Saturday, April 25, 2009

இலங்கை அரசு மீது உலகநாடுகள் அதிருப்தி : ஹில்லாரி

வாஷிங்டன், வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசின் நடவடிக்கை அதிருப்தியளிப்பதாக அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அயலுறவு விவகாரங்களுக்கான பேரவையில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், " அப்பாவித் தமிழர்களை கொல்லப்படுவதால் உலகநாடுகள் அதிருப்தி அடைந்துள்ளதை இலங்கை அரசு உணர்ந்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இலங்கை அரசு தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், உலக மக்களிடையே சொல்ல முடியாத அளவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது " என்றார்.இலங்கையின் தற்போதைய சூழ்நிலை “மனிதப் பேரவலம்” எனக் குறிப்பிட்ட ஹில்லாரி, போரை நிறுத்தும்படி இலங்கை அரசை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இதன் மூலமே போர்ப் பகுதியில் சிக்கியுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களை மீட்க முடியும் என்றும் கூறினார்.போர் நிறுத்தப்படுவது அல்லது போரை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் மட்டுமின்றி அரசியல் தீர்வும் கிடைக்கும் என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ஹில்லாரி அப்போது தெரிவித்தார்.
மூலம் - வெப்துனியா

No comments: