Friday, May 11, 2012

‘மனுதர்ம’ப் பிடிக்குள்!!!

மனுதர்மம்’ – ‘பிராமணர்களுக்குஉரிய தொழிலாக, ‘வேதம் கற்றல், வேதம் கற்பித்தல், யாகம் நடத்துதல், யாகம் நடத்த உதவுதல் பணக்காரர்களாக இருந்தால் பிச்சை கொடுத்தல், ஏழையாக இருந்தால் பிச்சை எடுத்தல்என்று கூறுகிறது.

(அத் 1 – ஸ்லோகம் 88)

ஷத்திரியனுக்கு ‘மக்களைக் காத்தல், பிச்சைப் போடுதல், வேள்வி செய்வது, வேதம் கற்பது, புலன் இன்பத்தில் பற்றுக் கொள்ளாது இருத்தல்’ என்று கூறுகிறது. (அத் 1, ஸ்லோகம் 89)‘ஆடு மாடு மேய்த்தல், கொடையளித்தல், யாகம் செய்தல், வாணிபம் செய்தல், வட்டிக்கு கடன் தருதல், நிலத்தைப் பயிர் செய்தல்’ ஆகியவை வைசியனுக் குரிய தொழிலாகக் கூறுகிறது.

(அத் 1 – ஸ்லோகம் 90)

‘சூத்திரனு’க்கு உரிய தொழிலாக ‘மனுதர்மம்’ கூறுவது …..?

“மேலாண்மை படைத்த இறைவன் சூத்திரருக்கு விதித்துள்ள ஒரே கடமை, மேல் வர்ணத்தாருக்கு, அவர் தம் மதிப்பு மரியாதை குன்றாமல் உழைத்தல்”.

(அத் 1. ஸ்லோகம் 91)

‘பிராமணன்’, ‘சத்திரியன், வைசியனுக்கு மனு விதித்த தொழில்களை எல்லாம் மீறி விட்டார்கள். ‘சூத்திரர்களுக்கு’ விதிக்கப்பட்ட பல தொழில்களும் மீறப்பட்டு விட்டன. ஆனாலும், இன்னும் சூத்திரர் களுக்கும் கீழான அவர்ணஸ்தர்களாக்கப்பட்ட பஞ்சமர்கள் மீது திணிக்கப்பட்ட சில இழி தொழில்கள் அப்படியே மாறாமல் தொடருகிறது. அதில் ஒன்றுதான் மனித மலத்தை மனிதரே எடுக்கும் இழிவு, ஒரு குறிப்பிட்ட தீண்டப்படாத சாதியின் தொழிலாகவே இது இன்றும் நீடிக்கிறது என்றால் ‘மனுதர்மம்’ உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதுதானே அதன் அர்த்தம்?

எதிர்வரும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா ஒன்று வரப் போகிறாராம்! மனித மலத்தை மனிதனே எடுக்கும் இழிதொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மற்றொரு சட்டம் இது. இதுகூட அரசு ஏதோ, இந்த இழிவை ஒழிக்க வேண்டும் என்ற கவலையில் கொண்டு வந்துவிட வில்லை. 1993 ஆம் ஆண்டு மனிதக் கழிவை மனிதன் எடுப்பதற்கும், உலர் கழிப்பறைக்கும் தடை போடும் சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. ‘மனுதர்ம’ ஆட்சியில் மனுதர்ம ஒழிப்புக்கு ஒரு சட்டம் வந்தால், அதை எப்படி, உளப்பூர்வமாக நிறைவேற்றுவார்கள்? இப்படி ஒரு சட்டம் வந்த பிறகும், பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மலம் அள்ளும் இழி தொழிலிலிருந்து விடுவிக்கப்படவே இல்லை. கடந்த ஆண்டு இந்த மக்களுக்கு மறு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்துக்காக அரசு ஒரு புள்ளி விவரம் எடுத்தது. அதன்படிஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் கிராமங்களில் 1,18,474 பேர் இன்னும் கைகளால் மலம் எடுத்து வருவதாக அரசு அறிவித்தது. அடிப்படை சுகாதார வசதிகள் நிறைவேற்றப்படாத கிராமங்களில் இன்னும் உலர் கழிப்பறைகள் ஒழிக்கப்படவில்லை.

கிராம பஞ்சாயத்துகள் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கும், சாக்கடைக் குழிக்குள் இறங்கி அடைப்புகளை நீக்கவும் இந்த தாழ்த்தப்பட்ட பழங்குடி சாதியினரையே பயன்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியில் இப்படி சாக்கடைக் குழிக்குள் இறங்கி, நச்சு வாயுவால் மரணத்தைத் தழுவும் செய்தியும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

இறப்பது மனுதர்மப்படி ‘கீழ் சாதி’ மனிதன் உயிர் என்பதால், ‘மனுதர்ம’ சிந்தனையில் ஊறிப் போன சமூகம். இந்த மரணங்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. 1993 ஆம் ஆண்டு சட்டம் கிடப்பில் போடப்பட்டுக் கிடப்பதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப் பட்டது. உயர்நீதிமன்றம் ஓர் அதிரடி ஆணையைப் பிறப்பித்தது. மலத்தை மனிதன் எடுப்பதை தடை செய்யும் சட்டம் உடனடியாக கடுமையாக திருத்தியமைக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் பிரதமர் போன்ற உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே நீதிமன்றத்துக்கு நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டியிருக்கும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதற்குப் பிறகு தான், டெல்லி ஆட்சி அசைந்து கொடுத்து, மழை காலக் கூட்டத் தொடரில் புதிய மசோதாவைக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகமும், மாநில அரசுகளுக்கு ஒரு அறிவுறுத்தலை வாங்கியது. மலம் அள்ளும் வேலையில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாலும் இதுவரை ஒரு வழக்குகூட அப்படிப் பதிவு செய்யப்படவே இல்லை.

பார்ப்பன உயர்சாதி ‘வர்ணத்தவர்கள்’ தங்கள் வாழ்க்கை வசதிகளுக்கு ‘மனுதர்மம்’ விதித்த கட்டளைகளை மீறிக் கொள்கிறார்கள். ஆனால், அடித்தட்டில் உழலும் மக்கள் மீது மனுதர்மச் சிந்தனையைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் இதற்கு துணைப் போகும் அவலம் நீடிக்கிறது. எனவேதான் பெரியார் திராவிடர் கழகம் அழைக்கிறது: “சாகாமல் உயிர்த் துடிப்போடு இயங்கும் மனுதர்மத்துக்குத் தடை போட வேண்டும்! நவம்பர் 26 இல் அந்த இழிவுக் குப்பைக்குத் தீ வைப்போம்”!

No comments: