முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; எனவே அதை உடைப்போம்' என மலையாள கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரசு, பாரதீய ஜனதா தேசிய திலகங்களும் உச்சக்கட்ட அடாவடியைத் தொடங்கியுள்ளனர். தன் நாட்டுக்கு 50 சதவீத அத்தியாவசிய உணவுப் பொருட்களை விளைவித்து அனுப்பும் தமிழனுக்கு நீர் தர மறுக்கின்றனர் மலையாளிகள். முன் எப்போதும் நடந்திராத சம்பவமாக, தமிழ்நாட்டு காய்கறி லாரிகளையும் மலையாளிகள் தாக்கி, திருப்பி அனுப்பியுள்ளனர். விவசாயம் செய்ய தண்ணி தராத கேரளாக்காரனுக்கு, அவனிடமே அடி, உதையை வாங்கிக்கொண்டு, அவனுக்கே நம் நாட்டில் இருந்து உணவுப்பொருட்களை அனுப்பி, அதன்மூலம் வயிறு வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் தமிழர்கள். எதிர்வினையாக தமிழ்நாட்டில் ம.தி.மு.க, பெரியார் தி.க, தமிழ்த்தேசிய இயக்கங்கள், தலித் அமைப்புகள் என அனைவரும் கேரள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அனைத்துத் தரப்பிலும் நடக்கும் போராட்டங்கள் முதன்மை எதிரியை அடையாளம் காட்டாமலேயே நடந்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலுக்கு காரணம் மலையாளிகள் மட்டுமா?
முல்லைப் பெரியாறு அணை
தமிழ்நாட்டில் உள்ள இராஜபாளையம் அருகில் உள்ள சிவகிரி மலைப் பகுதியில் தான் பெரியாறு நதி உற்பத்தி ஆகிறது. இது தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நதி. இங்கிருந்து 56 கி.மீ பயணம் செய்து கேரள எல்லையை அடைகிறது. பெரியாற்றோடு கேரளாவில் பாயும் முல்லையாறும் இணையும் இடத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் நாள் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் சென்னை இராஜதானிக்கும் இடையே ஏற்பட்ட 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேஜர் ஜான் பென்னி குக் அவர்களின் கடுமையான முயற்சியில் இந்த அணை கட்டப்பட்டது. 1970 வரை இந்த ஒப்பந்தம் எந்த இடையூறும் இல்லாமல் நடைமுறையில் இருந்துள்ளது. 1979 இல் அணை பலவீனமாக உள்ளதாக மலையாள மனோரமா ஏடு கிளப்பிய வதந்தி இன்றுவரை அணையாமல், இரு தேசிய இனங்களுக்கு இடையிலான போராக உருவாகியுள்ளது.
தேவிகுளம் - பீர்மேடு
முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் தோன்றும்போதெல்லாம் தவறாமல் பேசப்படும் ஒரு செய்தி - மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழர்கள் வாழும் பகுதி தமிழ்நாட்டோடு இணைக்கப்படாமல் கேரளாவோடு இணைக்கப்பட்டுவிட்டது; அந்தப் பகுதியில்தான் அணை உள்ளது; அது தான் சிக்கலின் மையம் என்று தமிழ்த்தேசிய இயக்கங்களால் குற்றம்சாட்டப்படுகிறது. இது சரியான பார்வை அல்ல. முதன்மையான - உண்மையான எதிரியை அடையாளம் காண இயலாத - அடையாளம் காட்ட விரும்பாத தன்மை என்றே சொல்ல வேண்டியுள்ளது.
மொழிவாரி மாகாணம் பிரிக்கப்பட்டது 1956 ஆண்டு. ஒப்பந்தம் போடப்பட்டது 1886 ஆம் ஆண்டு. திருவாங்கூர் சமஸ்தானத்தோடு ஏன் ஒப்பந்தம் போட்டார்கள்? அப்போது அணை இருந்த பீர்மேடு பகுதி அந்த சமஸ்தானத்துக்கு உட்பட்டே இருந்துள்ளது. அதனால்தான் ஆங்கிலேயர்களால் அந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திருவாங்கூர் சமஸ்தானத்திடம் தமிழர்கள் பகுதி போனது எப்படி? எப்போது? தேவிகுளத்தையும் பீர்மேட்டையும் மலையாளிகளிடம் 1886க்கு முன்பே இணைத்தது யார்? இவற்றுக்குப் பதில் காணவேண்டியது அவசியம். அப்போது பெரியாரோ, காமராஜரோ அரசியலில் இல்லை.
தேவிகுளம், பீர்மேடு பறிபோனது அது தான் சிக்கல்களுக்கு காரணம் என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு உண்டு என்றாலும் அந்த பறிகொடுப்புகூட இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டதால் வந்த வினைதானே? இந்திய விடுதலை இல்லை என்றால் மொழிவாரி மாகாணப் பிரிவினையே நடந்திருக்காது. தனித்தமிழ்நாடு நோக்கி பெரியாரும் ஆதித்தனாரும் இணைந்து போராடிக்கொண்டிருந்த காலம் அது. இந்த மொழிவாரிப் பிரிவினையையும் பெரியார் கடுமையாக எதிர்த்துள்ளார்.
“பிரிவினைக்குப் பெயர் மொழிவாரி நாட்டுப்பிரிவினை. இதில் பிரிந்துபோகவேண்டுமென்று வாதாடுகிறவர்கள் மொழியை ஆதாரமாகக் கொண்டுதானே பிரிவினை கேட்கவேண்டும்? அதை விட்டுவிட்டு, வேறு மொழி 100க்கு 69, 70, 80 வீதம் பேசுகிற மக்கள் உள்ள நிலையைத் தங்கள் நாட்டுடன் சேர்க்கவேண்டுமென்று கேட்பது எப்படி யோக்கியமாகும்? அல்லது இந்தப் பிரிவினைக்கு, மொழிவாரி மாகாணப் பிரிவினை என்றாவது எப்படிச் சொல்ல முடியும்?” என்றார். - விடுதலை - 07.11.1953
சர்வதேச நதிநீர் சட்டங்கள்
இன்று சாதாரணமாக கிராமங்களில் சிறுசிறு ஏரிகளில், குளங்களில் பாசனவசதி பெற்று விவசாயம் செய்பவர்களிடையேகூட கடைமடைக்காரனுக்குத்தான் முன்னுரிமை என்ற வழக்கம் உள்ளது. அதையேதான் சர்வதேச நதிநீர்ச் சட்டமும் சொல்கிறது. ஒரு நதியின் கடைமடை டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அல்லது பயனாளர்களுக்குத்தான் அந்த நதியில் முன்னுரிமை. அவர்கள் அனுமதியின்றி நதியின் மேல்பகுதியில் இருப்பவர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது. “நதியின் கீழ்நிலையில் உள்ளவர்கள் அனுமதி இல்லாமல் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அணைகள் ஏதும் கட்டக்கூடாது. நதியில் கீழ்நிலையைப் பாதிக்கின்ற வகையில் நீரை செயற்கையாக தடுத்து உபயோகிக்கக் கூடாது” என்கிறது சர்வதேச நதிநீர்ச் சட்டம். இதன் அடிப்படையில் தான் பலநாடுகளில் நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
உலகில் பல்வேறு நாடுகளுக்கிடையே ஓடும் பல நதிகள் உள்ளன. ஐரோப்பாவில் ரைன் நதியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஜெர்மன், ஃப்ரான்ஸ், லக்ஸம்பர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே சிக்கல்கள் எழுந்தன. ஆப்ரிக்காவில் நைல் நதி பங்கீடு தொடர்பாக சூடானுக்கும் எகிப்துக்கும் சிக்கல். டான்யூப் நதிப் பங்கீட்டில் ஆஸ்த்திரியா, துருக்கிக்கு இடையே சிக்கல். வட அமெரிக்க மாகாணங்களுக்குகிடையே கொலராடோ நதிநீர்ச் சிக்கல். தென் அமெரிக்காவில் அமேசான் நதிநீர்ச் சிக்கல். ஆஸ்திரேலியாவில் முர்ரே நதிப் பங்கீடு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா இடையே சிக்கல். ஆமுர் நதிப் பங்கீட்டில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் சிக்கல் என உலகெங்கிலும் நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல்கள் இருந்தன.
அந்த வரிசையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒப்பந்தமாகும். 19.09.1960இல் அன்றைய இந்தியப் பிரதமர் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தம் சட்லஜ், ராவி, பியாஸ் ஆகிய கிழக்குப் பகுதி நதிகளையும் ஜீலம், சிந்து, செனாப் ஆகிய மேற்குப் பகுதி நதிகளையும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதற்காகவும் அவற்றில் நீர்மின்சக்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் இயற்றப்பட்டதாகும்.
இரு நாடுகளுக்கு இடையே உள்ள சிக்கல் ஆதலால் அப்போதே ஐக்கிய நாடுகள் அவையும் தலையிட்டு ஐ.நா. அவை உருவாக்கிய நடுவர் முன்னிலையில், உலக வங்கியின் மேற்பார்வையில், உலக வங்கியும் ஒரு சாட்சியாக இந்த ஒப்பந்தம் இயற்றப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பலமுறை போர்கள் நடைபெற்ற காலத்திலும் இந்த ஒப்பந்தங்கள் மீறப்படவில்லை. இந்த நதிகளின் பங்கீட்டில் எந்த சிக்கலும் வரவில்லை. அப்படியே உருவாகி இருந்தாலும் அவற்றைத் தீர்க்கும் அனைத்து வழிமுறைகளையும் ஐ.நா மன்றமும், உலக வங்கியும் செய்திருக்கின்றன.
ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் அல்லது நாடுகளுக்கும் இடையே ஒரு நதியைப் பகிர்ந்து கொள்வதில் உருவாகும் கருத்து வேறுபாடுகளையும் சிக்கல்களையும் தீர்த்துவைப்பதற்கு சர்வதேச நதிநீர்ச் சட்டங்கள் பயன்படுகின்றன. அதில் முக்கியமான விதிகள் 1956ஆம் ஆண்டு பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற நதிநீர்ப் பங்கீடு குறித்த சர்வதேச அளவிலான மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டவை ஆகும். இவை போன்ற சர்வதேச நதிநீர்ச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் ஐ.நா. மன்றம் பல நடுவண் அமைப்புகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் ICJ (International Court of Justice), PCA (Permenent Court of Arbitration) ஆகியவை முக்கியமானவையாகும்.
கேரளா ஒரு தனி நாடாகவோ அல்லது இந்தியாவுடன் இணைந்த பகுதியாகவோ இருந்து, தமிழ்நாடு ஒரு தனி குடிஅரசாக, தனி நாடாக இருந்தால் முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற அனைத்து ஆற்றுநீர் உரிமைகளும் சர்வதேச நதிநீர்ச் சட்டங்களின்படி முழுமையாக நமக்குக் கிடைத்துவிடும். தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் முல்லைப் பெரியாற்றிலோ, காவிரியிலோ அண்டை நாடு தடை செய்தால், சிக்கல் உருவாக்கினால் ஐக்கிய நாடுகள் மன்றமும், சர்வதேச நடுவர் மன்றங்களும் தலையிட்டு சிக்கலைத் தீர்த்து வைக்கும். அதற்கு எடுத்துக்காட்டுதான் சிந்து நதிநீர் ஒப்பந்தம். ஆனால் ஒன்றுபட்ட இந்தியாவில் - பார்ப்பன - பனியா கும்பல்களின் ஆதிக்கத்தில் சிக்குண்டு கிடக்கும் நாட்டில் பார்ப்பன நலன்களே முன்னிறுத்தப்படும்.
பார்ப்பன இந்தியா
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட 1919க்கு முன்பு நதிநீர்ப் பங்கீடு, நீர்ப்பாசனம் தொடர்பான விவகாரங்கள் இங்கிலாந்து அரசவையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. 1919க்குப் பிறகு இந்தியர்களுக்கு அதிகாரம் கிடைக்கத் தொடங்கியபோதே பார்ப்பனர்கள் கையில் அதிகாரம் சென்றதால் அனைத்துத் துறைகளையும் போலவே நதிநீரிலும் பார்ப்பன நலன்கள் முன்னிறுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டு போகும்வரை காவிரி, முல்லைப் பெரியாறு ஆறுகளில் சம்மந்தப்பட்ட மாகாணங்களுக்கிடையே மோதல்போக்கு இல்லாமல் ஒப்பந்தங்கள் போடப்பட்டு முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன. தோழர் பெரியார் சொன்னதுபோல, ஆங்கிலேயர்களிடமிருந்து பார்ப்பன - பனியாக்களுக்கு நடந்த மேட் ஓவர்தானே இந்திய விடுதலை. அப்படிப்பட்ட பார்ப்பன - பனியா இந்தியாவில்தான் தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் போலவே ஆற்றுநீர் உரிமைகளும் பறிபோய்விட்டன.
எனவேதான் பெரியார், "தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழர் நாட்டையும், தமிழ் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தன்னுடைய மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்" என்றார்.
உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரி 27 அன்று வழங்கிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறியது. முல்லைப் பெரியாறு அணையின் இணைப்பாக உள்ள சிற்றணையில் சிறுசிறு செப்பனிடும் பணிகளைச் செய்துமுடித்த பின் முழுக் கொள்ளளவான 152 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது. கேரள அரசின் மேல்முறையீட்டுக்குப் பிறகு 2007 ஆகஸ்டில் மீண்டும் தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் அனைத்து தீர்ப்புகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் கேரள அரசு குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டது. இந்திய அரசின் வனப்பாதுகாப்புச் சட்டங்களையும் மீறி முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக முதற்கட்டச் சோதனைகளையும் நடத்தி முடித்திருக்கிறது.
இந்திய அரசின் சட்டங்களையோ, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையோ மதிக்காத, செயல்படுத்தாத கேரள அரசினைக் கண்டித்து தமிழ்நாட்டு உரிமையைப் பெற்றுத் தர வேண்டிய மத்திய பார்ப்பன அரசு, எங்கோ, எந்த நாட்டிலோ பிரச்சனை என்பது போல கண்டுகொள்ளாமல் இருப்பதும், பிரச்சனை எல்லைமீறிப் போனபிறகு 'கமிஷனைப் போடு அல்லது கல்லைப் போடு' என்பது போல ஒரு விசாரணைக் கமிஷன் அமைப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது என்று சிக்கலைத் தீர்க்கும் எண்ணமில்லாமல் செயல்படுகிறது.
டேம் 999 என்ற ஒரு பொய்ப்பிரச்சாரப் படத்துக்கு மத்திய அரசு சென்சார் சான்றிதழ் அளிக்கிறது. அது கருத்துரிமை என்றால், அரசியல் சாராத கலை தொடர்பான விசயம் என்றால் நாங்களும் படம் எடுக்கிறோம். இந்திரா காந்தி கொலை பற்றி பஞ்சாப்காரனின் பார்வையில் - இராஜீவ் கொலை பற்றி ஈழத்தமிழ்ப் பெண்களின் பார்வையில் நாங்களும் படம் எடுக்கிறோம், அனுமதிக்குமா மத்திய அரசு? அவ்வளவு வேண்டாம் சங்கரராமன் கொலை பற்றி தற்போதைய முதல்வர் ஜெயலலிதா பார்வையில் படம் எடுக்கிறோம்; சென்சார் போர்டு அனுமதிக்குமா? இரு தேசிய இன மக்களுக்குள் மோதலை உருவாக்கக்கூடிய திரைப்படம் என நன்கு தெரிந்தும் படத்தை அனுமதிக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் வேதாந்தா, ஜிண்டால், போஸ்கோ, டாடா, மிட்டல், ரிலையன்ஸ் போன்ற பார்ப்பன - பனியா - பன்னாட்டுக் குழுமங்களால்தான் கனிமவளக் கொள்ளை, கல்விக்கொள்ளை, கடல்வளக் கொள்ளை, பெட்ரோலியக் கொள்ளை, அலைக்கற்றைக் கொள்ளை என அனைத்து வகையான சுரண்டல்களும் நடத்தப்படுகின்றன. மேற்கண்ட பட்டியலில் உள்ள பார்ப்பன அதிகார வர்க்கத்தின் துணையோடுதான் சுரண்டல்கள் திட்டமிட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு, சில்லறை வர்த்தகத்திலும் நேரடி அந்நிய முதலீடு, கூடங்குளம் அணுஉலை அமைப்பு என மக்கள்விரோத முடிவுகளையும் இந்த அதிகார வர்க்கம்தான் செயல்படுத்துகிறது.
இந்த பனியா - பன்னாட்டு வணிகக்கும்பல்களின் நலன்களுக்காக மேற்கண்ட பார்ப்பன அதிகார வர்க்கம் போடும் திட்டங்கள்தான் நமக்கு பட்ஜெட்டாகவும், ஐந்தாண்டு திட்டங்களாகவும், தொழில் அபிவிருத்தி திட்டங்களாகவும் அரசியல்வாதிகளால் சொல்லப்படுகிறது. அவர்களுக்கு கொள்ளை இலாபம் தரும் திட்டங்களைச் செயல்படுத்தவதற்காக இந்த பனியா - பன்னாட்டுக்கும்பல் இந்திய அரசியல்வாதிகளுக்கு பிச்சை போடும் காசைப் பங்கு போடுவதில் வரும் சண்டையும், இந்தக் கூட்டுக்கொள்ளையை மக்கள் கவனிக்காமல் இருக்க மத்திய அரசால் நடத்தப்படும் நாடகங்களும்தான் தான் நமக்கான அரசியல்.
முதன்மை எதிரி
தொடர்ந்து பல வருடங்களாக சிக்கல்களை வளரவிட்டு தேசிய இனங்களுக்குள் மோதலை உருவாக்கி விட்டு, தனது சுரண்டல்களை அயராது நடத்திக்கொண்டிருக்கும் இந்தியத் தேசியமும் அதனால் பயன்பெறும் பார்ப்பன - பனியாக்கும்பல்களுமே நமது முதன்மை எதிரி. அடாவடியாக நடந்துகொள்ளும் மலையாளிகளுக்கு எதிராக அவர்களது வணிக நிறுவனங்களைத் தாக்குகிறோம்; கேரள எண் உள்ள வாகனங்களைத் தாக்குகிறோம்; கேரளாவுக்கு எதிராக பொருளாதார முற்றுகைப் போராட்டம் அறிவிக்கிறோம். எல்லாம் சரிதான். எத்தனை நாளுக்குத்தான் அம்பை மட்டும் எதிர்த்துக்கொண்டிருப்போம்? எப்போதுதான் எய்தவனை நோக்கித் திரும்புவோம்? சர்வதேசச் சட்டங்கள் நமக்கு ஆதரவாக உள்ளன. ஆனால் நாம் தனி நாடாக இருந்தால்தான் அவை பயனளிக்கும். இந்த உண்மைகளை எப்போது உரிமை மறுக்கப்பட்டவர்களிடம் சொல்லப் போகிறோம்?
இளைஞர்கள் ஆலுக்காஸ் நகைக்கடை தாக்குதல், காய்கறி லாரிகளை மறித்தல், கேரளா செல்லும் பேருந்துகளை மறித்தல், நாயர் டீக்கடை, பேக்கரிகளை உடைத்தல் என ஒவ்வொரு வருடமும் நடத்திக் கொண்டிருக்கத்தான் போகிறோம். நமது தலைவர்களும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், உச்சநீதிமன்ற வழக்கு, பிறகு நடுவர் மன்றம், அந்தத் தீர்ப்புகளை அமுல்படுத்த சாகும்வரை உண்ணாவிரதம் எனத் தொடர்ந்து இயங்கத்தான் போகிறார்கள். நவம்பர் மாதமானால் முல்லைப் பெரியாறு, ஜூன், ஜூலையானால் காவிரி உரிமைப் போராட்டம் என சீசன் வியாபாரம் போன்ற சீசன் போராட்டங்களையும், பயனற்ற சடங்குத்தனமான போராட்டங்களையும் காணச் சகிக்காமல் மனம் புழுங்கி, வெந்து முத்துக்குமார்களும் செங்கொடிகளும் தீயில் வெந்து மடிந்துகொண்டுதான் இருப்பார்கள். ஒருமுடிவு வேண்டாமா?
தமிழ்நாட்டு விடுதலையில் அக்கறையுள்ள தோழர்கள், தலைவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேசியத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுங்கள். பெரியாரைப் போல, பெரியார் காலத்தைப் போல இந்திய தேசியக் கொடி எரிப்பு, இந்திய யூனியன் வரைபட எரிப்பு, இந்திய அரசியல் சட்ட எரிப்பு போன்ற போராட்டங்களை அறிவியுங்கள். தனித்தமிழ்நாட்டுக்கான பரப்பரைகளை முல்லைப் பெரியாறு அணையிலிருந்தே தொடங்குங்கள். உச்ச நீதிமன்றம் நம்மைக் காப்பாற்றும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நம்மைக் காப்பாற்றுவார், பாரதிய ஜனதா காப்பாற்றிவிடும், நடுவர் மன்றம் உரிமைகளைப் பெற்றுத்தரும், தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டால் சாதித்துவிடலாம் என்று தமிழர்களை நம்ப வைக்காதீர்கள். இந்திய தேசியம் அலறுவதில் தான் தமிழர் உரிமை மலரத் தொடங்கும். இந்திய தேசியத்தையும் அதைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களையும் தாக்கத் தொடங்குங்கள்.
1980களில் பேராசிரியர் செ.ஆ. வீரபாண்டியனால் தொகுக்கப்பட்டு திராவிடர் கழகத்தால் வெளியிட்ட ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ நூலில் பெரியாறு அணை, காவிரி சிக்கல்கள் விரிவாகப் பேசப்பட்டு அதன் எதிரிகள் பார்ப்பனர்களும் இந்திய தேசியமும் என்பது உறுதிப்பட்டது. அதற்குப் பிறகு தி.க.வாலும், பெரியார் தி.க.வாலும், தமிழ்த்தேசிய இயக்கங்களாலும் நடந்த ஆற்றுநீர் உரிமை தொடர்பான பரப்புரைகளும், போராட்டங்களும் பார்ப்பனர்களை எதிர்த்தோ, இந்திய தேசியத்தை எதிர்த்தோ திட்டமிடப்படவில்லை. அடையாளம்கூட காட்டப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ அவர்கள் “அணை உடைந்தால் நாடு உடையும்” என சரியான திசைநோக்கித் திரும்பியிருக்கிறார். ஒரு அரசியல் அமைப்பை நடத்தும் வை.கோ.வுக்கே இந்தத் துணிச்சல் இருக்குமானால், தேர்தல் அரசியலில் பங்கேற்காத மாற்று அரசியலில் ஆர்வமுள்ள இயக்கங்கள், தோழர்கள், இளைஞர்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
No comments:
Post a Comment