“குடிஅரசு - பத்திரிகையில் எழுதியவர் பெரியார்; அவரே அதன் உரிமையாளர். குடிஅரசில் வெளிவந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை பொருளாதாரம், அரசியல், சமூகம், மதம் தொடர்பான தலைப்புகளில் தான். இந்தக் கட்டுரைகளுக்கு தனக்கு பதிப்புரிமை ஏதும் பெரியார் கோரவில்லை. எனவே 52(1) (எம்) பிரிவின்படி பெரியார் எழுத்தை வெளியிடுகிறவர்கள் பதிப்புரிமையில் குறுக்கிட்டுவிட்டதாகக் கூற முடியாது” என்று தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி, “சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் அமைப்பு விதிகளில் கூட, பெரியாரின் எழுத்துகளுக்கான உரிமைகள் பற்றி ஏதும் குறிப்பிடப் படவில்லை. இன்னும் சொல்லப் போனால், எதிர்காலத்தில் வாங்கக் கூடிய சொத்துகள் தான் இந்த நிறுவனத்துக்கு உரிமையாகும் என்றே, அச்சங்கத்தின் விதிகள் 22, 23 குறிப்பிடுகின்றன” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
பெரியார் எழுத்துகளை இலக்கியம் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து - எனவே அது ‘அறிவுசார் சொத்துடைமை’யாகவும் கருத வேண்டும் என்று கி.வீரமணி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நீதிபதி, ‘அறிவுசார் சொத்துரிமை’ கோருவதற்கும் - எழுத்துபூர்வமாக தரப்பட்டிருக்க வேண்டும். அப்படி எழுத்து பூர்வமாக பெரியார் வழங்கிடவில்லை. பெரியார் எந்த உயிலும் எழுதி வைக்காமல்தான் இறந்துள்ளார். இது எல்லோருக்கும் தெரியும்” என்று விளக்கமளித்துள்ளார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்ற இந்த தீர்ப்பின் வழியாக - இனி பெரியார் எழுத்து - பேச்சுகளை வெளியிடும் உரிமை அனைவருக்கும் கிடைத்துள்ளது. தஞ்சை பகுத்தறிவாளர்கழகம் தயாரித்திருந்த தொகுப்பையே பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுகிறது என்று தஞ்சை இரத்தினகிரி, கி.வீரமணிக்கு ஆதரவாக தாக்கல் செய்த மனுவை - ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தின் இந்த கோரிக்கை ‘வலிமையாக மறுக்கப்பட்டுவிட்டது’ (நுஅயீhயவiஉயடடல னநnநைன) என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
25 பக்கங்கள் கொண்ட இத்தீர்ப்பின் தொடக்கத்தில், பெரியாரின் குடிஅரசு தொடங்கிய காலகட்டம்; குடிஅரசு சந்தித்த எதிர்நீச்சல், வகுப்புவாரி உரிமைக்காக பெரியார் காங்கிரசுக்குள் நடத்தியப் போராட்டம்; காங்கிரசிலிருந்து வெளியேறி, அதனால் சந்தித்த எதிர்ப்புகள் போன்ற வரலாறுகளை நீதிபதி பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய பெரியார், “கடவுள் ஒழிக; மதம் ஒழிக; காந்தி ஒழிக; காங்கிரஸ் ஒழிக; பார்ப்பான் ஒழிக” என்பதையே தனது எதிர்கால அரசியல் செயல் திட்டமாக்கினார் என்றும், நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பெரியாருடன் சமகாலத்தில் வாழ்ந்த சைவப் பண்டிதர் ஈ.எம்.சுப்ரமணியபிள்ளைக்கு 1947 இல் பெரியார் எழுதிய கடிதத்தில், “என்னுடைய நூல்கள், மிகக் குறைந்த விலைக்கே தரப்படுகின்றன. அவைகளுக்கு முறையான விற்பனையும் கிடையாது. பெரும்பாலான நூல்கள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. வியாபாரம் என்ற முறையில் இதில் தொண்டாற்றுவது இயலாது; அப்படி தொண்டாற்றுவது கடினம்” என்று எழுதியுள்ளதை நீதிபதி, “தமிழ்ப் பெரும் புலவர் ஈ.எம்.சுப்ரமணியபிள்ளை” என்ற நூலிலிருந்து மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளார். பெரியார் தனது கருத்துகள் மக்களிடம் பரவிட தனது வெளியீடுகளை இலவசமாகக்கூட வழங்கியவர் என்ற இந்த கருத்து பதிப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கான பதிலாக அமைந்துள்ளது.
பெரியார் திரைப்படத்துக்கு தமிழக அரசு 95 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியதை எதிர்த்து, டி. கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்தது. அதில், ஒரு நீதிபதி கே. சந்துரு, 2007 ஆம் ஆண்டு தமது அமர்வு வழங்கிய தீர்ப்பில் பெரியார் சாதி, மத, தீண்டாமைக்கெதிராக போராடிய சிறப்புகளை குறிப்பிடப்பட்டிருந்ததை இந்தத் தீர்ப்பில் மீண்டும் நீதிபதி எடுத்துக்காட்டியுள்ளார்.
“பெரியாரை நீதிமன்ற காகித கட்டுக்குள் புதைத்துவிடக் கூடாது!”
“விடை பெறுவதற்கு முன்பு - இந்த நீதிமன்றம் நிறைவாக ஒன்றை கூற விரும்புகிறது. பெரியார் ‘குடிஅரசில்’ எழுதியவை எல்லாம், இரண்டு உலகப் போர்கள் நடந்த காலத்தின் இடையே வெளி வந்தவை. காலனி ஆட்சியாளர் களின் அடக்குமுறைப் பிடியில் சிக்கிய பெரியார் சிறைச் சாலைகளை சந்தித்தார். அவர் நடத்திய பத்திரிகைகளுக்காக பிரிட்டிஷ் காலனி ஆட்சி வைப்புத் தொகை கேட்டது. பிறகு அதை பறிமுதல் செய்தது. இந்து பழமைவாதிகளால் அவர், புறக் கணிக்கப்பட்டார். சமூகநீதிக்காக போராடு வதற்காக அவர் தேசிய இயக்கத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக சக்தி மிக்க காங்கிரஸ் கட்சி யின் கடுங்கோபத்தையும் அவர் எதிர் கொண்டார். ஆனாலும், எந்தப் பலனை யும் எதிர்பாராத அவரது பயணம் தொடர்ந்தது.
தற்குறிகள் எண்ணிக்கையே நிறைந் திருந்த அந்தக் காலகட்டத்தில் படித்தவர் களிடம், தமது கருத்துகளைக் கொண்டு சேர்க்க விரும்பிய பெரியார், பல சந்தர்ப் பங்களில் ‘குடிஅரசு’ பத்திரிகைகளை இலவசமாகவே வழங்க வேண்டி யிருந்தது.
பெரியாரின் 130 ஆவது ஆண்டாக மலரப் போகும் 2009 இல் பெரியாரின் எழுத்துகள், பதிப்புரிமைப் பிரச்சினைக் குள் சிக்கி, சட்டங்களின் ‘சண்டைக் களமாக’ மாற்றப்படுவதை கடும் வேதனை வலியுடனேயே இந்த நீதி மன்றம் பார்க்கிறது. அவரது சிந்தனைகளை ‘சகோதர சண்டைக்குள்’ பெரியாரை சிக்க வைத்து, நீதிமன்றங்களின் காகிதக் கட்டுகளுக்குள் புதைந்து விடக்கூடாது. நியாயங்கள் வெல்லும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது.
எமது குறிக்கோள் இதுதான்.
“நூறு மலர்கள் பூக்கட்டும்; ஆயிரம் சிந்தனைகள் குலுங்கட்டும்.”- நீதிபதி கே. சந்துரு, தீர்ப்பின் இறுதிப் பகுதியில், பதிவு செய்துள்ள கருத்து
மீண்டும் நீதிமன்றம் சென்றார், வீரமணி!
சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ரவிராஜ் பாண்டியன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அமர்வுக்கு முன் மேல்முறையீட்டு மனுவை தமது நிறுவனம் சார்பில் ஜூலை 29 அன்று கி.வீரமணியின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். நீதிமன்றம், ‘ஏற்கனவே இருந்த நிலை தொடர்கிறது’Status Quo என்று கூறியுள்ளது.
வாதாடிய வழக்கறிஞர்கள்
‘குடிஅரசு’ வழக்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி மற்றும் வழக்கறிஞர்இளங்கோ ஆகி யோரும், பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் சார்பில் வழக்கறிஞர் திருமதி கிளாடியஸ் டேனியல் ஆகியோரும் வாதிட்டனர். வழக்கறிஞர் குமாரதேவன், வழக்கறிஞர் அமர்நாத் பல்வேறு நிலைகளில் வழக்கிற்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர். 2008 செப்டம்பரில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜெயபால் முன் முதலில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிமன்றம் முதலில் குடிஅரசு தொகுதிகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்தது. வழக்கு பல முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதி யாக நீதிபதி கே. சந்துரு முன் விசாரணைக்கு வந்தது.
கடந்த ஜூலை 20 ஆம் தேதி - வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தடைக்கான கெடு முடிந்திருந்தது. தடையை மேலும் நீட்டிக்க மறுத்த நீதிபதி, 22 ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு ஏற்று, இரு தரப்பு வாதங்களையும் கேட்டார். ஜூலை 27ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நீதிமன்றம் தொடங்கியவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி வெளியிட்டார்.
வரலாற்றில் பதியும் தீர்ப்பு
பெரியாரின் சிந்தனைகளை மக்கள் மன்றத்தில் முழுமையாக காலவரிசைப்படி கொண்டு சேர்க்க பெரியார் திராவிடர் கழகம் எடுத்த பெருமுயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ‘குடிஅரசு’ தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட தடையில்லை என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தனித்துவமான புரட்சிகர தீர்ப்புகளை வழங்கி வரும் பெருமைக்குரிய உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, மற்றொரு சிறப்பான நேர்மையான தீர்ப்பை வழங்கியிருப்பதை பெரியாரிய சிந்தனையாளர்கள், மகிழ்வுடன் வரவேற்கிறார்கள்!
மகத்தான தியாகங்களை சுமந்து, மக்களிடம் பெரியார் விதைத்த சிந்தனைகளை நீதிமன்றத்தில் வழக்குகளாக்கி, அந்த வழக்குகளின் காகிதக் கட்டுகளுக்குள் முடக்குவது, பெரியாருக்கு இழைக்கும் நீதியாகாது என்பதை நீதிபதியே தமது தீர்ப்பில் கவலையுடன் பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.
யாருக்கு குழந்தை சொந்தம் என்று வழக்காடிய இரண்டு தாய்மார்களில் ஒருவர், குழந்தையை இரண்டு பகுதியாக வெட்டி பிரித்துத் தந்து விடுங்கள் என்றுகூற, உண்மைத் தாயோ, குழந்தையை வெட்ட வேண்டாம், அவளிடமே இருக்கட்டும் என்று மன்றாடிய கதையில் இழையோடும் அதே உணர்வுதான், நீதிபதியின் இந்த கருத்திலும் பிரதிபலிக்கிறது என்பதாகவே நாம் உணருகிறோம்.
தமது வெளியீடுகள் எவற்றுக்கும் பதிப்புரிமை கோராத பெரியார், பல நேரங்களில் மக்களுக்கு இலவசமாகவே வழங்கினார் என்ற உண்மையை நீதிபதி எடுத்துக் காட்டியிருப்பது, பதிப்புரிமை கோரி நிற்பவர்களுக்கு, நீதிமன்றம் வழங்கியுள்ள சரியான பதிலாகும்.
அதனால்தான் ‘மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியாரை மிகச் சரியாக படம் பிடித்துக் காட்டினார். ‘நீதிமன்ற நீதிக்கே நீதி சொல்வார்’ என்று ஒரு கவிஞர், பெரியாரைப் பாடினார். அந்தத் தலைவரின் சிந்தனைகளை நீதிமன்றங் களின் தடை ஆணைகளுக்குள் முடக்கத் துடிப்பது, பெரியாரியலுக்கு இழைத்துள்ள துரோகம். இதை வரலாறு பதிவு செய்தே தீரும்.
வழக்கைத் தொடர்ந்தவர்களுக்குக்கூட ஒரு வகையில் நன்றி சொல்லத்தான் வேண்டும். இந்த வழக்கு வந்த காரணத்தால்தான் ‘குடிஅரசு’ பற்றிய செய்திகள் மேலும் பரவலாக மக்களிடம் சென்றடைந்திருக்கிறது.
1925 ஆம் ஆண்டு அமெரிக்க மாநிலங்களில் ஒன்றில் (கூநுசூசூநுளுளுநுநு) நடந்த புகழ் பெற்ற ‘ஸ்கோப்ஸ் மங்கி’ (ளுஉடியீநள ஆடிமேநல) என்ற வழக்கை குறிப்பிடலாம். ‘மனிதனை இறைவன் படைத்தான்’ என்பதை மட்டுமே பள்ளிகளில் பாடமாக கற்பிக்க வேண்டுமே தவிர, மனிதன் பரிணாம வளர்ச்சியை விஞ்ஞான ரீதியாகக் கண்டறிந்த டார்வின் கோட்பாட்டை கற்பிக்கக் கூடாது என்ற சட்டத்தை எதிர்த்து (ரெடடநவ யஉவ), ஜான் ஸ்கோப் என்ற பள்ளி ஆசிரியர், தமது மாணவர்களுக்கு டார்வின் கோட் பாட்டை கற்றுத் தந்தார். அதன் காரணமாக ஆசிரியர் ஆட்சியாளரால் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.
பைபிளின் இறைக் கொள்கைக்கு ஆதரவாக அமெரிக்க தேர்தலில் மூன்று முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நின்ற வில்லியம் ஜென்னிங்ஸ் பயாஸ் வாதாடினார். டார்வின் கோட்பாட்டுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் லாரன்ஸ் டாரோ வாதாடினார்.
இருதரப்பு வாதங்களும், எட்டு நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து நடந்தன. ஏடுகளில் வெளிவந்த அந்த வாதங்களை மக்கள் பரபரப்பாகப் படித்தார்கள். பைபிளின் படைப்புக் கொள்கைக்கு எதிரான வாதங்கள் அப்போதுதான் மக்களை சென்றடைந்தன. அதே போன்ற தாக்கத்தையே இந்த வழக்கும் சந்தித்திருக்கிறது.
பெரியாரியலை பரப்பும் இயக்கம் எது? முடக்கும் அமைப்பு எது என்பதை நீதிமன்றங்களின் வழியாக மக்கள் மன்றம் இப்போது புரிந்து கொண்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தாலும், நாம் வியப்படைய மாட்டோம். மக்கள் மன்றம், மீண்டும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவே செய்யும்.
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, பெரியார் திராவிடர் கழகத்துக்கு கிடைத்த வெற்றியாக மட்டும் நாம் கருதவில்லை. பெரியாரியலைப் பரப்பத் துடிக்கும் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம்.
தீர்ப்பு குறித்து சிந்தனையாளர்கள் கருத்து - பெரியார் விடுதலையானார்!
நீதிமன்றத் தீர்ப்பை சிந்தனையாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு இது தொடர்பாக சிந்தனை யாளர்களின் கருத்தை வெளியிட்டுள்ளது. பெரியாரியல் சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை கூறுகையில், “நீதிமன்றத்துக்கு சென்ற கி.வீரமணி, இதன் மூலம் பெரியார் சிந்தனைகள் பரவுவதை தடுக்க முயன்று, பெரியாருக்கு முழுமையாக நீதி வழங்க மறுத்திருக்கிறார்” என்றார். மேலும் “இத் தீர்ப்பு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். பெரியாரைப் பற்றி பல நூல்கள் எழுதப்பட் டுள்ளன. ஆனால், எந்த வரலாற்றுச் சூழலில் பெரியார் தனது குரலை ஒலித்திருக்கிறார் என்பது வெளிப்படுத்தப்படவே இல்லை. சமூக, வரலாற்றுச் சூழலிலிருந்து பெரியார் எழுத்து களைப் பிரித்து தனிமைப்படுத்திவிடக் கூடாது” என்று கூறினார்.
“பெரியார் நூல்கள் தேச உடைமை யாக்கப்பட வேண்டும் என்பதற்கான முதல் படியாக இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது” என்று எழுத்தாளர் ஞாநி கூறியுள்ளார். “இந்தத் தீர்ப்பை பெருந்தன்மையுடன் திராவிடர் கழகம் ஏற்றுக் கொண்டு, மேல்முறையீடு செய்யாதிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஞாநி மேலும் கூறியுள்ளார். பெரியாரின் எல்லா எழுத்துகளுக்குமான உரிமைகளைப் பெற்று அரசு பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “பெரியார் சிந்தனைகள் பொதுச் சொத்து அல்ல என்பது எங்களின் வழக்கு அல்ல. ஆனால், பதிப்புரிமை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்பதே எங்கள் வழக்கு. காரணம் பெரியாரின் கருத்துகள் சிதைக்கப்பட்டு விடக்கூடாது” என்று தி.க. வழக்கறிஞர் வீரசேகரன் கூறினார்.
“எழுத்துகள் திரித்துக் கூறப்பட்டுவிடும் என்ற காரணத்தைக் கூறி, பெரியார் நூல்களை வெளியிடும் உரிமைகளை மற்றவர்களுக்கு வழங்காமல் இருந்துவிட முடியாது. பெரியாரின் எழுத்துகள் முழுமையாக பொது மக்களிடம் கிடைக்கும்போதுதான் திரிபுவாதங்களை எதிர்த்து அம்பலப்படுத்த முடியும்” என்று எஸ்.வி.இராஜதுரை கூறியுள்ளார்.
தீர்ப்பை வரவேற்ற சமூக அரசியல் ஆய் வாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம், “தனிஉடைமை கோட்பாட்டுக்கு எதிரான பொதுமைக் கோட்பாட்டுக்கு அனைவருக்கும் கிடைத்த வெற்றி, இத் தீர்ப்பு” என்றார். 1995 இல் உச்சநீதிமன்றம் , அலைவரிசை பொதுவானது என்று வழங்கிய தீர்ப்புக்கு சமமானது இத்தீர்ப்பு என்றார். கல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் உரிமை, தூர்தர்ஷனுக்கு மறுக்கப்பட்டு தனியார் தொலைகாட்சிக்கு தந்த கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து தூர்தர்ஷன் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் மேற்குறிப்பிட்ட தீர்ப்பை வழங்கியது. ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்கில நாளேடு ‘தமிழக பெரியாரியல்வாதிகள் தீர்ப்புக்கு வரவேற்பு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் “தி.க. கட்டுப்பாட்டிலுள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பெரியார் நூல்களை வெளியிடுவதை தனக்கே உரிமை கோருவதற்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக பெரியாரியலாளர்கள் வரவேற்றுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
“மகிழ்ச்சியாக நாம் கொண்டாட வேண்டும். பெரியார், இப்போது சுதந்தரமாக நடமாட முடியும். சிலரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த பெரியார், அதிலிருந்து விடுதலைப் பெற்று விட்டனர்” என்று பெரியாரிய சிந்தனையாளரும் எழுத்தாளருமான வ.கீதா கூறினார். “பெரியார் கருத்துகள் மேலும் மக்களிடையே சென்றடைய இத்தீர்ப்பு உதவும்” என்றார் அவர்.
