Tuesday, May 5, 2009

பெரியார் சிலையை உடைத்த தயாநிதி ஆதரவாளர்கள்

பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தமிழ்ச் செல்வியை ஓர் ஆண் போலீஸ் ஏதோ கிரிமினலைப் போல் கரங்களைப் பிடித்து இழுத்து வருகிறார். பின்னால் பெண் போலீசார் அணி வகுத்து நிற்கிறார்கள். இந்த பெண்கள் செய்த குற்றம் என்ன?

இராயப்பேட்டை கழக அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலையை மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறனின் தி.மு.க. ஆதரவாளர்கள் உடைத்து சேதப்படுத்தியதை தட்டிக் கேட்டதுதான் இவர்கள் செய்த குற்றம். பெரியார் கரம் பிடித்து வளர்ந்ததாகக் கூறும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தான் பெரியார் சிலை உடைக்கப் படுகிறது. சிலையை உடைத்தது பார்ப்பனர்கள் அல்ல, மதவெறிச் சக்திகள் அல்ல, பெரியார் அண்ணா கொள்கை வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும் கட்சி யினரே இதைச் செய்கிறார்கள்.
சிலைகளை சேதப்படுத்துவோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயும் என்றார் தமிழக காவல்துறை இயக்குனர். ஆனால், சிலையை உடைத்ததை தட்டிக் கேட்டவர்களுக்கு, அதுவும் பெண்களுக்கு இந்த ஆட்சியில் சிறை. பிணையில் வெளி வராத வழக்குகளில் கழகத்தைச் சார்ந்த 2 பெண்கள் சுதாவும், தமிழ்ச்செல்வியும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பெரியார் சிலையை உடைத்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அது மட்டுமல்ல, இரவில் படிப்பகத்துக்குள் நுழைந்து, அங்கே இருந்த பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் எழுதிய நூல்களையும் தூக்கிச் சென்று விட்டனர்.
கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் உட்பட அத்தனை நூல்களையும், தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆயிரம் விளக்கு உசேன் அன்பளிப்பாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.பெரியார் சிலை உடைப்பாளர்களாகவும், கலைஞர் கருணாநிதி எழுதிய நூல்களை அப்புறப்படுத்தக் கூடியவர்களாகவும் தி.மு.க.வினர். “பரிணாம வளர்ச்சி” பெற்று நிற்கிறார்கள்.
தி.மு.க. எங்கே போகிறது? காவல்துறையின் இந்த அத்துமீறல்களுக்கு எதிராக பேசும் கழகம் மனித உரிமை ஆணையத்திடம் புகார் தர இருப்பதோடு காவல்துறையினர்மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது.
நன்றி :பெரியார் முழக்கம்

No comments: