இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது குறித்து இந்திய அதிகாரிகள் வலியுறுத்தவில்லை என்று இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும், அதிபர் ராஜபட்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச தெரிவித்தார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் 24 ஆம் தேதி இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். அதிபருடன் அவர்கள் பேச்சு நடத்தினர்.
அவருடன் நடத்திய பேச்சு குறித்து விவரம் எதுவும் அப்போது தெரிவிக்கப்படவில்லை. இந் நிலையில், ‘சண்டே அப்சர்வர்’ பத்திரிகைக்கு கோத்தபய ராஜபட்ச அளித்த பேட்டி ஞாயிற்றுக் கிழமை வெளியாகியுள்ளது. அதில் சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தியதாக கோத்தபய ராஜபட்சே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் நிர்பந்தம் காரணமாகவே இந்திய அரசு, இலங்கைக்கு நெருக்குதல் அளித்து வருவதாக செய்தி வெளியானது குறித்து கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் மீதான ராணுவ நட வடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் எவ்வித நெருக்குதலும் தரவில்லை. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவே அவர்கள் ஆலோசனை நடத்தினர். போரில் அப்பாவி தமிழர்கள் உயிரிழப்பது குறித்து இந்திய அரசு சார்பில் அவர்கள் அப்போது கவலை தெரிவித்தனர். மனிதாபிமான உதவிகளை இந்திய அரசு எப்படி வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.
போர் பகுதியிலிருந்து அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகள் இருவரும் அப்போது திருப்தி தெரிவித்தனர். மேலும் இந்தியா சார்பில் நிவாரண உதவியாக ரூ.200 கோடி அளிக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர் என்றார்.
தேர்தல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் தமிழக அரசு இலங்கைப் பிரச்சினையை எழுப்பி வருகிறது. அதனால் இந்திய அரசும் அதை கவனத்தில் எடுத்துக் கொண்டு அவ்வப்போது இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது. இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகளும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டே போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் அளிக்கின்றன.
புலம் பெயர்ந்த மக்கள் அளிக்கும் நிதியை அந்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றுக்கொள்கின்றன. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள் என்றார் கோத்தபய.
No comments:
Post a Comment