காட்டு வேட்டையின் கொடுங்கரங்கள் கடந்த மார்ச் மாதம் சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்று கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன. தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவமும், சட்டிஸ்கர் மாநில போலீசும் இணைந்து ஐந்து நாட்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்; பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்; முன்னூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்; மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யச் சென்ற சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட சமூக சேவகர்களையும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த செயல்வீரர்களையும்கூட அரசுப் படைகள் தாக்கி விரட்டியடித்து, பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எந்தவிதமான நிவாரண உதவியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து செயல்பட்டன.
சட்டிஸ்கர் மாநில அரசு மாவோயிஸ்டுகளையும், பழங்குடியின மக்களையும் வேட்டையாடுவதற்காகவே சல்வாஜுடும் என்ற குண்டர்படையை நடத்தி வந்தது. இந்தப் படையினரின் கொலைவெறியாட்டமும் மனித உரிமை மீறல்களும் அம்பலமானதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இப்படையைக் கலைக்குமாறு சட்டிஸ்கர் அரசிற்கு உத்தரவிட்டது. இதன்படி, தற்போது சல்வாஜுடும் கலைக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், கோயா கமாண்டோஸ் என்ற பெயரில் மற்றொரு அரசு கூலிப்படையை உருவாக்கி, அதில் சல்வாஜுடுமில் இருந்த கூலிப்படையினரை இணைத்துக் கொண்டிருக்கிறது. பழங்குடியின மக்களைக் கொண்ட படையைப் போல இதனைக் காட்டுவதற்காகவே, கோயா என்ற பழங்குடியின சமூகத்தின் பெயரை இக்கூலிப்படைக்கு வைத்து ஊரை ஏய்த்து வருகிறது, சட்டிஸ்கர் மாநில அரசு.
இவ்வாறு அமைக்கப்பட்ட 200 கோயா கமாண்டோக்களையும், மத்திய ரிசர்வ் போலீசின் கோப்ரா படைப் பிரிவின் 150 சிப்பாய்களையும் கொண்ட கூட்டுப் படையைக் கொண்டு, மொர்பள்ளி, திம்மாபுரம், தர்மேத்லா ஆகிய மூன்று ’மாவோயிஸ்டு ஆதரவு’ கிராமங்களின் மீது ஏவி தாக்கத் திட்டமிட்டது, சட்டிஸ்கர் மாநில அரசு. அதன்படி, இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலின் முதல் இலக்காக மொர்பள்ளி அமைந்தது.
கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி அதிகாலை வேளையில் மொர்பள்ளியைச் சுற்றி வளைத்த படையினர் வானத்தை நோக்கிச் சுட்டவாறு முன்னேறினர். அரசுப் படைகள் தமது கிராமத்தைச் சுற்றி வளைத்துத் தாக்கப் போவதை உணர்ந்துகொண்ட கிராம மக்கள் காட்டுக்குள் ஓடிச்சென்று தப்பித்துக் கொள்ள முயன்றனர். ஆனால், அனைவராலும் அவ்வாறு ஓடி ஒளிய முடியவில்லை. அச்சமயத்தில் புளியமரத்தில் ஏறிப் பழங்களை உலுக்கிக் கொண்டிருந்த மாதவி சுல்லாவால் வேகமாக இறங்கி ஓட முடியவில்லை.
அவரைச் சுட்டுத் தள்ள முயன்ற படையினரிடம் அவரது மனைவி, “சுட வேண்டாம்” எனக் கெஞ்சியதையும் கேளாமல், அவர்கள் தமது கொலைவெறி அடங்கும் வரை சுல்லாவைக் குறிவைத்துச் சுட்டுக் கொண்டே இருந்தனர். துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்பட்ட சுல்லா மரத்திலேயே பிணமானார். படைவீரர்கள் மொர்பள்ளியை விட்டு வெளியேறும் வரை சுல்லாவின் பிணம் மரத்திலேயே தொங்கிக் கொண்டிருந்தது.
அடுத்ததாக அப்படை, அயிம்லா காகி என்ற தாயைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கொண்டது. அவரது மகள்கள் கண்ணெதிரேயே அயிம்லா காகி பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, அச்சிப்பாய்கள் அவர் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயையும் அபகரித்துக் கொண்டனர்.
மேலும், 37 வீடுகளைத் தீக்கிரையாக்கிவிட்டு, அன்று மதியம் மொர்பள்ளியிலிருந்து திரும்பிச் சென்ற அப்படையினர், தமது வழியில் எதிர்ப்பட்ட மாதவி கங்கா, அவரது மகன் பீமா மற்றும் மகள் ஹரே ஆகியோரை பிடித்துக் கொண்டு போய், மொர்பள்ளிக்கு அருகிலுள்ள சிந்தால்னர் போலீசு நிலையத்தில் சட்டவிரோதமாகச் சிறைவைத்தனர். அக்கொட்டடியிலேயே ஹரேவை விடியவிடியச் சித்திரவதை செய்த சிப்பாய்கள், அவரைப் பாலியல் வல்லுறவு தாக்குதலுக்கும் ஆளாக்கினர். மாதவியும், பீமாவும் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாகக் கூறப்பட்டு, அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர். மொர்பள்ளியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு சிந்தால்னர் போலீசு நிலையத்தை முற்றுகையிட்ட பிறகே மாதவி குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.
மொர்பள்ளி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதத் தொழிற்சாலையொன்றை நடத்திவந்ததாகக் கூறி இத்தாக்குதலை நடத்தியிருக்கும் அரசு, அக்கிராமத்தில் ஆயுதத் தொழிற்சாலை இருந்ததற்கான சுவட்டைக்கூடக் காட்டவில்லை. மொர்பள்ளியை மாவோயிஸ்டுகளின் கோட்டையைப் போலச் சித்தரித்தது அரசு. ஆனால், அக்கிராமத்தில் இருப்பதோ மாவோயிஸ்டுப் போராளிகளுக்காக மக்கள் எழுப்பியிருந்த 15 அடி நினைவுத்தூண் மட்டும்தான்.
மொர்பள்ளி கிராமத்தையடுத்து, மார்ச் 13 அன்று கோயா கமாண்டோக்கள் மட்டும் தனியாகச் சென்று திம்மாபுரம் என்ற கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். திம்மாபுரம் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தபொழுதே, பர்சே பீமா, மனு யாதவ் என்ற இரு கிராமவாசிகளைச் சிறைபிடித்துக் கொண்டது இக்கூலிப்படை. கோயா படையின் வருகையைத் தெரிந்துகொண்ட அக்கிராம மக்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர்.
வெறிச்சோடிக் கிடந்த திம்மாபுரம் கிராமத்திற்குள் நுழைந்த அப்படை, கிராம மக்கள் தமது வீடுகளில் விட்டுச் சென்றிருந்த கோழிகளையும் ஆடுகளையும் வெட்டித் தின்றதோடு, கிராமவாசிகள் திரும்பும் வரைக் காத்திருக்க முடிவு செய்து அங்கேயே இரவு தங்கியது. மறுநாள் அதிகாலையில் திம்மாபுரத்திலிருந்த கோயாக்களை மாவோயிஸ்டுகள் தாக்கினர். மதியம் வரை நீண்ட இந்தச் சண்டையில் மூன்று கோயா கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர்; ஒன்பதுபேர் காயமடைந்தனர். மதியத்திற்குப் பிறகு மாவோயிஸ்டுகள் பின்வாங்கித் திரும்பிவிட அன்று இரவும் கோயாக்கள் அங்கேயே தங்கியிருந்து மீதமிருந்த கோழிகளையும், ஆடுகளையும் வெட்டித் தின்றனர்.
மூன்றாம் நாள் கோயா படையினர் திம்மாபுரத்தைவிட்டு வெளியேறியபோது, ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகளும் தானியக் கிடங்குகளும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அப்படை, தான் சிறைபிடித்து வைத்திருந்த இருவரில் பர்சே பீமாவைக் @காடரியால் பிளந்து கொன்றுவிட்டுச் சென்றது. அவர்கள் திரும்பிச் சென்ற பின்னர் பீமாவின் மனைவி வந்து பார்க்கும் போது, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, நெஞ்சில் பாய்ந்த @காடரியுடன் பீமா இரத்த வெள்ளத்தில் முழங்காலிட்டபடி இறந்து கிடந்தார். மூன்று நாட்கள் நடந்த இந்தப் படையெடுப்பில் வெறும் கையோடு திரும்ப விரும்பாத கோயா படைக்கு, ஒரேயொரு ஒரு மாவோயிஸ்டின் உடலாவது தேவைப்பட்டது. கோயா படையனரால் சிறைபிடிக்கப்பட்ட மனு யாதவ் சிந்தால்னர் காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு, மாவோயிஸ்டு என முத்திரை குத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தர்மேத்லா கிராமம் மார்ச் 16ஆம் தேதி கோயா படையினரால் தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் அக்கிராமத்திலிருந்த 200க்கும் அதிகமான வீடுகளும் தானியக் கிடங்குகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அக்கூலிப் படையால் பிடித்துச் செல்லப்பட்ட அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாதவி ஹண்டா, மாதவி அயிடா ஆகிய இருவரும் எங்கிருக்கிறார்கள், எப்படியிருக்கிறார்கள் என்பது இன்றுவரை மர்மமாக உள்ளது. அவர்கள் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கக்கூடும் எனக் கிராமவாசிகள் கருதுகின்றனர்.
தர்மேத்லா கிராமத்தின் மீதான தாக்குதலின் போது படையினரிடம் சிக்கிய மாதவி ஹிட்மே தனது ஒருபக்கப் பார்வையையே இழந்துவிட்டார். அரசுப் படைகள் தமது கிராமத்தைத் தாக்கத் தொடங்கியதை அடுத்து, ஹிட்மே தனது நகைகள், பணம் அனைத்தையும் கட்டியெடுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடினார். அப்பொழுது தன்னை வழிமறித்த நான்கு சிப்பாய்கள் தாக்கியதில் மயங்கிச் சரிந்துவிட்டதாகக் கூறும் ஹிட்மே, நினைவு திரும்பி கண்விழித்துப் பார்த்தபோது, உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லாமல் நிர்வாணமாக்கப்பட்டுக் கிடந்ததாகவும் கூறுகிறார். அவரது நகை மற்றும் பணத்தை அபகரித்துக் கொண்ட படையினர், அவரை மிருகத்தனமாகவும் தாக்கியுள்ளனர். இதில் அவரது முகத்தின் ஒரு பகுதி சிதைந்து, இடது கண்ணின் பார்வைத் திறனே போய்விட்டது.
ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து ஊடகங்களில் எந்தச் செய்தியும் வந்து விடாமல் தடுப்பதில் அரசு மிகுந்த முனைப்பு காட்டியது. பத்திரிகையாளர்கள் உடனடியாக அந்த கிராமங்களுக்குச் சென்றுவிடாமல் போலீசாரால் தடுக்கப்பட்டனர். தாக்குதல் நடந்து பல நாட்களுக்குப் பிறகே பத்திரிக்கையாளர்களால் அங்கே செல்ல முடிந்தது. அதுவும் அரசுப் படையினருக்குத் தெரியாமல் காட்டு வழியில் இரகசியமாகச் செல்ல வேண்டியிருந்தது. சட்டிஸ்கர் மாநில எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் உண்மை நிலையை அறிய முயன்றபோது, அவர்களையும் அக்கிராமத்திற்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். ஒரு ஈ, காக்கைகூட காட்டுக்குள் செல்வதை அனுமதித்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார், இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய சிறப்பு போலீசு கண்காணிப்பாளரான கல்லூரி.
மார்ச் மாத இறுதி வாரத்தில் இத்தாக்குதல் குறித்த உண்மை நிலவரங்கள் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, தாக்குதலில் பாதிக்கப்பட்டு, வீடு, பணம், தானியம் என அனைத்தையும் இழந்து, காட்டில் நிராதரவாக நிற்கும் கிராம மக்களுக்கு உதவுவதற்காகத் தனது ஆதரவாளர்களுடனும், நிவாரணப் பொருட்களுடனும் அக்கிராமங்களுக்குச் செல்ல முயன்றார், சுவாமி அக்னிவேஷ். இவர், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மைய அரசால் நியமிக்கப்பட்ட தூதுவர். சில மாதங்களுக்கு முன்னர் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட போலீசாரை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர்.
அதுமட்டுமன்றி, காட்டு வேட்டையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்குத் தொடர்ந்து உதவி வருபவர். மார்ச் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க இவர் சட்டிஸ்கர் போகும் முன்பே, அம்மாநில போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் இது குறித்துப் பேசி, காட்டுக்குள் செல்ல அனுமதியும் வாங்கியிருந்தார்.
ஆனால், மார்ச் 26ஆம் தேதி அதிகாலை இவரும் இவரது குழுவினரும் தொர்னாபால் என்ற நகரத்தில் நூற்றுக்கணக்கான சல்வாஜுடும் குண்டர்களால் வழிமறிக்கப்பட்டனர். இவர்களைத் திரும்பிப் போகும்படி முழக்கமிட்ட அக்கூலிப் படை, கும்பல் சுவாமி அக்னிவேஷ் சென்ற வண்டியை சூழ்ந்துகொண்டு தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிய குழுவினர், முதலமைச்சர் இராமன் சிங்கைத் தொடர்புகொண்டு நடந்தவற்றை விளக்கினர். முதல்வர் இராமன் சிங், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதமளித்ததோடு, நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று கொடுக்கும்படியும் கூறியிருக்கிறார்.
முதல்வரின் இந்த உத்திரவாதத்தையடுத்து, நண்பகலில் இக்குழுவினர் மீண்டும் தொர்னாபால் வந்த போது, அங்கே மூவாயிரத்திற்கும் அதிகமான சல்வா ஜுடும் குண்டர்கள், துப்பாக்கி, கத்தி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களோடு, இக்குழுவினரைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர். அக்கூலிப்படை கும்பல் இம்முறை அக்னிவேஷை, அவரது தலைப்பாகையைப் பிடித்து இழுத்துச் சாலையில் தள்ளி, கற்களைக் கொண்டு தாக்கியது. இதனைத் தடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் மீதும், குழுவிலிருந்த மற்றவர்கள் மீதும் கற்களை வீசித் தாக்கியது, அச்சமூக விரோதக் கும்பல். “ஒருபுறம் தங்களைக் கிராமத்திற்குச் செல்ல அனுமதித்துவிட்டு, மறுபுறம் இவ்வாறு குண்டர்களை ஏவிவிட்டுத் தங்களைத் தாக்கியதை தற்செயலானதாகப் பார்க்க முடியாது. சிறப்புப் போலீஸ் எஸ்.பி. கல்லூரியால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது” என அக்னிவேஷ் சட்டிஸ்கர் அரசின் மீது குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.
மேலும் அவர் இது குறித்துக் கூறும் போது, “துப்பாக்கியேந்திய ஒருவர் என்னைக் கொல்ல விரும்புவதாகக் கூறக் கேட்டது மிகவும் பயங்கரமான தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயத்தைத்தான் பழங்குடியினரிடமும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களிடமும் அரசு உருவாக்க முனைகிறது. பழங்குடியினருக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவந்த பினாயக் சென்னைப் பொய்யாகக் குற்றம்சாட்டிச் சிறையில் தள்ளினார்கள். பழங்குடியினரைக் காணச் சென்ற மேதா பட்கரை கல் வீசித் தாக்கினார்கள். இன்றோ, மனிதாபிமான உதவிகளைச் செய்யச் சென்ற அக்னிவேஷையும் துரத்தித்துரத்தித் தாக்கியுள்ளனர்.
அவர்களுக்கு வேண்டியதெல்லாம் சட்டிஸ்கரில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை எவ்விதமான எதிர்ப்பும் இன்றி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் இத்தனை தாக்குதல்களும் அழித்தொழிப்புகளும். இத்தாக்குதல்களை,“நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் தவிர்க்கவியலாத நடவடிக்கைகள்” எனத் தாராளமயத் தாசர்கள் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நன்றி -புதிய ஜனநாயகம்
No comments:
Post a Comment