முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட தாக்குதலில் 1,112 க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் எறிகணைகள், ஆட்லறி எறிகணைகள், கனோன் ரக பீரங்கிகள் மற்றும் பல்குழல் ரொக்கட் லோஞ்சர் ஆகிய கனரக நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் தார்ப்பாள் கூடாரங்களிலும் உறக்கத்திலிருந்த பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்தும் உள்ளனர். பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுவதுடன், வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் சிதறிய நிலையில் காணப்படுவதாகவும்,சிறிலங்காபடையினரின் கண்மூடித்தனமான தொடர் தாக்குதல்கள் காரணமாக அவ்வுடலங்களை மீட்க முடியாதிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுவரை 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசகாரத் தாக்குதல்களினால் உயிரிழந்த உடலங்களை மீட்க முடியாத நிலை காணப்படுவதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 க்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு இன்று ஞாயிறு காலை 9.25 மணிவரை காயமடைந்த நிலையில் 112 சிறுவர்கள் அடங்கலாக 814 பேர் கொண்டு வரப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியட்சகர் வீரகத்தி சண்முகராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுவரை மருத்துவமனைக்கு 257 பேரின் இறந்த உடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் இதில் 67 பேர் சிறுவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேநேரம், சிறிலங்கா படையினரின் தாக்குதலில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment