சகோதரிகளே! சகோதரர்களே!!
இன்றைய தினம் நாம் நீலாவதி - ராமசுப்பிரமணியம் திருமணத்தை முன்னிட்டு இங்கு கூடியிருக்கிறோம். இடம் இல்லாததனால் மிக நெருக்க மாக இருக்கிறது. அநேகம் ஜனங்கள் கீழே நிற்கின்றனர். இம் மாதிரிக் கல்யா ணங்கள் நமது கொள்கைகளைப் பிரசாரம் செய்வனவாகவே இருக்கின்றன. அறிவு கொண்டு உண்மை நோக்கத்தோடு இவ்விருவரின் திருமணம் நடை பெறப் போகின்றது. திருமணம் நடந்த பிறகு நண்பர்கள் இரண்டொரு வார்த்தைகள் சொல்வார்கள். திருமணத்தை நடத்திக் கொள்ளு மாறு மண மக்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன். (மணமக்கள் இருவரும் ஒருவருக் கொருவர் மாலையிட்டு மோதிரங்களை மாற்றிக் கொண்டனர்)
இங்கு எல்லோரும் விஜயம் செய்து இப்பொழுது நடைபெற்ற திருமணத்திற்குச் சாட்சி அளித்தோம். அது நமது கடைமையுமாகும். இப் பொழுது நடைபெற்று வரும் மற்ற மணங்கள் எப்படி நடைபெறுகிற தென்றால், ஒரு பெண்ணையும் ஆணையும் பிடித்து இருவரின் சம்மத மில்லாமலேயே கட்டாயப்படுத்திச் செய்யப்படுகிறது. அந்தப் பெண்ணா னவள் கொஞ்சமும் சுதந்தரமற்று மாமன், மாமி, நாத்தி, கொழுந்தன், புருஷன் ஆகியவர்களுக்கு என்றும் அடிமையாகவே இருந்து வரவேண்டியவளா யிருக்கிறாள். “கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன்” என்று கூறிப் பெண்ணினுடைய வீரத்தையும், மனிதத் தன்மையும் அழிக்கப் பட்டிருக்கிறது. நளாயினி, சீதை, சந்திரமதி முதலியவர்களைப் போல இருக்க வேண்டுமென்று பெண்களுக்குச் சொல்லப்படுகிறது. சந்திரமதியைப் போல் இருக்கவேண்டுமென்றால், கடனுக்காக புருஷன் தன் மனைவியை விற்றுவிடலாமென்றுதான் அர்த்தம், புருஷன் தன் மனைவியை விற்பனை செய்ய உரிமையுள்ளவன் என்றால், இதை விடப் பெண்களுக்கு மரியாதை கெட்டதனம் வேறென்ன இருக்கிறது. சீதையைப் பற்றிய கதை ரொம்ப ஆபாசமானது. சீதை நிறை கர்ப்பமாய் இருக்கும் பொழுது காட்டுக்கு விரட்டப்பட்டாளென்றால், அது எவ்வளவு மூடத்தனம் என்பதை யோசித்துப் பாருங்கள். நளாயினி சரித்திரமும் ரொம்ப ஆபாசமானது. புருஷன் ரொம்பக் குஷ்டரோகி. அவன் தாசி வீட்டிற்குப் போக வேண்டு மென்று பிரியப் பட்டானாம். அவனைக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் விட்டாளாம். இது எப்படி யிருக்கிறதென்றால் தாசி வீட்டிற்குப் போக லைசென்ஸ் கொடுப்பது போலிருக்கிறது. புருஷனைத் தாசி வீட்டில் கொண்டு போய் விடுவது தான் பெண்ணின் கற்பா என்று கேட்கிறேன். புருஷன் தாசி வீட்டிற்குப் போக வேண்டுமென்று கூறினால், அவனை வெளியில் தள்ளி கதவைச் சாத்துவதுதான் சுயமரியாதையுடையவளின் செயலாகும்.
ஒருவர்:- ஒருதாரமிருக்கிற பொழுது மறுதாரம் கட்டலாமென்பது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையா? ஹிந்து மதக் கடவுள்கள் பல மனைவிகளையுடையவர்களாய் இருக்கின்றனர். அந்த மதம் தப்பிதமானது என்று கூறும் சுயமரியாதை இயக்கம் ஒரு மனைவியிருக்க மற்றொரு மனைவியை மணம் செய்ய அனுமதிக்கலாமா? என்று கேட்டார்.
திரு. இராமசாமி அவர்கள் பதில் கூறியதாவது:-
இப்பொழுது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது நமது கடமையேயாகும். சுயமரியாதை இயக்கம் என்ன சொல்லுகிறதென் றால், ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் தங்கள் பகுத்தறிவை உபயோகப் படுத்த வேண்டுமென்றும், ஆண், பெண் இருவருக்கும் சமத்துவம் இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறது. சுயமரியாதை இயக்கத் தால் கண்டிக்கப்படுகிற தேவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் செய்யக் கூடாதென்பது நோக்கமல்ல. தேவர்கள் சாப்பிடுகின்றார்கள். மூச்சு விடுகிறார்கள் என்பதால் நாமெல்லோரும் சாப்பிடக் கூடாது, மூச்சு விடக் கூடாது என்பது முட்டாள் தனமாகும். பகுத்தறிவிற்கு எது பொருத்த மாயிருக்கிறதோ அதைக் கைக் கொள்ளவேண்டுமென்பதுதான் சுய மரியாதை இயக்கத்தின் நோக்கமாகும். கல்யாணம் என்பது ஒரு மனிதனு டைய இன்பத்தைப் பொறுத்ததேயன்றி வேறொன்றுமில்லை. ஒரு ஆணுக் கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் ஒத்துவராவிட்டால் வேறு கல்யாணம் செய்து கொள்வதில் பிசகொன்றுமில்லை. அதே உரிமையை பெண்ணுக் கும் கொடுக்க ஆண் தயாராயிருக்கிறார். கல்யாணத்தை கத்தரிக்காய், வாழைக்காய் போல நினைத்து பொருத்தமற்ற முறையில் கல்யாணத்தைச் செய்து வைத்து வாழ்க்கை முழுமையும் துன்பத்திலும் அடிமைத்தனத்திலும் இருக்கும்படி செய்வது அறியாமையாகும். சமீபத்தில் நகர் என்ற ஊரில் ஒரு சுயமரியாதை கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை கிறிஸ்தவர். கிறிஸ்து மதச் சட்டப்படி ஒரு மனைவி யிருக்க மற்றொரு மனைவியை விவாகம் செய்து கொள்ள அனுமதியில்லை என்றாலும் அவரவர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் விரோதமாகும். எனவே அக்கல்யாணத்தைச் சிறப்பாக முடித்து வைத்தோம். இங்கு நடைபெற்ற திருமணத்தின் தம்பதிகள் மிகச் சிறந்தவர்கள் என்பது என் கருத்து. தகுதி வாய்ந்த இத்தம்பதிகள் சிறந்து வாழ விரும்புகிறேன்.
குடி அரசு - சொற்பொழிவு - 12.10.1930
No comments:
Post a Comment