Saturday, March 21, 2009

என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான். வை.கோ

என்னை கள்ளத்தோணியில் சென்று வந்தவன் என்றும், உயிர் பிச்சை கொடுத்ததாகவும் முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் உண்மையில் என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான். இவ்வாறு காந்திபுரம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ தெரிவித்தார்.

மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த தமிழக அரசை கண்டித்து கோவை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றுக்காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக ஒரு லாரியில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர்,
”உலக நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு ஈழ தமிழர்களை அழித்து வரும் இலங்கை இராணுவத்தை எதிர்த்து எந்த நாடும் உதவி செய்யாத நிலையிலும் போராடி வரும் விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்பதற்காக நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதே போல எங்களையும் சிறையில் அடைத்து நிராயுதபாணியாக்கி தேர்தலை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நான் பேசினேன். நான் பேசியதை இங்குள்ள நூற்றுக்கணக்கானவர்கள் திருப்பி சொல்லியுள்ளனர். எனவே இவர்கள் அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வீர்களா?
அப்படியென்றால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சிறைச்சாலை ஆக்குவீர்களா?. தமிழகத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. தமிழனத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வரக்கூடாது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்குங்கள். அதனை வாங்கி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு அனுப்பலாம்.
ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையினால் மட்டுமே இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய முடியும். ஆனால் அந்த சபையில் தீர்மானம் கொண்டு வர விடாமல் இந்தியா தடுக்கிறது.

புலிகளை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என்று ராஜபக்ச கூறுகிறார். ஆனால் விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது. அவர்களை நெருங்கக் கூட முடியாது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இங்கு இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். கோவை மாவட்டத்தில் ம.தி.மு.க. பலவீனமடைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள். ஆனால் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

பிள்ளை பிடிக்கிற கூட்டம் போல ஆட்களை பிடிக்கிறார்கள். 1993-ல் எங்களோடு வந்தவர்களுக்கு பதவி தருகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை. என்னை கள்ளத்தோணியில் சென்று வந்தவன் என்றும், உயிர் பிச்சை கொடுத்ததாகவும் முதல்-அமைச்சர் சொல்கிறார். ஆனால் உண்மையில் என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான்.

சுற்றி நின்று தாக்குதல் நடத்திய போதிலும் என்னை பாதுகாத்து அனுப்பி வைத்தவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களில் சரத் என்கிற பீட்டர் கென்னடி என்பவரும் ஒருவர். அவருடைய பெயரை தான் நாஞ்சில் சம்பத் தனது மகனுக்கு வைத்துள்ளார்” தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்தினர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தங்கியுள்ளார்களே. அவர்களை எப்படி அனுமதித்தீர்கள்? என்று இலங்கை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு இலங்கையின் சுகாதார மந்திரி பதில் அளிக்கையில், ‘விடுதலைப்புலிகளை இந்த அளவுக்கு அழித்ததற்கு காரணம் இந்திய இராணுவம் தான். எனவே நாம் கட்சி வித்தியாசமின்றி இந்திய இராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்று பேசுகிறார்.

இந்த கொடுமையை தான் நாஞ்சில் சம்பத் பேசினார். இதற்காக தான் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் நாஞ்சில் சம்பத்தின் குடும்பத்தினர் நேற்று அவரை பார்க்க கோவை சிறைக்கு வந்துள்ளனர். ஆனால் நாஞ்சில் சம்பத்தை பார்க்க அவர்களை அனுமதிக்கவில்லை.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படும் அளவுக்கு நாஞ்சில் சம்பத் என்ன பேசினார்? இந்திய இறையாண்மைக்கு எதிராக நாஞ்சில் சம்பத் பேசியதாக அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இலங்கையில் தனி ஈழம் வளரும். தமிழ் ஈழம் வளரும் என்று பேசினார். இது தேச துரோக குற்றமா?
இந்திய இறையாண்மைக்கு எதிராக நாஞ்சில் சம்பத் பேசவில்லை. ஈழ தமிழர் பாதுகாப்புக்காகத் தான் அவர் பேசினார். தமிழர்களை கொன்று குவிக்கும் துரோகம் தொடர்ந்தால் நாட்டின் ஒருமைப்பாடு துண்டு துண்டாக சிதறும். தமிழ்நாட்டின் தூதரகம் டெல்லியில் அமைய வேண்டிய நிலையும் ஏற்படும் என்றும் அவர் பேசினார். இதில் தவறில்லை. அவர் கூறிய கருத்தை தான் நானும் கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

ஈழ தமிழர்களை கொன்று குவிக்கும் நிலை நீடித்தால், இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுதம் கொடுக்கும் நிலை நீடித்தால், இந்திய ஒருமைப்பாடு துண்டு துண்டாக உடையும்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நான் குரல் கொடுக்கிறேன். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஆதரவு குரல் ஒலிக்கும். எனவே நாஞ்சில் சம்பத், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இல்லையென்றால் நாங்கள் எல்லோரும் நாஞ்சில் சம்பத்தாக மாறுவோம். நாஞ்சில் சம்பத்தை வெளியே கொண்டு வருவதற்காக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வோம். என்று ஆக்ரோசமாக வைகோ பேசினார்.

No comments: