Monday, April 27, 2009

கலைஞர்உண்ணாவிரதம்,நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லைஇலங்கை அரசு அதிரடி,உறுதிமொழியை மீறி இலங்கை ராணுவம் தாக்குதல் விடுதலைப்புலிகள்

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்
இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.முதல் அமைச்சர் கருணாநிதி உண்ணா விரதத்தை முடிக்கும் முன்பு வாசித்த அறிக்கை வருமாறு: 1924ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 3ஆம் நாள் முத்துவேலர் என்கிற இசைத் தமிழ் தந்தைக்கும் அஞ்சுகம் என்கிற அன்னைக்கும் திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, குவா குவா என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பிய அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து பொருள்களைக் களவாடிய போது அவர்களிலே யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தமிழ் என்கிற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது.
அதை உச்சரிப்பதற்கு உயர்த்துவதற்கு உலக மொழிகளில் செம்மொழிகளில் ஒன்றாக ஆக்குவதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டுமென்று தமிழன்னை கருதினாள் போலும்! அதனால் நான் ஊர்ந்து தவழ்ந்து வளர்ந்து 13ஆம் வயதிலேயே தமிழ் எழுதவும் கட்டுரைகள் தீட்டவும் கதைகள் புனையவும் கற்கண்டு தமிழ் எனக்கு உதவிற்று. அந்நாளில் தான் 1938ஆம் ஆண்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் தமிழ்ப்புலவர் பெருமக்கள் தமிழ்க்காத்திடும் போரில் குதித்த வரலாறு தோன்றிற்று. அந்த வரலாற்றில் ஒரு துளியாக நான் இருந்தேன். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்களே, அப்படி இன்று கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நல் இதயங்களின் வாழ்த்துகளைப் பெறுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். இந்த வளர்ச்சியும், வலிமையும் எதற்காக பயன்பட வேண்டும்? என் தமிழைக்காக்கவும் என் தமிழர் எங்கெல்லாம் அல்லல் படுகின்றாரோ அவர்களைக்காக்கவும் பயன்படாத இந்த உடல் இருந்து என்ன பயன்? உயிர் இருந்து தான் என்ன பயன்? உடலில், முதுகில் அறுவை சிகிச்சை ஆயிற்றே, இந்த நிலையில் இலங்கைத்தமிழர்களுக்காக இப்படி ஒரு உண்ணா நோன்பு போராட்டம் என்றால் உடல் என்னவாகும்? உயிர் என்னவாகும்? எங்களுக்கு நீங்கள் வேண்டும் என்றெல்லாம் என் தமிழர்கள், என் உடன் பிறப்புகள் முழக்கமிடுகிறார்கள்; வேண்டுகிறார்கள். ஆமாம், அவர்களுக்கு நான் வேண்டும் எனக்கு அவர்கள் வேண்டும் என் தமிழ் வேண்டும் என் தமிழன் காலமெல்லாம் நலமாக வாழ வேண்டும். அவனை அல்லலோ, அவதியோ அண்டவும் கூடாது. தமிழனுக்கு ஒரு காயம் என்றால், அந்தக் காயம் என் உள்ளத்தில் ஆகாய மளவு பரவி நிற்கிறது. அதனால் தான் இலங்கையிலே வாடிக்கொண்டிருக்கின்ற மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களை தமிழ்த் தாய்களை தமிழ்ச்சகோதரிகளை தமிழ் மழலைகளை காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்தோடு வாடினேன், வதங்கினேன்.
நேற்றிரவெல்லாம் கண் விழித்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் சொன்னார்கள். நல்லதே நடக்கும் என்று தான் உறுதியளித்தார்கள். அதிகாலை 4 மணி வரையில் தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச்செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது. அதற்குப்பிறகு 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து உண்ணா நோன்பைத்தொடங்கினேன். இதன் விளைவாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது என்பதோடு, இனி இலங்கை ராணுவம் இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் அளிக்கப்பயன் படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை:இலங்கை அரசு அதிரடி
போர் நிறுத்தம் செய்வதாக இலங்கை அறிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதயநாணயக்கார, இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உறுதிமொழியை மீறி இலங்கை ராணுவம் தாக்குதல்: விடுதலைப்புலிகள்
தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசும், ராணுவமும் வாக்குறுதி அளித்த சில மணி நேரங்களிலேயே அது மீறப்பட்டு, 2 போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அமைதிச் செயலக இயக்குநர் புலிதேவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று பிற்பகல் 12.50 மணியளவில் (போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பதாக கூறி கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்த நேரம் 12.30 மணி) முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் உள்ள இடங்களைக் குறி வைத்து இரண்டு போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.
அதேபோல, 1.10 மணிக்கு இன்னொரு முறை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அறிவித்த இலங்கை அரசு அதை மீறும் வகையிலும், உலக சமுதாயத்தையும், குறிப்பாக தமிழக மக்களையும் ஏமாற்றும் வகையில் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.மேலும், பாதுகாப்பு வளையப் பகுதியில், இலங்கை ராணுவம் தொடர்ந்து எறிகணைகளை வீசித் தாக்கி வருகின்றன. வலைஞர்மடப் பகுதியிலும் தாக்குதல் தொடருகிறது என்று கூறியுள்ளார்.

No comments: