Tuesday, December 20, 2011

முல்லைப் பெரியாறு - 'இந்து' ராமின் பார்ப்பனத் திமிர்

தமிழீழ விடுதலையில் தனது ஊடக பலத்தை முழுமையாக தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய Hindu குழுமம் வழக்கம் போல தற்போது முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலிலும் தமது தமிழின விரோதப் போக்கை பார்ப்பனத்திமிருடன் வெளிப்படுத்தியிருக்கிறது. தமது குழுமத்தின் சார்பில் வரும் ஃபிரண்ட்லைன், டிசம்பர் 30, 2011 இதழில் "1886 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமே தவறானது என்றும் முல்லைப்பெரியாறு அணை கட்டியதே தவறு, அதற்குப் பதிலாக புதிய அணையும் கட்டக்கூடாது, அந்தத் தண்ணீர் இல்லாமல் வாழ தமிழர்கள் பழகிக்கொள்ள வேண்டும்” என்றும் ஒரு நேர்காணல் வெளியாகி உள்ளது. அந்தக் கருத்துக்களை வெளியிட்டவர், மத்திய அரசின் முன்னாள் நீர்வளத்துறையின் தலைமைச்செயலாளரும், இந்தியாவின் முதல் தேசிய நீர் திட்டத்தின் வரைவினைக் கொடுத்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியுமான பி.இராமசாமி அய்யர் ஆவார். இவரைப்போலவே மனித உரிமை விசயங்களில் குரல் கொடுக்கும் கிருஷ்ண அய்யரும் கேரளாவில் அச்சுதானந்தன் நடத்திய கண்டனப் பேரணியில் பங்கேற்றுள்ளார்.

மேற்கண்ட இரு பார்ப்பனர்களும் கேரளத்தில் இருப்பவர்கள். ஆனால் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு பார்ப்பான் இந்து ராமும் கேரள பார்ப்பனர்களுடன் இணைந்து மலையாளிகளுக்கு ஆதரவாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார். இராமசாம அய்யரின் நேர்காணல் வெளியாகி இருக்கும் அதே ஃப்ரண்ட்லைன் இதழில் ஆர்.கிருஷ்ணகுமார் என்பவர் முல்லைப்பெரியாறு அணையில் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

அதையும் சிறப்பாக வெளியிட்டு மகிழ்கிறது ஃப்ரண்ட்லைன். 1886இல் தங்களுக்கு முழுஉரிமை இல்லாத, சொந்தமில்லாத நிலம் என்று தெரிந்தும் வெள்ளையரையும் ஏமாற்றி திருவாங்கூர் சமஸ்தானத்தால் போடப்பட்ட ஒப்பந்தத்தில் திருவாங்கூர் சார்பாக கையொப்பமிட்டவன் திவான் இராமையங்கார் என்ற பார்ப்பான் தான்.

மத்திய அரசின் மத்திய நீர்வழி ஆணையத்தின் தலைவராக இருந்த மலையாளியான கே.சி.தாமஸ் அண்மையில் 2011 நவம்பர் 27 அன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, "பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் உள்ளது. அதன் உறுதியைப் பற்றி யாரும் கவலைப்படவேண்டியதில்லை. கேரள அரசின் கூற்றுகளில் உள்நோக்கம் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரம் வரை நீர் தேக்கினாலும் எந்த ஆபத்தும் இல்லை" என்று கூறியுள்ளார்.

1980இல் அணை தொடர்பாக கேரள - தமிழ்நாடு இருமாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. அப்பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்து தலைமை தாங்கியவர் இதே கே.சி தாமஸ் தான். அப்போது மத்திய நீர் வழி ஆணையத்தின் தலைவராக இருந்தார். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவாக, அணை பாதுகாப்பாக இல்லை என்றுகூறி அதைப் பலப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொன்னார். அதன்படி அணை பலப்படுத்தப்பட்டது. அதைத் தான் மீண்டும் கே.சி தாமஸ், 1981க்குப் பிறகு அணையின் பாதுகாப்புப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை எனக் கூறுகிறார். மேலும் இராஜஸ்தான் மாநிலத்தில் 1730ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு அணையே இன்றுவரை உறுதியாக இருக்கிறது என்றும் கூறுகிறார். ஆனால் பார்ப்பன இராமசாமியோ எந்த அணையும் 100 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பானது அல்ல என்கிறார். இந்த பார்ப்பான்தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேசிய நீர்க் கொள்கையை வடிவமைத்தவராம். தமிழர்களின் ஒட்டுமொத்த ஆற்றுநீர் உரிமை இழப்புகளுக்கு இவர்தான் காரணம் என்பது தெளிவாகிவிட்டது.

அதேபோல 1979 ஆம் ஆண்டு "முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்து எஞ்சியுள்ள நீரை இடுக்கி அணைக்குத் திருப்பி அங்கு மின்சாரம் தயாரிக்கலாம்" என்ற கருத்தை முதன்முதலில் ஒரு அறிக்கையாக தயாரித்து கேரள அரசுக்குக் கொடுத்து மோதலுக்கு முன்முயற்சி எடுத்தவர் எம்.கே.பரமேசுவரன் நாயர் ஆவார். அவரும் அண்மையில் பத்திரிக்கையாளர்களிடம் அணை உடைந்தாலும் அந்த நீரை இடுக்கி அணை முழுமையாகத் தாங்கிக் கொள்ளும், அணை பற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், பி.இராமசாமி அய்யர் நேர்மாறாகப் பேசுகிறார். அவரின் நேர்காணல் இதோ:-

116 ஆண்டுகாலமான ஒரு அணையை நாம் படிப்படியாக பயன்பாட்டினின்று விலக்கவேண்டும். படிப்படியாக விலக்குதல் என்பது அதை நம்பி வாழும் மக்கள் மாற்று வாழ்வாதாரங்களுக்கு தங்களை பழக்கிக்கொள்ள நேரம் வழங்குதல் ஆகும்.

முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தமானது கேரளாவிற்கு துரோகம் செய்துவிட்டதால் மக்களிடையே ஆழமான எதிர்ப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சிக்கலுக்கு இதுவே ஆணிவேர். இது இந்தியா கோசி மற்றும் காண்டக் நதி ஒப்பந்தத்தில் நேபாளின் எதிர்ப்புணர்வுக்கு சமமானது.

1886இல் திருவாங்கூர் சமஸ்தானம் ஏன் இப்படிப்பட்ட அநியாயமான ஒப்பந்தத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்? 1970-யில் ஏன் கேரள அரசு பெரிய திருத்தத்தை முன்வைக்கவில்லை? ஏன் ஆழியாறு பரம்பிக்குளம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று தெரியவில்லை.

பொதுவாக மக்கள் சொல்கிறார்கள் எந்த அணைக்கும் 100 ஆண்டுகள் தான் ஆயுள் என்று. இந்த அணையும் அதைக் கடந்துவிட்டது. பொறியியல் நுட்பம் மூலம் கூடுதலாக ஒரு 10 ஆண்டுகள் நகர்த்தலாம். அதற்கு மேல் வாய்ப்பு இல்லை. சாசுவதமாக இது இருக்க முடியாது. எனவே இதிலிருந்து தமிழ்நாடு படிப்படியாக விலகிக்கொள்ள வேண்டும். அதற்காக நான் இதை நாளையே மூடவேண்டும் என்று சொல்லவில்லை. படிப்படியாக இதிலிருந்து விலக ஆயத்தமாக வேண்டும்.

அணையில் முழு அளவு 142 அடி. கேரளா 136 அடிக்கு மேல் விரும்பவில்லை. தமிழகத்தால் இதை வைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாதா? அது என்ன முழு தண்ணீரையுமா பயன்படுத்துகிறது?

முதலாவதாக இந்த அணை கட்டியிருக்கப்படக்கூடாத அணை. இயற்கையை அத்துமீறி வழிமறித்து கட்டப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத காலத்தில் கட்டப்பட்டது. இந்தக்காலம் என்றால் இப்படிப்பட்ட அணைகட்ட ஒப்புதல் வழங்கப்பட்டிருக்காது. ஆனால் இது நடந்துவிட்டது. வரலாற்றை நாம் திருத்தியமைக்க முடியாது. இந்த அணைக்கு வயது இப்பொழுது 116 ஆண்டுகள். இனியேனும் இதனிலிருந்து படிப்படியாக விலகிக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த மக்கள் மாற்று பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பழகிக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றது. நதிநீரின் இயற்கை போக்கைக் காக்க வேண்டி நிறைய போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இங்கே என்ன செய்யவேண்டுமென்றால் இருக்கும் நீர் அளவில் பராமரித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாடிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

என்னுடைய பதில் என்னவென்றால், எந்த தொழில்நுட்பக் குழு அணையின் பாதுகாப்பு பற்றி என்ன அறிக்கை கொடுத்தாலும் நாம் மக்களுடைய பாதுகாப்பில் ரிஸ்க் எடுக்கக்கூடாது. மக்கள் பயந்தது பயந்தது தான். அதை மாற்றமுடியாது. அரசியல்வாதிகள் வேண்டுமானால் அரசியல்படுத்தலாம்; ஆனால் மக்களின் பயம் என்பது உண்மையானது. பூகம்ப அளவு சிறியதாக இருக்கலாம். ஆனால் மக்களின் பீதி உருவானது உருவானது தான். ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும். அணை நிரந்தரமானது அல்ல என்னும் பொழுது எத்தனை ஆண்டு என்ற கணக்கு எல்லாம் பார்க்கவேண்டியது இல்லை, மாற்று என்ன என்று பார்க்கவேண்டியது தான்.

காவிரி நீர் பிரச்சனையைப் பாருங்கள். 670 டி.எம்.சி நீரில் 480 டி.எம்.சி நீரை தமிழகம் பயன்படுத்தி வந்தது. ஆனால் அதுவே எப்பொழுதும் சாசுவதமானது என்று இல்லை. பின், கர்நாடகம் காவிரி நீரை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தபொழுது தமிழகம் குறைந்த அளவு நீருக்குப் பழகிக்கொண்டது. அது போலத்தான், மாறிவரும் சூழலுக்குத் தகுந்தது போல தமிழகம்- வைகை அணையை நம்பியிருக்கும் மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

புதிய அணை தொடர்பாக சொல்லவேண்டுமென்றால், நாங்கள் 100 ஆண்டுகளுக்கு முன் தவறு செய்துவிட்டோம். மீண்டும் அதை செய்யத்தயாராக இல்லை. ஆறு என்பது இயற்கை அமைப்பு. அதைத் தடுப்பது அணை கட்டுவது என்பது தவறு. ஆற்றை வளைப்பது, மறிப்பது சுற்றுச்சூழலை கெடுப்பது என்பது தவறு. கேரளாவின் கருத்துப்படி புதிய அணையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 999 ஆண்டு ஒப்பந்தமே மோசடியானது. கேரள அரசு தமிழகத்திற்கு நீர் தர மறுக்கவில்லை என்று சொல்லக்கூடாது. ஆழியாறு பரம்பிக்குளம் திட்டமே தவறானது. மக்கள் தமிழகத்திற்கு நீர் தர விரும்பவில்லை.

என்னதான் ரிப்பேர் செய்தாலும் அணையின் வயதைக் கூட்டினாலும், அப்படி செய்வது சரியா? அது தவறு. தமிழகம் இந்த ரிப்பேர் செய்வதற்கு செலவு செய்வது என்பது எல்லாம் விசயம் அல்ல. மேற்காக செல்லும் ஆற்றை கிழக்கு நோக்கி திருப்பி விடுவதே தவறான கொள்கை. சுப்ரீம் கோர்ட்டில் எல்லாம் இதைத் தீர்மானிக்க முடியாது. அதனுடைய பாதுகாப்பிற்கு அவர்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. - ஃப்ரண்ட்லைன் 30.12.2011

பிறப்பால் மலையாளிகளான, மலையாள தேசிய இனத்தைச் சேர்ந்த கே.சி.தாமஸ், எம்.கே.பரமேசுவரன் நாயர், அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி ஆகிய நீர் மேலாண்மை வல்லுனர்களும், சட்ட வல்லுநர்களும் அணைபற்றி அச்சப்படத் தேவையில்லை என்று நேர்மையுடன் அறிவிக்கின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டில், தமிழர்களின் உழைப்பால் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் இந்து ராம், கேரளாவின் இராமசாமி அய்யர் போன்ற தமிழ்த் தேசிய இனத்திலோ, மலையாள தேசிய இனத்திலோ இந்தியத் துணைக்கண்டத்தின் எந்த தேசிய இனத்திலோ சேர்க்க முடியாத - எந்த தேசிய இனத்துக்கும் உண்மையாக, நேர்மையாக இருந்திராத - வரலாற்றுக் காலம் முதல் இன்று வரை பலநூற்றாண்டுகளாக துரோகக் கும்பலாகவும், சுரண்டல் கூட்டமாகவும், ஆதிக்க இனமாகவும், இந்தியர் என்ற இல்லாத தேசியஇனத்துக்கு அடையாளமாகவும் வாழ்ந்துவரும் பார்ப்பனக்கும்பலானது - அறிவும், மனிதாபிமானமும், நேர்மையும் இன்றி “இந்த அணை கட்டியிருக்கவே கூடாத அணை, இந்த அணை நீர் இல்லாமல் வாழ தமிழர்கள் பழகிக்கொள்ள வேண்டும்” என்று நெஞ்சை நிமிர்த்தி நேர்காணல் அளிக்கிறது, அச்சிட்டுப் பரப்புகிறது என்றால், அதைத் தமிழர்களும் அனுமதிக்கிறோம் என்றால் தமிழர்களைவிட, திராவிடர்களைவிட சொரணையற்ற இனம் ஒன்று உலகில் இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது.

இதுபோன்ற நிலையை எண்ணித்தான் பெரியார் அன்றே சொன்னார்,

"பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியில் இருந்து திராவிட நாடு தனியாகப் பிரியாவிடில், சுதந்திரம் இல்லை, சோறு இல்லை, மான வாழ்வு இல்லை. இது உறுதி, உறுதி, உறுதி." - விடுதலை 25.02.1949

No comments: