Sunday, July 17, 2011

‘கல் முதலாளிகள்’

நாடு மக்களுக்கு சொந்தம் என்பதுதான் உலக நியதி. ஆனால், நாட்டை கோயிலுக்கு உரிமையாக்கியதுதான் பார்ப்பனியம். திருவாங்கூர் சமஸ்தானமே பத்மநாப சாமிக்கே சொந்தமாம். அப்படித்தான் அந்த சமஸ்தானத்தின் மன்னராக இருந்த மார்தண்ட வர்மா, தனது மரணத்தின் போது தமது குடும்ப வாரிசுகளிடம் கூறினாராம்.

திருவனந்தபுரம் பத்மநாபன் கோயில் சுரங்கத்தில் புதைந்து கிடக்கும் தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகம் என்று செய்திகள் வருகின்றன. உலக கத்தோலிக்கர்களின் தலைமை பீடமான போப் ஆட்சி செய்யும் வாடிக்கன்’ (இது ஒரு தனி நாடு) சொத்தையும் விஞ்சி நிற்கிறது - திருவனந்தபுரம் கல் முதலாளி பத்மநாபனின் சொத்து. இந்தியாவிலுள்ள பல கோயில்களில் இப்படி பல லட்சம் கோடி முடங்கிப் போய்க் கிடக்கிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.42,000 கோடி; பூரி ஜெகநாதன் வசம் 90 கோடி; சாமியார்கள், ‘பாபாக்களின் ஆசிரமங்களில் பல்லாயிரம்கோடி. புட்டபர்த்தி சாய்பாபா செத்துப் போன வுடன் அவரது அறையிலிருந்து கோடி கோடியாக பணம் கடத்தப்படுகிறது.

இதுதான் பார்ப்பன இந்தியா

சுரங்கத்துக்குள் புதைந்து கிடக்கும் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள ஆபரணங்களை அப்படியே சுரங்கத்துக்குள் போட்டு மூடிவிட வேண்டும். அதை மக்களுக்கு பயன்படுத்துவது தெய்வ குற்றம்என்கிறார், கொலை வழக்கு விசாரணையில் உள்ள காஞ்சி ஜெயேந்திரன். திருவிதாங்கூர் மன்னர்களின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கில் இந்த சொத்துக்களை வேத பாடசாலைபோன்ற அமைப்புகளுக்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மக்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று கோரியுள்ளனர்.


கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி சொத்துக்களை மக்களுக்கு செலவிடக் கூடாது என்று கூறுகிறவர்களை நாம் கேட்கிறோம் - இந்த உடைமைகள் மக்களிடமிருந்து வந்தது தானே? மக்கள் காணிக்கையாகத் தந்தது தானே! கடவுள்களா இந்த உடைமைகளைக் கொண்டு வந்தன?

முதல் போட்டு உழைப்பாளர்களைச் சுரண்டும் முதலாளிகூட முதலீடு செய்ய வேண்டும்;தொழிலாளர்களுக்கு ஊதியம் தந்தாக வேண்டும். ஆனால் முதல் போடாமலேயே மக்களின்அறியாமையைச் சுரண்டும் கல் முதலாளிகளான கடவுள்களால் பார்ப்பனர்கள் சுரண்டிக் கொழுத்தார்களே தவிர, மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? ‘கல் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து குரல் கொடுத்த தலைவர் பெரியார், கூழுக்கு ஏழை அழும்போது, பாழும் கல்லுக்கு பாலாபிஷேகம் ஏன், என்று கேள்வி எழுப்பியதுதான் சுயமரியாதை இயக்கம்.


கோயில் வழிபாடு என்பதே பார்ப்பனருக்கு உரியது அல்ல. பார்ப்பனர்கள் நெருப்பை வழிபட்டவர்கள். அதனால்தான் பார்ப்பனர்கள் மட்டுமே அக்னிஹோத்ரிகள்என்று அழைக்கப்பட்டனர். பார்ப்பனர்கள் யாகங்களை மட்டுமே நடத்தி வந்தவர்கள். யாகம் நடத்துவதும், ‘அக்னியை வணங்குவதும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உள்ள உரிமை என்றாகிவிட்டதால், ஏனைய பார்ப்பனரல்லாதவர்கள் புத்தமதத்தில் உருவான மடாலயங்களைப் பார்த்த பிறகு கோயில்களை உருவாக்கத் தொடங்கினர். கரையான் புற்றெடுக்க கருநாடகம் குடிபுகுந்தது போல்பிற்காலத்தில் கோயில்களில் குவிந்த செல்வத்தினால் பார்ப்பனர்கள் தங்கள் வேதகால கடவுள்களானஅக்னி,இந்திரன், வருணன் போன்றவற்றுக்கு விடை கொடுத்துவிட்டு கோயில்களை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விட்டனர். கடவுளுக்கு சமஸ்கிருதம் மட்டுமே தெரியும், கடவுள்பிராமணர்களை மட்டுமே ஏற்றுக் கொள்வார் என்று அறிவித்து, கடவுளை தங்களது மந்திரத்துக்குமட்டுமே கட்டுப்பட்டவராக்கிக் கொண்டார்கள். கடவுளுக்கு எந்த சக்தியும் இல்லை என்று பார்ப்பனர்களுக்கு நன்றாகவே தெரியும்.

நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறைஅமைக்கப்படும் வரை, கோயில்களின் சொத்துக்கள், செல்வங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் தனி உடைமைகளாகவே இருந்தன. பார்ப்பனர்கள் தான் அவற்றை அனுபவித்தார்கள். கோயில்களில் பார்ப்பனரைத் தவிர, பிற சாதியினரை நுழைய அனுமதித்த பார்ப்பனர்கள் கோயிலுக்குள் தேவதாசிகளாக பெண்களை நியமித்துக் கொண்டு கோயில்களில் பெண்களுடன் பாலுறவு கொள்வதை புனிதமாக்கி, “வேஸ்யா தர்சனம்; புண்யம், பாபநாசனம்என்று அதற்கு மந்திரத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள்.


கோயிலுக்குள் நுழைய முடியாத பிறசாதியினர், வீதியிலிருந்து தரிசிப்பதற்காகவே கோபுரங்களை கட்டி, அதில், கடவுள் பொம்மைகளை வைத்தனர். இன்றும் பார்ப்பனர்களின் ஆதிக்கத் திமிரின் சின்னமாகவே இந்த ஆகம கோயில்கள் விளங்குகின்றன.


திருவாங்கூர் சமஸ்தானம் என்பது பார்ப்பனர்களின் வர்ணாஸ்ரம கோட்டையாகவே திகழ்ந்திருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. அந்த மண்ணின் மைந்தர்கள் தான், அங்கே அரசர்கள். ஆனால் பார்ப்பனர்களின் அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள்.கிராந்திஎன்ற உருது பத்திரிகை,சாதியை எதிர்த்து எழுதியது என்பதால், அங்கே நடந்த மன்னராட்சி, அந்த ஏட்டுக்கு தடை போட்டது. கோயில் சொத்துகள் எல்லாம் பார்ப்பனரே அனுபவிக்க, மன்னராட்சி அனுமதித்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழும் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனியே ஒட்டுப்புராஎன்ற பெயரில் சாப்பாடு கூடங்களை உருவாக்கி, இலவசமாக அவர்களுக்கு மட்டும், மன்னர்கள் சாப்பாடு போட்டு வந்தார்கள். அதற்கு பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பிற சாதியினர் பட்டினியால் தவித்தாலும் அங்கு போய் சாப்பிட முடியாது. பார்ப்பனர்கள் வீதியில் நடக்கும்போது சத்தம் எழுப்பிக் கொண்டே போவார்கள். சத்தம் கேட்டால், மற்ற சாதியினர் வீதிகளில் வந்தால், ஓடி மறைந்து கொள்ள வேண்டும்.


திருவிதாங்கூர் சமஸ்தான கோயில்களில் காந்தி, லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் தரிசனத்துக்குப் போனபோது அவர்கள், ‘கடற்பயணம்செய்தவர்கள் என்று காரணம் காட்டி,பார்ப்பனர்கள் அனுமதி மறுத்தார்கள். அந்த சமஸ்தானத்துக் கோயிலில் தான் இப்போதுபுதையல்கள்வெளியே வந்திருக்கின்றன. இப்போதும் பார்ப்பனர்கள் அதே வர்ணத் திமிரோடுமக்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று எதிர்க்கிறார்கள்.


கேரளத்தில் ஆட்சியிலிருந்த பொதுவுடைமை கட்சி கூட இந்த சொத்துகளை மக்கள் உடைமையாக்க வேண்டும் என்று கூற அஞ்சுகிறது. இதில் பா.ஜ.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்,ஒரே நிலை எடுப்பதுதான் வேடிக்கை. இவர்கள் தான் இந்த நாட்டில் புரட்சியை கொண்டு வரப் போகிறார்களா?

வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள பல்லாயிரம் கோடி திருட்டுப் பணத்தை வெளியே கொண்டு வரவேண்டும் என்று முழங்கும் ஊழல் எதிர்ப்பாளர்களும் சரி, உச்சநீதிமன்றமும் சரி,கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி உடைமைகளை மக்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறத் தயங்குவது ஏன்? வறுமைக் கோட்டுக்குக் கீழே 50 சதவீதத்துக்கும் அதிகமாக மக்கள் வாழ்வதாகக் கூறப்படும் ஒரு நாட்டில் கல் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ஆபரணங்களும், சொத்துகளும் தேவை தானா?


கடவுள்என்ற அச்சத்தைக் காட்டியே இப்படி நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் நிலையில் கடவுள் மறுப்பை பேசாமல் இருக்க முடியுமா? பகுத்தறிவு சிந்தனை வெகு மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டிருக்கு மானால், இப்படி கல் முதலாளிகள்பெயரில் சொத்துகள் முடக்கப்படும் நிலை தொடருமா? பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதற்கு - பொதுவுடைமையாளர்களும், ‘புரட்சிக்கட்சிக்காரர்களும் முன் வராமல், ஒதுங்குவது ஏன்?


பார்ப்பான் ஆதிக்கமும், கல் முதலாளிகள் சுரண்டலும் இப்பொழுதும்தொடருகிறது என்பதையேபத்மநாபன் சுரங்கக் கதைகள்உறுதிப்படுத்துகின்றன.

Saturday, July 2, 2011

அன்னூரில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் உரிமைப் போராட்டம் வெற்றி







27-6-2011 அன்று அன்னூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்…..

இந்த அன்னூர் பகுதியில் நிலவும் தீண்டாமைக்கு எதிராக, நடந்துகொண்டிருக்கிற இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிற அனைத்து அமைப்புகளின் தலைவர்களே! வருகை தந்திருக்கிற அன்பு தோழர்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னூர் பகுதியில் நடந்துவரும் தீண்டாமை கொடுமை, அவ்வப்போது அதற்கு வருகிற எதிர்ப்புகளையெல்லாம் மீறி, மீண்டும் தொடர்ந்துகொண்டிருப்பதை நாம் காண்கிறோம். சில மாதங்களுக்கு முன்னால், அங்கிருக்கிற ஒரு கல்வெர்ட்சுவரின் மீது சட்டையோடு அமர்ந்திருந்தார்கள் என்பதற்காக சிலர் தாக்கப்பட்டுள்ளனர். முடி திருத்த மறுக்கிறார்கள். தேனீர் கடைகளில் இரட்டை குவளை. இந்த கொடுமைகள் எல்லாம் நீடிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு, வழக்குகள் தொடுக்கப்பட்டன. போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கடந்த மே மாதம் 21 ஆம் நாள் பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஆர்பாட்டம் இங்கு நடந்தது. எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வடிவங்களில் தீண்டாமை இருக்கிறது என்பதை, அந்த போராட்ட துண்டறிக்கையில் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள். குறிப்பாக குறுக்கிளையம்பாளையம் கோவிந்தன் தேனீர் கடையில் இரட்டை குவளை இருக்கிறது. பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க தடை இருக்கிறது. நல்லிசெட்டிபாளையத்தில் ஊர்கவுண்டர் தேனீர் கடையில் இரட்டை குவளை இருக்கிறது. பழனிசாமி தேனீர் கடையில் இரட்டை குவளை இருக்கிறது. அக்கரைசெங்கப்பள்ளி சேகர் கடையில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிதிருத்த மறுக்கப்படுகிறது. அழகர் பாளையம் ராமசாமி கடையில் தனிக் குவளை இருக்கிறது. இவைகளுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

காவல் துறையோ, அரசு அதிகாரிகளோ உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத்தான், இந்த போராட்டத்தின் தேவை ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் பிடிக்கத் தடை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் வினியோகித்திருக்கிறார்கள். தண்ணீர் பிடிக்க தடை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, ஆர்பாட்டத்தில் உரை ஆற்றிருக்கிறார்கள். பூசிமெழுகும் அதிகாரிகளின் அலட்சியபோக்குதான், இப்படிபட்ட தீண்டாமை நிலவுவதற்கு காரணமாயிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு பெரியார் திராவிடர் கழகம் இரட்டைகுவளைகளுக்கு எதிராக போராட்டம் எடுத்தபோது, சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐ.ஜி சொன்னார்…… “தமிழ்நாட்டில் தீண்டாமையே இல்லை, அரசியலில் ஆதாயம் தேடும் சிலர் இப்படி சொல்கிறார்கள்’….என்று, இவர்தான் சமத்துவ தேனீர் விருந்து வைப்பதற்காக என்று, எழுபத்தி இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கொண்டார். அதே நிலையைதான் இப்போது பார்க்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்னாள், கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அங்கு தீண்டாமை கொடுமைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இந்த பகுதியின் மனித உரிமை பிரிவு உதவி ஆய்வாளர் தீண்டாமை இல்லை என்று சொல்லியதாக கோட்டாட்சியரே பதிவு செய்திருக்கிறார். இதை படித்துக் காட்டினால் தான் இந்த அதிகாரிகளின் யோக்கியதை தெரியும். (படிக்கிறார்)…………

“அன்னூர் காவல் ஆய்வாளர், மற்றும் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆய்வாளர், அன்னூர் உள்வட்டத்தில் இரட்டை குவளை மற்றும் முடி திருத்த நிலையங்களில் தீண்டாமை போன்ற நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறுவதில்லை என்றும், இது தொடர்பாக தனிபட்ட நபர்கள்மீது எந்தவித புகார்களும் வரவில்லை என்றும், அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி தாழ்த்தப்பட்ட நபர்கள் உரிமை பிரச்சினை தொடர்பாக, தணிக்கை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது”. இது கோட்டாட்சியர் எழுதிகொடுத்த அறிக்கை, இவர்கள் பனியாற்றும் லட்சணம் எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அந்த நண்பரை நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே தணிக்கை செய்தீர்களா? அல்லது அறையில் உட்கார்ந்துகொண்டு அறிக்கை எழுதினீர்களா? என்பதுதான் எங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் நடவடிக்கை எடுத்துத்தொலையாவிட்டாலும் பரவாயில்லை. இல்லை என்று ஏன் மறுதலிக்கிறீர்கள்?.

கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, உச்சநீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை சொல்லியிருக்கிறது. ஆறுமுகசேர்வை என்பவர் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட ஒருவரைப் பார்த்து ஜாதிபெயரை சொல்லியதாக வழக்கு. தண்டனைப் பெற்ற ஆதிக்கச் சாதிகாரன் உச்சநீதிமன்றம் வரை சென்றான். அங்கு தண்டனையை உறுதிசெய்ததோடு நீதிபதி நிற்கவில்லை. தமிழ்நாட்டில் பல கிராமங்களில் இரட்டை குவளை இருப்பதை அறிந்து நாங்கள் வருந்துகிறோம், இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல் கண்கானிப்பாளரையும் முதலில் பனியிடைநீக்கம் செய்யுங்கள், நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுங்கள், துறைசார் நடவடிக்கை எடுங்கள் என்று, தமிழக அரசுக்கும், மற்ற மாநில அரசுகளுக்கும் தீர்ப்பை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நாம் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களிடமும், தீர்ப்பு நகலை கொடுத்திருக்கிறோம், புகார் கொடுக்கும் போது இதையும் இணைத்து கொடுங்கள். இப்படிபட்ட உதவி ஆய்வாளர் போன்ற தறுதலை அதிகாரிகளால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்தான் பாதிக்கப்படுவார்கள். உங்களுடைய போக்கை மாற்றிகொள்ளுங்கள், நடவடிக்கை எடுக்காவிட்டாலும் இருப்பதை சொல்லிதொலைத்தால் மற்ற அதிகாரிகளாவது நடவடிக்கை எடுப்பார்கள். தீண்டாமை கொடுமைகளை தடுக்காமல் இருப்பதை விட இல்லை என்று சொல்வது மிகக்கேவலமான போக்கு என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என அதிகாரிகளைக் கேட்டுகொள்கிறேன்.

1926 ஆம் ஆண்டு, பின்னாளில் பொதுவுடைமை கட்சியை நடத்திய ஜீவா அவர்கள் நடத்திய சிராவயல் ஆசிரமத்தில் காந்தி வாசகசாலையை திறந்து வைப்பதற்காக பெரியார் அவர்களை அழைக்கிறார்கள். அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக காந்தி கிணறு என்று வெட்டப்பட்டிருக்கிறது. “நீங்கள் பொதுகிணற்றில் நீர் எடுக்கப் போராடுங்கள் அல்லது தாகத்தோடு செத்துப்போங்கள், ஆனால் தனிக்கிணற்றில் நீர் எடுக்காதீர்கள்” என்று தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்து பெரியார் சொன்னார். இப்பொழுது நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில், உங்களுக்கு தனிகுழாய் அமைத்து தருகிறோம் என்று கோட்டாட்சியர் சொல்லியிருக்கிறார். பைத்தியக்காரா இது குடிநீர் சிக்கல் அல்ல தீண்டாமை சிக்கல் என்று தோழர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். தோழர்கள் சுட்டிக் காட்டியதைப் போல் அம்பேத்கர் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் போராடினார். குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னாலும் போராடினர். அதைதான் நாம் இப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆயிரம் சட்டங்கள் வந்துவிட்டது, தீண்டாமை கொடுமைகளை செய்கிறவர்கள் மீது மட்டுமல்லாது, கடமையை சரிவர செய்யாத அரசு அதிகாரிகளின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் படி தண்டணை உண்டு என்பது பற்றியாவது அறிவீர்களா?. வழக்கு தொடுத்து முப்பது நாட்களுக்குள் புலன் விசாரனையை முடிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இப்பொழுது பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன, இன்னும் பதினைந்து நாட்களில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். எங்கோ இருக்கிற மனித உரிமை ஆணையத்திற்கு செய்தித்தாளைப் பார்த்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கு இருகிற சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கு அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களை பார்த்தப் பின்னாலும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை கைது செய்வதாக இருந்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணி, ஒருமணிக்கு கூட வருகிறீர்கள். ஆணால் இது எவ்வளவு பெரிய குற்றங்கள்.

இது மனித சமுதாயத்தின் சமத்துவத்திற்கு எதிரான குற்றங்கள். இவைகள் மீது நடவடிக்கை எடுக்காத போக்குதான் இருந்துகொண்டிருக்கிறது. இது தனித்தனி நிகழ்ச்சிகளாக போராட வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் தத்துவ ரீதியாக, இப்படிபட்ட தீண்டாமை, அதை தாங்கி பிடித்துகொண்டிருக்கிற சாதிகள், அதை தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிற இந்து மதம், வேதங்கள், சாஸ்திரங்கள், இவைகள் எல்லாம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரியாரும்,அம்பேத்கரும் இந்த சமுதாயத்திற்கு விட்டுச்சென்ற கருத்துக்கள். அதை நோக்கி ஒருபக்கம் தத்துவ தளத்தில் நகருகிறபோது, சமுதாயத்தில் நடக்கிற இப்படிபட்ட தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நாம் அவ்வப்போது, உடனே எதிர்வினை ஆற்றியாக வேண்டும். நான் மீண்டும் மீண்டும் சொல்லிகொள்ள விரும்புகிறேன். மனித உரிமை பிரிவு செய்கிற தவறுகளால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், பதவி இழக்கப் போகிறார்கள் என்பதுதான் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. குட்டிநாய் குளைத்து பெரியநாய்க்கு ஆபத்து என்று சொல்வார்கள், அதுபோல இவர்கள் செய்கிற தவறுகளால் மேலதிகாரிகளுக்கு ஆபத்து என்பதை அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்,.

அதிகாரிகள் என்பவர்கள், எங்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிற வேலைக்காரர்கள். பணக்காரர்களைப் போல் எங்களால் தனித்தனியாக கூர்க்கா - செக்யூரிட்டி வைத்துகொள்ள முடியாது என்பதால் அரசாங்கத்தின் மூலம் உங்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். எங்களுடைய வேலைக்காரர்களாகிய நீங்கள் வேலையை சரியாக செய்யவில்லை என்றால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எஜமானர்களாகிய எங்களுக்கு உண்டு. எந்த வன்கொடுமை நிகழ்ந்தாலும் 3(1)(10) பிரிவைத்தான் போடுவீர்கள? அந்தப் பிரிவு வழக்குதான் உச்சநீதிமன்றம் ஆறுமுகம் சேர்வைக்கு, தண்டனையை உறுதிச் செய்திருக்கிறது. ஏன் நீர் உரிமையை மறுத்ததாக 3(1)(5) பிரிவையும் சேர்த்துப் போடமாட்டீர்காளா? எங்களுக்கு எந்த தனிப்பட்ட அதிகாரிமீதோ, குறிப்பிட்ட நபர் மீதோ கோபம் இல்லை. இதை செய்கிற யாராக இருந்தாலும் கோபம் வராமல் இருக்கப் போவதும் இல்லை. பொதுக் குழாயில் நீர் எடுப்பதற்கு மட்டுமான போராட்டம் அல்ல. செல்போனில் பேச கூடாது, பைக்கில் போகக்கூடாது என்கிற கொடுமை பற்றி, “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிக்கையில் செய்தி வருகிறது. . எங்கோ இருக்கிற மனித உரிமை ஆணையத்திற்கு செய்தித் தாளைப் பார்த்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கு இருக்கும் காவல் துறை புகார் ஏதும் வரவில்லை என்கிறார்கள்.

புகார் கொடுக்க வருபவர்களை அங்கும் இங்கும் அழைக்கழித்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்? எப்படி புகார் கொடுப்பார்கள்? தீண்டாமை இருப்பது பற்றி தெரிந்த பின்னாலாவது, இது குறித்து பிரசாரம் செய்ய வேண்டும், காவல் துறையை, வருவாய்த்துறையை அழைத்துச்சென்று, தீண்டாமை நிலவும் பகுதிகளை காட்டவேண்டும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எல்லாம் சட்டத்தில் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் கால் பகுதியாக இருக்கிற மக்களை, பீடித்திருக்கிற கொடுமைகளுக்கு நாம் தீர்வு காண்போம், தீர்வு கான்பதற்கான முயற்சியில் ஒறுதான் இந்த போராட்டம். அந்த சிறுவனை அடிக்கிற போது ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள், அதை எங்களுடைய பொதுச்செயலாளர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். நக்கீரன் இதழ் பேட்டியில், பாதிப்புக்குள்ளான சிறுவன்வசந்தகுமார், கலாமணி என்ற பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டுருக்கிறார். மற்ற இரண்டு பெண்கள் யார் என்பதை விசாரித்தறிய வேண்டும். இவைகளை வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இப்படிப்பட்ட கொடுமைகள் தடுத்துநிறுத்தப் படவேண்டும். இனி இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழக் கூடாது என்பதை எதிர்பார்த்துதான் இந்த போராட்டம். இதை கேட்டுக்கொண்டிருக்கிற உளவுத்துறை உரிய அதிகாரிகளுக்கு சரியான செய்தியை சொல்லுங்கள், அதிகாரிகள் தீண்டாமைகளை நிகழாமல் தடுக்க வேண்டும் என்று கேட்டு, இந்த ஆர்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன் வணக்கம்.