Friday, May 6, 2011

இந்திய அரசின் போர்க்குற்றங்கள் !

காட்டு வேட்டையின் கொடுங்கரங்கள் கடந்த மார்ச் மாதம் சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்று கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன. தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவமும், சட்டிஸ்கர் மாநில போலீசும் இணைந்து ஐந்து நாட்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்; பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்; முன்னூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்; மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யச் சென்ற சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட சமூக சேவகர்களையும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த செயல்வீரர்களையும்கூட அரசுப் படைகள் தாக்கி விரட்டியடித்து, பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எந்தவிதமான நிவாரண உதவியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து செயல்பட்டன.

சட்டிஸ்கர் மாநில அரசு மாவோயிஸ்டுகளையும், பழங்குடியின மக்களையும் வேட்டையாடுவதற்காகவே சல்வாஜுடும் என்ற குண்டர்படையை நடத்தி வந்தது. இந்தப் படையினரின் கொலைவெறியாட்டமும் மனித உரிமை மீறல்களும் அம்பலமானதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இப்படையைக் கலைக்குமாறு சட்டிஸ்கர் அரசிற்கு உத்தரவிட்டது. இதன்படி, தற்போது சல்வாஜுடும் கலைக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், கோயா கமாண்டோஸ் என்ற பெயரில் மற்றொரு அரசு கூலிப்படையை உருவாக்கி, அதில் சல்வாஜுடுமில் இருந்த கூலிப்படையினரை இணைத்துக் கொண்டிருக்கிறது. பழங்குடியின மக்களைக் கொண்ட படையைப் போல இதனைக் காட்டுவதற்காகவே, கோயா என்ற பழங்குடியின சமூகத்தின் பெயரை இக்கூலிப்படைக்கு வைத்து ஊரை ஏய்த்து வருகிறது, சட்டிஸ்கர் மாநில அரசு.

இவ்வாறு அமைக்கப்பட்ட 200 கோயா கமாண்டோக்களையும், மத்திய ரிசர்வ் போலீசின் கோப்ரா படைப் பிரிவின் 150 சிப்பாய்களையும் கொண்ட கூட்டுப் படையைக் கொண்டு, மொர்பள்ளி, திம்மாபுரம், தர்மேத்லா ஆகிய மூன்று ’மாவோயிஸ்டு ஆதரவு’ கிராமங்களின் மீது ஏவி தாக்கத் திட்டமிட்டது, சட்டிஸ்கர் மாநில அரசு. அதன்படி, இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலின் முதல் இலக்காக மொர்பள்ளி அமைந்தது.

கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி அதிகாலை வேளையில் மொர்பள்ளியைச் சுற்றி வளைத்த படையினர் வானத்தை நோக்கிச் சுட்டவாறு முன்னேறினர். அரசுப் படைகள் தமது கிராமத்தைச் சுற்றி வளைத்துத் தாக்கப் போவதை உணர்ந்துகொண்ட கிராம மக்கள் காட்டுக்குள் ஓடிச்சென்று தப்பித்துக் கொள்ள முயன்றனர். ஆனால், அனைவராலும் அவ்வாறு ஓடி ஒளிய முடியவில்லை. அச்சமயத்தில் புளியமரத்தில் ஏறிப் பழங்களை உலுக்கிக் கொண்டிருந்த மாதவி சுல்லாவால் வேகமாக இறங்கி ஓட முடியவில்லை.

அவரைச் சுட்டுத் தள்ள முயன்ற படையினரிடம் அவரது மனைவி, “சுட வேண்டாம்” எனக் கெஞ்சியதையும் கேளாமல், அவர்கள் தமது கொலைவெறி அடங்கும் வரை சுல்லாவைக் குறிவைத்துச் சுட்டுக் கொண்டே இருந்தனர். துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்பட்ட சுல்லா மரத்திலேயே பிணமானார். படைவீரர்கள் மொர்பள்ளியை விட்டு வெளியேறும் வரை சுல்லாவின் பிணம் மரத்திலேயே தொங்கிக் கொண்டிருந்தது.

அடுத்ததாக அப்படை, அயிம்லா காகி என்ற தாயைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கொண்டது. அவரது மகள்கள் கண்ணெதிரேயே அயிம்லா காகி பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, அச்சிப்பாய்கள் அவர் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயையும் அபகரித்துக் கொண்டனர்.

மேலும், 37 வீடுகளைத் தீக்கிரையாக்கிவிட்டு, அன்று மதியம் மொர்பள்ளியிலிருந்து திரும்பிச் சென்ற அப்படையினர், தமது வழியில் எதிர்ப்பட்ட மாதவி கங்கா, அவரது மகன் பீமா மற்றும் மகள் ஹரே ஆகியோரை பிடித்துக் கொண்டு போய், மொர்பள்ளிக்கு அருகிலுள்ள சிந்தால்னர் போலீசு நிலையத்தில் சட்டவிரோதமாகச் சிறைவைத்தனர். அக்கொட்டடியிலேயே ஹரேவை விடியவிடியச் சித்திரவதை செய்த சிப்பாய்கள், அவரைப் பாலியல் வல்லுறவு தாக்குதலுக்கும் ஆளாக்கினர். மாதவியும், பீமாவும் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாகக் கூறப்பட்டு, அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர். மொர்பள்ளியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு சிந்தால்னர் போலீசு நிலையத்தை முற்றுகையிட்ட பிறகே மாதவி குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.

மொர்பள்ளி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதத் தொழிற்சாலையொன்றை நடத்திவந்ததாகக் கூறி இத்தாக்குதலை நடத்தியிருக்கும் அரசு, அக்கிராமத்தில் ஆயுதத் தொழிற்சாலை இருந்ததற்கான சுவட்டைக்கூடக் காட்டவில்லை. மொர்பள்ளியை மாவோயிஸ்டுகளின் கோட்டையைப் போலச் சித்தரித்தது அரசு. ஆனால், அக்கிராமத்தில் இருப்பதோ மாவோயிஸ்டுப் போராளிகளுக்காக மக்கள் எழுப்பியிருந்த 15 அடி நினைவுத்தூண் மட்டும்தான்.

மொர்பள்ளி கிராமத்தையடுத்து, மார்ச் 13 அன்று கோயா கமாண்டோக்கள் மட்டும் தனியாகச் சென்று திம்மாபுரம் என்ற கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். திம்மாபுரம் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தபொழுதே, பர்சே பீமா, மனு யாதவ் என்ற இரு கிராமவாசிகளைச் சிறைபிடித்துக் கொண்டது இக்கூலிப்படை. கோயா படையின் வருகையைத் தெரிந்துகொண்ட அக்கிராம மக்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர்.

வெறிச்சோடிக் கிடந்த திம்மாபுரம் கிராமத்திற்குள் நுழைந்த அப்படை, கிராம மக்கள் தமது வீடுகளில் விட்டுச் சென்றிருந்த கோழிகளையும் ஆடுகளையும் வெட்டித் தின்றதோடு, கிராமவாசிகள் திரும்பும் வரைக் காத்திருக்க முடிவு செய்து அங்கேயே இரவு தங்கியது. மறுநாள் அதிகாலையில் திம்மாபுரத்திலிருந்த கோயாக்களை மாவோயிஸ்டுகள் தாக்கினர். மதியம் வரை நீண்ட இந்தச் சண்டையில் மூன்று கோயா கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர்; ஒன்பதுபேர் காயமடைந்தனர். மதியத்திற்குப் பிறகு மாவோயிஸ்டுகள் பின்வாங்கித் திரும்பிவிட அன்று இரவும் கோயாக்கள் அங்கேயே தங்கியிருந்து மீதமிருந்த கோழிகளையும், ஆடுகளையும் வெட்டித் தின்றனர்.

மூன்றாம் நாள் கோயா படையினர் திம்மாபுரத்தைவிட்டு வெளியேறியபோது, ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகளும் தானியக் கிடங்குகளும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அப்படை, தான் சிறைபிடித்து வைத்திருந்த இருவரில் பர்சே பீமாவைக் @காடரியால் பிளந்து கொன்றுவிட்டுச் சென்றது. அவர்கள் திரும்பிச் சென்ற பின்னர் பீமாவின் மனைவி வந்து பார்க்கும் போது, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, நெஞ்சில் பாய்ந்த @காடரியுடன் பீமா இரத்த வெள்ளத்தில் முழங்காலிட்டபடி இறந்து கிடந்தார். மூன்று நாட்கள் நடந்த இந்தப் படையெடுப்பில் வெறும் கையோடு திரும்ப விரும்பாத கோயா படைக்கு, ஒரேயொரு ஒரு மாவோயிஸ்டின் உடலாவது தேவைப்பட்டது. கோயா படையனரால் சிறைபிடிக்கப்பட்ட மனு யாதவ் சிந்தால்னர் காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு, மாவோயிஸ்டு என முத்திரை குத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தர்மேத்லா கிராமம் மார்ச் 16ஆம் தேதி கோயா படையினரால் தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் அக்கிராமத்திலிருந்த 200க்கும் அதிகமான வீடுகளும் தானியக் கிடங்குகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அக்கூலிப் படையால் பிடித்துச் செல்லப்பட்ட அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாதவி ஹண்டா, மாதவி அயிடா ஆகிய இருவரும் எங்கிருக்கிறார்கள், எப்படியிருக்கிறார்கள் என்பது இன்றுவரை மர்மமாக உள்ளது. அவர்கள் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கக்கூடும் எனக் கிராமவாசிகள் கருதுகின்றனர்.

தர்மேத்லா கிராமத்தின் மீதான தாக்குதலின் போது படையினரிடம் சிக்கிய மாதவி ஹிட்மே தனது ஒருபக்கப் பார்வையையே இழந்துவிட்டார். அரசுப் படைகள் தமது கிராமத்தைத் தாக்கத் தொடங்கியதை அடுத்து, ஹிட்மே தனது நகைகள், பணம் அனைத்தையும் கட்டியெடுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடினார். அப்பொழுது தன்னை வழிமறித்த நான்கு சிப்பாய்கள் தாக்கியதில் மயங்கிச் சரிந்துவிட்டதாகக் கூறும் ஹிட்மே, நினைவு திரும்பி கண்விழித்துப் பார்த்தபோது, உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லாமல் நிர்வாணமாக்கப்பட்டுக் கிடந்ததாகவும் கூறுகிறார். அவரது நகை மற்றும் பணத்தை அபகரித்துக் கொண்ட படையினர், அவரை மிருகத்தனமாகவும் தாக்கியுள்ளனர். இதில் அவரது முகத்தின் ஒரு பகுதி சிதைந்து, இடது கண்ணின் பார்வைத் திறனே போய்விட்டது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து ஊடகங்களில் எந்தச் செய்தியும் வந்து விடாமல் தடுப்பதில் அரசு மிகுந்த முனைப்பு காட்டியது. பத்திரிகையாளர்கள் உடனடியாக அந்த கிராமங்களுக்குச் சென்றுவிடாமல் போலீசாரால் தடுக்கப்பட்டனர். தாக்குதல் நடந்து பல நாட்களுக்குப் பிறகே பத்திரிக்கையாளர்களால் அங்கே செல்ல முடிந்தது. அதுவும் அரசுப் படையினருக்குத் தெரியாமல் காட்டு வழியில் இரகசியமாகச் செல்ல வேண்டியிருந்தது. சட்டிஸ்கர் மாநில எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் உண்மை நிலையை அறிய முயன்றபோது, அவர்களையும் அக்கிராமத்திற்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். ஒரு ஈ, காக்கைகூட காட்டுக்குள் செல்வதை அனுமதித்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார், இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய சிறப்பு போலீசு கண்காணிப்பாளரான கல்லூரி.

மார்ச் மாத இறுதி வாரத்தில் இத்தாக்குதல் குறித்த உண்மை நிலவரங்கள் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, தாக்குதலில் பாதிக்கப்பட்டு, வீடு, பணம், தானியம் என அனைத்தையும் இழந்து, காட்டில் நிராதரவாக நிற்கும் கிராம மக்களுக்கு உதவுவதற்காகத் தனது ஆதரவாளர்களுடனும், நிவாரணப் பொருட்களுடனும் அக்கிராமங்களுக்குச் செல்ல முயன்றார், சுவாமி அக்னிவேஷ். இவர், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மைய அரசால் நியமிக்கப்பட்ட தூதுவர். சில மாதங்களுக்கு முன்னர் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட போலீசாரை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர்.

அதுமட்டுமன்றி, காட்டு வேட்டையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்குத் தொடர்ந்து உதவி வருபவர். மார்ச் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க இவர் சட்டிஸ்கர் போகும் முன்பே, அம்மாநில போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் இது குறித்துப் பேசி, காட்டுக்குள் செல்ல அனுமதியும் வாங்கியிருந்தார்.

ஆனால், மார்ச் 26ஆம் தேதி அதிகாலை இவரும் இவரது குழுவினரும் தொர்னாபால் என்ற நகரத்தில் நூற்றுக்கணக்கான சல்வாஜுடும் குண்டர்களால் வழிமறிக்கப்பட்டனர். இவர்களைத் திரும்பிப் போகும்படி முழக்கமிட்ட அக்கூலிப் படை, கும்பல் சுவாமி அக்னிவேஷ் சென்ற வண்டியை சூழ்ந்துகொண்டு தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிய குழுவினர், முதலமைச்சர் இராமன் சிங்கைத் தொடர்புகொண்டு நடந்தவற்றை விளக்கினர். முதல்வர் இராமன் சிங், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதமளித்ததோடு, நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று கொடுக்கும்படியும் கூறியிருக்கிறார்.

முதல்வரின் இந்த உத்திரவாதத்தையடுத்து, நண்பகலில் இக்குழுவினர் மீண்டும் தொர்னாபால் வந்த போது, அங்கே மூவாயிரத்திற்கும் அதிகமான சல்வா ஜுடும் குண்டர்கள், துப்பாக்கி, கத்தி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களோடு, இக்குழுவினரைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர். அக்கூலிப்படை கும்பல் இம்முறை அக்னிவேஷை, அவரது தலைப்பாகையைப் பிடித்து இழுத்துச் சாலையில் தள்ளி, கற்களைக் கொண்டு தாக்கியது. இதனைத் தடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் மீதும், குழுவிலிருந்த மற்றவர்கள் மீதும் கற்களை வீசித் தாக்கியது, அச்சமூக விரோதக் கும்பல். “ஒருபுறம் தங்களைக் கிராமத்திற்குச் செல்ல அனுமதித்துவிட்டு, மறுபுறம் இவ்வாறு குண்டர்களை ஏவிவிட்டுத் தங்களைத் தாக்கியதை தற்செயலானதாகப் பார்க்க முடியாது. சிறப்புப் போலீஸ் எஸ்.பி. கல்லூரியால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது” என அக்னிவேஷ் சட்டிஸ்கர் அரசின் மீது குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

மேலும் அவர் இது குறித்துக் கூறும் போது, “துப்பாக்கியேந்திய ஒருவர் என்னைக் கொல்ல விரும்புவதாகக் கூறக் கேட்டது மிகவும் பயங்கரமான தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயத்தைத்தான் பழங்குடியினரிடமும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களிடமும் அரசு உருவாக்க முனைகிறது. பழங்குடியினருக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவந்த பினாயக் சென்னைப் பொய்யாகக் குற்றம்சாட்டிச் சிறையில் தள்ளினார்கள். பழங்குடியினரைக் காணச் சென்ற மேதா பட்கரை கல் வீசித் தாக்கினார்கள். இன்றோ, மனிதாபிமான உதவிகளைச் செய்யச் சென்ற அக்னிவேஷையும் துரத்தித்துரத்தித் தாக்கியுள்ளனர்.

அவர்களுக்கு வேண்டியதெல்லாம் சட்டிஸ்கரில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை எவ்விதமான எதிர்ப்பும் இன்றி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் இத்தனை தாக்குதல்களும் அழித்தொழிப்புகளும். இத்தாக்குதல்களை,“நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் தவிர்க்கவியலாத நடவடிக்கைகள்” எனத் தாராளமயத் தாசர்கள் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

நன்றி -புதிய ஜனநாயகம்

Sunday, April 24, 2011

இரட்டைக்குவளைகளை அகற்றாத கலெக்டர், எஸ்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்! உச்சநீதிமன்றம் ஆணை!

”நாங்கள் இந்த உண்மைகளை சுய-ஆதாரமாகக் கொள்கிறோம்; அதாவது, எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டவர்கள்; தம்மை படைக்கப்பட்டவரால் அவர்கள் சில பிரிக்கமுடியாத உரிமைகளால் பரிசளிக்கப்பட்டிருக்கிறார்கள்; வாழ்வுரிமை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியை அடைவதற்கான அவர்தம் முயற்சிக்கான உரிமைகள் அவற்றுள்ளானவை”. தாமஸ் ஜெஃபர்சன். -அமெரிக்க சுதந்திர சாற்றுரை, 1776

1. நினைவில்கொள்ளத்தக்க இவ்வரிகளை தாமஸ் ஜெஃபர்சன் எழுதி இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்டன; இவ்வரிகள் இன்னும் வரலாற்றில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் ஒரு பிரிவைச் சார்ந்த இந்திய சமூகம் தனது சொந்த நாட்டுக்காரரில் வேறொரு பிரிவைச் சார்ந்த இந்திய சமூகத்தை கீழானவர்களாக நடத்துகிறார்கள். இந்த நவீன உலகில் இம்மாதிரியான மனநிலையை ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் சில முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.

2. விடுப்பு அனுமதிக்கப்பட்டது.

3. கற்றறிந்த மதுரை நான்காவது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் (கிரிமினல் மேற்முறையீட்டு எண்கள் 536-37/2001 யில்) 25.01.2008 நாளிட்ட உத்தரவு மற்றும் பொது தீர்ப்பிற்கு எதிராக இம்மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

4. மேல்முறையீட்டாளர்களின் மீதான குற்றச்சாட்டு என்னவெனில், புகார்தாரர்களான பன்னீர்செல்வம் மற்றும் மகாமணி ஆகியோருக்கும் மேல்முறையீட்டாளர்களுக்கும் இடையே 1.7.1999 அன்று ஒரு கோவில் திருழாவில் ஜல்லிக்கட்டில் காளை மாடுகளைப் பூட்டும் விதத்தில் ஏற்பட்ட சச்சரவு. மேல்முறையீட்டாளரான ஆறுமுகம் சேர்வை, அப்பொழுது “நீ ஒரு பள்ளப்பயல், செத்த மாட்டுக்கறியை திங்கிறவன்”என்று பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்திவிட்டார். எண் 1,7 மற்றும் 9-யில் குற்றம்சாட்டப்பட்டோர் கட்டைகளால் பன்னீர்செல்வத்தின் இடது தோளில் காயமுறும் வகையில் தாக்கினார்கள். அப்பொழுது குறுக்கிட்ட மகாமணியையும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கட்டைகளால் தாக்கினார்கள், இதனால் மகாமணி தலை உடைந்தது, வெட்டுக்காயம் ஏற்பட்டது.

5. இந்நிகழ்விற்குக் கயமடைந்த இவ்விரண்டு கண்ணால் பார்த்த சாட்சிகளோடு மேலும் மூன்று கண்ணால் பார்த்த சாட்சிகள் இருக்கின்றன. மருத்துவர்கள், இக்காயங்களை உறுதிசெய்திருக்கிறார்கள். மகாமணியின் தலைக்காயம் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கொலைவெறியை உணர்த்துகிறது.

6. இரண்டு கீழ்நீதிமன்றங்களும் இதனை பிராசிகுயூசன் வழக்காக கருதும் வகையில் இந்நீதிமன்றத்திற்கு மாற்றுக்கருத்து இல்லை.

7. மேல்முறையீட்டாளர்கள் ‘சேர்வை’ சாதியைச் சேர்ந்தவர்கள், புகார்தாரர்கள் ‘பள்ளன்’ என்ற சாதியைச் சேர்ந்தவர்கள்; அது தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி.

8. சந்தேகத்திற்கிடமில்லாமல் “பள்ளன்’ சென்ற சொல் ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்கின்றது, மேலும் அது கேவலப்படுத்தும் பொருளில் ஒருசிலரை அவமானப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. (எப்படி வட இந்தியாவில் ‘சமர்’ என்கிற சொல் ஒரு சாதியை குறிப்பதோடு ஒரு சிலரை அவமானப்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறதோ அது போல). தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு நபரை ‘பள்ளன்’ என்று அவமானப்படுத்தும் நோக்கில் அழைப்பது, எங்கள் கருத்தில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989ன் பிரிவு3(1)(x) யின் படிஒரு குற்றமே (இனி அது sc/st சட்டம் என்று குறிப்பிடப்படும்). தமிழ்நாட்டில் ஒரு நபரை “பள்ளப்பயல்” என்று அழைப்பது இன்னும் கூடுதலான அவமதிப்பே, அதனால் இன்னும் கூடுதலான குற்றமே.

9. இதுபோலவே, தமிழ்நாட்டில் “பறையன்” என்று ஒரு சாதி இருக்கின்றது. ”பறையன்”என்ற அவ்வார்த்தை கேவலப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. ”பறைப்பயன்”என்ற சொல் இன்னும் கூடுதலாக கேவலப்படுத்துவதே.

10. எங்கள் கருத்தில் ‘பள்ளன்’, ‘பள்ளப்பயல்’, ’பறையன்’, பறைப்பயல்’ போன்ற சொற்களை அவமானப்படுத்தும் நோக்கில் பயன்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரிய ஒன்று, மேலும் அது sc/st சட்டப்படி ஒரு குற்றமே; இந்நவீன காலத்தில் எப்படி ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு ‘நீக்கர்’ அல்லது ‘நீக்ரோ’ என்ற சொல் சற்றும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றோ அது போல (50௦ ஆண்டுகளுக்கு முன் அவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன).

11. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 1-ஆம் நபர் ’பள்ளப்பயல்’ என்ற சொல்லை பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தவே பயன்படுத்தினார். எனவே இது sc/stசட்டப்படி ஒரு குற்றமே.

12. இந்த நவீன உலகில் யாருடைய உணர்வுகளும் புண்படுத்தப்படக்கூடாதவை. குறிப்பாக இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தில் ஒருவருடைய சாதி, மதம், குழு, மொழி இன்னபிறவற்றின் பெயரால் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தப்படாதவகையில் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் நமது நாட்டை நாம் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் பாதுகாக்கமுடியும்.

13. அரசுக்கு எதிரான சுவரன் சிங் மற்றும் பலர் வழக்கில் (2008)

12 SCR 132, இந்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு அவதானிக்கின்றது (இவ்வழக்கின் பத்திகள் 21 to 24):

"21. இந்நாட்களில் ‘சமர்’ என்ற சொல் அடிக்கடி உயர் சாதிகளைச் சார்ந்தவராலோ அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவராலோ கூட பயன்படுத்தப்படக்கூடிய ஒரு அவமானப்படுத்துவதற்கான சொல், ஒரு ஏச்சு, கேலியாகும். ஒரு நபரை ‘சமர்’என்று அழைப்பது ஒரு ஏச்சுச் சொல்லாகும், அது மிகவும் குற்றமாகும். உண்மையில் ‘சமர்’ என்ற சொல் இன்று ஒரு சாதியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் ஒரு நபரை அவமானப்படுத்துவதற்கும் இழிவுபடுத்துவதற்குமே பயன்படுத்தப் படுகிறது.

22. இவ்விடத்தில் குறிப்பிடப்படவேண்டியது என்னவென்றால், இச்சட்டத்தின் பிரிவு3(1)(x)-யை பொருள்படுத்தும் பொழுது இந்தச்சட்டம் எந்தக் குறிக்கோளுக்காக இயற்றப்பட்டது என்று பார்க்கவேண்டும். இது அப்பிரிவு மக்கள் மீதான பழிப்பையும், இழிவையும், உலைச்சலையும் தடுப்பதற்காக வெளிப்படையாகவே உருவாக்கப்பட்டது. அது அச்சட்ட்த்தின் நோக்கம் மற்றும் காரணங்களில் கூறப்பட்ட கூற்றிலிருந்து ஆதாரப்படுகிறது. எனவே அச்சட்டத்தின் 3(1)(x) பிரிவை பொருள்படுத்தும் போது ’சமர்’ என்ற சொல்லின் சொல்லிலக்கணம் பற்றியன்றி, அதன் பிரபலமான பொருளாட்சி என்ன என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். நாம் சொல்லிலக்கணத்தின்படி சென்றால், அச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே முறியடித்தவர்களா வோம், எனவே அது சரியான பொருள்படுத்தும் வகையன்று.

23. இது குடியாட்சி மற்றும் சமத்துவத்தின் காலம். எந்த மக்களும் அல்லது சமூகப்பிரிவும் அவமானப்படுத்தப்படவோ தாழ்வாக நினைக்கப்படவோ கூடாது, மேலும் யாருடைய உணர்வுகளும் புண்படுத்தப்படக்கூடாதவை. இதுதான் நமது அரசியல் சட்டத்தின் உயிராகும், மேலும் அதன் அடிப்படைக்கூறுகளின் பகுதியாகும். எனவே, எங்கள் கருத்தில், தாழ்த்தப்பட்ட நபரை விழிக்கும் போது உயர்சாதியினரோ, பிற்படுத்தப்பட்ட சாதியினரோ அச்சாதியைச் சார்ந்த ஒரு நபரையே கூட ‘சமர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி அழைக்கக்கூடாது. ஏனென்றால், அச்சொற்பயன்பாடு அவரின் உணர்வுகளைப் புண்படுத்தும். பல மதங்கள், சாதிகள், இன, மொழி கூட்டங்கள் இன்னும் பிறவகையினராக மக்கள் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டைப்போன்ற ஒரு நாட்டில் எல்லா வகுப்பைச் சார்ந்தோரும், குழுவைச் சார்ந்தோரும் மரியாதையோடு நடத்தப்படவேண்டும். மேலும் யாரும் யாரையும் கீழ்நிலையில் வைத்துப்பார்க்கக் கூடாது. இதுதான் நமது நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கான ஒரே வழி.

24. எங்கள் கருத்தில், ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நபரை ‘சமர்’ என்று ஒரு பொது இடத்தில் அவரை அவமானப்படுத்தும் அல்லது பழிக்கும் நோக்கத்தில் அழைப்பது நிச்சயமாக அச்சட்டத்தின் பிரிவு 3(1)(x)-யின் படி குற்றமாகும். ‘சமர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் அவமானப்படுத்துதல் அல்லது பழித்தல் என்ற நோக்கம் இருந்ததா என்பது அச்சொல் பயன்படுத்தப்பட்ட சூழலைச் சார்ந்தது என்பது உண்மையே.”

14. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இரட்டைக் குவளை முறை இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று நாங்கள் மேலும் குறிப்பிடுகிறோம். இரட்டைக் குவளை முறையென்றால், பல தேனீர் கடைகளில், உணவு விடுதிகளில் தாழ்த்தப்பட்ட நபர்களுக்கும் தாழ்த்தப்படாத நபர்களுக்கும் தனித்தனி குவளைகளில் தேனீரோ அல்லது பிற குடிபானங்கள் பரிமாறப்படுகிறது. எங்கள் கருத்தில் இது மிகவும் கண்டனத்திற்குரியது. மேலும், sc/st சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும். எனவே, இந்நடைமுறையை பின்பற்றுவோர்கள், குற்றமுள்ளவர்களாகக் காணப்பட்டால் கிரிமினல் பிரிவில் உட்படுத்தப்படவேண்டியவர்கள் மற்றும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டியவர்கள். அனைத்து நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இதைப்பற்றித் தெரிந்தும் குற்றவாளிகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால் இக்குற்றங்களுக்குப் பொறுப்பாளிகளாக்கப்படவேண்டும். மேலும், துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டியவர்கள்.

15. உ.பி அரசுக்கு எதிராக லதா சிங் (2006) 5 SCC 475, வழக்கில் இந்த நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு அவதானிக்கின்றது (பத்திகள் 14 to 18):

"14. இந்த வழக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு நடைமுறையை வெளிப்படுத்துகிறது. புகாரளித்தவர் ஒரு பருவமடைந்தவர், மேலும் எல்லா தொடர்புடைய நிகழ்ச்சி நடந்த சமயங்களிலும் பருவமடைந்தவராகவே இருந்திருக்கின்றார். எனவே, அந்தப் பெண், தான் விரும்பும் அல்லது யாரோடு தான் வாழ விரும்புகிறாரோ அவரைத் திருமணம் செய்துகொள்ள சுதந்திரம் பெற்றவர். இங்கே இந்துச் சட்டப்படியோ அல்லது வேறு எந்தச் சட்டப்படியோ சாதிகளுக்கிடையேயான திருமணத்திற்கு தடையேதும் இல்லை. எனவே புகார்தாரரால், அவருடைய கணவரால் அல்லது அவருடைய கணவரின் உறவினர்களால் எந்தக் குற்றமும் இழைத்திருப்பதை எங்களால் காணமுடியவில்லை.

15. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்கள் கருத்தில் எந்தக் குற்றமும் செய்யவில்லை (கணவனும் மனைவியும் சாதி மாற்று திருமணம் செய்துகொண்டவர்கள்). மேலும், புகார்தாரர் தனது சாதியை விட்டு மாற்று சாதியில் திருமணம் செய்துகொண்டதால் கோவமடைந்திருக்கும் காரணத்தால், புகார்தாரரின் சகோதரர்களால் இந்தக் கிரிமினல் வழக்கு நீதிமன்றம் மற்றும் நிர்வாக எந்திரத்தின் செயல்பாட்டைப் பழிக்கும் வகையில் சாட்டப்பட்டிருக்கிறது. புகார்தாரரின் சகோதரர்களின் அடாவடித்தனத்திற்கும் சட்டவிரோதமான செயல்பாட்டின் (விவரங்கள் மேலே குறிப்பிடப்பட்டிருக் கின்றது) மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக புகார்தாரரின் கணவர் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதைக் கவனிக்கும்போது நாங்கள் இடர்பாடு அடைந்திருக்கின்றோம்.

16. தங்கள் சாதிக்கு வெளியே திருமணம் செய்துகொள்ளும் இளம் பெண்களையும் ஆண்களையும் உலைச்சலுக்காளாக்குதல், பயமுறுத் துதல், அவர்களுக்கு எதிராக வன்முறையை ஏவுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் எங்கள் கவனத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றன. நாங்கள் இந்த விசயத்தில் ஒரு பொதுகருத்து தெரிவிக்கவேண்டியது அவசியம் என்று உணர்கிறோம். இந்த நாடு நமது வரலாற்றில் ஒரு முக்கியமான காலமாறுபாட்டில் பயணம் செய்துகொண்டிருது. இந்த நீதிமன்றம் இவ்வழக்கு போன்ற பொது மக்கள் சார்ந்த விசயத்தில் அமைதியாக இருக்கமுடியாது.

17. எனவே, நாங்கள் நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளை இத்தகு கொடிய செயல்பாடுகளைத் தடுக்கும் வலிமையான நடவடிக்கைகள் எடுக்க ஆணையிடுகிறோம். இதுபோல் ஏதாவது நிகழ்வுகள் நடந்தால், அத்தகு கொடிய நடவடிக்கைகளுக்குக் காரணமானவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுப்பதோடு அந்த மாவட்ட ஆட்சித்தலைவரை மேலும் காவல் கண்காணிப்பாளரை மற்றும் அதனோடு தொடர்புடைய பிற அதிகாரிகளையும் உடனடியாக மாநில அரசு பணியிடைநீக்கம் செய்யவேண்டும். மேலும், அவர்கள் இக்குற்றங்களை தடுக்கவில்லை என்றால் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை சாட்டவேண்டும், துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இவ்வதிகாரிகள் (1) அத்தகு நிகழ்வுகள் ஏற்கனவே நடக்காமலிருந்து ஆனால் அவை நடக்கவிருக்கின்றது என்று முன்கூட்டியே அறிந்திருந்தும் தடுக்காமல் இருந்தால் அல்லது (2) அந்நிகழ்வு நடந்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்யாமல் மேலும் அவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் எங்கள் கருத்தளவில் இத்தகு நிகழ்வுகளுக்கு நேரிடையகவோ அல்லது மறைமுகமாகவோ பொறுப்பானவர்கள்.

18. மேல்முறையீட்டாளர்கள் இவ்வழக்கில் நாகரிகமற்ற காட்டுமிராண்டி களாக நடந்துகொண்டார்கள். எனவே அவர்கள் எந்தக் கருணைக்கும் தகுதியுடையவர்கள் அல்லர். இந்த அவதானிப்புகளோடு இந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறோம்.

19. இத்தீர்ப்பின் நகல்களை, மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மட்டத்தில் எல்லா அதிகாரிகளுக்கும் சுற்றுக்கு விடப்படவேண்டும் என்ற கட்டளையோடு/வழிகாட்டுதலோடு அனைத்து மாநில யூனியன் பிரதேச தலைமைச் செய்யலர்களுக்கு, உள்துறைச் செயலர்களுக்கு, காவல்துறை இயக்குனர்களுக்கும் கீழ்படிதலுக்கு அனுப்பப்படவேண்டும். மேலும், இத்தீர்ப்பின் நகல்கள் உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு அனுப்பட்டவேண்டும், அவர்கள் எல்லா நீதிபதிகளுக்கும் சுற்றுக்குவிடவேண்டும்.

-----மார்க்கண்டேய கட்சூ -----கியான் சுத மிஷ்ராபுது தில்லி 19.04.2011

Bench: A K Ganguly, S Kumar IN THE SUPREME COURT OF INDIA

CRIMINAL APPELLATE JURISDICTION - CRIMINAL APPEAL NO._958__of 2011

[Arising out of SLP(Criminal) No. 8084 of 2009]

Arumugam Servai .. Appellant (s) -versus- State of Tamil Nadu .. Respondent WITH

CRIMINAL APPEAL NO. 959 of 2011

[Arising out of SLP (Criminal) No. 8428 of 2009] Ajit Kumar and others .. Appellant

(s) -versus-State of Tamil Nadu ..

Respondent J U D G M E N T MARKANDEY KATJU, J.

Thursday, April 7, 2011

பினங்களை எரித்த சாம்பலில் கூட ஜாதி கலந்துவிட கூடாது

சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டக்கவுண்டம்பட்டி ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாக கட்டப்பட்டுள்ள ஒரு சுடுகாட்டில் இரண்டு தகன மேடைகள் [பினம் எரிக்கும் மேடை] கட்டப்பட்டுள்ளது.

இறந்தபின்பு பினங்களை எரித்த சாம்பலில் கூட ஜாதி கலந்துவிட கூடாது என்பதற்காக தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மற்றொன்றுமாக அருகருகே கட்டப்பட்டுள்ளது. இரண்டிற்கும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. கவுண்டர் ஜாதியை சார்ந்தவர்கள் அதிகமாக வாழும் இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு, தாழ்த்தப்பட்டவர் மட்டுமே போட்டியிடமுடியும் என்பதால், இங்கு தாழ்த்தப்பட்ட ஒருவரே ஊராட்சி தலைவராக இருந்தும் கூட தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது.
சுடுகாட்டின் அருகில் இருக்கும் பெயர் பலகை

ஒரு சுடுகாட்டில் இரண்டு தகன மேடைகள்




தாழ்த்தப்பட்டவர் பினத்தை எரிக்கும் இடம்
பிற்படுத்தப்பட்டவர் பினத்தை எரிக்கும் இடம்

Wednesday, March 16, 2011

மயிலாடுதுறை கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

‘திராவிடர்’ என்பதன் உள்ளடக்கத்தைப் பாருங்கள்! அகராதியில் பொருள் தேடாதீர்!

‘திராவிடர்’ என்ற சொல்லுக்கு, ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்போருக்கு பதிலளித்து மயிலாடு துறை கழகக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.

11.3.2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு மயிலாடுதுறை சின்னகடைவீதியில் கழகம் சார்பாக தமிழர்களை சுரண்டும் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இர.ரசீத்கான் தலைமையில் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம், சமர் பா. குமரனின் இன எழுச்சிப் பாடல்களோடு துவங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழர் உரிமை மீட்பு இயக்கம் இரா. முரளிதரன், சுப்பு மகேசு, ம.தி.மு.க. நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.

பெரியாரின் கொள்கைகளை, அந்தந்த கால கட்டத்தின் தேவையை கருதி நாம் பல்வேறு போராட்டங்களை, பரப்புரைகளை நடத்தி வருகிறோம். பெரியார் தொடக்கக் காலத்தில் சாதி ஒழிப்பை முதன்மை இலக்காகக் கொண்டிருந்தார். 1926 முதல் பெண் விடுதலையைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார். 1928 இல் இருந்து பொது வுடைமை கொள்கைகளையும் இணைத்துக் கொள்கிறார். இதன் வளர்ச்சிப் போக்கில் 1938 ஆம் ஆண்டில் ‘தனித்தமிழ்நாடு’ என்ற முடிவுக்கு வருகிறார். (சாதி பேதமற்ற, பாலியல் பேதமற்ற, பொருளாதார பேதமற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்றால் அதற்கு தனித் தமிழ்நாடு தான் தீர்வு என முடிவு செய்கிறார்) இப்படிப்பட்ட கருத்துகளைக் கொண்ட பெரியாரியலை மக்கள் முன்னாள் எடுத்துச் செல்கின்ற நாங்கள், அதனுடைய ஒரு பகுதியாகத்தான், தமிழர்களை சுரண்டும் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளை விளக்கப் பரப்புரையை செய்து வருகிறோம் என்று உரையைத் தொடங்கிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இடஒதுக்கீடு சிக்கல்கள் பற்றியும், இன்று தீண்டாமை ஒழிப்புச் சட்டங்கள் பல இருந்தாலும், அவைகளெல்லாம் நடைமுறைபடுத்தாமல் இருப்பது பற்றியும், ஏன் பழங்குடி மக்கள் எல்லாம் தாக்கப்படுகிறார்கள் என்றால், அவரவர்கள் தங்களுக்கு தேவையான வற்றை தாங்களே உற்பத்தி செய்து கொள்வதை தடுக்க வேண்டும். எல்லோரும் வணிக நிறுவனத்தை நம்பித்தான் இருக்க வேண்டும் என்றச் சூழலை உருவாக்குவதற்காக பழங்குடி மக்கள் எல்லாம் தாக்கப்படுகிறார்கள். இடப்பெயர்வுக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்றும் பச்சைவேட்டை பற்றியும் விரிவாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்... “பரப்புரைக் கூட்டங்களில் இந்துமத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் மட்டுமே இல்லாமல், பொருளியல் சிக்கல்களை பற்றியும் மக்களிடையே விளக்க வேண்டியதும், அதற்கான விழிப்புணர்வை மக்கள் பெற்றிட, இந்திய தேசிய - பன்னாட்டு திட்டங்களுக்கு எதிராக மெல்ல மெல்லவாகிலும், கிளர்ந்து எழ வேண்டும் என்பதை நோக்கமாகவும் கொண்டுதான் இந்த பரப்புரையை நடத்தி வருகிறோம். பெரியார் இறுதியாக நடத்திய மாநாடு தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு... அதோடு இழிவு ஒழிப்புக்காக எடுத்துக் கொண்ட திட்டம்தான் தனித் தமிழ்நாடு பரந்த சந்தை வேண்டும் என்று விரும்புகிற பனியாக்களுக்கு - வியாபார கூட்டத்திற்கு - சொந்த நாடே இல்லாத பார்ப்பனர்களுக்கு - வசதியாகவும் இந்திய தேசியத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆனால், நாம் இழிவில் இருந்து விடுபடுவதற் கும், சுரண்டலில் இருந்து விடுபடுவதற்கும் இந்திய தேசியம் தடையாக இருக்கிறது. பார்ப்பன - இந்திய தேசியத்திற்கு எதிராகத்தான் திராவிடர்கள் என்ற அணியை பெரியார் உருவாக்கினார். “திராவிட நாடு வடநாட்டிலிருந்து பிரிந்து, தனியாக இருக்க விரும்பும் காரணம் கூட, இந்து மதத்தால் ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்தில் இருக்கும் இழிவும், சுரண்டலும் ஒழிய வேண்டும் என்பதற்கும் ஆகும்” என்ற பெரியாரின் பேச்சு 1945 ஆம் ஆண்டு குடிஅரசில் இருக்கிறது. ஆரியர் திராவிடர் எல்லாம் கலந்து விட்டார்களே எப்படி பிரிப்பீர்கள் என்று அப்போது கேட்டார்கள். பெரியார் சொன்னார்... “அது எனக்கும் தெரியும். நான் இரத்த பரி சோதனை செய்து ஆரியர் - திராவிடர் என பிரிக்க வில்லை. அவர்களுடைய பழக்க வழக்கங்கள், ஆச்சார அனுஸ்டானங்களைப் பார்த்துதான் பிரிக்கிறேன்” என்று கூறினார். சுத்தமான தமிழ் இரத்தம் ஏதாவது கலந்துவிட்டதா என்று இப் போது பல அறிஞர்கள்(?) பிரித்துக் கொண்டிருக் கிறார்கள். பெங்களூரில் கூட ஒரு அறிஞர் இருக்கிறார். இவர் தெலுங்கர், கன்னடர் என்று ஆய்வு அறிக்கை எல்லாம் போடுவார். ஆனால் பெரியார், இனத்தூய்மை பார்த்து யாரையும் பிரிக்கவில்லை. இழிவில் இருந்து விடுபடுவதற்கு, அதற்கு தடையாக இருக்கிற ஒரே மக்கள் கூட்டத்தைத்தான் பிரித்து வைத்தார். இன்னொரு பக்கம் இதற்கு எதிராக பேசியவர்கள் இருந்தார்கள். தமிழ்நாட்டில்கூட ம.பொ.சி. இருந்தார்.

ம.பொ.சி. ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்...

“பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு காரணமா னோர் யாரோ, அவர்கள்தான் தமிழ்நாட்டில் தமிழரல்லாதார் ஆதிக்கம் செலுத்த நேர்ந்ததற்கும் காரணம் ஆவார்கள். திராவிட மாயையில் இருந்து விடுபட்டதாக கூறிக்கொண்டு (?) மலையாளிகள் ஆதிக்கத்தை எதிர்த்து புறப்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. முதலில் பிராமணர் - பிராமணரல்லாதார் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். அப்போது தான் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர் வாழ்வு பெற முடியும்” என்று ம.பொ.சி. எழுதினார்.

ஆனால், பெரியார் இதில் மாறுபட்டார். யாரை இணைத்துக் கொண்டார், யாரை விலக்கி வைத்தார் என்பதுதான். பெரியாருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு திராவிடர் என்பதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அகராதியில் பொருள் தேடக் கூடாது. அகராதியில் பார்க்கும் போது பலவற்றை தவறாக புரிந்து கொள்ள நேரிடும். எனது சிறுவயதில் நாங்கள் ஒரு நாடகம் நடத்தினோம். ஒருவர் ஆங்கிலத்தில் சொல்வார். அதை நான் தமிழில் மொழி பெயர்ப்பேன்... “லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்பார். அதற்கு நான் “பெண்களே சாதுவான ஆண்களே” என்று மொழி பெயர்ப் பேன். “ஐ ஏம் கம்மிங் ப்ரம் கிரீன்லேண்ட்”என்பார். “நான் பச்சை நிலத்திலிருந்து வருகிறேன்” என்று மொழி பெயர்ப்பேன். “டூ யூ அண்டர்ஸ்டேண்ட்” என்பார். அதற்கு நான், “நீ அடியில் நிற்கிறாயா” என்பேன். “வெண்டைக்காயும் முருங்கைகாயும் சாப்பிடு” என்ற பொருளில், “ஈட் லேடீஸ் பிங்கர் அண்ட் டரம்ஸ்டிக்” என்பார். “பெண்கள் விரல்களையும் தப்பட்டை குச்சிகளையும் சாப்பிடுங்கள்” என்று மொழி பெயர்ப்பேன். அகராதியில் பார்த்தால் தவறாக இப்படித்தான் மொழி பெயர்க்க முடியும்.

“ஆட்டம்” (atom) என்ற சொல்லுக்கு லத்தீனில் பிளக்க முயாதது என்று பொருள். Dalton’s atomic Theoryசொல்கிறது... atom is indivisible (அணு என்பது பிளக்க முடியாதது) என்பதுதான். அப்போது நிலவிய விஞ்ஞான கொள்கை. ஆனால், இப்போது அதை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என பிரிக்க முடியும் என்பதும், பிளக்கும் போது வெளிப்படும் ஆற்றலில் (அணு சக்தியில்) இருந்து பல்வேறு ஆக்க வேலைகளையும், அழிவு வேலைகளையும் செய்ய முடியும் எனக் கண்டுபிடித்துவிட்டார்கள். அணுவை பிளக்க முடியாது என்று கருதிக் கொண்டிருந்த காலத்தில், பிளக்க முடியாதது என்ற பொருளுள்ள ‘ஆட்டம்’ என்ற சொல்லை மாற்றிவிடவில்லை. பிளக்க முடியும் என தெரிந்த பின்னாலும் ‘ஆட்டம்’ என்பதை மாற்றவில்லை . ஒரு சொல்லில் ஏற்றப் பட்டிருக்கும் உள்ளடக்கம் தான் முக்கியம் அப்படித்தான் பெரியார், திராவிடர் என்ற சொல்லிற்கு ஒரு உள்ளடக்கத்தை கொடுத்துள்ளார்.

மக்களை பலவற்றிற்காக பிரிக்கலாம். பள்ளியில் மாணவர்களை பாட தெரிந்தவர் - பாட தெரியாதவர் என ஆசிரியர் பிரிப்பார் நாடகம் போடு வதற்காக! விளையாட்டு ஆசிரியர், உயரமானவர்கள் - உயரம் குறைந்தவர்கள் எனப் பிரிப்பார் கூடை பந்து விளையாட்டிற்கு! இரண்டு ஆசிரியர்களுக்கும் நோக்கம் வேறு. அதைப் போலதான் பெரியாரின் நோக்கம் இழிவு ஒழிப்பு. அதாவது சாதி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு பிரிக்கப்பட்ட பிரிவினைதான் ஆரியர் - திராவிடர். அந்த நோக்கம் இல்லாதவர்கள் மொழி வழியாக நாட்டை மட்டும் பிரித்துக் கொண்டால் போதும் என்று கருதுபவர்கள், இந்த மொழி பேசுபவர்கள், வேறு மொழி பேசுகவர்கள் என்று பிரித்துப் பார்க்கிறார்கள். பெரியாருக்கு தமிழர் என்று மொழி வாரியாக அடையாளப்படுத்துவதைவிட, ‘மனிதர்’ என்று எல்லோரையும் சமப்படுத்துவது தான் நோக்கம். இழிவை நீக்குவதற்கு தேவையான அடையாளங்களைப் பார்த்து பிரித்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது காங்கிரஸ்காரர்கள் எல்லாம் சொன்னார்கள்... உன் மொழி வேறு - என் மொழி வேறு. உன் பழக்க வழக்கம் வேறு - என் பழக்க வழக்கம் வேறு. உன் உடை வேறு - என் உடை வேறு. உன் உணவு முறை வேறு - என் உணவு முறை வேறு, உன் கலாச்சாரம் வேறு - என் கலாச்சாரம் வேறு. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களா எங்களை ஆள்வது? என்று.

இந்திய நாட்டு விடுதலைக்குப் பிறகு ஆறாயிரம் மைல் இரண்டாயிரம் மைல்களாக குறைந்திருப்பதை தவிர மற்றவை எல்லாம் அப்படியே தானே இருக்கிறது என்று பெரியார் கேட்டார். மைல்கள் குறைந்திருக்கிறதே தவிர, கேள்விகள் அப்படியேதான் இருக்கிறது. உன் மொழி வேறு - என் மொழி வேறு. உன் பழக்க வழக்கம் வேறு - என் பழக்க வழக்கம் வேறு. உன் உடை வேறு - என் உடை வேறு. உன் உணவு முறை வேறு - என் உணவு முறை வேறு, உன் கலாச்சாரம் வேறு - என் கலாச்சாரம் வேறு. நமது அடிமைத்தனம் அப்படியே தான் தொடர்கிறது. நமது அடிமைத்தனத்தை, பன்னாட்டுச் சுரண்டல், பன்னாட்டு சுரண்டலுக்கு துணையாக இருக்கிற பார்ப்பனர்கள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்து பார்க்க வேண்டியிருக்கிறது. சாதி அடிமட்டத்தில் இருக்கிற, எந்த மக்களை பெரியார் உயர்த்த வேண்டும் என விரும்பினாரோ, அந்த மக்களை உயர்த்துவதற்கு, அந்த மக்களை பாதுகாப்பதற்கு - அந்த மக்களின் பொருளியல் வளங்களை பேணுவதற்கு - நமக்கான நாட்டை உருவாக்கிக் கொள்வோம். நமக்கான பொருளாதாரத்தை கட்டமைக்க முயல்வோம். அதுவரை இந்த பொருளாதார சுரண்டல்களை - பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளையை தடுப்பதற்கு நாம் இணைந்து நிற்போம்” என்ற வேண்டுகோளோடு உரையை நிறைவு செய்தார்.

Friday, March 11, 2011

ரூ.3,74,937 கோடி - பார்ப்பன - பன்னாட்டு வேட்டைக்காடா, இந்த நாடு?

• 2005-06 ஆம் ஆண்டிலிருந்து அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - 3,74,937 கோடி ரூபாய்.

(இது, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையைவிட 2மடங்கு)

• இப்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - ரூ.88,263 கோடி.

• இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் தொகை ரூ.240 கோடி!

• ஒவ்வொரு நாளும் இதே 240 கோடி ரூபாயும் சட்டவிரோதமாக, வெளிநாட்டு வங்கிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது.

(வாஷிங்டனில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் - Global Financial Integrity - இத்தகவலைத் தெரிவித்துள்ளது)

• இப்படி பெரும் தொகையை தொழில் நிறுவனங்களுக்கு ரத்து செய்த பிரணாப் முகர்ஜி, விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5568 கோடியை வெட்டி விட்டார். பயிர்ப் பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் மட்டும் குறைக்கப்பட்ட நிதி ரூ.4,447 கோடி.

• நிதிநிலை அறிக்கையில் பொருளாதார சேவைத் துறைகளிலேயே மிக அதிகமான பாதிப்பு விவசாயத் துறைக்குத் தான்.

(தகவல்: டாட்டா சமூக ஆய்வு மய்யம் - Tata Institute of Social Science

• பெரும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய சுங்கவரியைக் கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட தொகை - ரூ.48,798கோடி!

(நாடு முழுதும் பொது விநியோகத் துறையான ரேஷன் கடைகளுக்கு ஓராண்டுக்கு செலவிடப்படும் தொகையில் இது பாதி)

• அப்பல்லோ போன்ற ‘நட்சத்திர ஓட்டல்’ தரத்தில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனை களுக்கு வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய, இந்த நிதி நிலை அறிக்கையில் விலக்காக அளிக்கப்பட்டுள்ள சுங்கவரித் தொகை ரூ.1,74,418 கோடி.

(இந்த மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, சிகிச்சை அளிப்பதாக இந்த நிறுவனங்கள் பொய் கூறி அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுகின்றன. உண்மையில் அப்படி எந்த இலவச சிகிச்சையும் இங்கே வழங்கப்படுவது இல்லை.)

• இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்வை (நுஒஉளைந) வரி - ரூ.1,98,291 கோடி.

(கடந்த ஆண்டு - ரூ.1,69,121 கோடி)

• தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி - ஆக பனியா - பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை என்று 2005-2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக வழங்கப்பட்ட வரிச் சலுகை - ரூ.21,25,203 கோடி.

(21 இலட்சத்து 25 ஆயிரத்து 203 கோடி)

(2ஜி அலைக்கற்றை ஊழலைவிட 12 மடங்கு அதிகம்)

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையும் அவர்களால் செலுத்தப்படாத வரித் தொகையும் அதிகரித்துக் கொண்டே போவதால் இதை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டில் அதற்கான எந்த மாற்றமும் இல்லை. மேலும் மேலும் கூடுதலாக வரிச் சலுகைகள் வாரி வாரி வழங்கப்பட்டுள்ளன.

இப்படி கோடிகோடியாக தொழில் திமிங்கலங்களின் வயிற்றில் கொட்டும் பார்ப்பன - பனியா ஆட்சி தான். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்க நிதி இல்லை என்று கை விரிக்கிறது. உணவுக்காக வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தனி மனிதர் ஒருவருக்கு சராசரியாகக் கிடைக்கும் உணவு தானியத்தின் அளவு 50 ஆண்டுகளுக்கு முன்பு 1955-59 காலத்தில் கிடைத்ததைவிட பாதியாகக் குறைந்துள்ளதாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையே கூறுகிறது!

பார்ப்பன - பன்னாட்டு வேட்டைக்காடா, இந்த நாடு?

(மார்ச் 7 ஆம் தேதி ‘இந்து’ ஏட்டில் பி.சாய்நாத் எழுதிய கட்டுரையிலிருந்து)