Wednesday, November 27, 2013

புலியூரில் மாவீரர் நாள்.27.11.2013



தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இந்தியாவில் 1984 ஜனவரி முதல் 1986 நவம்பர் வரை ஏறத்தாழ 3 ஆண்டுகள் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கும்பாரப்பட்டி, புலியூரில் ஆயுதப்பயிற்சி நடைபெற்றது. முகாமிற்கு தலைமைப் பொறுப்பேற்று பயிற்சி அளித்தவரும், இலங்கையில் நவாப்புலி இராணுவ முகாமை தாக்கச் செல்ல 14.02.1987 இல் கைத்தடியில் கரும்புலிகளுக்குப் பயிற்சிஅளிக்கும்போது நடந்த விபத்தில் வீரமரணம் எய்தியவருமான தளபதி பொன்னம்மான் நினைவாக புலியூர்பிரிவில் கொளத்தூர் பகுதிபொதுமக்களால் பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் எழுப்பப்பட்டது.

அந்த தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 27.11.13 அன்று மாலை 06.05 மணியளவில்  திராவிடர்  விடுதலை கழகத்தின் சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அங்கு கூடியிருந்த 1700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈகச்சுடர் ஏற்றி மறைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்தினர். 








Tuesday, October 29, 2013

தமிழர்களும் – தீபாவளியும்! சுரணை உள்ளவர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?

தமிழர்களும் – தீபாவளியும்

தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக்கொலை யானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.
சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லுவதுண்டு. இதற்கு காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும்.
இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாச மானது என்றாலும், ஆரியர்களின் இழி நிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்க மாக விளக்குவோம்.
அதாவது இரண்யாட்சன் என்னும் ராட்சசன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம்.
மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத் திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியைப் பிடுங்குவ தற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராட்சசனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து விட்டு விட்டாராம்.
அந்த சமயத்தில் அந்த பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம். அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம்.
அக்குழந்தைக்குத்தான் நரகாசூரன் என்று பெயராம். இவன் கசேரு என்ப வளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும், இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்.
விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம்.
நரகாசூரன் விஷ்ணுவைத் தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்தத் தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம். இதுதான் தீபாவளியாம். தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள்.
ஏனெனில், பூமியை ஒரு ராட்சசன் பாயாக சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்?
சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்து கொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன்மேல் இருந்திருக்கும்?
கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகா சூரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?
அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக்காமல் மலம் சாப்பிடும் ஜீவ உரு எடுப்பானேன்?
அந்த அழகை பார்த்து பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாளென்றால் பூமி தேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது. நம் பாரதத் தாயின் கற்புக்கும், காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது?
அவருடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாய் இருந்திருக்க வேண்டும்? பூமா தேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரத தேவியும் அரபிக் கடலும் வங்களாக் குடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
இப்படிக் கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள் முத்துரங்கம், ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவமானத்தை உலகம் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டி ருப்பான்?
இவற்றையெல்லாம் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர்களை, தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறை பிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள்.
ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டா லும், பார்ப்பன அடிமைகளான பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்களுக்குச் சுரணை இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப் பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்.
இந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங் களை தமிழர்களுக்கு படிப்பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே இந்தியைக் கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும், சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் – அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தியும், மன வேத னையும் படுவது உண்மையானால் – தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?

————— தந்தை பெரியார்-”குடிஅரசு” – கட்டுரை மறுவெளியீடு – 31.10.1937

Saturday, October 5, 2013

கொளத்தூர் மணி அவர்களின் தாயார் கு.பாவாயம்மாள் இறுதி ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தாயார் கு.பாவாயம்மாள் நேற்று இயற்கை எய்தினார். இன்று 05-10-2013 காலை 11-00 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பிணத்தை சுமக்கும் பாடை தயாரிப்பதற்கான கோல்களை, வீட்டு கூறையில் இருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தப்பட்டு, மீண்டும் வீட்டுக் கூறையிலேயே பொருத்தப்பட்டது. கழகப் பெண்களே உடலை சுமந்து சென்றனர். எந்த விதமான மத சடங்குகளும் பின்பற்றப்படவில்லை. ஆத்மா மறுப்பு கூறி, காரியம், கருமாந்திரம், கல்லெடுப்பு, படத்திறப்பு முதலிய எதுவும் கிடையாது என்றும், இத்துடன் அனைத்து நிகழ்வுகளும் நிறைவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டவுடன், இறுதியாக பாவாயம்மாள் அவர்களின் மகளும், கழகத் தலைவரின் சகோதரியுமான சரோஜா அவர்கள், தயாரின் உடலுக்கு தீயிட்டார்.
 
     




























Monday, June 17, 2013

கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது!

   
இன்று பொதுவாகவே மனித சமூகத்துக்கு உள்ள கஷ்டங்களையும், குறைபாடுகளையும் பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை.குறிப்பாக நமது நாட்டு மக்களிடையே உள்ள குறைபாடுகள் மற்ற நாட்டு மக்கள் குறைபாடுகளைவிட அதிகமாகவே இருந்து வருகின்றன.
நமது குறைகளுக்கு நிவாரணம் அரசியல் மாறுதலால்தான் முடியும் என்பது சிலருடைய அபிப்பிராயம். ஆனால் சுயமரியாதை இயக்கம் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை. அரசியலானது சமுதாயக் கொள்கையையும், மதக் கட்டளைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று நாம் கனவுகூடக் காண முடியாது. அரசியல் கொள்கைகளை, சமூகம் தான் நிர்ணயிக்க வேண்டும். சமூகத்துக்கு ஆதாரம் முன் குறிப்பிட்ட சமுதாய பழக்க வழக்கங்களும், ஜாதி மதக் கட்டளை களுமே ஆகும்.
எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் சமுதாய, ஜாதி, மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வருகின்றன. ஏதோ இரண்டொரு அற்ப விஷயங்களே இதிலிருந்து விலக்கு பெற்றதாக இருக்கலாம். நம் நாட்டு அரசியல் சீர்திருத்தம் என்பதில், அரசாங் கத்தாராவது, சமூக மக்களாவது ஜாதி மதப் பழக்க வழக் கங்களில் மாறுதல் செய்யச் சிறிதும் சம்மதிப்பதில்லை.
நமது இன்றைய அரசாங்கமோ, இந்நாட்டு மக்களிடம் ஜாதி மத பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்துவிட்டு ஆட்சி புரிகின்றது என்பது நாம் அறியாததா? இன்றைய நமது அரசியல் கிளர்ச்சியும், சுயராஜ்ஜிய முயற்சியும்கூட ஜாதி மத பழக்க வழக்கங்களுக்கு உத்திரவாதம் கொடுத்து விட்டே (கிளர்ச்சியும், முயற்சியும்) நடை பெறுகின்றது.
இன்றைய தினம் தோழர் ராஜகோபாலாச்சாரியாரால் எடுத்துக் காட்டப்படும் கராச்சித் திட்டத்தில் இந்த ஜவாப்புதாரித்தனமான உத்திரவாதம் கல்லுப்போல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
காங்கிரசு முயற்சி செய்யும் சுயராஜ்ஜியத்தில்
1) The article in the constitution relating to fundamental rights, shall include a guarantee to the communities concerned of protection of their culture, language, scripts, education, profession, practice religion and religious endowments.
2) Personal Laws shall be protected by specific provision to be embodied in the constitution.
1) சுயராஜ்ஜிய அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப் பாருடையவும் அவர்களது கலைகள், நாகரிகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவை களைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி, உத்திரவாதமளிக்கப்படும்.
2) ஒவ்வொரு சமூக தனிப்பட்ட உரிமைகளையும் பற்றிய சட்டங்களும் காப்பாற்றப்படும் படியான திட்டத் தையும் சேர்க்கப்படும் – என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதுதான் கராச்சித் திட்டம் என்பது.
அந்நிய அரசராகிய பிரிட்டிஷ் ஆட்சியின் வாக்குறுதி களின் பயனாகவே சமூக வாழ்வில் ஜாதிமதக் கொடுமை யில் ஒரு கடுகளவு மாறுதல்கூட செய்வது கஷ்டமாய் இருந்து வருகிறது.
சாரதா சட்டம்கூட அதனாலேயே சுயமரியாதையற்று பிணமாகக் கிடக்கிறது. இப்படியிருக்கும் போது இனி வரப்போகும் சுயராஜ்ஜியத்திலும் சமூகப் பழக்க வழக்கம், ஜாதி ஆகியவைகளுக்கு ஜவாப்புதாரித்தனமும், உத்தர வாதமும், வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருக்கும் போது அவைகளில் ஒரு சிறு மாறுதலாவது செய்யப்படக்கூடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?
ஆகவே இன்று இந்நாட்டு மக்களுக்கு உள்ள குறைபாடுகள் நீக்கப்படுவதற்கு, இன்றைய அரசியல் மாறுபட்டு விடுவதாலேயே ஏதாவது பலன் ஏற்பட்டுவிடும் என்பது வெறும் கனவாகத்தான் முடியும். இன்றுள்ள குறைபாடுகள் எல்லாம் இந்தியாவில் சுயராஜ்ஜியம் இருந்த காலத்திலும் இருந்து வந்தது தானே ஒழிய முகமதியர் ஆட்சியிலோ, பிரிட்டிஷார் ஆட்சியிலோ ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது.
மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் குணமும், மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப் படுத்திய குணமும், ராமராஜ்ஜியம் முதல் தர்ம தேவதை ராஜ்ஜியம் இடையாக, பிரிட்டிஷ் ராஜ்ஜியம் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது.
உண்மையை யோக்கியமாய் வீரமாய்ப் பேச வேண்டு மானால், முகமதிய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஓரளவு பழைய கொடுமைகளும், இழிவுகளும், குறைவு களும் குறைந்திருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் காட்டலாம். இந்த நாட்டில் ஜாதியால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 97 பேர்களாகும்.
ஜாதியால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 25 பேர்களாகும். மதத்தால் இழிவுபடுத்தப் பட்ட மக்கள் 100-க்கு 100 பேர் என்றுகூட சொல்லலாம். ஒவ்வொரு மதக்காரனும் மற்ற மதக்காரனை இழிவாய்த்தான் கருது கின்றான். ஒவ்வொரு ஜாதியானும் மற்ற ஜாதியானை இழிவாய்த்தான் கருதுகிறான். பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் கீழ்ஜாதி என்பது இந்து மத சம்பிரதாயம். இப்படிப்பட்ட இந்த இழிவான நிலைமை மாற வேண்டுமானால் இன்றைய பிரிட்டிஷ் அரசியல் மாறுவதால் முடியுமா?
பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரக் கொடுமைக்கும், அவர்களது வாழ்க்கை நிலை இழிவுக்கும், ஜாதியும் மதமும் காரணமாய் இருக்கின்றதை யாராவது மறுக்க முடியுமா? எங்காவது பார்ப்பனன் பட்டினி கிடக்கின் றானா? எங்காவது பார்ப்பான் சரீரப் பாடுபடுகின்றானா? கூலிக்கு மூட்டை தூக்குகின்றானா? நடவு நட்டுத் தண்ணீர் கட்டுகின்றானா?அது போலவே பறையர், பள்ளர் போன்ற கூட்டத்தினர் வாழ்க்கை எங்கும் எப்படி இருக்கிறது பாருங்கள். பாடுபட்டும் இக்கூட்டத்தாரின் நிலைமை எவ்வளவு பரிதாபகரமானதாய் இருக்கின்றது. இதற்கு ஜாதிமதம் அல்லாமல் வேறு காரணம் என்ன? ஆகவே, ஜாதி மதத்தின் காரணமாய் சிலருக்கு மாத்திரம் உயர்வும், செல்வமும் அநேகர்களுக்கு இழிவும், தரித்திரமும் மக்களிடம் நிலவுகின்றதே தவிர பாடுபடாததாலும், பாடுபடுவதாலும் அந்நிய அரசாலும், சுயராஜ்ஜியத்தாலுமா நிலவுகின்றது என்பதைத் தயவுசெய்து யோக்கியமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
கராச்சித் தீர்மானப்படி ஆட்சிப்புரியப் போகும் சுயராஜ்ஜியம் நமக்குக் கிடைத்தால், இந்தியா இந்த விஷயங்களில் இன்றுள்ள நிலையைவிட, கேடான நிலையையே அடையும் என்பதை உறுதியாய்க் கூறுவேன். மனிதனுடைய அவமானத்தையும், இழிவையும் போக்குவ தற்கு ஒப்புக் கொள்ளாத சுயராஜ்ஜியம் பித்தலாட்டச் சூழ்ச்சி ராஜ்ஜியமாகுமே ஒழிய, யோக்கியமான ராஜ்ஜியம் ஆகாது.
கேவலம் ஒரு தீண்டாமை விலக்கு என்கின்ற சாத னத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை காங்கிரசால் இந்தக் காரியத்துக்கு என்ன பயன் ஏற்பட்டது? இந்தக் காரி யத்தின் பேரால் காங்கிரஸ் பண வசூல் செய்து அதனால் ஓட்டுப் பெற்றது. மற்றப்படி தீண்டாமை விலக்குக்கு என்ன திட்டம் காங்கிரசினிடம் இருக்கிறது?
தீண்டாமை விலக்குக்குப் பாடுபடாமல் உயிர் வாழ முடியாது என்று சொல்லி பட்டினி கிடந்து ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த காந்தியார் என்ன சாதித்தார்?
இந்தியச் சட்டசபைக்கு காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டி யாக வந்து விட்டார்கள் என்பதைக் கேட்டவுடன், காந்தியார், சட்டசபைக்கு சமுதாய சம்பந்தமான தீர்மானங்களைக் கொண்டு போகாதீர்கள் என்று உத்திரவு போட்டுவிட வில்லையா? காங்கிரஸ் தீண்டாமை விலக்கு விஷயத்தில் நடந்து கொள்ளும் நாணயத்துக்கும் இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
ஆகவே, இந்த சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் இருந்தா லென்ன? சர்க்கார் நியமனக் காரர்களே இருந்தால் என்ன? என்று யோசித்துப்பாருங்கள். கராச்சி காங்கிரஸ் தீர்மானப்படி நடக்கும் சந்தர்ப்பம் கிடைத்த காங்கிரஸ் காரர்கள் தீண்டாமை விஷயத்தில் தான் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால், பொருளாதார விஷயத்தில் எவ்வளவு யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். மாதம் 1-க்கு 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதில்லை என்ற காங்கிரஸ்காரர்கள், ஒரு ஒற்றை ஆளுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூ. வீதம் சர்க்காரிடமிருந்து படி வாங்கினார்கள். இதில் ஒரு அளவு காங்கிரஸ் பண்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் உத்திரவு போட்டார். யார் இதற்கு கட்டுப்பட்டு நடந்தார்கள்?
தோழர் சத்தியமூர்த்தி அய்யர், தென்னாட்டு காங்கிரஸ் ஸ்தாபனத்தின் தலைவர் என்கின்ற ஹோதாவில் அதை மறுத்து ஒரு தம்பிடி கூட கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். தனது (ஒண்டி ஆள்) செலவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூபாயே போதாது என்று சொல்லி ஒரு காசு கூட குறைத் துக் கொள்ள மறுத்து விட்டார்கள். இந்த யோக்கியர்கள் நாளை சுயராஜ்ஜியம் பெற்ற பிறகு மாத்திரம் பொருளா தாரத்தில் எப்படி யோக்கியமாய் நடந்து கொள்ள முடியும்?
ஒரு காசு கூட சர்க்காருக்கு இன்கம்டாக்ஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லாத தோழர் சத்தியமூர்த்திக்கு தன் சாப்பாட்டுச் செலவுக்கு மாத்திரம் தினம் ஒன்றுக்கு ரூ.20 போதவில்லை என்றால் மற்றபடி மற்றவர்களுக்கு எவ்வளவு அதாவது செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்த கோடீஸ்வரர்களுக்கு, தினமும் எவ்வளவு ரூபாய் வேண்டியிருக்கும் என்பதைப் பார்த்தால் தோழர் சத்தியமூர்த்திக்கோ மற்ற காங்கிரஸ்காரர்களுக்கோ இன்றைய சம்பளம் அதிகம் என்றும், ஜனங்களால் தாங்க முடியாதது என்றும் சொல்லுவதற்கு யோக்கியதை உண்டா என்பதோடு, இவர்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுவார்களா என்றும் கேட்கின்றோம்.
நிற்க, ஜாதி, மதம், பழக்க வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய காங்கிரஸ்காரர்கள் சம்மதிக்கவில்லை யானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? பிராமணன், சூத்திரன், பறையன், சண்டாளன் என்கின்ற பெயர்களும், பிரிவுகளும் ஜாதி காரணம் மாத்திர மல்லாமல் மதங்காரணமாகவும் இருந்து வருகின்றன.
மதம் காரண மாத்திரமல்லாமல், தெய்வம் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதிக்கு இந்து மதமும், மனு தர்ம சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும் அதற்கும் மேல்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.
கடவுளுடைய முகம், தோள், தொடை, கால் ஆகியவைகளில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமல்லாமல், இந்து ஆஸ்திகர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும்.
பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார் என்பவர்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும், இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், முகமதியர், பௌத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து யாரால் பிறப்புவிக்கப்பட்டார்கள் என்பதும் கேள்விக்கு இடமான காரியமாய் இருந்தாலும் நான்கு வருணத்தையும் மறுக்க எந்த ஒரு இந்துவும் துணிவதில்லை. ஏதோ சில பேர்கள் சூத்திரர்கள் என்கின்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் இருப்பதால் நான்கு வருணத்தை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று ஒரு புறம் சொன்னாலும், மற்றொரு புறம் அக்கொள்கைக்கு அடிமையாகியே தீருகிறார்கள்.
எப்படி எனில் ராமாயணக் கதைக்கு வேறு வியாக் கியானம்
செய்கின்றவர்களும், பாரதக் கதையை நம்பாத வர்களும், அக்கதைகளில் வரும் பாத்திரங்களான ராம னையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. அது மாத்திரமல்லாமல் பாரதக் கதையில் ஒரு சிறு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் கிருஷ்ணன், அர்ச்சுனன் சம்பாஷணை என்னும் கீதையைப் பிரமாதமாக மதிக்கிறார்கள்.
கீதையை மறுக்க இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குத் தைரியம் வருமா என்பது சந்தேகம். அப்படிப்பட்ட கீதையில் கிருஷ்ணன் நான்கு வருணங்களை நான் தான் சிருஷ்டி செய்தேன் என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது. ஆகவே, கீதையை தங்களுடைய மதத்துக்கு ஒரு ஆதாரமாகவும் கிருஷ்ணனை ஒரு கடவு ளாகவும் கொண்டிருக்கிற ஒருவன், சூத்திரன் என்கின்ற பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவுகள் ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும். ஜாதிப் பிரிவுக்குப் பார்ப்பனன்தான் காரணம் என்று சொல்லுவது இனி பயனற்ற காரியம் என்பதே எனது அபிப்பிராயம்.
ஜாதிப் பிரிவுக்கும் அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்திரத்துக்கும், ஒற்றுமை இன்மைக்கும் இந்து மதம், மனுதர்ம சாஸ்திரம், பாரத ராமாயண புராண, இதி காசம் என்பவைகளோடு மாத்திரமல்லாமல் ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களும் காரணங்கள் ஆகும் என்பதை எந்த மனிதன் உணருகிறானோ, அவன்தான் வருண பேதத்தை, ஜாதி பேதத்தை ஒழிக்க நினைக்க வாவது யோக்கியமுடையவனாவான்.
காங்கிரசுக்காரர்கள் 100க்கு 99பேர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள். கீதையை நெருப்பிலிடவோ, கிருஷ்ண பகவானை மறுக்கவோ ஒப்புக் கொள்ளாதவர்கள்.
காங்கிரசுக்காரர்கள் மாத்திரம் அல்லாமல் நான்கு வருணம் கூடாது என்கின்ற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும், கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள். ஒரு அளவுக்கு மனுதர்ம சாஸ்திரத்தின் மீது பார்ப்பனர்கள் உள்பட பலருக்கு வெறுப்பும், அலட்சியமும் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், கீதையின் மீதும், கிருஷ்ணன் மீதும் வெறுப்பும், அலட்சியமும், அவ நம்பிக்கையும், மக்களிடையிருக்கும் அந் நம்பிக்கையை ஒழிக்கும் தைரியமும் ஏற்படுவது என்பது சுலபத்தில் எதிர் பார்க்க முடியாத காரியம். இந்தக் காரணங்களாலேயே இந்த நாட்டில் பல ஆயிர வருஷங்களாக இந்த இழிவும், முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் நிலவி வந் திருக்கின்றன. திருவள்ளுவர் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகித மாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர் விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.
இந்த முட்டாள்தனமான காரியம் பார்ப்பனர்களிடம் மாத்திரம் இருப்பதாக மாத்திரம் நான் சொல்ல வரவில்லை. சைவன்கள், வைணவன்கள் கீதையை, கிருஷ்ணனை, பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள். அவ நம்பிக்கைப்படவும் மாட்டார்கள். ஆனால், தங்களுக்குள் ஜாதி, பேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள், ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சள வில் மாத்திரம் போற்றப் படுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில் எப்படி ஜாதி ஒழியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஜாதியை உற்பத்தி செய்தவர்களை நாம் கேவலமாய் நினைத்து, அவர்கள் மீது மாத்திரம் ஆத்திரப்படுவதின் மூலமே நமது முயற்சிகள் இதுவரை நாசமாகிக் கொண்டே வந்துவிட்டது.
பார்ப்பனர்கள் ஜாதி விஷயத்தில் எவ்வளவுதான் நமக்கு விட்டுக் கொடுத்தாலும் கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது என்பதை ஞாபகத் தில் வையுங்கள். இது தெரிந்துதான் ராஜகோபாலாச் சாரியார் உள்பட பக்கா பார்ப்பனர்கள் ஜாதி போக வேண் டும்; ஜாதி போக வேண்டுமென்று நம்முடன் சேர்ந்து கொண்டு கோவிந்தா போடுகிறார்கள். நம் வீட்டிலும், பறையன் என்கின்றவன் வீட்டிலும் சாப்பிடு கிறார்கள். ஆனால் கீதையை வெகு பத்திரமாகக் காப் பாற்று கிறார்கள். கிருஷ்ணனுக்குப் பதினாயிரக்கணக் கான கோவில்கள் கட்டி கோடிக்கணக்கான மக்களைக் கும் பிடும்படி செய்து மூடர்களாகவும், அடிமைகளாகவும் ஆக்கி வருகிறார்கள்.
இதனால் அவர்களுக்கு நம் வீட்டில் சாப்பிடுவதின் மூலம் ஆகாரச் செலவு மீதி ஆவதுடன், அவர்களிடம் மக்களுக்குத் துவேஷம் இல்லாமல் போகவும் இடம் ஏற்பட்டு விடுகின்றதே தவிர, மற்றபடி ஜாதி பிரிவுக்குச் சிறிதுகூட ஆட்டம் ஏற்பட்டுவிடுவதில்லை.
நமக்கு இன்று வேண்டிய சுய ஆட்சி என்பதனாது ஜாதிக் கொடுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும், ஜாதிச் சலுகைகளையும் அழிக்கும்படியாகவும், ஒழிக் கும்படியாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால், நமக்கு அதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனபதோடு மனப்பூர்வமாய் வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.
கோவில் நுழைவு என்பதைப் பற்றிக் கராச்சி காங் கிரஸ் திட்டத்தில் ஒரு வார்த்தைகூட இல்லை. அதற்கு மாறாக பழக்கவழக்கங்களைக் காப்பாற்றுவதாகவே வாக்குறுதியும், உத்திரவாதமும் இருக்கிறது. சமீபத்தில் சத்தியமூர்த்தி தலைவர், கோவில் நுழைவைப் பற்றி, தான் ஒப்ப முடியாது என்று சொல்லி விட்டார். ரோடு, குளம், பள்ளிக்கூடம் இவைகளுக்கு மாத்திரம் அனுமதி கொடுப்பதாய் கருணை வைத்து அருள் புரிந்து இருக்கிறார். இதையே கராச்சிக் காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு சத்தியமூர்த்தியுடையவும், கராச்சி காங் கிரசினுடையவும், காந்தியாரினுடையவும் தயவு எதற்கு என்பது நமக்கு விளங்கவில்லை. ரோடும், பள்ளிக் கூடமும், குளமும் சர்க்கார் பாதுகாப்பில் இருப்பவை. அவை தினமும் சர்க்கார் உதவியால் நடந்து வருபவை. ஆதலால் அதை ரயில், தந்தி, தபால் போல் எல்லா மக்களுக்கும் கிறிஸ்துவர், முகமதியர் உட்பட சம சுதந்திர மாய் அனுபவிக்க கட்டுப்பட வேண்டியவர் களாகிறார்கள்.
கோவில் மதத்தைச் சேர்ந்ததானதினாலும், மதத்துக்கு மத ஜனங்களே பிரதிநிதி களானதினாலும், ஜனங்களுக்குக் காந்தியாரும், சத்திய மூர்த்தியாரும் பிரதிநிதிகளாக ஆகிவிட்டதாலும் கோவில் பிரவேசம் என்பது களப்பிரதிநிதிகளையும், ஜனப் பிரதிநிதி சபையான காங்கிரசையும் சேர்ந்தது என்று சொல்ல வேண்டி இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் காந்தியாருக்கும் இஷ்ட மில்லையானால், சத்தியமூர்த்தியாருக்கும் இஷ்டமில்லை யானால், காங்கிரசுக்கும் இஷ்டமில்லையானால், பிறகு இந்த அரசியல் பிரிட்டிஷ் அரசாங்கம் மாறி காங்கிரஸ் ஆட்சியோ, காந்தி ஆட்சியோ, சத்தியமூர்த்தி ஆட்சியோ ஆகிவிடுவதால் என்ன லாபம் என்று கேட்கின்றேன்.
நிறபேதம் மாறுவதால் அதாவது வெள்ளை நிறக்காரர் ஆட்சி மாறி பழுப்பு நிறக்காரர் ஆட்சி வந்தவுடன் ஜனங்களுக்கு இன்றுள்ள இழிவு மாறிவிடும் என்று கருதுவது போன்ற முட்டாள்தனம் வேறொன்றுமில்லை.
கொள்கைகள் மாற்றமடைய வேண்டும். அதை மாற்றுவதற்கு ஒப்புகிறவர்கள் கைக்கு ஆட்சி வர வேண்டும். அது வர முடியவில்லையானால் பொது மக் களிடம் இன்னும் 10 வருஷத்துக்கோ, 100 வருஷத் துக்கோ பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அதில்லாமல் ஜஸ்டிஸ் மந்திரிகள் உள்ள ஸ்தானத்தில், சத்தியமூர்த்தி, பிரகாசம் மற்றும் இவர்கள் அடிமைகள் போய் உட்கார்ந்தால் ஒரு மாறுதலையும் கண்டுவிட முடியாது. ஆகவே, வீண் சூழ்ச்சிப் பிரச்சாரங்களையும், துவேஷப் பிரச்சாரங்களையும், சுயநலப் பிரச்சாரங் களையும் கண்டு மக்கள் யாவரும் ஏமாந்துவிடாதீர்கள்.
                                                               —-அருப்புக்கோட்டை, திண்டிவனம், சேலம், விழுப்புரம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவுகளின் சாரம்– -”குடிஅரசு’ – சொற்பொழிவு – 02.06.1935

Thursday, December 27, 2012

மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டின் தீர்மானங்கள்


தீர்மானம்: 1

உலகிலேயே எங்குமில்லாத ‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்பை மூவாயிரம் ஆண்டுகளாகத் திணித்து – தொடர்ந்து உயிர்த்துடிப்போடு நீடிக்கச் செய்து கொண்டிருப்பது மனுசாஸ்திரம். இப்படி ஒரு சாஸ்திரம் இருப்பதை அறியாதவர்கள் கூட, வர்ணாஸ்ரம உளவியலில் கட்டுண்டு ஊறிப்போய் நிற்கின்றனர். இந்த வர்ணாஸ்ரமம் வழியாக – காலம் காலமாக, சமூக – அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பார்ப்பனர்கள் – இந்த சமூக அமைப்பு உருக்குலையாமல், அரண் அமைத்து வருகிறார்கள்.

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே முரணானது இந்த மனுசாஸ்திரம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சட்டம்; சட்டத்தின் முன் அனைவரும் சமமாக முடியாது என்கிறது மனுசாஸ்திரம். ‘பிராமணனுக்கு’ அடிமையான ‘சூத்திரரின்’ கல்விக்கு தடை போடுகிறது மனுசாஸ்திரம்; மாறாக, கட்டாய இலவச கல்வியை அனைவருக்கும் வலியுறுத்துகிறது அரசியல் சட்டம். குழந்தைகளுக்கு – இளம் வயதிலேயே – திருமணம் செய்ய வலியுறுத்துகிறது மனுசாஸ்திரம்; அதைக் குற்றமாக்கி திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்கிறது அரசியல் சட்டம். பெண் ஆணுக்கு அடிமைப்பட்டவள் என்கிறது மனுசாஸ்திரம்; இருவருக்கும் – சம உரிமை உண்டு என்கிறது அரசியல் சட்டம். ஆனால் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமைகளை சமூகம் ஏற்கவிடாமல், தடைச்சுவராக நிற்கிறது மனுசாஸ்திரம்.
இப்படி சட்டத்துக்கு நேர் முரணான – மனுசாஸ்திரத்தை – பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் தடையின்றி அச்சிட்டுப் பரப்பி வருகிறார்கள். பழக்க வழக்கங்கள், சடங்குகள், வாழ்வியல், வழியாக, சமூகத்திலும் தொடர்ந்து நீடிக்கச் செய்து வருகிறார்கள். சமூக மாற்றத்துக்கான எந்த திட்டங்களானாலும் – சட்டங்களானாலும் அதன் நோக்கத்தை அடைய விடாது – தடுப்பது, இந்த பாசிச பார்ப்பனிய மனுசாஸ்திர சிந்தனையும் – அதன் வழி கட்டமைக்கப்பட்ட ஜாதிய சமூகமும் தான்; இந்த எதார்த்தத்தையும், கடந்த காலங்களிலிருந்து பெற்று வரும் படிப்பினைகளையும் கருத்தில் கொண்டு – மக்கள் நலனில், விடுதலையில் உண்மையான கவலைக் கொண்ட கட்சிகள், இயக்கங்கள், பார்ப்பனிய மனுசாஸ்திர கட்டமைப்புகளுக்கு எதிரான இயக்கங்களை நடத்த முன் வர வேண்டும் என்று இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. இதன் முதற்கட்டமாக, அரசியல் சட்டத்துக்கே எதிரான ‘மனுசாஸ்திரத்தை’ சட்ட விரோதமாக அறிவித்து – அதை அச்சிட்டுப் பரப்புவதை குற்றமாக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.


தீர்மானம்:2

மனுசாஸ்திரம் கட்டமைத்துள்ள வர்ணாஸ்ரம அமைப்பில் உழைக்கும் மக்களை ‘பஞ்சமர்’ என்று இழிவு படுத்தி – சமூகத்திலிருந்து ஒதுக்கி – ஊருக்கு வெளியே சேரிகளில் தனிமைப்படுத்தியது.

புத்தர், ஜோதிபாபுலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட – மனுசாஸ்திர பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களால் – விழிப்புற்று – ஓரளவு உரிமை பெற்று – சம உரிமைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி வரும் நிலையில் –மனுசாஸ்திரத்தை உயர்த்திப் பிடிக்கும் முயற்சிகளில் சாதிய சக்திகள் களமிறங்கியுள்ளன.

மீண்டும் மனுசாஸ்திரம் காட்டும் வழியில் ‘தீண்டப்படாத மக்களை - ஒதுக்கி வைக்கும் மிரட்டல்களை வெளிப்படையாகவே தொடங்கி விட்டனர்; இந்த நவீன மனுவாத சக்திகளுக்கு எதிராக தமிழகம் தழுவிய அளவில் ஜாதி – பார்ப்பனிய மனுவாதிகள் எதிர்ப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி ஜாதிவெறி சக்திகளை முறியடிக்க இந்த மாநாடு உறுதியேற்கிறது.


தீர்மானம்:3

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன பிரிவில் அடங்கியுள்ள எண்ணிக்கையில் சிறுபான்மையினரான புதிரை வண்ணார், காட்டு நாயக்கர், நரிக்குறவர், குயவர், வண்ணார், நாவிதர், போயர் போன்ற பல்வேறு சமுதாயப் பிரிவினர் ஒரு ஊராட்சிமன்ற உறுப்பினராகக் கூட வரமுடியாத நிலையே உள்ளது. உயர் கல்வி, உயர் பதவிகளில் கற்பனையில் கூட எட்டிப்பிடிக்க முடியாத, ‘ குரலற்றவர்களாக ’ உள்ள இந்த சமூகத்தினருக்கு - சட்டம் வலியுறுத்தும் ’ போதுமான பிரதிநிதித்துவம் ’ (Adequate Representation ) என்ற இலக்கை சென்றடைவதற்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையில் மற்றங்களை கொண்டுவரவேண்டிய அவசியத்தை –இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

குரலற்ற இந்த மக்களின் நியாயமான உரிமைகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் வலிமையாக குரல் கொடுத்துப் போராடும் என்று அறிவிக்கிறது.


தீர்மானம்:4

இரு வேறு மதங்களின் பிரிவைச் சார்ந்தவர்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கான சிறப்பு திருமண பதிவுச் சட்டம் – திருமணத்தை பதிவு செய்வதற்கு முன் ஒரு மாத முன்னறிவிப்பு தரப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது; திருமணம் செய்துகொள்ள போகும் இணையர்களின் விவரங்களும் முன் கூட்டியே அறிவிப்புப் பலகையில் அறிவிக்கப்படுகிறது . இதன் காரணமாக மதங்கடந்த காதல் திருமணத்தை தடுக்க விரும்பும் சாதி – மதவாத சக்திகள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி அவர்களை பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும், மிரட்டுவதற்கும் வாய்ப்புகள் தரப்படுகின்றன. எனவே ஒரே மதத்திற்குள் திருமணம் புரிவோர் உடனடியாக பதிவு செய்துகொள்வதற்கு உள்ள வாய்ப்புகளை போன்றே, மதம் கடந்து திருமணம் செய்வோருக்கும் அனுமதிக்கும் வகையில் சிறப்புத் திருமண சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.


தீர்மானம்: 5

காதலுக்கு தெய்வீகம் புனிதம் என்ற கற்பிதங்களை கட்டமைப்பதை பெரியார் எதிர்க்கிறார்; அதே நேரத்தில் - ஒருவருக்கொருவர் சரியான புரிதலில் உருவாகும் காதலை வரவேற்கிறார்.

“ஒரு ஆணின் அல்லது பெண்ணின் அன்பு, ஆசை, காதல் காமம் நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு, பெண்ணோ ஆணோ - மற்ற மூன்றாதவர்கள் யாராவதோ - பேசுவதற்கோ நிர்ணியப்பதற்கோ நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது” என்று உறுதிபடக் கூறுகிறார்.

மாறிவரும் சமூகத்தில் ஜாதிகளைக் கடந்து காதல் திருமணம் புரிய விரும்பும் இளைய தலைமுறையின் வாழ்வியல் உரிமைகளை பறிக்கவேண்டாம். என்று பெற்றோர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. மனுசாஸ்திரம் விதித்த குலத்தொழில் தடைகளை தகர்த்துவிட்டு மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் எந்த பிரிவினர்களும் வரலாம் என்பதை ஏற்றுக்கொண்ட நமது சமூகம், அதே ‘மனுசாஸ்திரம்’ கட்டளையிடும் ஒரே ஜாதிக்குள் மட்டுமே திருமணம் என்பதை விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம்:6

தலித் மக்களை தனிமைப்படுத்திட சாதி வெறி கட்சிகளைத் தூண்டிவிடும் இயக்கத்தை முனைப்புடன் நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு எதிராக, சமூக அமைதியைக் காக்கும் நோக்கத்தோடு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுரை மாவட்டத்தில் நுழைய தடை விதித்துள்ளதைப் பாராட்டி வரவேற்பதோடு தமிழகத்தின் ஏனைய மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இந்த நல்ல முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் 7

பள்ளிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிடும் போது – பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பிரிவைச் சார்ந்தோரின் – ஜாதி குறிப்பிடப்படுகிறது; ஆனால் பார்ப்பனர்களை மட்டும் அவர்கள் ஜாதியைக் குறிப்பிடாமல் “பிராமணர்” என்று வர்ணத்தின் பேரால் குறிக்கப்படும் வழக்கத்தை மாற்றி, மற்ற பிரிவினரைக் குறிப்பிடும் முறையிலேயே பதியவேண்டும் என இம்மாநாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது..


தீர்மானம்: 8

சாதி தீண்டாமையின் வடிவங்கள் தொடர்ந்து நிலை பெற்றிருப்பதை இம்மாநாடு கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்டோர் வாழ்விடங்கள் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது, இதை மாற்றுவதற்கு அரசு கட்டித்தரும் தலித் மக்களுக்கான குடியிருப்புகள் ஆதிக்க சாதிகள் வாழும் ஊர்ப்பகுதிகளிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளாக அரசு கட்டித்தர வேண்டும்; ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு கல்வி – வேலை வாய்ப்புகளில் ஜாதியற்றோர் என்ற பிரிவை உருவாக்கி அவர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; இட ஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த வடிவிலும் ஜாதி அடையாளத்தை பயன்படுத்தக்கூடாது; திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தேனீர் கடைகள், முடிதிருத்தகங்கள், வழிபாட்டிடங்கள் என்பன போன்ற பொது பயன்பாட்டு இடங்களில் தீண்டாமைக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; - போன்ற ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான தீர்மானங்களை திருப்பூரில் 29-4-2012 நடத்திய ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றி, அதனடிப்படையில் அந்த ஜாதி – தீண்டாமைக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் பார்ப்பனிய மனு சாஸ்திர எரிப்புப் போராட்டத்தை அறிவித்தோம்.

இப்போது தலித் மக்களை தனிமைப்படுத்துதல் என்ற செயல்திட்டத்தோடு சாதிய கட்சிகள் வெளிப்படையாக இயக்கங்களை நடத்தி தமிழகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் ஆபத்துகள் உருவாகியுள்ளன. இந்த மனுவாத சாதிய கட்சிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி அவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவும், மனு சாஸ்திர அடிப்படையில் சாதிய – தீண்டாமைக் கொடுமைகள் நிலைப்பதை மாற்றியமைக்கக் கோரியும் சாதி எதிர்ப்பு மாநாடுகளை நடத்திடவும், அதற்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, சாதி – தீண்டாமைக்கு எதிரான பரப்புரைப் பயணங்களை நடத்திடவும், ஒவ்வொரு பயணத்தின் நிறைவிலும் அந்தந்த மண்டலங்களில் சாதி எதிர்ப்பு மாநாடுகளை நடத்துவது என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது. அதனடிப்படையில் ஜனவரி 22-இல் சென்னையிலும், பிப்ரவரி 9-இல் திண்டுக்கல்லிலும், பிப்ரவரி 16-இல் சேலத்திலும், பிப்ரவரி 23-இல் தஞ்சையிலும், மார்ச் 9-இல் திருநெல்வேலியிலும், மார்ச் 16-இல் கோவையிலும் மார்ச் 23-இல் புதுவையிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி திருச்சியிலும் இந்த மாநாடுகள் நடத்திடவும், நிறைவாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று மனு சாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்துவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

Sunday, November 25, 2012

சாதிவெறி பா.ம.க.வை தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்!!

ஒரு காதல் திருமணத்தைக் காரணம் காட்டி தருமபுரி அருகேயுள்ள நத்தம் காலனி, கொட்டாம்பட்டி, செங்கல்மேடு ஆகிய தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்களில் 268 வீடுகளை அடித்து நொறுக்கியும், எரித்தும், தமது ஜாதிவெறியைத் தணித்துக் கொண்டுள்ளனர் அப்பகுதி வன்னியர்கள். பா.ம.க, வன்னியர் சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னணியாக இருந்து அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள ஆதிக்க ஜாதியினர் தொண்டர்களை இணைத்துக்கொண்டு இந்த மனிதநேயமற்ற தாக்குதல் நடந்துள்ளது.
ramadoss_330லெட்டர்பேடு கட்சிகள் முதற்கொண்டு, தி.மு.க வரை எல்லா அமைப்புகளும் இத்தாக்குதல் தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கடந்த நவம்பர் 17 அன்று பி.பி.சி தமிழ் வானொலியில் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் அவர்களும், வன்னியர் சங்க காடுவெட்டி குருவும் ஒரு நேர்காணலை கொடுத்துள்ளனர். அதன் ஒலி வடிவம் பி.பி.சி தமிழ் இணையதளத்தில் உள்ளது.
குற்ற உணர்வு சிறிதும் இன்றி நடந்த கோரத் தாக்குதலை நியாயப்படுத்தியும், இனிமேல் இதுபோன்ற ஜாதிவெறித் தாக்குதல்கள் நடந்தால் அவையும் நியாயம்தான் என்றும் வெறி பிடித்துப் பேசியுள்ளனர். (http:/www.bbc.co.uktamilmultimedia201211121117_ramadoss.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1) இராமதாஸ் அவர்களின் நேர்காணல் வழியாக அவரது கருத்தாக அறிந்தவற்றைக் குறித்து சிறு விளக்கம் தெரிவிக்க வேண்டியுள்ளது.
“பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தினால் சிறு வயதுப் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி, நடத்தும் நாடகத் திருமணங்கள் குறைந்துவிடும்”
இதைத்தான் கொங்குவேளாளக் கவுண்டர்கள் பேரவை பொங்கலூர் மணிகண்டன் உட்பட பல்வேறு பிற்படுத்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பெண்ணின் திருமண வயதை உயர்த்தினால் குறையப் போவது காதல் திருமணங்கள் அல்ல. ஒரே ஜாதிக்குள் தினமும் ஆயிரக்கணக்கில் நடக்கும் திருமண நாடகங்கள் தான்.
“தன் பெண்ணுக்கு ருது காலத்துக்கு (பருவம் எய்தும் காலம்) முன் திருமணம் செய்துகொடுக்காத தந்தை நரகத்திற்குப் போவான்” என மனுசாஸ்திரம் 9 ஆம் அத்தியாயத்தில் 4 வது ஸ்லோகமாகச் சொல்கிறது. இந்த மனுதர்மத்தை எதிர்த்து 1928லேயே இந்திய பாராளுமன்றத்திலேயே விவாதம் நடந்தது. “பால்யவிவாகம் இல்லாவிட்டால் நாட்டில் உண்மையான கற்போ, ஒழுக்கமோ சாத்தியமில்லை” என்று பழம்பெரும் காங்கிரஸ் தலைவன் பார்ப்பன எம்.கே. ஆச்சாரி பாராளுமன்றத்திலேயே பேசினான். தமிழ்நாட்டு பார்ப்பான் சத்தியமூர்த்தி குழந்தைத் திருமணத்தை ஆதரித்து போராடிக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் 1929 இல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெரியார் “பெண்ணின் திருமண வயதை 16 க்கு மேல் என நிர்ணயிக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றினார். நீதிக்கட்சி வழியாக அதைச் சட்டமாக்கினார். தனது குடிஅரசு ஏட்டில் 5 வயதுக்கு உட்பட்ட கைம்பெண்கள், விதவைகளின் எண்ணிக்கையை வெளியிட்டு குழந்தைத் திருமணங்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். பெரியாரின் பெரும் போராட்டத்தின் விளைவாகத்தான் பெண்ணின் திருமண வயது 18 என உயர்ந்துள்ளது. டாக்டர் இராமதாஸ் சொல்லும் திருமண வயதுக் காரணம் எவ்வளவு தவறானது என்பதற்கு மத்திய அரசின் புள்ளிவிபரங்களே ஆதாரமாக உள்ளன. Registrar General and Census Commissioner. (2008). Census of India 2001: Marital Status and Age at Marriage: An Analysis of 2001 Census Data. New Delhi. p. 59 இதில் தரப்பட்டுள்ள தகவல்.
தமிழ்நாட்டில் 15 வயதுக்குள் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2001 ஆண்டு கணக்குப்படி 15,896. இவர்கள் அனைவரும் குழந்தைகள் மட்டுமல்ல; 15 வயதுக்கு முன்பே திருமணம் நடந்து குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள். இந்த குரூரத்தைச் செய்தது - இந்த நாடகத் திருமணங்களை நடத்தியது காதல் அல்ல. ஜாதியும், ஜாதியைக் காப்பாற்றும் குடும்பங்களும் தான்.
மேலும் 2007 ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் நடைபெற்ற திருமணங்களில் 24 சதவீத திருமணங்கள் 18 வயதுக்கு முன்பே முடித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஏமாற்று ஜாதித்திருமணங்களையும் நடத்தியது காதல் அல்ல. ஜாதியும், ஜாதியைக் காப்பாற்றும் குடும்பங்களும்தான்.
டாக்டர் இராமதாஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், “சுமார் 2000 திருமணங்கள் நாடகத் திருமணங்களாக நடந்துள்ளன; ஆதாரம் இருக்கிறது” என்கிறார். ஆதாரங்களுடன் பட்டியலைத் தரமுடியுமா? நீங்கள் பங்கேற்ற மத்திய அரசு வெளியிட்டிருக்கும் விரிவான புள்ளி விபரங்களையும், ஆய்வுமுடிவுகளையும் நாங்கள் தருகிறோம். எனவே திருமண வயதை 18லிருந்து 21 கூட வேண்டாம் 30 ஆகக்கூட உயர்த்தலாம் நல்லதுதான். பெண்ணின் மண வயதை உயர்த்த, உயர்த்த ஜாதிமறுப்புத் திருமணங்களுக்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளதால் எங்களுக்கு மகிழ்ச்சியே!
தருமபுரி நத்தம் காலனி இளவரசன் திருமண வயதுக்கு முன்பே வன்னியப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய்விட்டார் என்று குற்றம் சாட்டும் இராமதாஸ் அவர்களே, மத்திய அரசு தரும் புள்ளி விபரங்களின்படி நடந்துமுடிந்த 24 சதவீத திருமணங்களைப் பற்றியும், அந்தத் திருமணங்களை நடத்தி வைத்தவர்களையும் குற்றம் சாட்டத்தயாரா? குறைந்தபட்சம் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களைத் திருமணம் செய்த பா.ம.க வினரை கட்சியிலிருந்து நீக்கத் தயாரா?
சொத்துக்காக இதுபோன்ற சிறுவயதுத் திருமணங்கள் நடக்கிறதாம். சொந்த ஜாதிக்குள் திருமணம் செய்த பெண்களுக்கே பெற்றோர் சொத்தில் உரிய உரிமையோ, பங்கோ கிடைப்பதே இல்லை. எண்ணற்ற ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திவைத்துக் கொண்டிருப்பவர்கள் பெரியார் தொண்டர்கள். அப்படி ஜாதிமறுப்புத் திருமணங்களை நடத்திவைத்து அந்தந்தப் பகுதியில் உள்ள ஆதிக்க ஜாதியினரின் தாக்குதல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி வருபவர்கள் பெரியார் தொண்டர்கள். அதன் அடிப்படையில் நடப்பவற்றைச் சொல்கிறோம். எந்த ஒரு ஜாதி மறுப்பு காதல் திருமணம் நடந்தாலும் பெண்வீட்டுத் தரப்பில் முதலில் தொடர்புகொள்பவர்கள் கேட்கும் ஒரே உறுதிமொழி என்ன தெரியுமா? “சொத்தில் அந்தப் பெண்ணுக்கு பங்குதரமாட்டோம். அந்தப் பெண் பிற்காலத்திலும் சொத்து கேட்கக்கூடாது என்று பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொடுங்கள். அவர்களை விட்டுவிடுகிறோம்” என்பார்கள். அப்படி உறுதிமொழியை எழுதிக் கொடுத்தவுடன் சிக்கல்கள் சரியாகி விடுகின்றன. இது கடந்த 20 வருடங்களாக நடைமுறையில் சந்திக்கும் அனுபவங்கள்.
தலித் ஆண், பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண் என்ற திருமணத்தில்தான் இந்தப் பிரச்சனை என்பதும் தவறு. பல சம்பவங்கள் இருப்பினும் ஒரே எடுத்துக்காட்டு. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் ஒரு தெலுங்குச் செட்டியார் ஆண் – கன்னட செட்டியார் பெண்ணைத் திருமணம் செய்ததற்காக அந்த ஊரில் இருந்த தெலுங்குச் செட்டியார்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
anbumani_ramadoss_650
