Saturday, March 17, 2012
இந்தியாவை புறக்கணிப்போம்!
Thursday, January 19, 2012
முல்லைப் பெரியாறு: வரலாற்றுப் பின்னணி
முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரு சிறப்பு உண்டு. ஆசியா கண்டத்திலேயே ஒரு நதியை – வேறொரு பக்கம் – விவசாய நிலங்களை நோக்கி திருப்புவதற்காக கட்டப்பட்ட முதல் அணை இது தான்.
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில், சிவகிரி என்ற சிகரப் பகுதியில் தோன்றுகிறது பெரியாறு. வழியில், 6 சிறிய ஆறுகளை இணைத்துக் கொண்டு கேரளாவில் முன்னூறு கி.மீ. தூரம் ஓடி கொச்சி அருகே அரபிக் கடலில் கலக்கிறது.கேரளாவில் மட்டும் 244 கி.மீ. தூரம் பயணிக்கிறது. கேரளாவின் மின் தேவைகளில் 74 சதவீதம் பெரியாறு நீரின் பயன்பாட்டிலிருந்தே பெறப்படு கிறது.
சிவகிரியில் தோன்றும் பெரியாறு, 48 கி.மீ. தொலைவில் கடந்ததும் முல்லை என்ற இன்னொரு ஆற்றோடு இணைகிறது. மொத்தம் ஏழு நதிகளும் இணைந்து மழைக் காலங்களில் பெரும் வெள்ளத்தோடு அரபிக் கடலில் கலக்கிறது.
இது குறித்து ஆய்வு செய்த ஆங்கிலேயர்கள், இந்த நதிநீர் முழுமையும் கடலில் கலப்பதைத் தடுத்து, கிழக்கு பக்கமாகத் தடுத்து, கிழக்கு பக்கமாகத் திருப்பினால், தென் தமிழகம் விவசாய ரீதியாக பயன்பெறுமே என எண்ணினார்.
முல்லையும், பெரியாறும் சந்திக்கும் இடத்தில் அணை கட்டினால், மலையாளிகளுக்குச் சொந்தமான 8 ஆயிரம் ஏக்கர் நிலம் தண்ணீரில் மூழ்கும் என்பதால், திருவிதாங்கூர் சிற்றரசோடு ஒரு முறையான ஒப்பந்தம் போட்ட பிறகு அணையைக் கட்ட வேண்டும் என ஆங்கிலேய அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
அணை இருக்கும் பகுதி தமிழகப் பகுதிதான். என்றாலும் சிக்கலான எல்லைப் பகுதியாக இருப்பதால் எதிர்காலத்தில் பிரச்சினை வரக்கூடாது என்ற எண்ணத்தில் ஆங்கிலேய அரசு சென்னை மாகாண அரசுக்கும், திருவிதாங்கூர் அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் போட்டது. இதுதான் இப்போது பிரச்சினைக்கு மூலக் காரணமாகி விட்டது. இதன் அருகில்தான் பீர்மேடு, தேவிகுளம் போன்ற தமிழர்கள் நிறைந்த பகுதிகளும் உள்ளது. இதை இப்பொழுதும் மீட்டெடுக்க வேண்டுமென தமிழ் தேசியவாதிகள் முழங்குவது குறிப்பிடத்தக்கது.
அணையின் வரலாறு
1815 ஆம் ஆண்டு கேப்டன் வார்ட்ஸ் என்பவர் இந்த அணையைக் கட்ட ஆய்வுகளை மேற் கொண்டார்.
1827 ஆம் ஆண்டு வருவாய்த் துறை வாரிய உறுப்பினராக இருந்த காட்சின் என்பவர்தான் இதற்கான திட்ட அறிக்கையை ஆங்கிலேய அரசிடம் சமர்ப்பித்தார்.
47 வருடங்களுக்குப் பிறகு 1874 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டு பொறியாளர் பென்னி குக்கிடம் இத்திட்டம் செயல்படுத்த ஒப்படைக்கப்பட்டது.
மோசமான அடர்ந்த – இருண்ட வனப் பகுதிகளில் யானை, சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளும், பாம்புகளும் நிறைந்த பகுதியில் அணை கட்டுவதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு வேலைகள் தொடங்கப்பட்டது.
மூன்றாண்டுகள் வேலை நடந்து கொண்டிருந்த போது, 1890 இல் ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டு அணை அடித்துச் செல்லப்பட்டது. சவாலான அப்பகுதியில் மீண்டும் அணை கட்ட நிதி கொடுக்க முடியாது என பிரிட்டிஷ் அரசு கூறிவிட்டது.
பென்னி குக், மனம் தளராமல் லண்டனுக்குச் சென்று, தன் சொத்துக்களை விற்றும், கடன் பெற்றும் பணிகளைத் தொடங்கினார். 9 ஆண்டுகள் அணையைக் கட்டினார். 1895 இல் முழுமையாக அணை கட்டி முடிக்கப்பட்டது. பென்னி குக்கின் தியாகமும், நேர்மையும் தமிழர்களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
அணையில் நீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்பால் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் மூழ்கும் அபாயம் குறித்தும் கவலைப்பட்ட ஆங்கிலேயர்கள் அதற்கும் மாற்று ஏற்பாடு செய்தனர். ஆங்கிலேயர்கள், திருவிதாங்கூர் சிற்றரசோடு முறையான ஒப்பந்தம் போட்டனர்.
இது 1886 அக்டோபர் 29 அன்று போடப் பட்டது. நீரில் மூழ்கும் ஏக்கர் ஒன்றுக்கு 5 ரூபாய் வீதம் 8 ஆயிரம் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப் பட்டது.
அன்றைய சென்னை மாகாண அரசு, திருவிதாங்கூர் சிற்றரசுக்கு வருடந்தோறும் இத்தொகையை வழங்கவேண்டும் என்றும், அது பிரிட்டிஷ் நாணயமாக இருக்கவேண்டும் என்றும், இந்த ஒப்பந்தம் 999 வருடங்கள் நடைமுறையில் இருக்கும் என்றும் கையெழுத்தானது.
1955 இல் கேரள அரசு இந்த நட்ட ஈடு இன்றைய பொருளாதார மதிப்புக்கு மிகவும் குறைவு என்று கூறியதால், ஏக்கருக்கு 30 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக தமிழகம் உயர்த்தியது. அது இன்றும் தொடர்கிறது.
இடுக்கி அணையும் – சர்ச்சைகளும்
1979 இல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியாகும் நீரை தேக்கும் வகையில் கேரளம், இடுக்கியில் ஒரு அணையை கட்டியது. இது முல்லைப் பெரியாறு அணையைவிட பெரியதாகும்.
இடுக்கியில் அப்போது ஏற்பட்ட ஒரு பூகம்பத்தைக் காரணம் காட்டி அணையின் கொள்ளளவான 152 அடி உயரத்தை 136 அடியாக குறைக்க கேரள அரசு நிர்ப்பந்தித்தது.
இதுவே ஒரு திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாகும். கேரள அரசு எதிர்பார்த்தபடி இடுக்கி அணையில் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு தண்ணீர் கிடைக் காததால் கூடுதலாக தண்ணீரைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் நாடகம் ஆடியது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 16 அடி குறைத்துவிட்டால் அந்த தண்ணீர் முழுவதும் இடுக்கி அணையில் சேமிக்கப்படும். அதன் மூலம் தாங்கள் எதிர்பார்க்கும் மின் உற்பத்தியைப் பெறலாம் என்பது தான் கேரளாவின் சூழ்ச்சியாகும்.
சர்ச்சை உருவானதால் இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டது. மத்திய அரசின் நீர்வளக் குழுமம், அணையை பலப்படுத்திவிட்டு பிறகு நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்தலாம் என பரிந்துரைத்தது.
152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்ட பிறகு 16 அடி உயரமுள்ள அணையின் நீரை தந்திரமாக இடுக்கி அணையில் சேகரித்தது கேரளா. தமிழக அரசு, அணையை பலப்படுத்த முயற்சிகள் செய்யும் போதெல்லாம் கேரள அரசு தடுத்து வருகிறது.
16 அடி நீர் குறைக்கப்பட்டதால் நீரில் மூழ்கும் மலையாளிகளின் நிலம் 8 ஆயிரம் ஏக்கரிலிருந்து 4677 ஏக்கராக குறைந்து விட்டது. ஆனாலும் தமிழகம் 8 ஆயிரம் ஏக்கருக்கான ஒப்பந்தப் பணத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது.
கேரளாவுக்கே லாபம்!
16 அடி நீர் மட்டம் குறைந்ததால் 10.4 டி.எம்.சி. யிலிருந்து 6.4 டி.எம்.சி.யாக தண்ணீர் கொள்ளளவு குறைந்தது.
இதனால் தென் தமிழகத்தில் பயனடைந்த நிலங்களில் ஒன்றே கால் லட்சம் ஏக்கர் நிலம் தரிசாகியது. இப் பகுதியில் உற்பத்தியாகும் நெல், கரும்பு, காய்கறிகள் மற்றும் நிலத்தைச் சார்ந்து இருக்கும் ஆடு, மாடு, கோழி, முட்டை என அனைத்தும் கேரளாவுக்கே ஏற்றுமதியாகின. தெளிவாக சொல்வது எனில் முல்லைப் பெரியாறு அணை நீரால் பயன்படும் பாசனப் பகுதியின் உற்பத்திகள் யாவும் கேரள மக்களின் தேவைகளைத் தான் பூர்த்தி செய்தன. இதைக் கேரள அரசும், மலையாளிகளும் புரிந்து கொள்ள மறுப்பதுதான் வேதனை அளிக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர் வெளியேறும் குகைப் பகுதியில், நீரின் சுழற்சியில் 1955 இல் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இப்போது 152 அடியிலிருந்து 136 அடியாக நீரின் கொள்ளளவு உயரம் குறைக்கப் பட்டதால், 140 மெகாவாட் மின் உற்பத்தி, 100 மெகாவாட்டாக குறைந்துவிட்டது. அதே நேரம் குறைக்கப்பட்ட 16 அடி நீரை இடுக்கி அணையில் தேக்கி வைத்து அங்கு மின்சார உற்பத்தி செய்து, அதை தமிழகத்திற்கு கேரள அரசு விற்கிறது.
மத்திய அரசின் நீர்வளக் குழுமம் அணையை ஆராய்ந்து, மராமத்துப் பணிகளை மேற்கொண்ட பிறகு 145 அடியாக உயர்த்தலாம் என்றது. தமிழகம் 26 கோடியை செலவு செய்து அணையைப் புதுப்பித்தது. மீண்டும் மீண்டும் கேரள அரசு சர்ச்சை செய்ததால் இப்பிரச்சினை உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்தது.
1. அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக தமிழகம் உயர்த்திக் கொள்ளலாம்.
2. அணைக்கு அருகிலுள்ள பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். இப்பணிக்கு கேரள அரசும், அதிகாரிகளும் தொந்தரவு செய்யக் கூடாது.
3. அணை பலப்படுத்தப்பட்டதும் 152 அடிக்கு தண்ணீரை சேமிக்கலாம்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காத கேரள அரசு, சட்டமன்றத்தைக் கூட்டி, கேரளாவில் உள்ள 22 அணைகளின் நீர்த்தேக்க வரையறையில் உச்சநீதிமன்றங்களின் ஆணைகளோ, வேறு மாநில அரசுகளோ தலையிடக் கூடாது என்றும், கேரள அரசே இதைத் தீர்மானிக்கும் என்றும் சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்தை செய்தது.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கேரளாவின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இரு மாநில முதல்வர்களையும் பேச்சு வார்த்தை நடத்த அறி வுறுத்தியது. அது தோல்வியில் முடிவடைந்ததால், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்தது. இக்குழு ஒரு வல்லுனர் குழுவைக் கொண்டு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. அணை உடைந்தால் என்ன செய்வது?
இந்தியாவில் பூகம்பம் ஏற்படக் கூடிய பகுதிகள் 1, 2, 3, 4, 5 என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 1 மற்றும் 2 மண்டலங்கள் மிக லேசான நிலநடுக்கம் மட்டுமே ஏற்படக்கூடிய பகுதிகள்.
முல்லைப் பெரியாறு அணை 1 மற்றும் 2வது மண்டலங்களிலேயே உள்ளது. சிறிய அளவிலான அதிர்வுகளைத் தாங்கும் வல்லமை அணைக்கு உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணைகளே அதற்கு உதாரணம்.
ஒரு வேளை அணை உடைவதாக வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும், முல்லைப்பெரியாறு அணையின் தொடர்ச்சியாக அதே ஆற்றில் 13 தடுப்பணைகள் உள்ளது. அடுத்தடுத்து இந்த அணைகளின் வழியாக வெள்ள நீரைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் முல்லைப் பெரியாறு, கேரளாவின் வனப் பகுதியில் 240 கி.மீ. தூரம் ஓடினாலும் சமவெளியில் 23 கி.மீ. தூரம் மட்டும் பாய்கிறது. இங்கு மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். உடையும் அணை நீர் சமவெளிக்கு வருவதற்கு முன்பாகவே தடுப்பணைகள் மூலம் தடுத்துவிடலாம்.
இந்த சந்தேகங்கள் எல்லாம் தேவையே இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள். காரணம் அணை மூன்று முறை நவீன முறையில் பழுதுபார்க்கப்பட்டுள்ளது. இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டிய கல்லணையே உறுதியாக நிற்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கேரள அரசு பதறுவதற்குப் பின்னணி
இடுக்கி மாவட்டத்திலுள்ள பிரவம் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலை மனதில் கொண்டுதான் காங்கிரஸ் கட்சி இப்போது பிரச்னையைக் கையாண்டு வருகிறது.
அணை நீர் 152 அடியிலிருந்து 135 அடியாக குறைக்கப்பட்ட பிறகு, 3914 ஏக்கர் நிலப் பரப்பு தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டது. அது ஒரு எழில்மிகு பகுதி. இப்போது அங்கே அரசியல் வாதிகளும், பணக்காரர்களும் பல விடுதிகளையும், சொகுசு மாளிகைகளையும் கட்டியுள்ளனர்.
அணை நீரை மீண்டும் 152 அடியாக உயர்த்தினால், இப்பகுதிகள் அணை நீரில் மூழ்கிவிடும். இதனால் பல அரசியல்வாதிகள், நடிகர்கள், பணக்காரர்களின் நிலங்களும், கட்டிடங்களும், ஆக்கிரமிப்புகளும் மூழ்கிவிடும். எனவேதான் கேரள அரசு, 152 அடியாக அணையை உயர்த்த அஞ்சுகிறது என்று மீடியாக்கள் குற்றம்சாட்டுகின்றன.
கேரளாவை நம்பலாமா?
புதிய அணை கட்டிய பிறகு, தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைத் தருவோம் என கேரளா கூறுகிறது. கேரளாவை நம்பலாமா? உண்மை என்ன?
கேரள அரசு புதிய அணை குறித்த விவரங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது. அதில், ‘பிற மாநிலங்களுக்கு தண்ணீரின் இருப்பைப் பொறுத்து’ தான் தர முடியும் என்றும், பெரியாறு நதியே இரு மாநில நதி அல்ல என்றும், அது கேரளாவுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் கூறியுள்ளது.
மேலும், ‘1886 ஆம் ஆண்டு போட்ட ஒப்பந்தத்தைத் தவிர பெரியாறு நீரில் தமிழகத்திற்கு வேறு உரிமை இல்லை’ என்று கூறியுள்ளது.
இப்போதே பித்தலாட்டம் செய்யும் கேரள அரசு, புதிய அணையை கட்டினால், பழைய ஒப்பந்தம் இதற்குப் பொருந்தாது எனக் கூறிவிட்டால் என்ன செய்வது? என்பதுதான் தமிழகத்தின் அச்சமாகும்.
உச்சநீதிமன்றமும், மத்திய நீர்வள ஆணையமும் பெரியாறு அணை பற்றி ஆராய்வதற்காக ஐந்து முறை நிபுணர் குழுவை அமைத்துள்ளன. இக் குழுக்கள் ‘அணை பாதுகாப்பாக’ இருப்பதாக உறுதி செய்துள்ளன.
‘மக்கள் உரிமை’
Tuesday, December 20, 2011
முல்லைப் பெரியாறு - 'இந்து' ராமின் பார்ப்பனத் திமிர்
Thursday, December 15, 2011
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பெரியார் நாடு உருவாகும்
Tuesday, November 29, 2011
கொளத்தூர் - புலியூரில் கவிஞர் அறிவுமதி தலைமையில் மாவீரர் நாள்
அந்த தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 27.11.11 அன்று மாலை 06.05 மணியளவில் பெரியார் திராவிடர் கழக சேலம் மாவட்டத்தலைவர் கி.முல்லைவேந்தன் தலைமையில் தாயக மாவீரர் பாடல் ஒலிக்க தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மறைந்த மாவீரர்களுக்கு கவிஞர் அறிவுமதி முதன்மை சுடரை ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.






Friday, October 14, 2011
மண்ணுக்கான விடுதலை அல்ல... மக்களுக்கான விடுதலையே தேவை! - தோழர் கொளத்தூர் மணி.
வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன். ''நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?''
''கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். வகுப்பறையில் புராணக் கதைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன் வைப்பார். 'புராணம் என்றால் பழமை, நவீனம் என்றால் புதுமை. புராணக் கதை என்றால் பழைய பொய்’ என்று சொன்ன அவர், 'விடுதலையில் தீபாவளிபற்றி ஒரு கதை வந்திருக்கிறது. படியுங்கள்’ என்றார். அப்போதுதான் முதல்முதலாக விடுதலை இதழைப் படித்தேன். கொஞ்சம் கொஞ்ச மாகப் பெரியாரின் கருத்துகள் என்னை ஈர்த்தன. 1962-ல் அப்போதைய மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது பெரியாரின் பேச்சை முழுமையாக உள் வாங்கிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. 1971-ல் கொளத்தூரில் பெரியாரை வைத்து பொதுக் கூட்டம் நடத்தியதில் இருந்து என் இயக்கச் செயல்பாடுகள் தொடங்கின.''
''ஒரு பெரியாரிஸ்ட் என்ற முறையில் இன்றைய சூழலில் பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை, விட்டுவிட வேண்டியவை என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?''
''சாதி ஒழிப்பும் பெண் விடுதலையும்தான் பெரியார் கொள்கைகளின் அடித்தளம். அவரது கடவுள் மறுப்பும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்கூட, சாதி ஒழிப்புக் கொள்கை யின் நீட்சிதான். நான் மட்டும் அல்ல, இந்த மானிட சமுதாயமே பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது சுய மரியாதையையும் சமத்துவத்தையும்தான். பெரியாரிடம் இருந்து விட்டுவிட வேண்டியது என்று எதுவும் இல்லை. ஆனால், பெரியார் இறந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு போன்ற விஷயங்கள் பெரியார் காலத்தில் இல்லை. இப்போது அதை எல்லாம் சேர்த்துப் பேச வேண்டும். மேலும், உலகின் தலைசிறந்த பெண் விடுதலைக் கருத்துகளைச் சொன்னவர் பெரியார். இப்போது பெண் விடுதலை என்பதைத் தாண்டி திருநங்கைகளின் உரிமைபற்றிப் பேசப்படுகிறது. அதேபோல், ஒருகாலத்தில் 'எதை முதன்மைப்படுத்துவது சாதியையா... வர்க்கத்தையா?’ என்கிற கருத்துப் போராட்டம் பெரியார் இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் டுகளுக்கும் இடையே இருந்துவந்தது. ஆனால், சில பத்தாண்டுகளாக கம்யூ னிஸ்ட்டுகள் இந்துத்துவ எதிர்ப்பை முன் வைக்கிறார்கள்; தீண்டாமைப் பிரச்னை களைக் கையில் எடுத்துப் போராடுகிறார்கள். இது பெரியாரியலுக்குக் கிடைத்த வெற்றி. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் எப்படி சாதிப் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறினார்களோ, அதேபோல பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கங்கள் பொதுவுடைமையை அழுத்தமாகப் பேசவில்லை. இன்றைய உலகமயமாக்கச் சூழலில் 'பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டு கூட்டுக் கொள்ளை எதிர்ப்பு’ என்ற முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.''
'' 'திராவிட அரசியல்தான் இன்றைய பல வீழ்ச்சிகளுக்குக் காரணம். திராவிடம் என்பதே மாயை’ என்று தொடர்ச்சியாக தமிழ் தேசியவாதிகள் பேசிவருகிறார்களே... இன்னும் திராவிட அடையாளத்தைச் சுமக்கத்தான் வேண்டுமா?''
''போதிய புரிதல் இல்லாதவர்கள்தான் அப்படிப் பேசிவருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, பெரியார் சாகும் வரை 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தனித் தமிழ்நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தாரே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களைச் சேர்த்து திராவிட நாடு விடுதலையை முன்வைக்கவில்லை. திராவிடம் என்பது ஏதோ நிலப்பரப்புக்கான அடையாளம் இல்லை. அது இந்துத்துவ எதிர்ப்பின் குறியீட்டுச் சொல். நாங்களும் தனித் தமிழ்நாடு கேட்கிறோம், தமிழ் தேசியவாதிகளும் தனித் தமிழ்நாடு கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே மண்ணுக்கான விடுதலையை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம். 'திராவிடர்’ என்ற சொல், பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ற பொருளில்தான் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளின் மீது உள்ள வெறுப்பால் பலர் 'திராவிடம் என்பதே மாயை’ என்று பேசிவருகிறார்கள். உண்மையில் திராவிட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.கூட தமிழர்களிடத்தில்தான் அரசியல் செய்கின்றனவே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களிடத்தில் அல்ல. மேலும், சாதி ஒழிப்பு, தாழ்த்தப் பட்டோர் விடுதலை, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, பெண் விடுதலை... இவை எல்லாம் சேர்ந்ததுதான் பெரியார் முன்வைத்த திராவிட அரசியல். இன்றைய திராவிட அரசியல் கட்சிகள், இவை எதையும் முன்வைப்பது இல்லை. எனவே, திராவிட அரசியல் கட்சிகளை முன்வைத்து திராவிடம் என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது அறியாமை.''
''தொடர்ச்சியாக தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறீர்கள். ஆனால், 'பெரியார் கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டம் தவிர, தமிழகத்தில் தீண்டாமைப் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது இல்லை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?''
''தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், சாதி ஒழிய வேண்டும்; சாதி ஒழிய வேண்டும் என்றால், இந்து மதம் ஒழிய வேண்டும். இதுதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை. இதற்காகத்தான் அவர் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் சார்பாக ஏராளமான ஆதி திராவிடர் சுய மரியாதை மாநாடுகளையும் ஆதிதிராவிடர் கிறிஸ்தவர் சுய மரியாதை மாநாடுகளையும் நடத்தினார். முதுகுளத் தூர் கலவரத்தின்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம் நின்று, 'கலவரத்துக்குக் காரணமான பசும்பொன் முத்துராமலிங்கரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று உறுதியாக வலியுறுத்தியதும் பெரியார் தான்.
மயிலாடுதுறை அருகே உள்ள காளி மற்றும் மாதிரிமங்கலம் ஆகிய ஊர்களில் 'சாதித் தொழிலைச் செய்ய மாட்டோம்’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய பறை தப்பட்டையை எரிக்கும் போராட்டம், காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்று ஏராளமான போராட்டங்களைப் பெரியார் இயக்கம் நடத்தி உள்ளது. ஆனால், அவை எல்லாம் பெரிதாக ஆவணப்படுத்தப்படாததுதான் வரலாற்றுத் துயரம். 1926-ல் சிராவயல் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு அமைக்கப்பட்டு, அதைத் திறப்பதற்காகப் பெரியார் அழைக்கப்பட்டார். ஆனால், 'பொதுக் கிணறுக்காகப் போராடுங்கள். தாகத்தால் செத்துப்போகலாமே தவிர, தனிக் கிணறு அமைப்பது தீர்வு அல்ல’ என்று பெரியார் மறுத்துவிட்டார். 'பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது’ என்று யார் தீண்டாமையை மேற்கொள்கிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர் களிடம் பெரியார் பேசினார். அதுதான் புரட்சி.''
''பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு, ஈழ ஆதர வாளர்கள் சமச்சீர்க் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு, நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் ஜெயலலிதாவைக் கடுமை யாக விமர்சிப்பது இல்லையே?''
''ஈழ ஆதரவாளர்களில் பலர் சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்னை, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாத போக்கு இருக்கிறது. அதே நேரத்தில், காஷ்மீர், தண்டகாரண்யம், சல்வாஜூடும்பற்றிப் பேசும் பலர் ஈழப் பிரச்னைபற்றிக் கவலைப் படுவது இல்லை. இரண்டு தரப்பிலும் போதாமைகள் இருக்கின்றன. இவை சரி செய்யப்பட வேண்டும்.''
''பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? ஈழத் தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன மாதிரியான தீர்வுகளை முன்வைக்கிறீர்கள்?''
''பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது. இன்றைய சூழலில், ராஜபக்ஷேயின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படு கிறது. ஆனால், ராஜபக்ஷே மட்டுமே இனப் படுகொலையில் ஈடுபடவில்லை. எல்லா இலங்கை அதிபர்களுமே தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள்தான். உயிரோடு உள்ள எல்லா இலங்கை அதிபர்களுமே போர்க் குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஈழப் பிரச்னைக்கான தீர்வு தமிழீழம்தான் என்று கருதுகிறோம். அந்த மக்களின் விருப்பமும் அதுதான் என்று உறுதியாக நம்புகிறோம்!''
Wednesday, September 28, 2011
‘யாருக்கும் வேண்டாம் தூக்கு; மரண தண்டனையை நீக்கு’ புதுவை குலுங்கியது
புத்தன் கலைக் குழுவினர், முன் கூட்டியே நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்குச் சென்று பறை இசை ஒலித்து, தூக்குத் தண்டனைக்கு எதிரான பாடல்களை பாடுவர். பரப்புரைக் குழுவினர் பின் தொடர்ந்து வந்து திரண்டிருந்த மக்களிடம் கருத்துகளை எடுத்து வைப்பார்கள். கழக வெளியீடுகளான ‘மரண தண்டனையை ஒழிப்போம்’, ‘காந்தியார் கொலையில் பார்ப்பன பின்னணி’ என்ற நூல்களை கழகத் தோழர்கள் கூடி நிற்கும் மக்களிடமும், பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனங்களிடமும் விற்பனைக்கு எடுத்துச் செல்வர். மற்றொரு பிரிவினர், மரண தண்டனைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வழங்குவார்கள். மற்றொரு பிரிவினர், உண்டியல் ஏந்தி மக்கள் தரும் நன்கொடைகளைப் பெற்று கொள் வார்கள். கொளுத்தும் வெய்யிலில் மனித உரிமைக்காக மூன்று தமிழர்களின் உயிர்காப்பிற்காக மரண தண்டனையையே வேண்டாம் என்பதற்கான நியாயங்களை, மக்களை சந்தித்து விளக்கிய இந்தக் காட்சிகள், உணர்ச்சிகர மானவையாகும். உலகிலேயே மரண தண்டனைக்கு எதிரான இப்படி ஒரு மக்கள் இயக்கம் நடந்திருக்க முடியாது என்றே கூறலாம். சிந்தனையாளர்கள் மனித உரிமையாளர்களின் கருத்துகளாகவே முடங்கி நின்ற மரண தண்டனைக்கு எதிரான கருத்தை மக்கள் கருத்தாக மாற்றும் முதல் முயற்சி தமிழகத்தில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.
23.9.2011 காலை 10 மணிக்கு மதகடிப்பட்டு பகுதியில் பயணம் தொடங்கியது. புத்தன் கலைக் குழுவினர் பறை இசை பாடல்களோடு தொடங்கிய பயணத்தில், புதுவை மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். 10.30 மணிக்கு திருபுவனை வந்து சேர்ந்தது. புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர்.
பகல் 11.15 மணியளவில் பயணக்குழு கண்டமங்கலம் வந்தது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கொளத்தூர் மணி பேசினார். பாட்டாளி மக்கள் கட்சித் தோழர்கள், தலைவர், பொதுச்செயலாளருக்கு ஆடை போர்த்தி வரவேற்று ரூ.1000 நன்கொடை வழங்கினர்.
பகல் 12 மணியளவில் வில்லியனூர் வந்து சேர்ந்தது. லோகு அய்யப்பன், புதுவை மாநில ம.தி.மு.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நா.மணிமாறன், விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். புதுவையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இழிவுபடுத்திப் பேசியதற்கு நா. மணிமாறன் கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரசாரை கடுமையாக எச்சரித்தார்.
பகல் ஒரு மணிக்கு பயணக் குழு கரிச்சலாம்பாக்கம் வந்து சேர்ந்தது. பட்டாசு வெடித்து பயணக்குழுவினருக்கு ஆடை போர்த்தி எழுச்சியான வரவேற்பு தரப்பட்டது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து லோகு அய்யப்பன், கொளததூர் மணி பேசினர்.
1.50 மணிக்கு பயணக்குழு பாகூர் வந்தது. பறை இசையுடன் கருத்துப் பாடல்களை புத்தன் கலைக் குழுவினர் பாடினர். அரியாங்குப்பத்தில் தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மாலை 4.45 மணியளவில் அரியாங்குப்பத்திலிருந்து பயணக் குழு பிற்பகல் பரப்புரையைத் தொடர்ந்தது. அம்பேத்கர் சுமை தூக்குவோர் சங்கத்தின் சார்பில், கைத்தறி ஆடைகளை பயணக் குழுவினருக்கு அணிவித்தனர். கொளத்தூர் மணி பேசினார்.
5.30 மணிக்கு முதலியார் பேட்டையிலும், 6.10 மணிக்கு ரெட்டியார்பாளையத்திலும் பரப்புரையை முடித்துக் கொண்டு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது. தட்டாஞ்சாவடி நாம் தமிழர் கட்சித் தோழர்கள் பயணக் குழுவினருக்கு தேனீர் வழங்கினர். இரவு 7 மணிக்கு முத்திரையர்பாளையத்தில் நடந்த நிகழ்வில் லோகு அய்யப்பன், கொளத்தூர் மணி உரையாற்றினர்.
இறுதியாக 7.40 மணிக்கு சாரம் பகுதியிலுள்ள ஜீவா சதுக்கத்துக்கு பயணக் குழு வந்து சேர்ந்தது. புத்தன் கலைக் குழுவினர் தங்கள் கலை நிகழ்ச்சிகளை முழுமையாக நடத்தினர். மூன்று தமிழர் உயிர் காக்க தன்னுயிரை வழங்கிய செங்கொடி பற்றிய வீரவணக்கப் பாடல்; ‘உயிர்’ எனும் நாடகத்தை நிகழ்த்தினர். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ராஜீவ் கொலை விசாரணை ஆணையங்களையும் இந்திரா கொலை பற்றிய விசாரணை ஆணையத்தையும் காங்கிரசாரே முடக்கி, உண்மைகள் வெளியே வராமல் தடுத்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற மேற்கொண்ட சூழ்ச்சி, சதி, துரோகங்களையும் விரிவாக விளக்கி, ஒரு மணி நேரம் பேசினார். தொடர்ந்து தூக்குத் தண்டனைக்கு எதிரான வீதி நாடகங்களை கலைக் குழுவினர் நடத்தினர். இறுதியாக கொளத்தூர் மணி தூக்குத் தண்டனைக்கு எதிரான நியாயங்களை முன் வைத்தும், காங்கிரசாரை எச்சரித்தும் ஒரு மணி நேரம் பேசினர். தோழர் வீராசாமி நன்றியுரையுடன் உணர்வுகளை சூடேற்றிய நிகழ்வு 10.30 மணிக்கு நிறைவடைந்தது. சதுக்கத்திலேயே தோழர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
இந்தப் பயணம் புதுவையில் நினைவில் நிற்கும் பயணமாக அமைந்தது. “மூவர் தமிழர் உயிர்காப்பு இயக்க வரலாற்றில் இந்தப் பயணம் இடம் பெறும்; என்றென்றும் புதுவை கழக வரலாற்றில் நினைவு கூறப்படும்” என்று விடுதலை இராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார்.
செய்தி: புதுவை வேலழகன்
