Monday, June 1, 2009

முகாம்களை சுற்றி மின்சாரம் பாய்ச்சிய முள்வேலிவடக்கு - கிழக்கில் நடக்கும் ராணுவ ஆட்சி

ராணுவப் பிடியில் யாழ்ப்பாணம் - மட்டக் களப்பில் - தமிழர்கள் சந்திக்கும் துயரங்கள்

‘ஆனந்த விகடன்’ (மே 27) வெளியிட்டுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:


போரை முடித்துவிட்டதாக அறிவித்திருக்கிற அரசாங்கம், அந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதை உலகம் உற்றுக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது.

கொழும்பில் ஆறு லட்சம் தமிழர்கள் இருக் கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே எண்ணிக்கை யிலான மக்கள் இருப்பார்கள். கிழக்கு மாகாணத்தில் நான்கு லட்சம் பேரும், போர் முனையின் கொடுமையைக் கடந்த ஒராண்டாக அனுபவித்த வடக்கு மாகாணத்தில் இரண்டரை லட்சம் பேரும் இருக்கிறார்கள். சிங்களர்களின் பண்டிகை, இலங்கை சுதந்திர தினம், தேர்தல் வெற்றிகளின்போது கொழும்புத் தமிழர்களின் நிம்மதி மொத்தமாகப் பறிபோய்விடும். வெள்ளை வேன்களில் கடத்தப் பட்டும், காவல்துறையால் அச்சுறுத்தப்பட்டும் வாழும் மக்கள் அவர்கள். தமிழன் என்பதற்கான அடையாளமான பொட்டு வைக்காமல் வாழப் பழகிவிட்டார்கள் அங்கு. யாழ்ப்பாணம், கடந்த 14 ஆண்டுகளாக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட பகுதியாகத்தான் இருக்கிறது. அங்கு உறவினர்கள் யாரும் வந்து பார்க்க முடியாது. இவர்களும் வெளியூர் போக முடியாது. எங்கு வேலைக்குப் போனாலும், மாலை ஆறு மணிக்கு முன்னதாக வீட்டுக்குள் போய் அடங்கிவிட வேண்டும் என்ற அடக்குமுறை தொடர்கிறது.


கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் இடங்களில் சிங்களவர்கள் வலுக்கட்டாயமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இடஒதுக்கீட்டின்படி, சுகாதாரப் பணியாளர் வேலைக்கு 100 பேர் எடுத்தால், ஐந்து தமிழர்களுக்குத்தான் அங்கு வேலை கிடைக்கும். அந்த அளவுக்கு சிங்களக் குடியேற்றம் அதிகமாகிவிட்டது. புலிகளிடம் இருந்து கைப் பற்றியதும் ‘கிழக்கின் உதயம்’ என்று ஒரு திட்டத்தை மகிந்தா அறிவித்தார். பள்ளிக் கூடம், தொழிற்சாலை, மருத்துவமனை ஆகியவை கட்டித் தரப்படும் என்றார். எதுவும் நடக்கவில்லை. அங்கு நடத்தப் பட்ட தேர்தலில், பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். ‘என் மாகாணத்தின் வளர்ச்சிக்குச் சொன்ன படி பணத்தை ஒதுக்கவில்லை’ என்று அவர் புகார் சொன்னார். உடனே சிங்கள அதிகாரிகளால் மிரட்டப்பட்டு, இப்போது அமைதியாக இருக் கிறார். வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றியதும் ‘வடக்கில் வசந்தம்’ என்ற திட்டம் கொண்டு வரப் படும் என்று மகிந்தா அறிவித்துள்ளார். கிளி நொச்சியைப் பிடித்ததும் தமிழர்களுக்கான தீர்வு அறிவிக்கப்படும் என்று சொன்னார். ஆனால், ஐந்து மாதங்கள் ஆகியும் அப்படி எதுவும் அறிவிக்கப் படவில்லை.


‘தமிழர்கள் கொல்லப்படுகிறார்களே?’ என்று டெல்லி பத்திரிகையாளர்கள் மாறி மாறிக் கேட்டபோது கோபமான மகிந்தா ராஜபக்சே, “என் நாட்டு மக்களைப் பற்றி என்னைவிட உங்களுக்கு அதிகமான அக்கறை இருக்குமா?” என்று கேட்டார். அந்த அக்கறையை ராஜபக்சே காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதலில் அவர் கவனிக்க வேண்டியது வன்னி பகுதியில் உள்ள முகாம்களை போரின் பெருவாய் தின்று தீர்த்த மக்கள் போக, இன்றும் லட்சக்கணக்கான தமிழ்மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது சிங்கள அரசு. மாற்றுடுப்புகள் சிலவற்றுடன் தலைச் சுமையாக ஒரு பையைச் சுமந்தபடி உயிர்ப் பிச்சை கேட்டு வரும் மக்களை வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியின் அடர் காட்டுக்குள் அமைந்திருக்கும் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டு செல்கிறார்கள்.


சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான இந்த முகாமில், அரசின் கணக்குப் படி 1 லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இதுவரை 2 லட்சத்துக்கும் மேலானவர்கள் வந்திருப்பதாகச் சொல்கிறது. ஆனால், அந்த முகாம்களில் குடியிருப்பு என்று எதுவும் இல்லை. செஞ்சிலுவை சங்கம் வழங்கிய தற்காலிகக் கூடாரங்கள் மட்டுமே எங்கும் நிறைந்திருக்கின்றன. சின்னஞ்சிறிய கூடாரம் ஒவ்வொன்றிலும் மூன்று குடும்பங்கள் நெருக்கியடித்து வசிக்கின்றன.


முகாம் அமைக்கப்பட்டு மாதக் கணக்காகிவிட்ட நிலையில், இதுவரை லாரிகள் மூலமாகவே குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. அது குடிக்க மட்டுமே! குளிக்கவும் அன்றாடத் தேவை களுக்கும் தண்ணீர் கிடையாது. அவர்கள் அனைவரும் குளித்து வாரக் கணக்கில், மாதக் கணக்கில் ஆகின்றன. இப்போதுதான் முகாமில் கிணறு தோண்டும் பணி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு தடவை லாரிகள் மூலம் ஏதோ உணவு விநியோகிக்கிறார்கள். பசியால், பட்டினியால் வாடித் துடிக்கும் அம்மக்கள் அந்த உணவை வாங்க லாரி களின் முன்னால் கையேந்தி முண்டியடிக்கின்றனர். கூட்டம் அதிகமாகும் நாட்களில் நாய்களுக்கு பிஸ்கட் வீசுவது போல மக்களை நோக்கி உணவுப் பொட்டலங்கள் தூக்கி வீசப்படுகின்றன. மக்கள் அதை ஓடி ஓடிப் பொறுக்கிக் கொள்ள வேண்டும். அந்த உணவையும் பெற வாய்ப்பற்ற வயது முதிர்ந்த பெரியவர்கள் மரணத்தைச் சந்திக்கின்றனர். மே 1 முதல் மே 11 வரைக்கும் மட்டும் பூந்தோட்டம் முகாமில் 61 முதியவர்கள் பட்டினியால் செத்துப் போயிருக்கிறார்கள்.


முகாமுக்கு வந்த சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இப்போது வவுனியா முகாமைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டு, அதில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருப்பதாகச் சொல்லப் படுகிறது.


தப்பிக்க நினைத்தால் மரணமே பரிசு.


“இப்போது எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. அடித்தா லும், சுட்டாலும், சிதைத்தாலும், கற்பழித்தாலும், என்ன சித்ரவதை செய்தாலும் எங்களால் வாய் திறந்து பேச முடியாது. துப்பாக்கிகளின் கண் காணிப்பில் சோறு உண்ணவும், உடுப்பு மாற்றவும் நிர்பந்திக்கப்படுகிறோம். சின்ன பாதுகாப்புக்கூட இல்லாமல் ஒரு திறந்தவெளி சித்ரவதைக் கூடத்தில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். இலங்கை அரசாங்கம் எங்களைப் போர்க் கைதிகளாகவே பாவிக்கிறது. எங்களைச் சிரிக்கச் சொல்லி புகைப்படம் எடுத்து, நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பிரச்சாரம் செய்கிறது. அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு எங்களை நிச்சயம் இந்த முகாமைவிட்டு அனுப்ப மாட்டார்கள். வெளியில் வேலைக்குப் போகக்கூட அனுமதிக்க மாட்டார்கள். அரசாங்கம் கொடுக்கும் சோற்றைத் தின்றுகொண்டு, அவர்கள் கொடுக்கும் தண்ணீரைக் குடித்துக் கொண்டு, வெறும் பிணங்களாக, அடிமைகளாக வாழ்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.


இனி வரும் நாட்கள் எங்களுக்கு இன்னும் மிக மோசமானதாக இருக்கும். கேட்க நாதியற்ற எங்களை, இலங்கை அரசாங்கம் என்னவும் செய்யும். கடும் சித்ரவதைகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும். அதையும் தாண்டி, எங்களின் பூர்வீகப் பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தினாலும் அந்த வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எங்களின் குறைந்தபட்சப் பாதுகாப்பு அரணாக இருந்த புலிகளும் இல்லாத நிலையில், இனி நாங்கள் யாரை நம்பி வாழ முடியும்? உலகத்து நாடுகளே... தயவு செய்து எங்களை இலங்கையில் இருந்து மீட்டுச் செல்லுங்கள்.


இந்த தேசத்தை சிங்களனே வைத்துக் கொள்ளட்டும். அவர்களே ஆளட்டும். எங்களை விடுவியுங்கள். வேறு ஏதோ ஒரு நாடு... ஏதோ ஒரு வேலை... இலங்கை மட்டும் வேண்டாம். அரசியல் தஞ்சம் கேட்கிறோம், உயிர் தஞ்சம் கேட்கிறோம். தயவு செய்து செவிமடுங்கள்... எங்களை மீட்டுச் செல்லுங்கள்” - வவுனியா முகாமில் அடைக்கப்பட்டு இருக்கும் ஒரு பெண், அங்கு பணிபுரியும் சேவை நிறுவன ஊழியரின் உதவியுடன் நம்மிடம் பேசிய வார்த்தைகள் இவை.


இன்று பிச்சைக்காரர்களைவிடக் கேவலமான நிலையில், மேலாடை இல்லாமல், உடம்பு வற்றி கையேந்தி நிற்க வைக்கப்பட்டு இருக்கும் ஈழத் தமிழர்கள் அத்தனை பேரும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்திலும் இப்போது எண்ணிப் பார்த்தாலும்கூட, 50க்கு மேல் பிச்சைக்காரர்கள் இருக்க மாட்டார்கள் என்பதே யதார்த்தம். தமிழகம் போல ஈழத் தமிழர்களிடம் இத்தனைப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. 90 சதவிகிதம் பேர் மத்திய தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வறுமையையும், பட்டினியையும் கண்டறியாதவர்கள். இந்தக் கொடிய போர் அவர்களைப் பிச்சைக்காரர்கள் போலக் கையேந்த வைத்திருக்கிறது.


உச்சகட்ட சித்ரவதைக் கூடமாக இருக்கும் இந்த கதிர்காமர் இடைத்தங்கல் முகாமைத்தான் ‘நலன்புரி மையங்கள்’ என்றும், ‘உலகின் முன்மாதிரி நிவாரணக் கிராமம்’ என்றும் வர்ணிக்கிறது இலங்கை அரசு. ‘உலகின் மிகப் பெரிய பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கை’ என இதைப் பிரசாரம் செய்கிறது. இம் மக்களை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக ஸ்ரீரவிசங்கர் மீது கோபப் பட்டார் கோத்தபய ராஜபக்சே. கொழும்பிலும் இதே போன்ற நிலைமைதான்.


கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). “எங்கள் பல்கலைக் கழக வளாகம் எங்கும் தமிழர்கள் பிணமாகக் கிடக்கும் காட்சிகள் புகைப்படங்களாக மாட்டி வைக்கப்பட்டுள்ளன. ‘இதே நிலைமைதான் நாளைக்கு உங்களுக்கும்’ என்று அந்தப் புகைப் படங்களைக் காட்டி சிங்கள மாணவர்கள் எங்களை எச்சரிக்கின்றனர். நடந்து செல்லும்போது மாடிக் கட்டடத்தில் இருந்து எச்சில் துப்புகின்றனர். எங்களால் எந்தச் சிறு வார்த்தையும் பேச முடிய வில்லை.


சிங்களம் கற்றுக் கொண்டு சிங்களனாக மாறுவது ஒன்றுதான் இங்கு உயிர் தரித்திருப்பதற்கான ஒரே வழி!” என்று தொலைபேசியில் கதறுகிறார்.


“கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டவை 56 ஆயிரம் வீடுகள். இப்படி தமிழர் வாழும் 10 மாவட்டங்களிலும் புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டு புனரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதில் தொடங்கி, உயிரோடு இருக்கும் அப்பாவி மக்களைக் கொண்டு போய் அந்த வீடுகளில் குடியமர்த்தி, நிம்மதியான தேசத்தில் தான் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை விதைப்பதில் முடிய வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வேலைகள் தொடங்கப்பட வேண்டும். யாழ்ப் பாணத்து எமர்ஜென்சி விலக்கப்பட வேண்டும். கொழும்புத் தமிழர்கள், தங்கள் தொழிலைத் தொடர உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர் அமைப்புகள் சொல்ல ஆரம்பித்துள்ளன.

No comments: