Wednesday, May 6, 2009

இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு

இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா முழு ஆதரவு அளித்து வருகிறது என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை ராணுவ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:உலக அளவில் மனித உரிமைகளுக்கான காவலனாக தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ள சில மேலை நாடுகளிடம் இருந்து போர் நிறுத்தம், பொது மன்னிப்பு போன்ற வெட்கங்கெட்ட கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வரும் மூன்றாவது ஏழை உலக நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்றன.ஆனால், இலங்கையில் தீவிரவாதத்தை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதில் இந்தியா முழு ஆதரவு அளித்து வருகிறது. அதுபோல சீனா, பாகிஸ்தான், ரஷியா, ஈரான், லிபியா, ஜப்பான் போன்ற நாடுகளும் இலங்கை அரசை ஆதரிக்கின்றன. அந்த நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிக்கிறது.இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : ‘தினத்தந்தி’ 4.5.2009

இராயப்பேட்டையில் நடந்தது என்ன?

ஈழத் தமிழர் பிரச்சினையை பேசியதற்காக கழகத்தினர் மீது தாக்குதல்; பொய் வழக்கு
தயாநிதிமாறன் போட்டி யிடும் மத்திய சென்னை தொகுதி யில் ஈழத் தமிழர் இனப்படு கொலையை முன்னிறுத்திப் பேசிய பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை காவல்துறையும், தயாநிதி மாறன் ஆட்களும் இணைந்து தாக்கியதோடு கழகத் தோழர்கள் மீதே பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்.
இதுபற்றி பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

மத்திய சென்னை நாடாளு மன்ற தொகுதியில் பெரியார் திராவிடர் கழகம் ஈழத் தமிழர் பிரச்சினையை முன் வைத்து செய்து வரும் தேர்தல் பிரச் சாரத்தை தி.மு.க.வினர் காவல் துறையுடன் இணைந்து அடக்கு முறையால் முடக்கி வரு கிறார்கள். கடந்த 25 ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வேன் வழியாக பிரச்சாரம் செய்தபோது பாதி வழியில் நிறுத்தி ஈழத் தமிழர் பிரச்சினையை பேச அனுமதிக்க முடியாது என்று கூறி வேனை பறிமுதல் செய்ததோடு 5 பேர் மீது தேச துரோக வழக்கு தொடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மீண்டும் 02.05.09 அன்று கழகத்தினர் பிரச்சாரத்தை நடத்தியதால் தி.மு.க வினர் இரவு 10 மணி அளவில் காவல் துறையினருடன் வந்து ‘பெரியார் படிப்பகத்தை’ அடித்து நொறுக்கி அருகில் இருந்த பெரியார் சிலையையும் சேதப்படுத்தினர், தாக்குதலில் மூன்று பேர் படுகாயத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இரவு முழுவதும் வி.எம். சாலையில் பொது மக்கள் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல் துறை இழிவாக நடத்தியுள்ளது.
உண்மை குற்றவாளிகளை கைது செய்ததற்கு பதிலாக தாக்கு தலுக்கு உள்ளான பெரியார் திராவிடர் கழகத்தினர் மீதே தி.மு.க.வினரையும், காவல்துறை யினரையும், தி.மு.க. தேர்தல் அலுவலகத்தையும் தாக்கியதாக பொய் வழக்கு போட்டு மீண்டும் 5 பேரை கைது செய்து பிணை யில் வர இயலாத பிரிவுகளில் வழக்கு தொடுத்து சிறையில் அடைந்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் பெண்கள். கழக குடும் பத்தைச் சேர்ந்த சுதா, வயது 35, தமிழ்ச்செல்வி வயது 25 ஆகிய தமிழ்ச் செல்வியின் ஒரு வயது கை குழந்தையை உடன் கொண்டு செல்ல காவல் துறை அனுமதிக்க வில்லை.

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான எந்த பிரச்சாரமும் நடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு, பெரியார் தி.க.வினர்மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீதும் காவல்துறை தி.மு.க.வினர் ஆதரவோடு வன்முறையை கட்டவிழ்த்து உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் பெரியார் தி.க.வினரை கைது செய்து பெரியார் தி.க. வினரின் பணியை முடக்கிவிட காவல்துறை மேற்கொண்டு வருகிறது. கருத்துரிமைக்கு எதிரான இந்த ஒடுக்குமுறையை கண்டிக்க தமிழ் இன உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும் முன் வருமாறு கேட்டுக் கொள் கிறோம்.

Tuesday, May 5, 2009

பெரியார் சிலையை உடைத்த தயாநிதி ஆதரவாளர்கள்

பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தமிழ்ச் செல்வியை ஓர் ஆண் போலீஸ் ஏதோ கிரிமினலைப் போல் கரங்களைப் பிடித்து இழுத்து வருகிறார். பின்னால் பெண் போலீசார் அணி வகுத்து நிற்கிறார்கள். இந்த பெண்கள் செய்த குற்றம் என்ன?

இராயப்பேட்டை கழக அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலையை மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறனின் தி.மு.க. ஆதரவாளர்கள் உடைத்து சேதப்படுத்தியதை தட்டிக் கேட்டதுதான் இவர்கள் செய்த குற்றம். பெரியார் கரம் பிடித்து வளர்ந்ததாகக் கூறும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தான் பெரியார் சிலை உடைக்கப் படுகிறது. சிலையை உடைத்தது பார்ப்பனர்கள் அல்ல, மதவெறிச் சக்திகள் அல்ல, பெரியார் அண்ணா கொள்கை வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் கட்சி யினரே இதைச் செய்கிறார்கள்.
சிலைகளை சேதப்படுத்துவோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயும் என்றார் தமிழக காவல்துறை இயக்குனர். ஆனால், சிலையை உடைத்ததை தட்டிக் கேட்டவர்களுக்கு, அதுவும் பெண்களுக்கு இந்த ஆட்சியில் சிறை. பிணையில் வெளி வராத வழக்குகளில் கழகத்தைச் சார்ந்த 2 பெண்கள் சுதாவும், தமிழ்ச்செல்வியும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பெரியார் சிலையை உடைத்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அது மட்டுமல்ல, இரவில் படிப்பகத்துக்குள் நுழைந்து, அங்கே இருந்த பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் எழுதிய நூல்களையும் தூக்கிச் சென்று விட்டனர்.
கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் உட்பட அத்தனை நூல்களையும், தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆயிரம் விளக்கு உசேன் அன்பளிப்பாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.பெரியார் சிலை உடைப்பாளர்களாகவும், கலைஞர் கருணாநிதி எழுதிய நூல்களை அப்புறப்படுத்தக் கூடியவர்களாகவும் தி.மு.க.வினர். “பரிணாம வளர்ச்சி” பெற்று நிற்கிறார்கள்.
தி.மு.க. எங்கே போகிறது? காவல்துறையின் இந்த அத்துமீறல்களுக்கு எதிராக பேசும் கழகம் மனித உரிமை ஆணையத்திடம் புகார் தர இருப்பதோடு காவல்துறையினர்மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது.
நன்றி :பெரியார் முழக்கம்

கொளத்தூர் மணிக்கு உற்சாக வரவேற்பு

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மே 4 ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் மதுரை சிறையிலிருந்து 62 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு, விடுதலையான போது சிறை வாசலில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.



கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி கொளத்தூர் மணி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் திண்டுக்கல் கூட்டத்தில் ஆற்றிய உரைக்காக கைது செய்யப் பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்த பிறகு, திண்டுக்கல் காவல்துறை பதிவு செய்த வழக்கில் பிணை கிடைப்பது ஒரு வாரம் தாமதப்படுத்தப் பட்டது.



சிறைவாசலில் பட்டாசு வெடிக்கப்பட்டு, வாடிப்பட்டி மேளத்தின் முரசம் முழங்க, பெரியார் திராவிடர் கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை, மேட்டூர், சேலம், உடுமலை, பொள்ளாச்சி, கோவை, குடந்தை, திருப்பூர், காங்கேயம், தூத்துக் குடி பகுதிகளிலிருந்து தோழர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர்.



சிறைவாசலில் செய்தியாளர்களிடம் பேசிய கழகத் தலைவர் காங்கிரசு கட்சியை தமிழர்கள் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரவு திண்டுக்கல்லில் தங்கி, காலை மேட்டூர் நோக்கி பயணமானார். சேலத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. சேலத்தில் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்து விட்டு, மேட்டூர் நோக்கி சென்றார். வழி நெடுக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.






Saturday, May 2, 2009

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய ஆயுதமா? ராணுவ வாகனங்கள் மறிப்பு

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருவது தமிழர் களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கி யுள்ளது. இந்த நிலையில்,கோவை வழியாக 80 லாரிகளில் ஆயுதங்கள் கொச்சி வழியாக கொழும்புக்கு அனுப்பப் படுகிறது என்ற செய்தி கடந்த 2 ஆம் தேதி பரவியது. செய்தியறிந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், ம.தி.மு.க.வினர், தமிழின உணர்வாளர்கள், பொது மக்கள் திரண்டு வாகனங்களைத் தடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பெரம்பலூர் லட்சுமணன், கணபதி புதூர் பொன்சந்திரன், அவரது மனைவி தனலட்சுமி, மணியக்காரம்பாளையம் கிருஷ்ணசாமி, ஆவாரம்பாளையம் விக்னேஷ், சண்முக சுந்தரம், காளப்பட்டி அம்பேத்கர், ஜெயப் பிரகாஷ், ம.தி.மு.க.வை சேர்ந்த பீளமேடு புதூர் முருகேசன், பீளமேடு சந்திரசேகரன், நீலம்பூர் பிரபாகரன், ராசிபாளையம் ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடுதல், பணி செய்ய விடாது தடுத்தல், பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல் ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. 13 பேரும் பல்லடம் நீதிபதி முன் நேர் நிறுத்தப் பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

கோவை, சேலம், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் கழகத்தினரை போலீசார் வலை வீசி தேடி வரு கிறார்கள். கோவை - நீலாம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது. 84 லாரிகளில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றப்பட்டு சாலை யில் வரிசையாக அணி வகுத்துச் சென்றதைக் கண்ட தமிழர்கள் கொதிப் படைந்தனர். ஒவ்வொரு நாளும் ஈழத்தில் இந்தியாவின் ஆயுதங்களைப் பயன்படுத்தி தமிழர்களை கொத்து கொத்தாக பிணமாக்கி வருகிறது சிங்கள ராணுவம். கொதித்துப் போய் நிற்கும் தமிழர்கள் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாது - தமிழகத்திலிருந்து கொச்சி வழியாக - ராணுவத்தினர், ஆயுதங்களைக் கொண்டு போவது வழக்கமாக இருந்து வருகிறது.

கோவை அருகே உள்ள மதுக்கரை ராணுவ முகாமைச் சார்ந்த ராணுவத்தினர், அய்தரா பாத்தில் பயிற்சியை முடித்து கொண்டு, கோவை திரும்பியதாக ராணுவத் தரப்பில் கூறப்பட்டாலும், அந்த லாரிகளில் வெடி குண்டுகளும், ஏவுகணைகளும் இருந்தன. அவைகளால் ஆத்திர மடைந்த பொது மக்கள் வெளியே தூக்கி வீசி வாகனங்களின் சக்கரங் களை சேதப்படுத்தியதாக செய்திகள் கூறுகின்றன. செய்தியறிந்த கழகப் பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் விரைந்தார்.

தோழர்களும் பொது மக்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், ஆயுதங்களை வழங்கும் இந்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டு வாகனங்களை மறித்தனர். பின்னால் வந்து கொண்டிருந்த ராணுவ வீரர்கள் சூலூரில் லாரிகளை நிறுத்தி விட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து இரும்பு கம்பிகளால், எதிர் பட்ட எல்லோரையும் தாக்கினர். காவல்துறையினர், ராணுவத் தினரைத் தடுத்து, அப்பாவி மக்களை தாக்காதீர் என்று கேட்டும், ராணுவத்தினர் தாக்கு தலை நிறுத்தவில்லை.

இராணுவத்தினர் தாக்குதலில் சன் தொலைக்காட்சி செய்தியாளர் அவிநாசிலிங்கம் மண்டை உடைந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொய்ச் செய்திகளை ஒளிபரப்பி வரும் சன் தொலைக்காட்சி, தனது செய்தியாளர் ராணுவத்தால் தாக்கப்பட்டதைக்கூட ஒளிபரப்பவில்லை. ஈழத் தமிழர் மீதான இனப் படுகொலை தொடர்பான செய்திகளை முழுமையாக இருட்டடித்து, சிங்கள ராணுவத்தை மக்களின் கோபத்திலிருந்து பாதுகாத்து வரும் சன் தொலைக்காட்சி - இதிலும், இந்திய ராணுவத்துக்கு ஆதரவாகவே செய்திகளை ஒளிபரப்பியது.

செய்தியாளர் ராணுவத்தால் தாக்கப் பட்டதை எதிர்த்து கோவை பத்திரிகை யாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டச் செய்தியையும் சன் தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்து விட்டது. இந்த வழக்கு விசாரணையை உள்ளூர் காவல் துறையினர் மேற் கொள்ள வேண்டுமே தவிர ராணுவத் தினரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று பத்திரிகையாளர்கள் வற்புறுத்தினர்.இதற்கிடையே ஆயுதம் ஏந்தி வந்த இரண்டு ராணுவ லாரிகள் கொச்சி துறைமுகம் வந்து சேர்ந்துள்ளதாக கேரள ஏடுகள் செய்தி வெளியிட் டுள்ளன.
தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், ராணுவத்தினர் ஒருவரிடம் கேட்ட கேள்விக்கு, கொச்சி துறைமுகம் போவதாகக் கூறியிருப்பது - வீடியோ காட்சிகளாகப் பதிவாகியுள்ளது. மக்கள் தொலைக்காட்சி இதை ஒளிபரப்பியது.இராணுவத்துக்கு எதிராக தமிழர்கள் நடத்திய போராட்டம் தமிழகத்தில் பேரெழுச்சியை உருவாக்கியுள்ளது. உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் - தமிழகத்தில் உருவாகியுள்ள எழுச்சியைப் பாராட்டி வரவேற்கிறார்கள்.





Friday, May 1, 2009

கலைஞர் கருணாநிதியை அவமதித்த சோனியா

உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்பு மூன்று நாட்களாக சோனியாவிடம் தொடர்பு கொண்டு கலைஞர் கருணாநிதி பேச முயன்றிருக்கிறார் - ஆனால் பேச முடியவில்லை. (இதை முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ள கி.வீரமணி கலைஞரே தம்மிடம் கூறியதாக கூறியிருக்கிறார்) உண்ணாவிரதத்தை தொடங்கிய பிறகாவது சோனியா தமிழகத்தின் மூத்த தலைவர் என்று மதித்து பேசினாரா? - இல்லை! ஒரே வாரத்தில் இரண்டு முறை சோனியாவுக்கு கலைஞர் கருணாநிதி தந்தி கொடுத்ததாக ‘முரசொலி’ கூறுகிறது.
இரண்டு முறை தந்தி கொடுத்த பிறகும், சோனியா இப்பிரச்சினையில் மனமிறங்கி, முதலமைச்சரிடம் பேச வந்தாரா? - இல்லை! தமிழருக்கு எதிரான போரை நிறுத்துவதில் இரும்புச் சுவர்போல் வளையாது இருக்கும் சோனியா, தமிழகத்தின் முதல்வர் கலைஞர் கருணாநிதியையும் மதிக்கத் தயாராக இல்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் சோனியாவை எதிர்த்துப் பேசு வோரை காவல்துறை அடக்கியது. சோனியா கொடும்பாவியை எரித்து எதிர்ப்புக் காட்டியோரை - அடக்குமுறை சட்டங்களை ஏவி, தனது சோனியா பக்தியை வெளிப் படுத்தினார் கலைஞர் கருணாநிதி, நாட்டின் எந்த அரசுப் பதவியிலும் இல்லாத சோனியாவை, நாட்டின் அதிபராகவே கருதி செயல்பட்டார் கலைஞர் கருணாநிதி.
சொக்கத் தங்கம் என்றார்; ஈழத் தமிழர் பிரச்சினையில் தமது கருத்தும், சோனியாவின் கருத்தும் ஒன்று தான். ஒரு சிறு வேறுபாடுகூட கிடையாது என்று கூறி பூரித்தார். இந்த உணர்வுகளை சோனியா மதித்தாரா? தமிழ் நாட்டைச் சார்ந்த உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான், முதல்வரிடம் உறுதி தந்திருக்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங் கூட உறுதி கூறி, போராட்டத்தை முடிக்க, முன் வரவில்லை; சோனி யாவோ பேசவும் முயற்சிக்க வில்லை.
சோனியாவின் துரோகங் களை திரையிட்டு மறைத்துக் கொண்டு - அவரைக் காப்பாற்ற முயன்று - தனக்கும் அவப்பெயரை தேடிக் கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதிக்கு சோனியா தரும் மதிப்பு இது தானோ? தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்களே! இவ்வளவு அவமதிப்புகளையும் சுமந்து கொண்டு காங்கிரசுக்கு நீங்கள் வாக்களிக்கத்தான் போகிறீர்களா?

சார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம்

சர்வதேச சமூகம் உடனே தமிழீழ வீரர்களுக்கும், மக்களுக்கும் ஆதரவாக இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று ஒரு சீக்கிய எழுத்தாளர் www.worldsikhnews.com இணைய தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழன் காசில் தின்று கொழுக்கும் துரோகிகள், பத்திரிகைகள் இதை படிக்கட்டும். ஒரு சீக்கியருக்கு இருக்கும் உணர்வும் மனிதாபிமானமும் மானங்கெட்ட தமிழினத் துரோக தமிழ் ஊடகங்களுக்கும், (தினம...ம்) தமிழன் நடத்தும் ஆங்கில பத்திரிகைக்கும் (தி சந்து ) இல்லையே.


அன்புள்ள் சார்லஸ் அந்தோணிக்கு,
உங்களது வாழ்வுரிமை, அடையாளம் மற்றும் விடுதலைக்கான போராட்டத்துக்கு எனது ஆதரவை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.நீங்களும் உங்களது மக்களும் உயிர் வாழ எப்படிப்பட்ட போராட்டத்தில் தற்போது இருக்கிறீர்கள் என்பதை பஞ்சாபில் நடந்த போராட்டங்களை அருகில் இருந்து கவனித்தவன் என்ற முறையில் நான் நன்கறிவேன்.

ஊடகங்களில், உங்கள் தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பர், மற்றொரு நாள் எதிரி. சில நாட்கள் அவர் பாதுகாக்கப்பட்டவர். இன்று அவர் கைவிடப்பட்டவர். சிலருக்கு அவர் தீவிரவாதி. பலருக்கு அவர் ரட்சகர். அவர் எப்படிப்பட்டவர் என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும் என்று விடுவதே நல்லது.நான் போர்க் குணம் மிக்க இனத்தைச் சேர்ந்தவன். போராட்ட குணத்துக்கு பெயர் பெற்றவர்கள் சீக்கியர்கள். பஞ்சாபில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களது வாயைத் திறக்கவில்லை என்றாலும், அச்சமின்றி அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களின் துணிச்சல், உறுதி, போர்த் திறன் ஆகியவற்றை அங்குள்ள பலர் பாராட்டுகின்றனர். இதை நீங்கள் நம்பியே ஆக வேண்டும். சமீப காலமாக உங்கள் போராட்டம் சந்தித்து வரும் வீழ்ச்சி பற்றிய செய்தியைக் கேட்டு பெரும்பாலான சீக்கியர்கள் கவலை கொண்டுள்ளனர்.

போர் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற சில மணி நேரங்கள் மட்டுமே அளித்த நிலையில், உங்கள் மக்களும், வீரர்களும் இலங்கை ராணுவத்தின் விஷ வாயு குண்டு வீச்சுக்கும், ரசாயன குண்டு வீச்சுக்கும் ஆளாகியுள்ள நிலையில் உங்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.இலங்கையில் தமிழீழ மக்கள் படும் துன்பத்தால் மனம் நொந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். துன்பப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து மலைகளே அசைய வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. உங்கள் வலிகளையும் துன்பங்களையும் கண்டு கொள்ளாமல் மொத்த உலகமும் இயங்கி வருகிறது. அதற்கு 24 மணி நேர டி.வி. சேனல்களுக்கு நன்றி கூற வேண்டும்!.

தமிழீழ தாயகத்தை விட்டும், தமிழீழ வீரர்களை விட்டும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வெளியேறுவதைக் கண்டு எனது இதயம் அழுகிறது. இதை எழுதும் போது எனது உள் மன உணர்வுகளை வெளிப்படுத்த இது ஒரு வழி மட்டுமே என்ற குற்ற உணர்வே மிஞ்சுகிறது. இருந்தபோதிலும் ஒரு சீக்கியனாக என்னால் செய்ய முடிந்தது உங்களது போராட்டத்தில் உங்களுடன் சேர்ந்து கொள்வது மட்டுமே. எனது பிரார்த்தனையும், எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உண்டு.

உலகில் உள்ள மற்ற அமைப்புகள் போன்று தமிழீழத்திற்கும் வரலாற்று ஆவணங்கள் இருந்தபோதும், இலங்கையில் துன்பப்படும் பல்லாயிரம் மக்களின் துயரை, வலியைத் துடைக்க பன்னாட்டு சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா எப்படி சீக்கியர்கள், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்களின் போராட்டங்களை அழித்ததோ, அதே போல் இலங்கை அரசு உங்களது போராட்டத்தை பகல் நேரக் கொலை மற்றும் பேரழிவின் மூலம் நசுக்கி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் வீதிகளில் இறங்கி போராடி இருக்கும் பேச்சுகளைத் தொடங்க வைத்த புலம் பெயர் தமிழர்களின் போராட்டம் இதயத்தை வருடுவதாக உள்ளது. குறிப்பாக நார்வே தலைமையிடம் கூர்மையாக வாதாடிய புலம் பெயர் தமிழர்களால் இம்.ஆஸ்லோவில் எம் மலம் பிரதமரின் அலுவலகத்தை நார்வே வாழ் புலம் பெயர் தமிழர்கள் முற்றுகையிட்டு, அரசாங்கத்துடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது, சர்வதேச வளர்ச்சிக்கான நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைம், ‘என்னால் நார்வே தமிழர்களது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் என்னால் மாயவித்தை புரிய முடியாது’ என்றார். இதை செய்திகளில் நான் படித்தேன். நார்வே அரசின் என்ஆர்கே பத்திரிகை நிருபர்கள் இது குறித்து கேள்வி கேட்ட போது, ‘என்னால் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் மீண்டும் ஒருமுறை பேச இலங்கையில் போரை நிறுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்’ என்றார்.தமிழ் எழுத்தாளர் கே.பி.அறிவானந்தம் எரிக்கின் இந்த பதில் குறித்து அளித்த பதில்:‘மாய வித்தைகள் புரிய சோல்ஹைமால் முடியாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அவர் தவறுகள் செய்வதில் இருந்து தள்ளி நின்றிருக்கலாம். முடிந்தவற்றை செய்வது மட்டுமே ராஜதந்திரம் என்பதாக இருக்கலாம்.

ஆனால் முடியாததையும் நடத்திக் காட்டுவதுதான் விடுதலைப் போராட்டம்’. இந்த பதில் மிகச் சரியானது. ஒரு காவியம் போன்றது.துணிவுக்கும், மனித உரிமை போற்றுதலுக்கும் ஸ்காண்டிநேவிய நாடுகள் பெயர் பெற்றவை. அதனால் தான் சமாதான பேச்சுக்கு நார்வேயை உங்கள் தலைமை தேர்ந்தெடுத்திருக்கும்.‘முக்கியமான கருத்தை நார்வே உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டது. சமாதான பேச்சில் நடுநிலை வகித்ததால், புலிகள் ஆயுதங்களை கீழே போடுமாறு கோரிக்கை விடும் இணைத் தலைமை நாடுகளுடன் சேர்வதில் நியாயம் இல்லை. கொழும்பின் இனப்படுகொலை கரங்களுக்குள் வன்னி மக்களை செல்லுமாறு கூறுவது பெரும் கவலை அளிக்கிறது. அவர்களுடைய செயல்முறைத் தோல்விகளால், பன்னாட்டு அமைதித் தூதுவர் என்ற மதிப்பை நார்வே குறைத்துக் கொண்டுள்ளது.

சுதந்திரமாகவும், வல்லரசுகளின் புவிசார் அரசியல் குறிக்கோளில் இருந்து விலகியும், உலக மனித குலத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள விரும்பியும் வருவதற்கு நார்வேக்கு இன்னும் நேரம் உள்ளது’ என்று நார்வேயின் தலையில் ஆணி அடித்தது போல் அறிவானந்தம் கூறியிருக்கிறார்.தொடர்ந்து துன்பப்படும் தமிழீழ மக்களானவர்கள், இந்தியா மற்றும் உலக நாடுகளின் வெளிப்படையானதும், மவுனமானதுமான ஆதரவால் சிங்களப் பேரினவாத ராணுவத்திடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களின் சகோதரர்களின் அபயக் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 13 தமிழ் சகோதரிகள் உங்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்தியா முழுவதும் தேர்தல் களேபரத்தில் உள்ள நேரத்தில் அவர்களைப் பற்றி இந்த ஊடகங்கள் கண்டு கொள்கின்றனவா?தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பொய்யாகவும் ஏமாற்றும் விதமாகவும் குரல் கொடுக்கின்றனர்.

அவர்கள் நேர்மையாக உங்களை ஆதரிக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும்.தமிழ் தலைவர்களைப் போன்று இந்தியத் தலைவர்களும் உங்களுடனும் உங்களுடைய லட்சியத்துடனும் தங்கள் சாணக்கியத் தனத்தை காட்டி வருவதாக நான் கருதுகிறேன். இந்தியா உங்கள் நண்பனா, எதிரியா என உலகத்தால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது. அந்த வகையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. இலங்கை ராணுவத்துக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பதைத் தொடர்ந்து கொண்டே ஒன்றும் தெரியாதது போல் மென்மையாக நடந்து கொள்கிறது.

நான் பாதுகாப்பு ஆய்வாளர் கிடையாது. ஆனால், நார்வே தலைமையிலான அமைதிப் பேச்சு துவங்கியபோதே உங்கள் மக்களின் போராட்டத்துக்கு பெரிய அடி விழுந்து விட்டது. சீக்கியர்கள், காஷ்மீரிகள், நாகா, மிசோ மக்களின் போராட்டத்திலும் இந்தியா இந்த முறையையே கடைபிடித்தது. 9/11 சம்பவத்துக்குப் பிறகு உலகின் புவிசார் அரசியல் மாற்றமும் உங்கள் போராட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டது. இதுவும் கூட நார்வேயின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.கடந்த ஆண்டு இதே நேரம் கொசோவா என்ற புதிய நாடு பிறந்தது. அதற்கு ஓராண்டு முன்பு கிழக்குத் தைமூர் விடுதலை அடைந்தது. 2009-ல் தமிழீழம் விடுதலை பெறும் என்று நினைத்தேன்.

இந்த ஆண்டு அது நடைபெறாது போல் இருந்தாலும் எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.உங்களுடைய போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்று உலக அளவில் ஒரு தோற்றம் உள்ளது. கள நிலைமைகள் குறித்த உண்மைகள் தெளிவாகத் தெரியாத நிலையில் இருந்தாலும் உங்கள் போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. உங்கள் போராட்டம் தொடர வேண்டும். உங்கள் சுதந்திரக் கொடியை தொடர்ந்து நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும்.அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபய ராஜபட்ச, பச்சை அட்டைதாரர் பொன்சேகா ஆகியோரின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதில் முன்னாள் அமெரிக்க அரசு வழக்கறிஞர் புரூஸ் ஃபெய்ன் வெற்றி பெற்றுள்ளார் என்று நம்புகிறேன்.

நியூயார்க்கில் உள்ள இனப்படுகொலை தடுப்பு அமைப்பு உலகில் உள்ள 8 நாடுகளில் இனப்படுகொலை நடைபெறுகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் இலங்கையும் ஒன்று. உங்களது தாயகத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்பதை உலகிற்கு அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நாம் நம்புவோம்.ஒரு நாட்டின் மக்களை காப்பாற்றுவதில் யாருக்கு பொறுப்பு உள்ளது என்ற ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டதில் எழுப்ப மெக்ஸிகோ தூதர் கிளாட் ஹெலன் முயற்சி செய்தார்.தெற்காசியாவின் புவியியலையே மாற்றும் வல்லமை கொண்டவரின் மகன் சார்லஸ் அவர்களே, நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடர்வீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.நான் உங்களுக்கு கூறுவது இதுதான், கொசோவா விடுதலை அடைந்ததும் நான் கூறியதும் இதுதான்.

சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங் அவர்களின் வாக்குதான் அது.‘யாரும் உங்களுக்கு விடுதலையை தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள்; அதைப் பெற்றவர்கள், தங்களுடையை சொந்த முயற்சி, துணிவு, உறுதி, வலிமையாலேயே பெற்றார்கள்’ என்பது தான் அந்த வாசகம்.விரைவில் அல்லது காலம் தாழ்த்தியோ நீங்கள் அதை அடைவீர்கள்.இந்த தலைமுறையிலேயே நீங்களும் உங்கள் மக்களும் விடுதலையை அடைவீர்கள் என வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் தமிழ் மக்களுக்கு ஆசி வழங்கட்டும். அவர்களது துன்பத்தை நிறுத்தட்டும். இந்த உலகில் சுதந்திர மக்களாக அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.
உண்மையுள்ள,ஜக்மோகன் சிங்
sbigideas@gmail.com