Tuesday, March 1, 2011

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம்; தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு மின்தடையா? மார்ச் 5 இல் மின்வாரியங்கள் முன் கழகம் ஆர்ப்பாட்டம்

பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழு கூட்டம் பிப். 26, 27 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெற்றது. முதல் நாள் அண்ணாமலை ஓட்டல் அரங்கிலும், இரண்டாம் நாள் திவ்யோதயா அரங் கிலும் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செய லாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் களும் கழகத் தோழர்களும் பார்வையாளர்களாக பங்கேற்றனர். கழகத்தின் செயல்பாடுகள், திட்டங் கள் குறித்தும் தங்கள் கருத்துகளை மாவட்டக் கழகங் கள் சார்பாக தோழர்களுடன் கலந்து விவாதித்து மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் அறிக்கைகளாக தயாரித்து வந்தனர். அதனடிப் படையில் விவாதங் களும், கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன. கூட்டத்தில் இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அ) தமிழ்நாட்டில் சில நாட்களில் மேனிலைப் பள்ளி களில் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளும், கல்லூரித் தேர்வு களும் நடக்க இருக்கின்றன. இந் நிலையில் தமிழ்நாட்டில் வழக்கமான இரண்டு மணி நேர பகல் மின்வெட்டுக்குப் பதிலாக மூன்று மணி நேரமும், அதற்கு அதிகமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலோ முன் அறிவிப் பின்றி மின்வெட்டு அன்றாடம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலிருந்து படிக்கும் முதல் தலைமுறை யினருக்கும், பேரூர்களிலும், நகரங்களிலும் வசிக்கும் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கும் மின்தடைகளின்போது வெளிச்சத்துக்கு மாற்று மின்சாரத்தை ஆக்கும் சாதனங் கள் எதுவும் இருக்காது என்பது வெளிப்படையான உண்மை.

ஆனால், இந்நாட்டு வெகு மக்களுக்கு வேலை வாய்ப்பு எதையும் தராத பன்னாட்டு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், வெளியிலும் தொழி லாளர்களுக்கான இந்நாட்டின் பாதுகாப்பு சட்டங்கள் எதையும் பின்பற்ற வேண்டியதில்லை என்ற விதிவிலக் கோடும், தடையில்லா மின்சாரத்தை எப்போதும் குறிப்பிட்ட குறைந்த விலையிலேயே கொடுக்கப்படும் என்ற ஒப்பந்தத் திலும், மக்கள் நலனில் அக்கறையில்லாத ஊழல் அரசியல் வாதிகளால் வழங்கப்பட்டு வருவது பேரவலமாகும்.

எனவே, இந்நாட்டின் பெரும்பான்மையாகவும், தங்களது கடும் உழைப்பால் அனைத்து வளங்களையும் உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்கள் வீட்டுப் பிள்ளை களின் கல்வித் தேர்வுகளுக்கு பெரும் இடையூறாக உள்ள மின்வெட்டை 2011, மே மாத இறுதி வரையிலாவது அறவே ரத்து செய்து முழு நாளும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், வாய்ப்புள்ள இடங்களில் மின்சார அலுவலகங்களுக்கு முன்னர் வருகிற மார்ச் 5 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று செயற்குழு தீர்மானிக்கிறது.

வீடுகளுக்கான மின்சாரத்தை முழுமையாக வழங்கு கிறோம் என்ற காரணம் காட்டி, விவசாயத்துக்கோ, சிறு தொழில்களுக்கோ கொடுக்கப்படும் மின்சாரத்தை நிறுத்தவோ, நேரத்தை குறைக்கவோ கூடாது என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தேர்வை எதிர் கொண்டிருக்கிற மாணவர்களைத் தவிர பிற மாணவர் களும், பெற்றோர்களும், வெகுமக்கள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுக்கிறது.

ஆ) பொது இடங்களில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தடை இருந்தாலும், மதப் பண்டிகைகள் மத விழாக்களில் இரவு நேரங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் மாணவர்கள் தேர்வு காலங்களில் படிப்பதற்கு பெரும் இடையூறாகி விடுகிறது. நீதிமன்ற ஆணைகளுக்கு எதிரான இந்த சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறையை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. (இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு நகல்களை காவல் நிலையங் களுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது)

மாநில செயற்குழுவில் உரையாற்றிய மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் : வெள்ளமடை நாகராசு (கோவை வடக்கு), கா.சு.நாகராசு (கோவை தெற்கு), வழக்கறிஞர் சாஜித் (கோவை மாநகரம்), இலக்குமணன் (பெரம்பலூர்), தமிழ்ப்பித்தன் (பெரம்பலூர்), துரை. சம்பத் (திண்டுக்கல்), அழகிரி (கடலூர்), இராம. இளங்கோவன் (ஈரோடு), டேவிட் (சேலம்), குமாரதேவன் (வடசென்னை), அன்பு. தனசேகர் (தென்சென்னை), திலீபன் (வேலூர்), அய்யனார் (விழுப்புரம்), சாமிநாதன் (நாமக்கல்), தனபால் (கரூர்), வேடியப்பன் (தருமபுரி), ரசீத்கான் (நாகை), துரைசாமி (திருப்பூர்), சோலை மாரியப்பன் (தஞ்சை), பகுத்தறிவாளன் (அரியலூர்), பால். பிரபாகரன் (தூத்துக்குடி). பார்வையாளர் களாக பங்கேற்ற கழகத்தினரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். மாநகர பொறுப்பாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.


சட்டத்தைக் காக்க - கழகம் களமிறங்குகிறது

சுடுகாடுகளை - சாதிவாரியாகப் பிரிக்கும் இரட்டைச் சுவர்கள் இடிக்கப்படும்

கோவையில் கூடிய கழக மாநில செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானம்:

மனித குல சமத்துவத்துக்கும், மாண்புக்கும், முரணாகவும், உழைக்கும் அடித்தட்டு மக்களின் சுயமரியாதைக்கு எதிராகவும், ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டங்களுக்கு எதிராகவும் பெரியாரின் வாரிசுகளாக தங்களை சொல்லிக் கொள்ளுகிற அரசுகளின் ஆட்சியிலும் சுடுகாடுகளிலும், இடுகாடுகளிலும் சாதிக்கு, தனித் தனியாக இருப்பது கேவலமான ஒன்றாகும்.

அதுவும் தமிழ்நாடு அரசு, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற தனது திட்ட நிதியிலிருந்து கட்டப்படும் இடுகாடு, சுடுகாடுகளிலும்கூட தாழ்த்தப்பட் டோருக்கு என தனியாகவும், பிற மக்களுக்கு என தனியாகவும் உள்ள நிலை மிகமிகக் கேவலமானதும், அரசியல் அமைப்புக்கே எதிரானதும் ஆகும்.

அரசின் இந்த தவறான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்கள் சமத்துவத்தை நெஞ்சில் ஏந்தியும் அரசியல் சட்டத்தையும், பிற சட்டங்களையும் மதித்துப் பேணும் நோக்கத்தோடும், சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்ற சட்ட உணர்வோடும், புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் நாளுக்குள் வாய்ப்பான நாளில் அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சுடுகாடுகளைப் பிரிக்கும் இடைச் சுவரை உடைத்தும், தனித் தனி இடங்களில் இருந்தால் அறிவிப்புப் பலகையிலுள்ள தாழ்த்தப்பட்டோர் சுடுகாடு என்ற எழுத்துக்களை தார் கொண்டு அழித்தும், அரசின் தவறான போக்கை அம்பலப்படுத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

104 கிராமங்களில் தொடர்கிறது இரட்டைக் குவளை முறை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில், 213 கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில், 104 கிராமங்களில் இன்னும் இரட்டைக் குவளை முறை இருப்பது மதுரை எவிடன்ஸ்அமைப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

மதுரையில் 13 கிராமங்கள், திண்டுக்கல்லில் 24 கிராமங்கள், சிவகங்கையில் 15 கிராமங்கள் என, 213 கிராமங்களில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளை, இந்த அமைப்பு ஆய்வு செய்தது. இதில், 104 கிராமங்களில் டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை இன்னும் இருப்பது கண்டறியப்பட்டது. சில கிராமங்களில் குறிப்பிட்ட சமூகத் தினருக்கு கண்ணாடி குவளையும், ஆதி திராவிடர் களுக்கு சில்வர் குவளையும், பிளாஸ்டிக் கப்பும் கொடுக்கப் படுகிறது. தமிழகத்தில் 208 கிராமங்களில், சாதி ரீதியாக சுடுகாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 97 கிராமங்களில் ஆதி திராவிடர் சடலத்தை பொதுப் பாதையில் எடுத்து செல்ல முடியாது. 153 கிராமங்களில் மாற்று சாதியினர் குடியிருப்பு வழியாக எடுத்து செல்ல முடியாது. ஆதி திராவிடர் சுடுகாடுகளில் தண்ணீர், மின்சாரம், கொட்டகை என எந்த அடிப்படை வசதியும் இல்லை.

சலூன் கடைகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுகிறது. 142 கிராமங்களில் ஆதி திராவிடர்களுக்கு முடிவெட்டக் கூடாது என தடையுள்ளது. சில கிராமங்களில் முடிவெட்டும் கருவிகள் இரண்டு செட்வைத்துக் கொண்டு, அதில் ஒன்றை ஆதி திராவிடர்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதேபோல், ரேஷன் கடைகள், மருத்துவமனைகள், சாவடிகள் என அனைத்து இடங்களிலும் பாகுபாடு தொடர்கிறது. 45 ஆதி திராவிட ஊராட்சி தலைவர்கள் வன்கொடுமைக்கும், சித்ரவதைக்கும் ஆளாகியுள்ளனர்.

No comments: