Sunday, November 25, 2012

சாதிவெறி பா.ம.க.வை தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்!!

ஒரு காதல் திருமணத்தைக் காரணம் காட்டி தருமபுரி அருகேயுள்ள நத்தம் காலனி, கொட்டாம்பட்டி, செங்கல்மேடு ஆகிய தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்களில் 268 வீடுகளை அடித்து நொறுக்கியும், எரித்தும், தமது ஜாதிவெறியைத் தணித்துக் கொண்டுள்ளனர் அப்பகுதி வன்னியர்கள். பா.ம.க, வன்னியர் சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னணியாக இருந்து அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள ஆதிக்க ஜாதியினர் தொண்டர்களை இணைத்துக்கொண்டு இந்த மனிதநேயமற்ற தாக்குதல் நடந்துள்ளது.
ramadoss_330லெட்டர்பேடு கட்சிகள் முதற்கொண்டு, தி.மு.க வரை எல்லா அமைப்புகளும் இத்தாக்குதல் தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கடந்த நவம்பர் 17 அன்று பி.பி.சி தமிழ் வானொலியில் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் அவர்களும், வன்னியர் சங்க காடுவெட்டி குருவும் ஒரு நேர்காணலை கொடுத்துள்ளனர். அதன் ஒலி வடிவம் பி.பி.சி தமிழ் இணையதளத்தில் உள்ளது.
குற்ற உணர்வு சிறிதும் இன்றி நடந்த கோரத் தாக்குதலை நியாயப்படுத்தியும், இனிமேல் இதுபோன்ற ஜாதிவெறித் தாக்குதல்கள் நடந்தால் அவையும் நியாயம்தான் என்றும் வெறி பிடித்துப் பேசியுள்ளனர். (http:/www.bbc.co.uktamilmultimedia201211121117_ramadoss.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1) இராமதாஸ் அவர்களின் நேர்காணல் வழியாக அவரது கருத்தாக அறிந்தவற்றைக் குறித்து சிறு விளக்கம் தெரிவிக்க வேண்டியுள்ளது.
“பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தினால் சிறு வயதுப் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி, நடத்தும் நாடகத் திருமணங்கள் குறைந்துவிடும்”
இதைத்தான் கொங்குவேளாளக் கவுண்டர்கள் பேரவை பொங்கலூர் மணிகண்டன் உட்பட பல்வேறு பிற்படுத்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பெண்ணின் திருமண வயதை உயர்த்தினால் குறையப் போவது காதல் திருமணங்கள் அல்ல. ஒரே ஜாதிக்குள் தினமும் ஆயிரக்கணக்கில் நடக்கும் திருமண நாடகங்கள் தான்.
“தன் பெண்ணுக்கு ருது காலத்துக்கு (பருவம் எய்தும் காலம்) முன் திருமணம் செய்துகொடுக்காத தந்தை நரகத்திற்குப் போவான்” என மனுசாஸ்திரம் 9 ஆம் அத்தியாயத்தில் 4 வது ஸ்லோகமாகச் சொல்கிறது. இந்த மனுதர்மத்தை எதிர்த்து 1928லேயே இந்திய பாராளுமன்றத்திலேயே விவாதம் நடந்தது. “பால்யவிவாகம் இல்லாவிட்டால் நாட்டில் உண்மையான கற்போ, ஒழுக்கமோ சாத்தியமில்லை” என்று பழம்பெரும் காங்கிரஸ் தலைவன் பார்ப்பன எம்.கே. ஆச்சாரி பாராளுமன்றத்திலேயே பேசினான். தமிழ்நாட்டு பார்ப்பான் சத்தியமூர்த்தி குழந்தைத் திருமணத்தை ஆதரித்து போராடிக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் 1929 இல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெரியார் “பெண்ணின் திருமண வயதை 16 க்கு மேல் என நிர்ணயிக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றினார். நீதிக்கட்சி வழியாக அதைச் சட்டமாக்கினார். தனது குடிஅரசு ஏட்டில் 5 வயதுக்கு உட்பட்ட கைம்பெண்கள், விதவைகளின் எண்ணிக்கையை வெளியிட்டு குழந்தைத் திருமணங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். பெரியாரின் பெரும் போராட்டத்தின் விளைவாகத்தான் பெண்ணின் திருமண வயது 18 என உயர்ந்துள்ளது. டாக்டர் இராமதாஸ் சொல்லும் திருமண வயதுக் காரணம் எவ்வளவு தவறானது என்பதற்கு மத்திய அரசின் புள்ளிவிபரங்களே ஆதாரமாக உள்ளன. Registrar General and Census Commissioner. (2008). Census of India 2001: Marital Status and Age at Marriage: An Analysis of 2001 Census Data. New Delhi. p. 59 இதில் தரப்பட்டுள்ள தகவல்.
தமிழ்நாட்டில் 15 வயதுக்குள் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2001 ஆண்டு கணக்குப்படி 15,896. இவர்கள் அனைவரும் குழந்தைகள் மட்டுமல்ல; 15 வயதுக்கு முன்பே திருமணம் நடந்து குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள். இந்த குரூரத்தைச் செய்தது - இந்த நாடகத் திருமணங்களை நடத்தியது காதல் அல்ல. ஜாதியும், ஜாதியைக் காப்பாற்றும் குடும்பங்களும் தான்.
மேலும் 2007 ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் நடைபெற்ற திருமணங்களில் 24 சதவீத திருமணங்கள் 18 வயதுக்கு முன்பே முடித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஏமாற்று ஜாதித்திருமணங்களையும் நடத்தியது காதல் அல்ல. ஜாதியும், ஜாதியைக் காப்பாற்றும் குடும்பங்களும்தான்.
டாக்டர் இராமதாஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், “சுமார் 2000 திருமணங்கள் நாடகத் திருமணங்களாக நடந்துள்ளன; ஆதாரம் இருக்கிறது” என்கிறார். ஆதாரங்களுடன் பட்டியலைத் தரமுடியுமா? நீங்கள் பங்கேற்ற மத்திய அரசு வெளியிட்டிருக்கும் விரிவான புள்ளி விபரங்களையும், ஆய்வுமுடிவுகளையும் நாங்கள் தருகிறோம். எனவே திருமண வயதை 18லிருந்து 21 கூட வேண்டாம் 30 ஆகக்கூட உயர்த்தலாம் நல்லதுதான். பெண்ணின் மண வயதை உயர்த்த, உயர்த்த ஜாதிமறுப்புத் திருமணங்களுக்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளதால் எங்களுக்கு மகிழ்ச்சியே!
தருமபுரி நத்தம் காலனி இளவரசன் திருமண வயதுக்கு முன்பே வன்னியப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய்விட்டார் என்று குற்றம் சாட்டும் இராமதாஸ் அவர்களே, மத்திய அரசு தரும் புள்ளி விபரங்களின்படி நடந்துமுடிந்த 24 சதவீத திருமணங்களைப் பற்றியும், அந்தத் திருமணங்களை நடத்தி வைத்தவர்களையும் குற்றம் சாட்டத்தயாரா? குறைந்தபட்சம் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களைத் திருமணம் செய்த பா.ம.க வினரை கட்சியிலிருந்து நீக்கத் தயாரா?
சொத்துக்காக இதுபோன்ற சிறுவயதுத் திருமணங்கள் நடக்கிறதாம். சொந்த ஜாதிக்குள் திருமணம் செய்த பெண்களுக்கே பெற்றோர் சொத்தில் உரிய உரிமையோ, பங்கோ கிடைப்பதே இல்லை. எண்ணற்ற ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திவைத்துக் கொண்டிருப்பவர்கள் பெரியார் தொண்டர்கள். அப்படி ஜாதிமறுப்புத் திருமணங்களை நடத்திவைத்து அந்தந்தப் பகுதியில் உள்ள ஆதிக்க ஜாதியினரின் தாக்குதல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி வருபவர்கள் பெரியார் தொண்டர்கள். அதன் அடிப்படையில் நடப்பவற்றைச் சொல்கிறோம். எந்த ஒரு ஜாதி மறுப்பு காதல் திருமணம் நடந்தாலும் பெண்வீட்டுத் தரப்பில் முதலில் தொடர்புகொள்பவர்கள் கேட்கும் ஒரே உறுதிமொழி என்ன தெரியுமா? “சொத்தில் அந்தப் பெண்ணுக்கு பங்குதரமாட்டோம். அந்தப் பெண் பிற்காலத்திலும் சொத்து கேட்கக்கூடாது என்று பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொடுங்கள். அவர்களை விட்டுவிடுகிறோம்” என்பார்கள். அப்படி உறுதிமொழியை எழுதிக் கொடுத்தவுடன் சிக்கல்கள் சரியாகி விடுகின்றன. இது கடந்த 20 வருடங்களாக நடைமுறையில் சந்திக்கும் அனுபவங்கள்.
தலித் ஆண், பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண் என்ற திருமணத்தில்தான் இந்தப் பிரச்சனை என்பதும் தவறு. பல சம்பவங்கள் இருப்பினும் ஒரே எடுத்துக்காட்டு. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் ஒரு தெலுங்குச் செட்டியார் ஆண் – கன்னட செட்டியார் பெண்ணைத் திருமணம் செய்ததற்காக அந்த ஊரில் இருந்த தெலுங்குச் செட்டியார்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
anbumani_ramadoss_650
அதுபோல கவுண்டர் என்ற ஜாதிக்குள்ளேயே வேட்டுவ ஆண் - வெள்ளாளப் பெண் என்று நடந்த திருமணம், ஆசாரி ஆண் - காரைக்குடி செட்டியார் பெண், மறவர் ஜாதி ஆண் - வன்னியர் பெண், பறையர் ஆண் - சக்கிலியர் பெண் இப்படி கணக்கிலடங்காத திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறோம். அனைத்து ஜாதியினரின் தாக்குதல்களையும் சந்தித்திருக்கிறோம். அனைத்திலும் சொத்துக்காக அலைந்தவர்கள் பெற்றோர்களும், ஜாதிக்கூட்டமும்தானே தவிர எந்தக் காதலர்களும் அல்ல.
சொந்த ஜாதிக்குள் 18 வயதுக்குள், 15 வயதிற்குள் நடக்கும் நடக்கும் நாடகத் திருமணங்கள் தான் சொத்தைக் குறிவைத்தும், வரதட்சணையைக் குறிவைத்தும் நடக்கிறதே ஒழிய எந்தக் காதலரும் சொத்தை மையமாக வைத்துக் காதலிப்பதில்லை. அதற்கு ஆதாரமான மத்திய அரசின் குற்றப்பிரிவு புள்ளி விபரங்களையே தருகிறோம். தமிழ்நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 207. வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தப்படுவதாக பதிவான குற்றங்கள் மட்டும் 262. வரதட்சணைக்காகவும், சொத்துக்காகவும் கணவனாலும், கணவனின் குடும்பத்தாராலும் கொடுமைப்படுத்தப்படுவதாக பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் 1648. வழக்காக வராமல் பல்லாயிரக்கணக்கான வரதட்சணைக் குற்றங்கள் நடந்து வருகின்றன. இவை அனைத்தும் ஜாதிக்குள் நடத்தி வைக்கப்பட்ட திருமணங்கள்தான். சதவீதக் கணக்குப் பார்த்தால்கூட இப்படிப்பட்ட சிக்கல்கள் 1 சதவீதம்கூட காதல் திருமணங்களில் இல்லை என உறுதியாகக் கூறலாம்.
மிக முக்கியமாக வெட்டுவதையும், அழிப்பதையும் நியாயப்படுத்தி பேசும் சொற்களைக் காண்போம்.
“இவ்வாறு ஒரு பெண் காதல் திருமணம் செய்வதால் அந்தப் பெண்ணின் குடும்பமே அசிங்கப்படுகிறது; ஒதுக்கிவைக்கப்படுகிறது. அப்படி துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது காதல் திருமணம் செய்து போய்விட்ட பெண் கர்ப்பிணியாக, வாழாவெட்டியாகத் திரும்ப வந்தால், அதைப் பார்க்கும் மானமுள்ள ஆம்பிள என்ன செய்வான்? வெட்டுவான், வெட்டுவான்...”
என காடுவெட்டி குருவும், இராமதாஸ் அவர்களும் உறுதியான குரலில் பேசியுள்ளனர்.
2001 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் விவாகரத்து ஆனவர்களின் எண்ணிக்கை 2,49,356. இந்தப் பத்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைத் தாண்டி உயர்ந்திருக்கும். இவற்றில் இராமதாஸ் சொல்வதை உண்மை என்று வாதத்திற்காக வைத்தால்கூட 2000 குடும்பங்களைக் கழித்து விடலாம். மீதமுள்ள இலட்சக்கணக்கான பெண்களின் குடும்பத்தில் மானமுள்ள ஆம்பளைகளே இல்லையா? அப்படி மூன்று இலட்சம் பெண்களை வாழாவெட்டியாக அனுப்பிய ஜாதிமான்களை வெட்டித் தள்ள காடுவெட்டிகுருவோ, டாக்டர் இராமதாசோ தயாரா?
கடந்த 03.10.12 அன்று இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி டி.சி.எஸ். இராஜா சொக்கலிங்கம் அவர்கள் “தினமும் 5 முதல் 10 விவாகரத்து வழக்குகள் தாக்கல் ஆகின்றன” என்றும் “ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகள் 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும்” தெரிவித்துள்ளார். இப்படி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஏமாற்றுத் திருமணங்களை நடத்தியது காதல் அல்ல. ஜாதியும், ஜாதியைக் காப்பாற்றும் குடும்ப அமைப்பும்தான். அனைத்து ஏமாற்று மணமகன்களையும் வெட்டித்தள்ள இராமதாஸ் தயாரா?  
 இப்படி வெட்டிவிடுவோம், கொளுத்தி விடுவோம் என்று மிரட்டி எந்தக் குடும்பத்தையும் வாழ வைக்க முடியாது. ஏதோ ஒரு இளைஞன் செய்த செயலுக்கு சம்மந்தமில்லாத மற்றவர்களின் வீடுகளைக் கொளுத்துவதை யாரும் ஏற்கமுடியாது. அது பறையர் இளைஞன் ஆனாலும்; வன்னிய இளைஞன் ஆனாலும், சம்மந்தப்பட்டவரைத் தவிர மற்றவர்களைத் தாக்குவதில் என்ன நேர்மை இருக்கிறது? இருந்தாலும் உங்கள் காட்டுமிராண்டித்தனமான வாதத்தை உங்கள் ஜாதிக்கும் பொருத்திப் பார்க்கலாமா? என்பதற்காகக் கேட்கிறோம்.
பொன்பரப்பியிலும், காடுவெட்டியிலும், திண்டிவனத்திலும் வன்னியரல்லாத மற்ற ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்து - நீங்கள் சொல்வது போல கர்ப்பிணியாக்கி - பெண்வீட்டிற்கே திருப்பி அனுப்பிய வன்னிய இளைஞர்களை உங்களுக்குத் தெரியாதா? தெரியாவிட்டால் பட்டியலை நாங்கள் தருகிறோம். அந்த இளைஞர்களின் சொந்த கிராமத்தை - வன்னிய கிராமங்களை - நத்தம் காலனியை எரித்தது போல எரிக்கவும், சூறையாடவும் தயாரா? பிற ஜாதிப் பெண்களை ஏமாற்றி வீட்டுக்கு அனுப்பிய வன்னிய இளைஞர்களை வெட்டுவதற்கு நீங்கள் தயாரா? மாமல்லபுரத்தில் அடுத்த வன்னியர் சங்க விழாவில் இப்படி பேசவாவது தயாரா? வன்னியப் பெண்களுக்கு மட்டும்தான் மானம், எதிர்காலம் எல்லாம் இருக்கிறதா? மற்ற ஜாதிப் பெண்களெல்லாம் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு வாழ்கிறார்களா?
இதுபோன்ற பேச்சுக்களை டாக்டர் இராமதாஸ் கண்டிக்காததே மிகப்பெரும் குற்றம். அப்படியிருக்க, அவரே வெட்டுவேன் என்று நேர்காணல் கொடுக்கிறார் என்றால் உண்மைக் குற்றவாளி காடுவெட்டிகுருகூட அல்ல; டாக்டர் இராமதாஸ்தான். இவர்தான் திராவிடத்தை வீழ்த்தி தமிழ்த் தேசியத்தை மலரச் செய்யப் போகிறாராம். இவர்கள் பேசும் தமிழ்த் தேசியப் புரட்சி என்றால் என்ன என்பதை தர்மபுரியும், பி.பி.சியும் அம்பலப் படுத்திவிட்டன.
ஆக, இதுபோன்ற ஜாதிவெறி பிடித்த தலைவர்களின் நோக்கம், பெண்களின் நிம்மதியான வாழ்வோ, திருமண அமைப்பின் கோளாறுகளைச் சரிசெய்வதோ, பெண்களின் மானத்தைக் காப்பதோ அல்ல. தேர்தல் அரசியல் - மத்திய அரசு மந்திரிப் பதவி, தமிழ்நாடு முதலமைச்சர் பதவி இவைகளே இவர்களின் பகல்கனவு. அவர்கள் அதை நோக்கி காய் நகர்த்திக் கொண்டிருக்கட்டும். நம்மைப் போன்ற ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோர் - சமுதாயத்தை வளர்ச்சி நோக்கில் மாற்ற எண்ணுவோர் - முற்போக்கு இயக்கங்களில் இயங்குவோர் - அரசியல் கட்சிகளில் இயங்குவோர் - எழுத்தாளர்கள் - படைப்பாளர்கள் - பத்திரிக்கையாளர்கள் – சமூக செயல்பாட்டாளர்கள் - கலைஞர்கள் அனைவரும் இணைந்தோ, இணையாமலோ - கூட்டமைப்பாக ஒன்றுபட்டோ, தனித்தனியாக இயங்கியோ செய்ய வேண்டிய அவசியமான காரியம் ஒன்று. பா.ம.க வை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் முன் எப்போதும் நடைபெறாத சம்பவங்களில் ஒன்று அண்மையில் மதுரையில் நடந்த தேவர் பந்த். ஜாதி அமைப்புகள் வெளிப்படையாக பந்த் அறிவிப்பதும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் வெட்டுவோம் என்று கூச்சலிடுவதும் தமிழ்நாட்டை வடமாநிலங்களுக்கு இணையாகக் காட்டுமிராண்டிக் கூட்டமாக மாற்ற முனைவதாகும். இது போன்ற காட்டுமிராண்டிகாலச் செயல்பாடுகளுக்கு ஊக்கம் தருவதும், வழிகாட்டுவதும் பா.ம.க ஆகும். எதிர்காலச் சமுதாயம் நாகரீகத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என விரும்புபவர்கள் ஜாதிக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக, ஜாதி வெறியர்கள் அரசியலில் முக்கிய இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் பணியைத் தொடங்குவோம்.
ஆதாரங்கள்:
1. Registrar General and Census Commissioner. (2008). Census of India 2001: Marital Status and Age at Marriage: An Analysis of 2001 Census Data. New Delhi. p. 59
2. International Institute for Population Sciences. (2008). District Level Household and Facility Survey-3: (2007-08): Fact Sheets. Mumbai. p.1.
3. National Centre for Advocacy Studies. (2005). Parliament Digest Monsoon Session 2005: Bridging the Gapbetween Parliament and People: Gender, Agriculture, Natural Resources, Social Development Indicators. NewDelhi. p. 2.
4. International Institute for Population Sciences. (2006). National Family Health Survey – 3: 2005-06. Mumbai. p. 167.

No comments: