Tuesday, December 20, 2011
முல்லைப் பெரியாறு - 'இந்து' ராமின் பார்ப்பனத் திமிர்
Thursday, December 15, 2011
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பெரியார் நாடு உருவாகும்
Tuesday, November 29, 2011
கொளத்தூர் - புலியூரில் கவிஞர் அறிவுமதி தலைமையில் மாவீரர் நாள்
அந்த தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 27.11.11 அன்று மாலை 06.05 மணியளவில் பெரியார் திராவிடர் கழக சேலம் மாவட்டத்தலைவர் கி.முல்லைவேந்தன் தலைமையில் தாயக மாவீரர் பாடல் ஒலிக்க தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மறைந்த மாவீரர்களுக்கு கவிஞர் அறிவுமதி முதன்மை சுடரை ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.
Friday, October 14, 2011
மண்ணுக்கான விடுதலை அல்ல... மக்களுக்கான விடுதலையே தேவை! - தோழர் கொளத்தூர் மணி.
''நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?''
''கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். வகுப்பறையில் புராணக் கதைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன் வைப்பார். 'புராணம் என்றால் பழமை, நவீனம் என்றால் புதுமை. புராணக் கதை என்றால் பழைய பொய்’ என்று சொன்ன அவர், 'விடுதலையில் தீபாவளிபற்றி ஒரு கதை வந்திருக்கிறது. படியுங்கள்’ என்றார். அப்போதுதான் முதல்முதலாக விடுதலை இதழைப் படித்தேன். கொஞ்சம் கொஞ்ச மாகப் பெரியாரின் கருத்துகள் என்னை ஈர்த்தன. 1962-ல் அப்போதைய மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது பெரியாரின் பேச்சை முழுமையாக உள் வாங்கிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. 1971-ல் கொளத்தூரில் பெரியாரை வைத்து பொதுக் கூட்டம் நடத்தியதில் இருந்து என் இயக்கச் செயல்பாடுகள் தொடங்கின.''
''ஒரு பெரியாரிஸ்ட் என்ற முறையில் இன்றைய சூழலில் பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை, விட்டுவிட வேண்டியவை என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?''
''சாதி ஒழிப்பும் பெண் விடுதலையும்தான் பெரியார் கொள்கைகளின் அடித்தளம். அவரது கடவுள் மறுப்பும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்கூட, சாதி ஒழிப்புக் கொள்கை யின் நீட்சிதான். நான் மட்டும் அல்ல, இந்த மானிட சமுதாயமே பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது சுய மரியாதையையும் சமத்துவத்தையும்தான். பெரியாரிடம் இருந்து விட்டுவிட வேண்டியது என்று எதுவும் இல்லை. ஆனால், பெரியார் இறந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு போன்ற விஷயங்கள் பெரியார் காலத்தில் இல்லை. இப்போது அதை எல்லாம் சேர்த்துப் பேச வேண்டும். மேலும், உலகின் தலைசிறந்த பெண் விடுதலைக் கருத்துகளைச் சொன்னவர் பெரியார். இப்போது பெண் விடுதலை என்பதைத் தாண்டி திருநங்கைகளின் உரிமைபற்றிப் பேசப்படுகிறது. அதேபோல், ஒருகாலத்தில் 'எதை முதன்மைப்படுத்துவது சாதியையா... வர்க்கத்தையா?’ என்கிற கருத்துப் போராட்டம் பெரியார் இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் டுகளுக்கும் இடையே இருந்துவந்தது. ஆனால், சில பத்தாண்டுகளாக கம்யூ னிஸ்ட்டுகள் இந்துத்துவ எதிர்ப்பை முன் வைக்கிறார்கள்; தீண்டாமைப் பிரச்னை களைக் கையில் எடுத்துப் போராடுகிறார்கள். இது பெரியாரியலுக்குக் கிடைத்த வெற்றி. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் எப்படி சாதிப் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறினார்களோ, அதேபோல பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கங்கள் பொதுவுடைமையை அழுத்தமாகப் பேசவில்லை. இன்றைய உலகமயமாக்கச் சூழலில் 'பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டு கூட்டுக் கொள்ளை எதிர்ப்பு’ என்ற முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.''
'' 'திராவிட அரசியல்தான் இன்றைய பல வீழ்ச்சிகளுக்குக் காரணம். திராவிடம் என்பதே மாயை’ என்று தொடர்ச்சியாக தமிழ் தேசியவாதிகள் பேசிவருகிறார்களே... இன்னும் திராவிட அடையாளத்தைச் சுமக்கத்தான் வேண்டுமா?''
''போதிய புரிதல் இல்லாதவர்கள்தான் அப்படிப் பேசிவருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, பெரியார் சாகும் வரை 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தனித் தமிழ்நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தாரே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களைச் சேர்த்து திராவிட நாடு விடுதலையை முன்வைக்கவில்லை. திராவிடம் என்பது ஏதோ நிலப்பரப்புக்கான அடையாளம் இல்லை. அது இந்துத்துவ எதிர்ப்பின் குறியீட்டுச் சொல். நாங்களும் தனித் தமிழ்நாடு கேட்கிறோம், தமிழ் தேசியவாதிகளும் தனித் தமிழ்நாடு கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே மண்ணுக்கான விடுதலையை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம். 'திராவிடர்’ என்ற சொல், பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ற பொருளில்தான் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளின் மீது உள்ள வெறுப்பால் பலர் 'திராவிடம் என்பதே மாயை’ என்று பேசிவருகிறார்கள். உண்மையில் திராவிட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.கூட தமிழர்களிடத்தில்தான் அரசியல் செய்கின்றனவே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களிடத்தில் அல்ல. மேலும், சாதி ஒழிப்பு, தாழ்த்தப் பட்டோர் விடுதலை, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, பெண் விடுதலை... இவை எல்லாம் சேர்ந்ததுதான் பெரியார் முன்வைத்த திராவிட அரசியல். இன்றைய திராவிட அரசியல் கட்சிகள், இவை எதையும் முன்வைப்பது இல்லை. எனவே, திராவிட அரசியல் கட்சிகளை முன்வைத்து திராவிடம் என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது அறியாமை.''
''தொடர்ச்சியாக தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறீர்கள். ஆனால், 'பெரியார் கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டம் தவிர, தமிழகத்தில் தீண்டாமைப் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது இல்லை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?''
''தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், சாதி ஒழிய வேண்டும்; சாதி ஒழிய வேண்டும் என்றால், இந்து மதம் ஒழிய வேண்டும். இதுதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை. இதற்காகத்தான் அவர் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் சார்பாக ஏராளமான ஆதி திராவிடர் சுய மரியாதை மாநாடுகளையும் ஆதிதிராவிடர் கிறிஸ்தவர் சுய மரியாதை மாநாடுகளையும் நடத்தினார். முதுகுளத் தூர் கலவரத்தின்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம் நின்று, 'கலவரத்துக்குக் காரணமான பசும்பொன் முத்துராமலிங்கரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று உறுதியாக வலியுறுத்தியதும் பெரியார் தான்.
மயிலாடுதுறை அருகே உள்ள காளி மற்றும் மாதிரிமங்கலம் ஆகிய ஊர்களில் 'சாதித் தொழிலைச் செய்ய மாட்டோம்’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய பறை தப்பட்டையை எரிக்கும் போராட்டம், காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்று ஏராளமான போராட்டங்களைப் பெரியார் இயக்கம் நடத்தி உள்ளது. ஆனால், அவை எல்லாம் பெரிதாக ஆவணப்படுத்தப்படாததுதான் வரலாற்றுத் துயரம். 1926-ல் சிராவயல் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு அமைக்கப்பட்டு, அதைத் திறப்பதற்காகப் பெரியார் அழைக்கப்பட்டார். ஆனால், 'பொதுக் கிணறுக்காகப் போராடுங்கள். தாகத்தால் செத்துப்போகலாமே தவிர, தனிக் கிணறு அமைப்பது தீர்வு அல்ல’ என்று பெரியார் மறுத்துவிட்டார். 'பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது’ என்று யார் தீண்டாமையை மேற்கொள்கிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர் களிடம் பெரியார் பேசினார். அதுதான் புரட்சி.''
''பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு, ஈழ ஆதர வாளர்கள் சமச்சீர்க் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு, நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் ஜெயலலிதாவைக் கடுமை யாக விமர்சிப்பது இல்லையே?''
''ஈழ ஆதரவாளர்களில் பலர் சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்னை, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாத போக்கு இருக்கிறது. அதே நேரத்தில், காஷ்மீர், தண்டகாரண்யம், சல்வாஜூடும்பற்றிப் பேசும் பலர் ஈழப் பிரச்னைபற்றிக் கவலைப் படுவது இல்லை. இரண்டு தரப்பிலும் போதாமைகள் இருக்கின்றன. இவை சரி செய்யப்பட வேண்டும்.''
''பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? ஈழத் தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன மாதிரியான தீர்வுகளை முன்வைக்கிறீர்கள்?''
''பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது. இன்றைய சூழலில், ராஜபக்ஷேயின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படு கிறது. ஆனால், ராஜபக்ஷே மட்டுமே இனப் படுகொலையில் ஈடுபடவில்லை. எல்லா இலங்கை அதிபர்களுமே தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள்தான். உயிரோடு உள்ள எல்லா இலங்கை அதிபர்களுமே போர்க் குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஈழப் பிரச்னைக்கான தீர்வு தமிழீழம்தான் என்று கருதுகிறோம். அந்த மக்களின் விருப்பமும் அதுதான் என்று உறுதியாக நம்புகிறோம்!''
Wednesday, September 28, 2011
‘யாருக்கும் வேண்டாம் தூக்கு; மரண தண்டனையை நீக்கு’ புதுவை குலுங்கியது
புத்தன் கலைக் குழுவினர், முன் கூட்டியே நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்குச் சென்று பறை இசை ஒலித்து, தூக்குத் தண்டனைக்கு எதிரான பாடல்களை பாடுவர். பரப்புரைக் குழுவினர் பின் தொடர்ந்து வந்து திரண்டிருந்த மக்களிடம் கருத்துகளை எடுத்து வைப்பார்கள். கழக வெளியீடுகளான ‘மரண தண்டனையை ஒழிப்போம்’, ‘காந்தியார் கொலையில் பார்ப்பன பின்னணி’ என்ற நூல்களை கழகத் தோழர்கள் கூடி நிற்கும் மக்களிடமும், பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனங்களிடமும் விற்பனைக்கு எடுத்துச் செல்வர். மற்றொரு பிரிவினர், மரண தண்டனைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வழங்குவார்கள். மற்றொரு பிரிவினர், உண்டியல் ஏந்தி மக்கள் தரும் நன்கொடைகளைப் பெற்று கொள் வார்கள். கொளுத்தும் வெய்யிலில் மனித உரிமைக்காக மூன்று தமிழர்களின் உயிர்காப்பிற்காக மரண தண்டனையையே வேண்டாம் என்பதற்கான நியாயங்களை, மக்களை சந்தித்து விளக்கிய இந்தக் காட்சிகள், உணர்ச்சிகர மானவையாகும். உலகிலேயே மரண தண்டனைக்கு எதிரான இப்படி ஒரு மக்கள் இயக்கம் நடந்திருக்க முடியாது என்றே கூறலாம். சிந்தனையாளர்கள் மனித உரிமையாளர்களின் கருத்துகளாகவே முடங்கி நின்ற மரண தண்டனைக்கு எதிரான கருத்தை மக்கள் கருத்தாக மாற்றும் முதல் முயற்சி தமிழகத்தில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.
23.9.2011 காலை 10 மணிக்கு மதகடிப்பட்டு பகுதியில் பயணம் தொடங்கியது. புத்தன் கலைக் குழுவினர் பறை இசை பாடல்களோடு தொடங்கிய பயணத்தில், புதுவை மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். 10.30 மணிக்கு திருபுவனை வந்து சேர்ந்தது. புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர்.
பகல் 11.15 மணியளவில் பயணக்குழு கண்டமங்கலம் வந்தது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கொளத்தூர் மணி பேசினார். பாட்டாளி மக்கள் கட்சித் தோழர்கள், தலைவர், பொதுச்செயலாளருக்கு ஆடை போர்த்தி வரவேற்று ரூ.1000 நன்கொடை வழங்கினர்.
பகல் 12 மணியளவில் வில்லியனூர் வந்து சேர்ந்தது. லோகு அய்யப்பன், புதுவை மாநில ம.தி.மு.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நா.மணிமாறன், விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். புதுவையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இழிவுபடுத்திப் பேசியதற்கு நா. மணிமாறன் கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரசாரை கடுமையாக எச்சரித்தார்.
பகல் ஒரு மணிக்கு பயணக் குழு கரிச்சலாம்பாக்கம் வந்து சேர்ந்தது. பட்டாசு வெடித்து பயணக்குழுவினருக்கு ஆடை போர்த்தி எழுச்சியான வரவேற்பு தரப்பட்டது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து லோகு அய்யப்பன், கொளததூர் மணி பேசினர்.
1.50 மணிக்கு பயணக்குழு பாகூர் வந்தது. பறை இசையுடன் கருத்துப் பாடல்களை புத்தன் கலைக் குழுவினர் பாடினர். அரியாங்குப்பத்தில் தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மாலை 4.45 மணியளவில் அரியாங்குப்பத்திலிருந்து பயணக் குழு பிற்பகல் பரப்புரையைத் தொடர்ந்தது. அம்பேத்கர் சுமை தூக்குவோர் சங்கத்தின் சார்பில், கைத்தறி ஆடைகளை பயணக் குழுவினருக்கு அணிவித்தனர். கொளத்தூர் மணி பேசினார்.
5.30 மணிக்கு முதலியார் பேட்டையிலும், 6.10 மணிக்கு ரெட்டியார்பாளையத்திலும் பரப்புரையை முடித்துக் கொண்டு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது. தட்டாஞ்சாவடி நாம் தமிழர் கட்சித் தோழர்கள் பயணக் குழுவினருக்கு தேனீர் வழங்கினர். இரவு 7 மணிக்கு முத்திரையர்பாளையத்தில் நடந்த நிகழ்வில் லோகு அய்யப்பன், கொளத்தூர் மணி உரையாற்றினர்.
இறுதியாக 7.40 மணிக்கு சாரம் பகுதியிலுள்ள ஜீவா சதுக்கத்துக்கு பயணக் குழு வந்து சேர்ந்தது. புத்தன் கலைக் குழுவினர் தங்கள் கலை நிகழ்ச்சிகளை முழுமையாக நடத்தினர். மூன்று தமிழர் உயிர் காக்க தன்னுயிரை வழங்கிய செங்கொடி பற்றிய வீரவணக்கப் பாடல்; ‘உயிர்’ எனும் நாடகத்தை நிகழ்த்தினர். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ராஜீவ் கொலை விசாரணை ஆணையங்களையும் இந்திரா கொலை பற்றிய விசாரணை ஆணையத்தையும் காங்கிரசாரே முடக்கி, உண்மைகள் வெளியே வராமல் தடுத்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற மேற்கொண்ட சூழ்ச்சி, சதி, துரோகங்களையும் விரிவாக விளக்கி, ஒரு மணி நேரம் பேசினார். தொடர்ந்து தூக்குத் தண்டனைக்கு எதிரான வீதி நாடகங்களை கலைக் குழுவினர் நடத்தினர். இறுதியாக கொளத்தூர் மணி தூக்குத் தண்டனைக்கு எதிரான நியாயங்களை முன் வைத்தும், காங்கிரசாரை எச்சரித்தும் ஒரு மணி நேரம் பேசினர். தோழர் வீராசாமி நன்றியுரையுடன் உணர்வுகளை சூடேற்றிய நிகழ்வு 10.30 மணிக்கு நிறைவடைந்தது. சதுக்கத்திலேயே தோழர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
இந்தப் பயணம் புதுவையில் நினைவில் நிற்கும் பயணமாக அமைந்தது. “மூவர் தமிழர் உயிர்காப்பு இயக்க வரலாற்றில் இந்தப் பயணம் இடம் பெறும்; என்றென்றும் புதுவை கழக வரலாற்றில் நினைவு கூறப்படும்” என்று விடுதலை இராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார்.
செய்தி: புதுவை வேலழகன்
Sunday, September 25, 2011
சோதிடத்தைச் சொல்லியடிக்கும் ‘வெங்காயம்’
காணாமல் போன சாமியார்களைக் கண்டுபிடிக்க வேண்டிய காவல் அதிகாரி அன்புமணி - கதாநாயகன். பக்கத்து கிராம விவசாயின் மகள் செந்தமிழ் - கதாநாயகி . கிராமத்துக் குறும்புக்காரி. பக்கத்து ஊருக்குப் பால் ஊற்றச்செல்லும் போது, தெருவில் குளித்துக் கொண்டிருக்கும் சிறுவனைப் பார்த்து, ‘ டேய் மாப்ள என்னடா இது, அத்த வரும்போது அம்மணமா குளிச் சிட்டிருக்க. ச்சீ..ச்சீ.. நா ஒனக்குப் பொண்ணு தரமாட் டேம்பா… ‘ எனக் கிண்டல் அடிக்க, சிறுவன் பாதிக் குளியலில் தெருத் தெருவாக ஓட, அவனுடைய அம்மா அவனை விரட்டிச் செல்லும் காட்சி நல்ல நகைச்சுவை மட்டுமன்று, கிராமங்களில் இயல்பாக நடக்கும் சேட்டையும் கூட. வம்புச் சண்டையில் தொடங்கி, காதலாக மாறுகிறது செந்தமிழ் ‡ அன்புமணி சந்திப்பு. அதைத் தொடரும் கிராமத்துக் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கின்றன.
காணாமல் போன சாமியாரின் ஊருக்கு விசாரணைக்காக வரும் காவல்துறை வண்டியின் மீது ஒரு பைத்தியக்காரக் கிழவி கல்லை எடுத்து வீசுகிறார். அவரைத் திட்டி அனுப்பிவிட்டு, அந்தச் சாமியாரின் மனைவி, கிழவியின் கதையைக் காவல் அதிகாரி அன்புமணியிடம் சொல்கிறார். கிழவியும், அவளது பேரனும் களியும், பருப்புக் குழம்பும் சாப்பிடும் நிலையிலிருந்தாலும், மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் அளவுக்கதிகமாக அன்பு வைத்திருக்கும், அவர்களது வாழ்க்கையில் சோதிடம் குறுக்கிடுகிறது. நண்பனோடு சேர்ந்து சொந்தமாகத் தறி போட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கும் அவன் ஒரு சோதிடரைப் பார்க்கப் போகிறான். அந்தச் சோதிடரோ, இவனுடைய நண்பனுக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்றும் இவனுக்கு எட்டாம் இடத்தில் சனி அதாவது அட்டமச் சனி என்றும் கூறிவிடுகிறார். இதனால் இவனோடு தொழில் தொடங்க நண்பன் மறுத்துவிட, கடைசியில் தற்கொலை செய்துகொள்கிறான். பாட்டிக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது. அந்த சோதிடர் கடத்தப்படுகிறார். இதே போன்று இன்னும் மூன்று சாமியார்களும் அடுத்தடுத்துக் கடத்தப்படுகிறார்கள்.
காவல்துறை விசாரணை மெல்ல மெல்ல, சிறுவர் காப்பகத்தில் இருந்து காணாமல் போன மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை நோக்கி நகர்கிறது. மூன்று சாமியார்களையும் கடத்தியது அந்தச் சிறுவர்கள்தான் என்று தெரிய வரும்போது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும், அந்த சோதிடர்களால் தங்கள் குடும்பத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்கள் என்று தெரியவரும்போது சோதிடர்களின் மீது நம்முடைய கோபமும் குவிகிறது. சோதிடரின் பேச்சை நம்பி, தந்தையால் சந்தேகப்பட்டு அடித்து விரட்டப்படும் தாய் தற்கொலை செய்து கொண்டதால் சிறுவர் காப்பகத்திற்கு வந்து சேரும் சிறுவன், நரபலி சாமியாரினால் கூத்துக் கலைஞரான தந்தையையும், அன்பான தம்பியையும் இழந்து அநாதையான பூ விற்கும் சிறுமி எனப் பாதிக்கப் பட்டவர்கள் ஒன்றுசேர்ந்து சாமியார்களைக் கடத்துகின்றனர். எல்லாம் தலைவிதிப்படி நடந்திருக்கிறது என்று நம்பி, மனத்திற்குள் அழுது கொண்டிருக்கும் அவர்கள், தங்கள் சிறுவர் காப்பகத்திற்கு வருகை தரும் நடிகர் சத்தியராஜின் பகுத்தறிவுப் பேச்சினால், உண்மையை உணர்கின்றனர். சோதிடத்தின் பெயரால் தங்களின் வாழ்வு எப்படியயல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்று சிந்திக்கின்றனர். சாமியார்களைக் கடத்தி காட்டுக்குள் இருக்கும் மண்டபத்தில் கட்டிப் போடுகின்றனர்.
இடையில், செந்தமிழ் ‡ அன்புமணி காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டுத் திருமணத்திற்கும் நாள் குறிக்கப்படுகிறது. செந்தமிழுக்குச் செவ்வாய் தோம் இருப்பதால், பரிகாரம் செய்வதற்காக அவளது பெற்றோர் ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அங்கே அந்தச் சாமியார் மயக்க மருந்து கொடுத்து அவளை பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்த, குத்துவிளக்கில் தவறி விழுந்து உயிரிழக்கிறாள் செந்தமிழ். அந்தச் சாமியாரையும் சிறுவர்கள் கடத்திச் செல்கின்றனர். கடத்தியவர்கள் யார் என்பதையும், அவர்களின் இருப்பிடத்தையும் கண்டுபிடித்துவிட்ட அன்புமணி, சாமியார்களை மீட்கச் செல்கிறார்.
இறுதிக்காட்சியில், சாமியார்களிடம் அந்தச் சிறுவர்கள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடி. சோதிடப் புரட்டுகளைப் புட்டுப்புட்டு வைத்து, அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் சோதிடர்கள் வியர்வையில் குளித்து, விக்கித்துப்போய் நிற்கின்றனர். வயதுக்கு மீறிய பேச்சுக்கள் போன்று தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். அறிவு என்பது வயதை அடிப்படையாகக் கொண்டதன்று. அதிலும் பகுத்தறிவுக்கு கேள்விகேட்கும் தன்மையும், உண்மையை அறிய முயலும் தேடலும்தான் தேவையே தவிர, வயது தடையில்லை. பட்டறிவுதான் உண்மையைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியன். அந்தவிதத்தில், அந்தச் சிறுவர்களின் வலியும், வேதனையும், அவர்களுக்குள் கேள்விகளாய் முளைத்துச் சிந்திக்க வைத்திருக்கலாம். அவர்கள் சந்தித்த பகுத்தறிவுவாதியின் விளக்கங்களும் அவர்களின் தேடலைத் தீவிரப்படுத்தி யிருக்கக் கூடும்.
இனியாவது திருந்தி வாழுங்கள் என்று சாமியார்களை மன்னித்து விடுதலை செய்யும் சிறுவர்களைச் சாமியார்கள் கொல்ல முயல, அங்கு வரும் காவல் அதிகாரி அன்புமணி, சாமியார்களைச் சுட்டுக்கொன்று சிறுவர்களைக் காப்பாற்றுகிறார்.
கூத்துக் கலைஞராக வருபவர் இயக்குனரின் தந்தை மாணிக்கம் என்பது தெரிந்தபோது வியப்பாக இருந்தது. பரம்பரைக் கூத்துக் கலைஞரைப் போல, அவ்வளவு இயல்பாக நடித்திருந்தார். மகனின் மருத்துவச் செலவுக்காக, தெருவில் கூத்துக்கட்டும் போது கலையை நேசிக்கும் கலைஞனின் சுயமரியாதையும், தந்தையின் பாசமும் வெளிப்படுகிறது. இவரைப் பற்றிய கூடுதலான ஒரு செய்தி, இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். மகனின் இலட்சியத்திற்கு வடிவம் கொடுத்த தந்தையாகவும் நம்முடைய மரியாதைக்குரியவராகிறார். பேரனாக வரும் இயக்குனர் ராச்குமார் பாசக்காரப் பட்டிக்காட்டுப் பேரனாக அசத்தியிருக்கிறார்.
கதை மட்டுமன்று, பாடல்களும் நல்ல பல கருத்துகளைச் சொல்கின்றன. கருப்புச் சட்டைக்காரர்களான, கவிஞர் அறிவுமதியும், பேராசிரியர் சுப.வீரபாண்டியனும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். இவர்களோடு இயக்குனரின் தந்தை எஸ்.எம். மாணிக்கம், இயக்குனர் ராச்குமார் ஆகியோரும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். அறிவுமதி எழுதிய ‘ அரைக் கிறுக்கன் ‘ பாடல் இளைஞர்களை முணுமுணுக்க வைக்கும். ‘ அச்சமென்ன அச்சமென்ன… ‘என்ற பேரா. சுபவீயின் பாடல் குழந்தைகளுக்குப் பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்கிறது. திரைப்படத்தில் இதுபோன்ற பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்லுவதற்கு கண்டிப்பாகத் துணிச்சல் வேண்டும். காரணம், பணம் சம்பாதிப்பதற்கான பொழுதுபோக்கு ஊடகம் என்ற எண்ணமே பெரும்பாலானோரிடம் மேலோங்கி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஊடகத்தின் வாயிலாக பெரும்பான்மை நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும் கதையைச் சொல்லும் இயக்குனரின் கொள்கை உறுதி பாராட்டிற்குரியது. முதல்படம் என்பதால், சிற்சில தொழில்நுட்பக் குறைபாடுகளும் படத்தில் இருக்கின்றன. கதை, கருத்தாழமிக்க பாடல்கள், எழிலார்ந்த கிராமத்துப் பசுமைக் காட்சிகள் ஆகியவற்றை முன்னிறுத்தி அந்தக் குறைகளை மறக்கலாம். பிரபல நாளேடுகளின் பாராட்டுக்கள், இயக்குனரின் துணிவுக்கும், உண்மையைப் பேசும் படத்தின் கதைக்கும் கிடைத்த பெருமை என்றே சொல்லலாம். மிகக் குறைந்த செலவில், நல்ல கருத்தாழமிக்கப் படத்தை, அதுவும் தன் முதல்படமாகத் தந்திருக்கும் இயக்குனருக்கு மீண்டும் நம்முடைய பாராட்டுக்கள்.
Sunday, August 28, 2011
சகோதரி செங்கொடி தூக்குக்கு எதிராக தீக்குளிப்பு
காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.
இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Sunday, July 17, 2011
‘கல் முதலாளிகள்’
நாடு மக்களுக்கு சொந்தம் என்பதுதான் உலக நியதி. ஆனால், நாட்டை கோயிலுக்கு உரிமையாக்கியதுதான் பார்ப்பனியம். திருவாங்கூர் சமஸ்தானமே பத்மநாப சாமிக்கே சொந்தமாம். அப்படித்தான் அந்த சமஸ்தானத்தின் மன்னராக இருந்த மார்தண்ட வர்மா, தனது மரணத்தின் போது தமது குடும்ப வாரிசுகளிடம் கூறினாராம்.
திருவனந்தபுரம் பத்மநாபன் கோயில் சுரங்கத்தில் புதைந்து கிடக்கும் தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகம் என்று செய்திகள் வருகின்றன. உலக கத்தோலிக்கர்களின் தலைமை பீடமான போப் ஆட்சி செய்யும் ‘வாடிக்கன்’ (இது ஒரு தனி நாடு) சொத்தையும் விஞ்சி நிற்கிறது - திருவனந்தபுரம் கல் முதலாளி பத்மநாபனின் சொத்து. இந்தியாவிலுள்ள பல கோயில்களில் இப்படி பல லட்சம் கோடி முடங்கிப் போய்க் கிடக்கிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.42,000 கோடி; பூரி ஜெகநாதன் வசம் 90 கோடி; சாமியார்கள், ‘பாபா’க்களின் ஆசிரமங்களில் பல்லாயிரம்கோடி. புட்டபர்த்தி சாய்பாபா செத்துப் போன வுடன் அவரது அறையிலிருந்து கோடி கோடியாக பணம் கடத்தப்படுகிறது.
இதுதான் ‘பார்ப்பன இந்தியா’
சுரங்கத்துக்குள் புதைந்து கிடக்கும் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள ஆபரணங்களை அப்படியே சுரங்கத்துக்குள் போட்டு மூடிவிட வேண்டும். அதை மக்களுக்கு பயன்படுத்துவது ‘தெய்வ குற்றம்’என்கிறார், கொலை வழக்கு விசாரணையில் உள்ள காஞ்சி ஜெயேந்திரன். திருவிதாங்கூர் மன்னர்களின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கில் இந்த சொத்துக்களை ‘வேத பாடசாலை’ போன்ற அமைப்புகளுக்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மக்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று கோரியுள்ளனர்.
கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி சொத்துக்களை மக்களுக்கு செலவிடக் கூடாது என்று கூறுகிறவர்களை நாம் கேட்கிறோம் - இந்த உடைமைகள் மக்களிடமிருந்து வந்தது தானே? மக்கள் காணிக்கையாகத் தந்தது தானே! கடவுள்களா இந்த உடைமைகளைக் கொண்டு வந்தன?
முதல் போட்டு உழைப்பாளர்களைச் சுரண்டும் முதலாளிகூட முதலீடு செய்ய வேண்டும்;தொழிலாளர்களுக்கு ஊதியம் தந்தாக வேண்டும். ஆனால் முதல் போடாமலேயே மக்களின்‘அறியாமை’யைச் சுரண்டும் ‘கல் முதலாளி’களான கடவுள்களால் பார்ப்பனர்கள் சுரண்டிக் கொழுத்தார்களே தவிர, மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? ‘கல் முதலாளி’களின் சுரண்டலை எதிர்த்து குரல் கொடுத்த தலைவர் பெரியார், கூழுக்கு ஏழை அழும்போது, பாழும் கல்லுக்கு பாலாபிஷேகம் ஏன், என்று கேள்வி எழுப்பியதுதான் சுயமரியாதை இயக்கம்.
கோயில் வழிபாடு என்பதே பார்ப்பனருக்கு உரியது அல்ல. பார்ப்பனர்கள் நெருப்பை வழிபட்டவர்கள். அதனால்தான் பார்ப்பனர்கள் மட்டுமே ‘அக்னிஹோத்ரிகள்’ என்று அழைக்கப்பட்டனர். பார்ப்பனர்கள் யாகங்களை மட்டுமே நடத்தி வந்தவர்கள். யாகம் நடத்துவதும், ‘அக்னி’யை வணங்குவதும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உள்ள உரிமை என்றாகிவிட்டதால், ஏனைய பார்ப்பனரல்லாதவர்கள் புத்தமதத்தில் உருவான மடாலயங்களைப் பார்த்த பிறகு கோயில்களை உருவாக்கத் தொடங்கினர். ‘கரையான் புற்றெடுக்க கருநாடகம் குடிபுகுந்தது போல்’ பிற்காலத்தில் கோயில்களில் குவிந்த செல்வத்தினால் பார்ப்பனர்கள் தங்கள் வேதகால கடவுள்களானஅக்னி,இந்திரன், வருணன் போன்றவற்றுக்கு விடை கொடுத்துவிட்டு கோயில்களை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விட்டனர். கடவுளுக்கு சமஸ்கிருதம் மட்டுமே தெரியும், கடவுள்‘பிராமணர்’களை மட்டுமே ஏற்றுக் கொள்வார் என்று அறிவித்து, கடவுளை தங்களது ‘மந்திரத்துக்கு’மட்டுமே கட்டுப்பட்டவராக்கிக் கொண்டார்கள். கடவுளுக்கு எந்த சக்தியும் இல்லை என்று பார்ப்பனர்களுக்கு நன்றாகவே தெரியும்.
நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் ‘இந்து அறநிலையத் துறை’ அமைக்கப்படும் வரை, கோயில்களின் சொத்துக்கள், செல்வங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் தனி உடைமைகளாகவே இருந்தன. பார்ப்பனர்கள் தான் அவற்றை அனுபவித்தார்கள். கோயில்களில் பார்ப்பனரைத் தவிர, பிற சாதியினரை நுழைய அனுமதித்த பார்ப்பனர்கள் கோயிலுக்குள் ‘தேவதாசி’களாக பெண்களை நியமித்துக் கொண்டு கோயில்களில் பெண்களுடன் பாலுறவு கொள்வதை புனிதமாக்கி, “வேஸ்யா தர்சனம்; புண்யம், பாபநாசனம்” என்று அதற்கு மந்திரத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள்.
கோயிலுக்குள் நுழைய முடியாத பிறசாதியினர், வீதியிலிருந்து தரிசிப்பதற்காகவே கோபுரங்களை கட்டி, அதில், கடவுள் பொம்மைகளை வைத்தனர். இன்றும் பார்ப்பனர்களின் ஆதிக்கத் திமிரின் சின்னமாகவே இந்த ஆகம கோயில்கள் விளங்குகின்றன.
திருவாங்கூர் சமஸ்தானம் என்பது பார்ப்பனர்களின் வர்ணாஸ்ரம கோட்டையாகவே திகழ்ந்திருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. அந்த மண்ணின் மைந்தர்கள் தான், அங்கே அரசர்கள். ஆனால் பார்ப்பனர்களின் அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள்.’கிராந்தி’ என்ற உருது பத்திரிகை,சாதியை எதிர்த்து எழுதியது என்பதால், அங்கே நடந்த மன்னராட்சி, அந்த ஏட்டுக்கு தடை போட்டது. கோயில் சொத்துகள் எல்லாம் பார்ப்பனரே அனுபவிக்க, மன்னராட்சி அனுமதித்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழும் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனியே ‘ஒட்டுப்புரா’ என்ற பெயரில் சாப்பாடு கூடங்களை உருவாக்கி, இலவசமாக அவர்களுக்கு மட்டும், மன்னர்கள் சாப்பாடு போட்டு வந்தார்கள். அதற்கு பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பிற சாதியினர் பட்டினியால் தவித்தாலும் அங்கு போய் சாப்பிட முடியாது. பார்ப்பனர்கள் வீதியில் நடக்கும்போது சத்தம் எழுப்பிக் கொண்டே போவார்கள். சத்தம் கேட்டால், மற்ற சாதியினர் வீதிகளில் வந்தால், ஓடி மறைந்து கொள்ள வேண்டும்.
திருவிதாங்கூர் சமஸ்தான கோயில்களில் காந்தி, லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் தரிசனத்துக்குப் போனபோது அவர்கள், ‘கடற்பயணம்’ செய்தவர்கள் என்று காரணம் காட்டி,பார்ப்பனர்கள் அனுமதி மறுத்தார்கள். அந்த சமஸ்தானத்துக் கோயிலில் தான் இப்போது‘புதையல்கள்’ வெளியே வந்திருக்கின்றன. இப்போதும் பார்ப்பனர்கள் அதே ‘வர்ணத் திமிரோடு’மக்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று எதிர்க்கிறார்கள்.
கேரளத்தில் ஆட்சியிலிருந்த பொதுவுடைமை கட்சி கூட இந்த சொத்துகளை மக்கள் உடைமையாக்க வேண்டும் என்று கூற அஞ்சுகிறது. இதில் பா.ஜ.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்,ஒரே நிலை எடுப்பதுதான் வேடிக்கை. இவர்கள் தான் இந்த நாட்டில் ‘புரட்சி’யை கொண்டு வரப் போகிறார்களா?
வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள பல்லாயிரம் கோடி திருட்டுப் பணத்தை வெளியே கொண்டு வரவேண்டும் என்று முழங்கும் ஊழல் எதிர்ப்பாளர்களும் சரி, உச்சநீதிமன்றமும் சரி,கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி உடைமைகளை மக்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறத் தயங்குவது ஏன்? வறுமைக் கோட்டுக்குக் கீழே 50 சதவீதத்துக்கும் அதிகமாக மக்கள் வாழ்வதாகக் கூறப்படும் ஒரு நாட்டில் கல் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ஆபரணங்களும், சொத்துகளும் தேவை தானா?
‘கடவுள்’ என்ற அச்சத்தைக் காட்டியே இப்படி நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் நிலையில் கடவுள் மறுப்பை பேசாமல் இருக்க முடியுமா? பகுத்தறிவு சிந்தனை வெகு மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டிருக்கு மானால், இப்படி ‘கல் முதலாளிகள்’ பெயரில் சொத்துகள் முடக்கப்படும் நிலை தொடருமா? பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதற்கு - பொதுவுடைமையாளர்களும், ‘புரட்சி’க்கட்சிக்காரர்களும் முன் வராமல், ஒதுங்குவது ஏன்?
பார்ப்பான் ஆதிக்கமும், கல் முதலாளிகள் சுரண்டலும் இப்பொழுதும்தொடருகிறது என்பதையே‘பத்மநாபன் சுரங்கக் கதைகள்’ உறுதிப்படுத்துகின்றன.