அதுபோல கவுண்டர் என்ற ஜாதிக்குள்ளேயே வேட்டுவ ஆண் - வெள்ளாளப் பெண் என்று நடந்த திருமணம், ஆசாரி ஆண் - காரைக்குடி செட்டியார் பெண், மறவர் ஜாதி ஆண் - வன்னியர் பெண், பறையர் ஆண் - சக்கிலியர் பெண் இப்படி கணக்கிலடங்காத திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறோம். அனைத்து ஜாதியினரின் தாக்குதல்களையும் சந்தித்திருக்கிறோம். அனைத்திலும் சொத்துக்காக அலைந்தவர்கள் பெற்றோர்களும், ஜாதிக்கூட்டமும்தானே தவிர எந்தக் காதலர்களும் அல்ல.
சொந்த ஜாதிக்குள் 18 வயதுக்குள், 15 வயதிற்குள் நடக்கும் நடக்கும் நாடகத் திருமணங்கள் தான் சொத்தைக் குறிவைத்தும், வரதட்சணையைக் குறிவைத்தும் நடக்கிறதே ஒழிய எந்தக் காதலரும் சொத்தை மையமாக வைத்துக் காதலிப்பதில்லை. அதற்கு ஆதாரமான மத்திய அரசின் குற்றப்பிரிவு புள்ளி விபரங்களையே தருகிறோம். தமிழ்நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 207. வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தப்படுவதாக பதிவான குற்றங்கள் மட்டும் 262. வரதட்சணைக்காகவும், சொத்துக்காகவும் கணவனாலும், கணவனின் குடும்பத்தாராலும் கொடுமைப்படுத்தப்படுவதாக பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் 1648. வழக்காக வராமல் பல்லாயிரக்கணக்கான வரதட்சணைக் குற்றங்கள் நடந்து வருகின்றன. இவை அனைத்தும் ஜாதிக்குள் நடத்தி வைக்கப்பட்ட திருமணங்கள்தான். சதவீதக் கணக்குப் பார்த்தால்கூட இப்படிப்பட்ட சிக்கல்கள் 1 சதவீதம்கூட காதல் திருமணங்களில் இல்லை என உறுதியாகக் கூறலாம்.
மிக முக்கியமாக வெட்டுவதையும், அழிப்பதையும் நியாயப்படுத்தி பேசும் சொற்களைக் காண்போம்.
“இவ்வாறு ஒரு பெண் காதல் திருமணம் செய்வதால் அந்தப் பெண்ணின் குடும்பமே அசிங்கப்படுகிறது; ஒதுக்கிவைக்கப்படுகிறது. அப்படி துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது காதல் திருமணம் செய்து போய்விட்ட பெண் கர்ப்பிணியாக, வாழாவெட்டியாகத் திரும்ப வந்தால், அதைப் பார்க்கும் மானமுள்ள ஆம்பிள என்ன செய்வான்? வெட்டுவான், வெட்டுவான்...”
என காடுவெட்டி குருவும், இராமதாஸ் அவர்களும் உறுதியான குரலில் பேசியுள்ளனர்.
2001 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் விவாகரத்து ஆனவர்களின் எண்ணிக்கை 2,49,356. இந்தப் பத்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைத் தாண்டி உயர்ந்திருக்கும். இவற்றில் இராமதாஸ் சொல்வதை உண்மை என்று வாதத்திற்காக வைத்தால்கூட 2000 குடும்பங்களைக் கழித்து விடலாம். மீதமுள்ள இலட்சக்கணக்கான பெண்களின் குடும்பத்தில் மானமுள்ள ஆம்பளைகளே இல்லையா? அப்படி மூன்று இலட்சம் பெண்களை வாழாவெட்டியாக அனுப்பிய ஜாதிமான்களை வெட்டித் தள்ள காடுவெட்டிகுருவோ, டாக்டர் இராமதாசோ தயாரா?
கடந்த 03.10.12 அன்று இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி டி.சி.எஸ். இராஜா சொக்கலிங்கம் அவர்கள் “தினமும் 5 முதல் 10 விவாகரத்து வழக்குகள் தாக்கல் ஆகின்றன” என்றும் “ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகள் 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும்” தெரிவித்துள்ளார். இப்படி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஏமாற்றுத் திருமணங்களை நடத்தியது காதல் அல்ல. ஜாதியும், ஜாதியைக் காப்பாற்றும் குடும்ப அமைப்பும்தான். அனைத்து ஏமாற்று மணமகன்களையும் வெட்டித்தள்ள இராமதாஸ் தயாரா?  
 இப்படி வெட்டிவிடுவோம், கொளுத்தி விடுவோம் என்று மிரட்டி எந்தக் குடும்பத்தையும் வாழ வைக்க முடியாது. ஏதோ ஒரு இளைஞன் செய்த செயலுக்கு சம்மந்தமில்லாத மற்றவர்களின் வீடுகளைக் கொளுத்துவதை யாரும் ஏற்கமுடியாது. அது பறையர் இளைஞன் ஆனாலும்; வன்னிய இளைஞன் ஆனாலும், சம்மந்தப்பட்டவரைத் தவிர மற்றவர்களைத் தாக்குவதில் என்ன நேர்மை இருக்கிறது? இருந்தாலும் உங்கள் காட்டுமிராண்டித்தனமான வாதத்தை உங்கள் ஜாதிக்கும் பொருத்திப் பார்க்கலாமா? என்பதற்காகக் கேட்கிறோம்.
பொன்பரப்பியிலும், காடுவெட்டியிலும், திண்டிவனத்திலும் வன்னியரல்லாத மற்ற ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்து - நீங்கள் சொல்வது போல கர்ப்பிணியாக்கி - பெண்வீட்டிற்கே திருப்பி அனுப்பிய வன்னிய இளைஞர்களை உங்களுக்குத் தெரியாதா? தெரியாவிட்டால் பட்டியலை நாங்கள் தருகிறோம். அந்த இளைஞர்களின் சொந்த கிராமத்தை - வன்னிய கிராமங்களை - நத்தம் காலனியை எரித்தது போல எரிக்கவும், சூறையாடவும் தயாரா? பிற ஜாதிப் பெண்களை ஏமாற்றி வீட்டுக்கு அனுப்பிய வன்னிய இளைஞர்களை வெட்டுவதற்கு நீங்கள் தயாரா? மாமல்லபுரத்தில் அடுத்த வன்னியர் சங்க விழாவில் இப்படி பேசவாவது தயாரா? வன்னியப் பெண்களுக்கு மட்டும்தான் மானம், எதிர்காலம் எல்லாம் இருக்கிறதா? மற்ற ஜாதிப் பெண்களெல்லாம் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு வாழ்கிறார்களா?
இதுபோன்ற பேச்சுக்களை டாக்டர் இராமதாஸ் கண்டிக்காததே மிகப்பெரும் குற்றம். அப்படியிருக்க, அவரே வெட்டுவேன் என்று நேர்காணல் கொடுக்கிறார் என்றால் உண்மைக் குற்றவாளி காடுவெட்டிகுருகூட அல்ல; டாக்டர் இராமதாஸ்தான். இவர்தான் திராவிடத்தை வீழ்த்தி தமிழ்த் தேசியத்தை மலரச் செய்யப் போகிறாராம். இவர்கள் பேசும் தமிழ்த் தேசியப் புரட்சி என்றால் என்ன என்பதை தர்மபுரியும், பி.பி.சியும் அம்பலப் படுத்திவிட்டன.
ஆக, இதுபோன்ற ஜாதிவெறி பிடித்த தலைவர்களின் நோக்கம், பெண்களின் நிம்மதியான வாழ்வோ, திருமண அமைப்பின் கோளாறுகளைச் சரிசெய்வதோ, பெண்களின் மானத்தைக் காப்பதோ அல்ல. தேர்தல் அரசியல் - மத்திய அரசு மந்திரிப் பதவி, தமிழ்நாடு முதலமைச்சர் பதவி இவைகளே இவர்களின் பகல்கனவு. அவர்கள் அதை நோக்கி காய் நகர்த்திக் கொண்டிருக்கட்டும். நம்மைப் போன்ற ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோர் - சமுதாயத்தை வளர்ச்சி நோக்கில் மாற்ற எண்ணுவோர் - முற்போக்கு இயக்கங்களில் இயங்குவோர் - அரசியல் கட்சிகளில் இயங்குவோர் - எழுத்தாளர்கள் - படைப்பாளர்கள் - பத்திரிக்கையாளர்கள் – சமூக செயல்பாட்டாளர்கள் - கலைஞர்கள் அனைவரும் இணைந்தோ, இணையாமலோ - கூட்டமைப்பாக ஒன்றுபட்டோ, தனித்தனியாக இயங்கியோ செய்ய வேண்டிய அவசியமான காரியம் ஒன்று. பா.ம.க வை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் முன் எப்போதும் நடைபெறாத சம்பவங்களில் ஒன்று அண்மையில் மதுரையில் நடந்த தேவர் பந்த். ஜாதி அமைப்புகள் வெளிப்படையாக பந்த் அறிவிப்பதும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் வெட்டுவோம் என்று கூச்சலிடுவதும் தமிழ்நாட்டை வடமாநிலங்களுக்கு இணையாகக் காட்டுமிராண்டிக் கூட்டமாக மாற்ற முனைவதாகும். இது போன்ற காட்டுமிராண்டிகாலச் செயல்பாடுகளுக்கு ஊக்கம் தருவதும், வழிகாட்டுவதும் பா.ம.க ஆகும். எதிர்காலச் சமுதாயம் நாகரீகத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என விரும்புபவர்கள் ஜாதிக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக, ஜாதி வெறியர்கள் அரசியலில் முக்கிய இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் பணியைத் தொடங்குவோம்.
ஆதாரங்கள்:
1. Registrar General and Census Commissioner. (2008). Census of India 2001: Marital Status and Age at Marriage: An Analysis of 2001 Census Data. New Delhi. p. 59
2. International Institute for Population Sciences. (2008). District Level Household and Facility Survey-3: (2007-08): Fact Sheets. Mumbai. p.1.
3. National Centre for Advocacy Studies. (2005). Parliament Digest Monsoon Session 2005: Bridging the Gapbetween Parliament and People: Gender, Agriculture, Natural Resources, Social Development Indicators. NewDelhi. p. 2.
4. International Institute for Population Sciences. (2006). National Family Health Survey – 3: 2005-06. Mumbai. p. 167.