இலங்கை அரசின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட வில்லை. மாறாக சிங்களர்களுக்கு தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக்குகிறது என்று, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். சென்னையில் கடந்த 26 ஆம் தேதி ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு என்ற தலைப்பிலும், 28 ஆம் தேதி தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் இது குறித்து அவர் ஆற்றிய உரை:
ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது சிறீலங்கா அரசு பேசி வருகிறது. மாபெரும் மனித இனப் படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போவதாக அவ்வப்போது கூறி வருகிறார். இனப்படுகொலைக்கு தூபமிட்டு உதவிகளை வழங்கி, உலக அரங்கில் அவமானப்பட்டுக் கிடக்கும் பார்ப்பனிய இந்திய ஆட்சியும் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என்று பேசி வருகிறது. இவர்கள் எல்லோருமே பார்ப்பன இந்து ஏடு உட்பட இப்போது அரசியல் தீர்வுக்காக ஒரு திட்டத்தை முன் வைத்துப் பேசி வருகிறார்கள். அரசியல் சட்டத்தில் - 1988 ஆம் ஆண்டு ஜெய வர்த்தனா கொண்டு வந்த 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தினாலே தமிழர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடும் என்று பேசி வருகிறார்கள். ஆனால், 13வது சட்டத் திருத்தத்தில் என்ன உரிமைகள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக் கூறவோ, விவாதிக்கவோ, இவர்கள் தயாராக இல்லை. உலகத்தின் அரசியல்களை எல்லாம் கட்டுரைகளாக வெளியிடும் சிங்களத்தின் அதிகாரபூர்வ ஏடாக செயல்படும் ‘இந்து’ ஏடும், 13வது சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது என்பதை விளக்கிட முன்வரவில்லை. பார்ப்பனப் பிடியில் சிக்கியுள்ள ஆங்கில ஊடகங்கள் எல்லாமுமே ஈழத் தமிழர் போராட்டங்களின் நியாயங்களை விவாதப் படுத்தவே இல்லை. திட்டமிட்டு, ஒரு சார்பாக இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊது குழல்களாகவே வெட்கமின்றி செயல்பட்டன.
1988 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இலங்கையின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போம். தோழர் களே! தமிழர்களை சிங்களப் பேரினவாதத்துக்கு அடிமைப்பட்டிருப்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதுதான் இந்த 13வது திருத்தம்.
இந்த சட்டத் திருத்தத்தின்படி தமிழர் பகுதியில் மாகாண கவுன்சில்களையும், அமைச்சர்களையும் நியமித்துக் கொள்ளலாம். ஆனால், அமைச்சர் களுக்கு அதிகாரங்கள் ஏதும் இல்லை. இலங்கை குடியரசுத் தலைவரால் மகாண கவுன்சிலுக்கு நேரடியாக நியமனம் செய்யப்படும் - ஆளுநருக்கு தான் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கள குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு உறுதுணையாக இருந்து அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் அமைச்சர் களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘உரிமை’. மாகாண கவுன்சில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நிர்வாகம் தடைபட்டால், மாகாண கவுன்சிலின் உரிமைகளை, இலங்கை நாடாளுமன்றம் முழுமையாக தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவந்துவிடலாம். எனவே அப்படி இலங்கை குடியரசுத் தலைவர் மாகாண கவுன்சிலை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும்போது அதை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை கிடை யாது. மாநில ஆளுநருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கி, அவருக்கு உதவியாக செயல் பட வேண்டும் என்பதன் அர்த்தம் - ஆளுநருக்கு, சேவகர்களாக அவர்கள் செயல்படவேண்டும் என்பதுதான். நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பொது ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரங்களும் ஆளுநருக்குத்தான் உண்டு; அமைச்சரவைக்கு அல்ல. மாகாண ஆளுநராக நியமிக்கப்படுபவர் நிதி மற்றும் பொது நிர்வாக அமைச்சருக்குரிய அதிகாரங்களோடு செயல்படு வார். அவரது ஆணைப்படி அமைச்சரவை செயல் படவேண்டும். அவர்கள் கூறும் சட்டங்களை இயற்ற வேண்டும்.
அதே போல் மாநில காவல்துறையைக் கட்டுப் படுத்தும் உரிமை - அமைச்சரவைக்கு இல்லை. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மாகாண காவல் ஆணையம் ஒன்றின் கட்டுப்பாட்டிலே தான் காவல்துறை செயல்படும். இந்த மூன்று உறுப் பினர்களில் தலைமை அதிகாரியை நியமிப்பவர் இலங்கையின் குடியரசுத் தலைவர். மாநில முதல்வரால் நியமிக்கப்படும் ஒரு பிரதிநிதியும் இதில் இருப்பார். ஆனால், காவல்துறையினருக்கு பயிற்சித் தரும் அதிகாரம் மாகாண கவுன்சிலுக்கு கிடையாது. இலங்கையின் மத்திய அரசு தான் பயிற்சிகளை அளிக்கும் மாகாணத்தின் பொது ஒழுங்குக்கு பொறுப்பு - காவல்துறை தான். மாகாண அமைச்சர்கள் இதில் தலையிட முடியாது. இதிலும் ஒரு அதிகாரி மீது தேசப் பாதகாப்புக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கவோ, விசாரணை நடத்தவோ, தடுப்புக் காவலலில் கைது செய்யவோ, காவல்துறை ஆணையத்துக்கும் உரிமை கிடையாது. இலங்கை யின் மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள தேசிய காவல்துறைப் பிரிவுக்குத்தான இந்த உரிமை உண்டு. இலங்கையில் இப்போதும் அமுலிலுள்ள பயங்கர வாத தடுப்புச் சட்டம் கொடூரமான பிரிவுகளைக் கொண்டது. பிரேதப் பரிசோதனைகூட நடத்தாமல் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை எரித்து விடலாம் என்கிறது இந்தச் சட்டம். சர்வதேச நீதிமன்றமே இந்தச் சட்டத்தின் கொடூரமான பிரிவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. நாகரிகம் உள்ள எந்த சமூகமும் தனது சட்டப் புத்தகத்தில் இது போன்ற சட்டங்கள் இடம் பெறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று சர்வதேச நீதிமன்றம் கூறியது. இலங்கை அரசுக்கு இதனால் என்ன மானம் கெட்டுப் போய்விடப் போகிறது? மானமற்ற கொடூரமான அரசு தானே? இந்த சட்டத்தை தமிழர் பகுதியில் அமுல்படுத்தும் உரிமையை இலங்கை அரசு தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறது.
இது மட்டுமல்ல, தமிழர்களின் நிலம் தொடர்பான உரிமையும், மாகாண கவுன்சில்களுக்கு கிடையாது. இது தொடர்பான முழு உரிமையையும் இலங்கை அரசே தன் வசம் வைத்திருக்கிறது. இலங்கை அரசியல் சட்டத்தின் 33(டி) பிரிவின் கீழ் தமிழர் பகுதியின் நிலம் கொண்டு வரப்பட்டுவிட்டது. இந்தப் பிரிவு இலங்கை முழுமைக்குமான நிலத்தில் ஒரு பகுதியை வழங்குவதற்கோ, விற்பதற்கோ முழு உரிமையையும் இலங்கை குடியரசுத் தலைவருக்கே வழங்குகிறது. நிலம் மட்டுமல்ல, அசையா சொத்து களுக்கும் இது பொருந்தும். மாகாண கவுன்சிலுக் கான அதிகாரத்தின் கீழ் - ‘நிலம் - அது தொடர்பான தீர்வுகள்’ இடம் பெற்றிருந்தாலும் - வழங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்கான உரிமைகளை சிங்கள மத்திய அரசே எடுத்துக் கொண்டுவிட்டது.
இலங்கையின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு அன்றைய அதிபர் ஜெயவர்த்தனா சார்பில் வாதாடிய எச்.டபுள்யூ ஜெயவர்த்தனா வெளிப்படையாகவே கூறினார்.
“இந்த சட்டத்திருத்தத்தின்படி அரசுக்கான நிலங்கள் தொடர்பான அதிகாரம் - மாகாண கவுன்சில்களுக்கு கிடையாது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், மாகாண கவுன்சில்களுக்கு, அரசுக்குரிய நிலங்களைக் கையாளும் வழிகளைத் திறந்து விட முடியாது.”
(“Under the Land Policy as envisaged in the Amendment, no state land will be vested in a provincial council; in other words no giving away of state land to the provinces....” - Srinlanka Sun, Oct.1987)
தமிழர்களின் மாகாண கவுன்சிலுக்கு தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு தமிழர்களின் மண் மீது உரிமை கிடையாது. அந்த உரிமையை சிங்கள மத்திய அரசுக்கே வழங்குகிறது. இந்த 13வது சட்டத்திருத்தம், சட்டரீதியாகவே தமிழர் மண்ணை பறித்துக் கொள்கிறது இந்த சட்டத்திருத்தம்.
தமிழ் மண்ணின் நிலத்தை மற்றவர்களுக்கு வழங்குவதற்கான உரிமையை இலங்கை அரசு சட்டப்பூர்வமாக தனது உரிமையாக்கிக் கொண்டு விட்டதால் தமிழர் பகுதிகளில் சிங்களர்களின் குடியேற்றம் சட்டப்படி நடக்க கதவு திறந்து விடப்பட்டுள்ளது. இப்போது நடந்து வரும் சிங்களக் குடியேற்றத்துக்கு சட்ட வடிவம் தந்துவிட்டார்கள். அதே போல் ஏற்கனவே நாம் கூறியவாறு காவல் துறை மீதான கட்டுப்பாட்டு உரிமையும், பொது ஒழுங்கை பாதுகாக்கும் உரிமையும், அமைச் சரவைக்கு கிடையாது. அது மாநில ஆளுநரிடம் போய்விட்டது.
அது மட்டுமல்ல, மாகாண கவுன்சிலுக்கு வரி விதிப்பு அதிகாரமும் கிடையாது. மாகாண ஆளுநர் பரிந்துரைத்த வரி விதிப்புகளுக்கு மட்டுமே, கவுன்சில் சட்டம் இயற்ற முடியும்.
அதேபோல், ஆண்டுதோறும் நிதி நிலை அறிக்கை தயாரிக்கும் உரிமையும், கவுன்சிலுக்கு வழங்கப்படவில்லை. மாகாண நிதி ஆதாரங்கள் தொடர்பான அனைத்து உரிமைகளும், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கே உண்டு. ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையை அவர்தான் தயாரித்து சமர்ப்பிப்பார். கவுன்சில்களுக்காக மத்திய அரசு ஒதுங்கும் நிதியிலிருந்து - செலவு செய்யக் கூடிய நிதிக்கு மாகாண கவுன்சிலிடமிருந்து அனுமதி பெறவும் தேவை இல்லை. கவுன்சிலில் வைத்து விவாதிக்கவும் அவசியமில்லை. அப்படி கவுன்சி லிடம் வாக்கெடுப்பு நடத்திடும் உரிமை சில செலவினங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அவை என்ன தெரியுமா? மாகாண ஆளுநருக்கான ஊதியம்; மத்திய அரசு கடனாக வழங்கும் தொகைக்கான வட்டி; இது தவிர, நாடாளுமன்றம் சட்டப்படி அறிவிக்கக்கூடிய வேறு செலவினங்கள். அதாவது, ஆளுநரின் பரிந்துரை இல்லாத எந்த மான்ய கோரிக்கையையும் கவுன்சில் முன் வைக்க முடியாது.
இலங்கையின் குடியரசுத் தலைவர் ஏதாவது, ஒரு மாகாணத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக கருதினால் ஒரு பிரகடனத்தை வெளியிட்டு நிதிநிலையை ஒழுங்குப்படுத்தக்கூடிய ஒழுங்குமுறை விதிகளை மாகா ணஆளுநருக்கு அறிவிப்பார். ஆக, மாகாண கவுன்சிலின் நிதி தொடர்பான அதிகாரங் கள் முழுவதும் ஆளுநரிடமும், குடியரசுத் தலைவரி டமுமே தங்கியுள்ளன.
இவைகூட நிலையானது அல்ல. இந்த 13வது அரசியல் சட்டத்திருத்தத்தில் இலங்கை நாடாளு மன்றம் எந்த மாற்றங்களையும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு கொண்டு வந்து மாற்றிக் கொள்ள முடியும். பொதுவாக அரசிய லமைப்பு சட்டத் திருத்தங்களுக்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிபந்தனை கூட இதற்குக் கிடையாது. இலங்கை நாடாளு மன்றத்தில் ஒரு வாக்கு அதிகம் பெற்றுகூட இந்தத் திருத்தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இந்த 13வது சட்டத் திருத்தத்திலேயே இலங்கை நாடாளுமன்றம் மெஜாரிட்டி ஆதரவுடன் திருத்தங்களைக் கொண்டு வந்துவிடலாம். ஆக - 13வது சட்டத்திருத்தம் என்பது தமிழர்களுக்கு உரிமை வழங்கும் சட்டத் திருத்தம் அல்ல. சிங்களர்கள் - தமிழர்கள் மீது நடத்தும் அரசியல் விளையாட்டு, இந்த ‘சட்டத்திருத்தம்’ என்ற நாடகத்தின் காட்சிகள் எப்போதும் எந்த வடிவிலும் மாற்றங்களை எடுத்துக் கொண்டிருக்கும்.
1983 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் 6வது திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அது இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘குரலை’ நெரிக்கும் திருத்தம். இதன்படி தமிழர்களுக்கு தனித்தாயக உரிமை வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்றத் துக்குள்ளேயோ அல்லது வெளியேவோ பேசினால், அவர்கள் பதவி பறிக்கப் பட்டுவிடும். சர்வதேச நீதிமன்றத்தால் இந்த சட்டத்திருத்தம் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. இப்போது 13வது திருத்தத்தின்படி மாகாண கவுன்சில் உறுப்பினர்களும், அமைச்சர்களும் இந்த 6வது சட்டத்தின் கீழ் தான் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்க வேண்டும்.
1987 ஆம் ஆண்டு உருவான ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம்கூட - தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு மாகாணப் பகுதிகளை ‘தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழும் பிரதேசம்’ (hயஎந நெநn யசநயள டிக hளைவடிசiஉயட hயbவையவiடிn) என்பதை அங்கீகரித்தது. பிறகு - அந்த அங்கீகாரத்தையே கூடுதலாக ஒரு விளக்கத்தை இணைத்து பலவீனப்படுத்திவிட்டார்கள். ‘தமிழர்கள் வரலாற்றுப் பகுதி’ என்பதோடு - கூடுதல் விளக்கமாக “நீண்டகாலமாக தமிழர்களும் இந்த எல்லைப் பகுதியில் பிற இனக்குழுக்களோடு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர்” என்ற பிரிவை இணைத்துக் கொண்டு விட்டார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் சிங்களர்களைப்போல் ‘இன வாதம்’ பேசியவர்கள் அல்ல. இனத்துக்கான உரிமையைத்தான் கேட்டார்கள். 1985 இல் அனைத்து தமிழ்ப் போராளி குழுக்களும் பங்கேற்ற இலங்கை அரசு பிரதிநிதிகளுடன் இந்தியாவின் ஏற்பாட்டில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தமிழர்கள் ஒருமித்து முன்வைத்த கோரிக்கையில் நான்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
1. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களை ஒரு தேசமாகவோ, தேசிய இனமாகவோ அங்கீகரிக்க வேண்டும்.
2. அவர்களுக்கு பாரம்பர்ய பிரதேசம் இருப்பதை அங்கிகரிக்க வேண்டும்.
3. அவர்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.
4. இலங்கைத் தீவை தங்களது தேசமாகக் கருதுவோர் தமிழர் குரலுக்கு குடி மக்களுக்கான உரிமைகளையும், அவர்களுக்கான அடிப்படை உரிமை களையும் அங்கீகரிக்க வேண்டும்.
இந்த நான்கு அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு,இலங்கை அரசு முன் வைக்கும் எந்தத் தீர்வுத் திட்டத்தையும் பரிசீலிக்கத் தயார் என்றுதான் தமிழர்களின் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முன் வந்தனர். அப்படி நிபந்தனை வைத்த குழுக்கள்தான் - இப்போது அனைத்து உரிமைகளையும் உதறிவிட்டு, இலங்கைக்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்து, அதன் அமைச்சரவையிலும் இடம் பிடித்துக் கொண்டு தமிழினப் படுகொலைக்கு துணை நின்று இன்று இராணுவத்துக்கு ஆள்காட்டி வேலை செய்யும் துரோகத்திலும், மான வெட்கமின்றி இறங்கியுள்ளனர். இந்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது. மக்கள் மன்றத்தில் இவர்கள் அவமானப்பட்டு நிற்கிறார்கள். இவர்களை இந்திய உளவு நிறுவனங்களும், பார்ப்பன ஊடகங்களும் தலை மீது தூக்கி வைத்துக் கூத்தாடுகின்றன. நாம் எதற்காக, இதைக் குறிப்பிடுகிறோம் என்றால், தமிழர்கள் ஒருபோதும் சிங்களர் வாழும் தேசப் பகுதிக்கு உரிமை கொண்டாடியது இல்லை. ஒட்டு மொத்த இலங்கையையும் தமிழர்கள் ஆண்ட வரலாறுகள் உண்டு என்றாலும்கூட, அதன் பிறகு உருவாக்கிக் கொண்ட சிங்களர்களின் தனி தேசத்தை, தமிழர்கள் அங்கீகரிக்க மறுக்கவில்லை. தமிழ் ஈழத்துக்குப் போராடிய போராளிகள், விடுதலைப்புலிகள் சிங்களப் பிரதேசத்தின் மீது போர் தொடுக்கவும் இல்லை. இ°ரேல் பால°தீனத்தை ஆக்கிரமித்ததுபோல் ஒரு காலத்திலும், அவர்கள் சிங்களப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கவும் இல்லை.
மாறாக - தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பை அடக்குமுறையை எதிர்த்துத்தான் போராடினார்கள். தமிழர்கள் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கும் அதே நேரத்தில் சிங்களர்கள் தமிழர்களின் தேசியத்தை அங்கீகரிக்கவே தயாராக இல்லை என்பதே உண்மை. சிறீலங்கா தேசியத்தை முன் வைத்து தமிழர்களின் தனித்த தேசியத்தை அங்கீகரிக்க மறுத்தார்கள். அந்தப் பார்வையோடு தங்களின் அரசியல் சட்டத்தையும் உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். இலங்கை அரசின் சட்டம் ஒற்றையாட்சியையே முன் வைக்கிறது.
இரு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்பதை அங்கீகரிக்க மறுக் கிறது. இந்த ‘ஒற்றை ஆட்சி’ என்ற சட்டத்துக்குள் சிங்களர் பேரினவாதத்துக்கு தமிழர்கள் அடிபணிந்து வாழ்வதை சட்டபூர்வமாக்கும் ஒரு முயற்சிதான் 13வது சட்டத்திருத்தம் என்பதைத் தவிர, இது, தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்கிடும் திருத்தமல்ல. எவருடனும் இதை நாம் விவாதிக்கத் தயார். உரிமைகளை மறுத்துவிட்டு, உரிமைகளற்ற நிர்வாகங்களை மட்டுமே பகிர்ந்தளிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை ஊடகங்கள் விவாதத்துக்கு உட்படுத்தவில்லை. ஆனால், ஏதோ ‘13வது சட்டத் திருத்தம்’ என்ற ‘அலாவுதீன் அற்புத விளக்கை’ இலங்கை தமிழர் களுக்கு வழங்க தயாராக காத்துக் கொண்டிருப்பது போலவும், விடுதலைப் புலிகள் கண்மூடித்தனமாக ராணுவ நடவடிக்கைகளிலே ஈடுபட்டு தோல்வியைத் தழுவியது போலவும் திட்டமிட்ட பிரச்சாரங்கள் - இந்திய உளவுத்துறையிலும் பார்ப்பனிய ஊடகங் களாலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதை தமிழர்கள் உணர வேண்டும்.
(அடுத்த கட்டுரையில் நாடு கடந்த தமிழீழப் பிரகடனம் பற்றிய விளக்கம்)
No comments:
Post a Comment