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரும் சூத்திரர் கள். நம்மவர்கள். ஆகவே எங்களுடைய நோக்கம் அந்த சிப்பாய்களை அடிப்பதல்ல, தடுப்பதல்ல. ஆனால் அந்த ஆயுதங்கள் ஈழத்தில் எம்மக்களை கொன்று குவிக்கப் பயன்படுமே; எனவே ஆயுதங் களைத் தடுக்க வேண்டும் என்பதே எங்கள் உணர்வு.

அந்த வாகனங்களில் ராக்கட் லாஞ்சர்கள் இருந்தன. எடுத்து கீழே போட்டார்கள். அந்த இராணுவ வீரர்கள் துப்பாக்கி வைத்திருந்தார்கள். அவர்கள் எங்களை சுட முடியும்; ஆனால் எங்களுக்கோ, அந்த பய உணர்வே யில்லை. இராணுவத்தை தாக்கப் போகிறோம். சுடுவார்கள் என்ற பயம் கடுகளவும் இல்லை. காரணம் லட்சக்கணக்கான மக்களை காக்கப் போகின்றோம் என்ற உணர்வுதான் எங்களிடம் மேலோங்கி நின்றது. அவர்கள் சுட்டிருந்தால் நாங்கள் இறந்து, இப்போது 3 மாதம் ஓடியிருக்கும்.
பிரபாகரன் படத்துடன் 10,000 பேர் கூடுவோம்
பிரபாகரன் படத்தை போடக் கூடாது என்று தடை போட்டுள்ளது இந்த ஆட்சி! அண்ணன் வைகோ அவர்களையும், கழகத் தலைவரையும் கேட்டுக் கொள்கின்றேன், மீண்டும் நீங்கள் கூடிப் பேசப் போகின்றீர்கள், பேசுங்கள். 10 ஆயிரம் பேர் இதே மெரினா கடற்கரையிலே அண்ணா சதுக்கத்திற்கு முன்னால் பிரபாகரன் படம் போட்ட பனியனோடு நிற்போம். (கைதட்டல்) கைது செய்யட்டும். சிறைச்சாலையிலே அடைப்பதற்கு இடம் கிடையாது. நினைவில் வையுங்கள். அரசாங்கம் மிரட்டிப் பார்க்கின்றது. கைது செய்தாலும் சிறையிலே அடைக்க மாட்டார்கள். திருப்பி அனுப்பித்தான் ஆக வேண்டும். இப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலே நாம் துணிய வேண்டாமா?
- கோவை இராமகிருட்டிணன் உரையிலிருந்து
இதே முதலமைச்சர் கலைஞர் 1989 ஆம் ஆண்டு, இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரிலே இலங்கைக்கு சென்றுவிட்டு திரும்பி, இந்தியா வருகின்றபோது அதை வரவேற்க மாட்டேன் என்று சொன்னார். அதற்கு கலைஞர் சொன்ன காரணம், “எங்கள் தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு வந்த இராணுவத்தை நான் வரவேற்க மாட்டேன்” என்பதுதான்.

அமைதிப்படையில் சென்றிருந்த ஒரு இராணுவ வீரனுக்கு சிறப்பு செய்தது இந்திய அரசாங்கம். (அந்த இராணுவ வீரன் யார் என்றால், பகத்சிங்கின் அண்ணன் மகன்.) அந்த சிறப்பு விருதை பெற அவன் தயாரானான். ஆனால் அந்த வீரனுடைய தந்தை (பகத்சிங்கின் அண்ணன்) மகனிடம், ‘எங்கே போகின்றாய்’ என்று கேட்டார். ‘இந்திய அரசின் சிறப்பு விருதைப் பெறப் போகிறேன்’ என்று சொன்னவுடன், தந்தை கேட்டார், “ஒரு விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கி நசுக்குவதற்காக, விடுதலைப் போராளி களை அழிப்பதற்காக இலங்கைக்கு போனாய்; அதற்கு உனக்கு சிறப்பா? இதே விடுதலைப் போராட்டத்திற்காகத் தானே உன் சித்தப்பா பகத்சிங் தூக்கு மேடையேறினார். உன் சித்தப்பா இங்கே செய்த காரியத்தைத் தானே அங்கே விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை கொன்று ஒழிப்பதற்கு போன உனக்கு இந்த மானங்கெட்ட அரசாங்கம் தருகின்ற விருதைப் பெறப் போகலாமா?” என்று கேட்டார். (பலத்த கைதட்டல்)

தோழர்களே நீலாம்பூரிலே இராணுவத் தாக்குதலில் எங்களுடன் கைதான தோழர் சைமன் அவர்களைப் பார்த்து சிறையிலே அதிகாரிகள் கேட்டார்கள், ‘என்ன வழக்கு என்று’! அதற்கு இராணுவத்தை தாக்கிய வழக்கு” என்று. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதையே தான் சொல்லுவார் (கைதட்டல்)

இவர்கள் - ஒருமைப்பாடு, தேசியம் பேசுவது எல்லாம் நம்மிடம் தான். ஆனால், இந்திய இராணுவ அமைச்சர் அந்தோணி ‘இந்தியா’ எனது தேசம் என்ற உணர்வோடுதான் இருக்கின்றாரா? முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றமே கூறினாலும், அம்மாநிலத்தில் காங்கிரஸ் என்றாலும், கம்யூனிஸ்ட் என்றாலும் கட்சிகளை மறந்து எதிர்க்கிறான். அணை வலுவிழந்து இருக்கின்றது என்று பொய்யான காரணத்தைச் சொல்கிறார்கள். அணையை ஆராய்ச்சி செய்வதற்கு அந்தோணியின் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த இராணுவ வீரர்கள் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார்கள். தமிழக அரசுக்கே இது தெரியாது. இதற்கு ஆணையிட்டவர்

ஏ.கே. அந்தோணி. இந்திய இராணுவ அமைச்சராக இருந்தாலும் தன்னை ஒரு மலையாளியாகக் கருதி, மலையாளி நலனுக்குத்தானே அவர் செயல்பட்டார்? இராணுவ அமைச்சருக்கே மலையாளி என்ற உணர்வு இருக்கும்போது, தமிழனாகிய நான் மட்டும் எனது இனத்தை அழிக்கச் செல்லும் இராணுவத்தை புனிதமாக மதிக்க வேண்டுமா? (கைதட்டல்)

பெரியார் ஒரு முழக்கத்தை சொல்லுவார், “நான் ஒரு நாத்திகன். என்னை யாராவது தாக்கினால், தாக்க முயற்சித்தால், அவர்களை கொல்லும் வேளையிலே சாவேன்” என்றார் பெரியார். அதை நெஞ்சிலே நாங்கள் தாங்கி இருக்கின்றோம். அதனால்தான் அன்றைக்கு அந்த மறியலை நடத்தினோம்.

இந்த வாகனம் கொச்சிக்குப் போகவில்லை என்று அப்போது மறுத்தார்கள். ஆனால், அதற்கு தலைமை தாங்கி வந்த தென்மண்டல அதிகாரி சொல்லுகின்றார், கொச்சிக்குத்தான் போனது என்று. அங்கிருந்து எங்கு செல்லுகின்றது என்பதை யெல்லாம் சொல்ல முடியாது, அது ரகசியம் என்று சொன்னார்.

நாங்கள் மூன்று மாத காலம் சிறையிலே இருந்ததோம். எவ்வளவோ துயர செய்திகள் எங்களை துயரத்தில் ஆழ்த்தின. ஆனாலும் சிறை எங்களை சிதைத்து விடவில்லை. எங்களை செதுக்கி இருக்கின்றது.

தோழர்களே, இளைஞர்களே இனியும் சிறைச்சாலையைக் கண்டு பயப்பட வேண்டாம். தந்தை பெரியார் காலத்தைப் போல் இப்போது சிறைச்சாலைகள் மோசமாக இல்லை.

1957-லே சாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்து 10 ஆயிரம் கருஞ்சட்டைப் படையினர் கைதானார்கள். 4 ஆயிரம் பேர் பல்வேறு சிறையிலே இருந்தனர். அதிலே 5 பேர் சிறைக்குள்ளேயே இறந்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த ஒரு மாதத்தில் 13 பேர் இறந்தனர். காரணம் உணவு சரியில்லை. மருத்துவம் சரியில்லை. கழிப்பிடமே இருக்காது. அப்போதைய கழிப்பிடம் ஒரு குழியை வெட்டி அதிலே தான் எல்லோரும் உட்கார வேண்டும். 24 மணி நேரமும் அறைக்குள் பூட்டியே வைத்திருப்பர். இருட்டறையிலே வைத்திருப்பர். இப்பேர்ப்பட்ட கொடுமைகள் எல்லாம் இன்றைக்கு சிறைச்சாலையில் இல்லை. இன்றைக்கு கோழிக்கறி, மின் விசிறி, தொலைக் காட்சி, நவீன கழிப்பிட வசதி போன்றவையெல்லாம் இருக்கின்றன. இவ்வளவு வசதிகள் இருந்தும் கடந்த ஆறு மாதகாலமாக பெரியார் திராவிடர் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகமும் தான் சிறைக்கு போகின்றது. வேறு யாரும் வரவில்லையே. அவர்கள் நினைக் கின்றார்கள். இந்த சிறைகளைவிட இலட்சக் கணக்கான கோடிக்கணக்கான வருமானம் வெளியிலே இருக்கின்றது என்று நினைக்கிறார்கள். ஆகவே தோழர்களே, சிறையைக் கண்டு அஞ்சாதீர்கள்.

எங்களின் வேதனை எல்லாம் என்ன? 30 ஆண்டுகளாக பாடுபட்டோமே, பல்வேறு சிறைகளிலே தொல்லையை அனுபவித்தோமே, இவ்வளவு பாடுபட்டு, வாசல் வரை வந்த அந்த விடுதலையை இந்திய பார்ப்பன ஆட்சி நசுக்கிவிட்டதே. ஒரே நாளில் 25000 பேரை கொன்று குவித்திருக்கின்றதே. அது தான் வேதனை.

இன்றைக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசக் கூடாது; படம் வைக்கக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போடுகிறார்களே, எங்களுக்கு பிரபாகரன் படம் முக்கியமல்ல, அவரது லட்சியம் தான் முக்கியம். அந்த லட்சியத்துக்காக உண்மை யாக போராட வேண்டும். படத்தை மட்டும் காட்டுவதிலே பலன் இல்லை. ஆனால் பிரபாகரன் படத்தை தமிழகத்திலே வைக்க தடை; ஆனால், காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே படம் வைக்க தமிழ் நாட்டில் தடை யில்லை. கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களிலே வீற்றிருக்கின்ற பிரபாகரன் படம் வைக்கத் தடை போடும் இதே ஆட்சி யில் தான் அண்மையிலே 10 ஆயிரம் பேர் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ நடத்தியிருக்கின்றார்கள் இதே சென்னையிலே; அதற்கு தடையில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம் என்ன? மக்களை பிரிப்பதும், கொன்றொழிப்பதும் தானே?

தமிழ்நாட்டு மக்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று கடைசி வரை தம்பி பிரபாகரன் நம்பினார்; நம்மால் முடியவில்லை. ஆனாலும், எந்த விடுதலையும் நாள் குறித்து வருவதில்லை. 300 ஆண்டுகளுக்கு பிறகுதான் அயர்லாந்துக்கு விடுதலை கிடைத்தது. எனவே இந்த விடுதலையும் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு உண்டு.

தோழர்களே, நாங்கள் சிறையிலிருந்த போது பெரியார் திராவிடர் கழகத்தை தடை செய்யப் போகிறார்கள் என்று செய்தி வந்தது. இந்த நாட்டில் ‘பிளாஸ்டிக்’ பொருள்களை தடை செய்தார்கள். எங்காவது பிளாஸ்டிக்கை ஒழிக்க முடிந்ததா? இதையே ஒழிக்க முடியாதபோது பெரியார் திராவிடர் கழகத்தையா தடை போட்டு ஒழிக்க முடியும்? (கைதட்டல்) முடியாது, முடியாது.

நீங்கள் தருகின்ற இந்தப் பாராட்டு, எங்களை பாராட்டுவதல்ல. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக, மற்றவர்களும் இதுபோல் துணிய வேண்டும்; போராட வேண்டும் என்பதற்காக எங்களை பாராட்டுகின்றீர்கள் என்று கூறி முடிக்கின்றேன்.

Thursday, August 20, 2009

கலைஞர் அன்றும் இன்றும்

அன்று....

தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. அந்த இயக்கத்துக்கு உதவிகள் செய்வதுதான் குற்றம் என்று ‘பொடா சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் 16.12.2003 இல் தீர்ப்பளித்தது. தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி. மாத்தூர் ஆகியோர் வழங்கியிருந்தனர். இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேதான் ஜெயலலிதா ஆட்சியில் பொடாவில் கைது செய்யப்பட்டிருந்த பழ. நெடுமாறன், வை.கோ. உள்ளிட்டோர், சுமார் ஒன்றரையாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை சட்டமன்றத்தில் ஜெயலலிதா, தவறாக சுட்டிக் காட்டினார். தி.மு.க. ஆட்சியில் அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையும் கொண்டு வரப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா, தனது தவறான கருத்தை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘முரசொலி’ ஏட்டில் (பிப்.19, 2008) விளக்கமாக விடுத்துள்ள அறிக்கையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பகுதிகளையே எடுத்துக் காட்டி பதில் எழுதினார்.
“உள்நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடாச் சட்டம் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட் டிருந்தால் மட்டுமே அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ளபோது ஒரு நபர், ‘பகிரங்கமாக அறிவிப்பதாலோ’ (பொடாவின் 20வது பிரிவு) அல்லது, “ஆதரவைக் கோரினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ” அல்லது “ஏற்பாடு செய்வதினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தில் பேசினாலோ” (பொடாவின் 21வது பிரிவு), ஒரு (பயங்கரவாத) அமைப்பின், எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கர வாதச் செயலை செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்? அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” (‘முரசொலி’ பிப்.19, 2008)
- கலைஞர் கருணாநிதி உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டி அன்று ‘முரசொலியில் இப்படி எழுதினார்.
இன்று....
“தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலட்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக் காட்சிகளில் பிரசுரித்தல் / காண்பித்தல் ஆகியவை unlawful activities (prevention) act , 1968படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே, பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது. - தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு.”
- இது இன்று தி.மு.க. அரசு ஏடுகளில் தந்துள்ள விளம்பரம்.
கொடூரமான ‘பொடா’ சட்டத்தின் கீழேயே தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதோ, கூட்டம் நடத்துவதோ, குற்றமாகாது என்று வாதிட்ட அதே கலைஞர் தான் - இன்று 1968 ஆம் ஆண்டு சட்டத்தைக் காட்டி கருத்துரிமையைப் பறித்து, காங்கிரசை மகிழ்விக்க துடிக்கிறார்.
காங்கிரஸ் இனப் படுகொலைக்கு துணை போனாலும், படுகொலைகளை முடித்த பிறகு, தமிழர்களுக்காக கண்ணீர் விட்டு அழுவதுகூட குற்றம் என்று காங்கிரஸ் கூறினாலும், கலைஞர், காங்கிரசின் பக்கம் தான் நிற்பார். தமிழின உணர்வை நசுக்குவார்!

இவர்கள் தான் புடம் போட்ட தமிழினப் பாதுகாவலர்களாம்!
அந்தோ, தமிழா, உனது நிலையைப் பார்த்தாயா?

Monday, August 17, 2009

பெரியாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் ஏன் ? ஈழம் - இனி நாம் என்ன செய்ய வேண்டும் ?

16.08 .09 அன்று மாலை 6.00 மணிக்கு கோபி கொளப்பலூர் பெரியார் திடலில்

பெரியாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் ஏன் ?
ஈழம் - இனி நாம் என்ன செய்ய வேண்டும் ?
என்ற இறு கேள்விகளை மக்களிடத்தில் வைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இப்பொதுக்கூட்த்திற்கு பெரியர் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் தோழர் இராம. இளங்கோவன் தலைமை தாங்கினார், தோழர் இரத்தினசாமி, தோழர் நாத்திக ஜோதி , சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.
தோழர் காசி வேலுச்சாமி மக்களிடையே மங்கி கடக்கும் மூடத்தனத்தை விளக்கி நகைச்சுவையாக சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோர்
பெரியாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் ஏன் ? ஈழம் - இனி நாம் என்ன செய்ய வேண்டும் ? குறித்து தெளிவான விளக்க உரையாற்றினர்