Wednesday, June 10, 2009

ஐரோப்பிய நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பெண் ஜனனி ஜனநாயகம் தோல்வி: அதிக வாக்குகள் பெற்று சாதனை

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் ஜனனி ஜனநாயகம் வெற்றி பெறத் தவறினார். எனினும் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாகப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

லண்டன் பகுதியிலிருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டிருந்தார் ஜனனி. அவருக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் பேராதரவு தெரிவித்திருந்தனர். இலங்கைப் பெண்ணான பிரபல பாடகி மாதங்கி மாயா அருள் பிரகாசம் (எம்.ஐ.ஏ.) வும் ஆதரவு தெரிவித்திருந்தார். ஜனனி வெற்றி பெற்றால் இலங்கைத் தமிழர்களின் அவலம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவர் மூலமாக ஒலிக்கும், விடிவு காலம் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக ஜனனி தோல்வியுற்றார். இருப்பினும் கூட, 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்து விட்டார் ஜனனி.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகள் இதுவரை கிடைத்ததில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஜனனி வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த சில கட்சிகளின் வேட்பாளர்களை விட ஜனனி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார். லண்டன் பகுதியில் எட்டு எம்.பி. இடங்கள் உள்ளன. இதில், 3 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சியும், ஆளும் தொழிலாளர் கட்சி 2 இடங்களையும் பெற்றன. லிபரல் டெமாக்ரட்ஸ், கிரீன் கட்சி, இங்கிலாந்து சுயேச்சைக் கட்சி ஆகியோருக்கு தலா ஓர் இடம் கிடைத்தது. ஜனனிக்கு 1 இலட்சம் வாக்குகள் கிடைத்திருந்தால் அவர் எம்.பி. ஆகியிருப்பார்.

No comments: