Saturday, March 14, 2009

வேலுசாமி அளித்த சாட்சியம்:

வேலுசாமி அளித்த சாட்சியம்:

1991 மே 24-ம் தேதியோடு தமிழகத் தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருந்தது. அதற்கு 3 நாட்களுக்கு முன்பு மே 31-ம் தேதி ராஜீவ் திருப்பெரும் புதூரில் கொலை செய்யப்பட்டார்.

மே 19-ம் தேதி தில்லியிலிருந்து தமிழகம் வந்த சுப்ரமணியசாமி திருப்பெரும்புதூர் பகுதிக்குத்தான் சென்றார். திருப்பெரும்புதூர் வழியாக நாங்கள் காஞ்சிபுரம் சென்று, பகல் உணவை முடித்துக் கொண்டு வாலாஜா பாத்துக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு, மீண்டும் காஞ்சிபுரம் திரும்பி கூட்டம் பேசிவிட்டு, பிறகு திருத்தணி, பள்ளிப்பட்டுக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு வேலூர் திரும்பினோம்.

அடுத்த நாள் 20-ம் தேதி சேலம், ஆத்தூர் சென்றுவிட்டு நான் விடை பெற்று திருச்சி சென்றுவிட்டேன். அடுத்து 21-ம் தேதி காலை சுப்ர மணியசாமி, விமானம் மூலம் டில்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். 21-ம் தேதி பகலில் டில்லியில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. எனவே, அதை முடித்துக் கொண்டு 22-ம் தேதி சென்னை வந்து திருச்சி வழியே மதுரைக்குச் செல்கிறேன் என்று என்னிடம் சுப்ரமணியசாமி பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார்.

21-ம் தேதி இரவு தான் ராஜீவ் கொலை செய்யப்படுகிறார். அன்று சுப்ரமணியசாமி நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. 21-ம் தேதி காலையில் அவர் திட்ட மிட்டபடி டில்லி செல்லவில்லை. அவரின் அன்றைய அனைத்து நடவடிக்கைகளும் மர்மமாகவே இருந்தன. அன்று, அவர் யாரை யாரைச் சந்தித்தார் என்ற விவரங்களும் ரகசியமாகவே இருக்கின்றன. 21-ம் தேதி காலை அவர் சென்னை விமான நிலையம் அருகே உள்ள டிரைடென்ட் ஓட்டலில்தான் தங்கியிருந்தார். சென்னையில் அவர் ஏன் மர்மமாகத் தங்கினார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. தன் கட்சியின் நெருங்கிய தோழர்களுக்குக் கூட தெரிவிக்காமல் அவர் தில்லி பயணத்தை ரத்து செய்தது ஏன் என்பது மர்மமாகவே இருக்கிறது.

நான் 21-ம் தேதி காலை - தில்லிக்கு சுப்ரமணியசாமியின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண் டேன். அவர் சென்னையில்தான் இருப்பார் என்று அவரது மனைவி கூறினார். பிறகு கட்சிப் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்தேன். சுப்ரமணியசாமி எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.

21-ம் தேதி காலை தில்லிக்கு விமானம் மூலம் புறப்படப் போவதாகக் கூறிய சுப்ரமணியசாமி அன்று காலையில் தில்லி பயண டிக்கெட்டை ரத்து செய்தார். பிறகு சென்னையி லிருந்து பெங்களூருக்கு திருப்பெரும் புதூர் வழியாக காரில் செல்ல வேண்டிய அவசியமென்ன? இதைத் தனது முக்கியத் தோழர்களுக்குக்கூட தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?

பெங்களூரில் யாரைச் சந்திக்க அவர் அவசரமாகப் போனார்? ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பெங்களூரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டிருக்கலாம். ராஜீவ் கொலைக்குப் பிறகு கூடி அவர்கள் பெங்களூர் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கலாம். இந்த நிலையில் பெங்களூருக்கு யாரையோ அவசர மாகச் சந்திக்க சுப்ரமணியசாமி சென்றிருக்கிறார்.

அப்போது சுப்ரமணியசாமி மத்திய அமைச்சர். அமைச்சர் பதவிக்குரிய பல்வேறு வசதிகள் அவருக்கு உண்டு. மே 21-ம் தேதி அவருக்காக செய்யப் பட்ட ஏற்பாடுகள் என்ன? பாது காப்புக்காக செய்யப்பட்ட வசதிகள் என்ன? இது பற்றிய ஆவணங்களை தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து ஜெயின் கமிஷன் பெற வேண்டும்.

21-ம் தேதி இரவு 10.25 மணிக்கு நான் சுப்ரமணியசாமி வீட்டுக்குத் தொலை பேசியில் பேசினேன். அப்போது ராஜீவ் கொலை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. யாருக்குமே எதுவுமே தெரியாது. 23-ம் தேதி அவரது திருச்சிப் பயணத்தை உறுதி செய்து கொள்ளவே நான் தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்த சாமி, என் குரலைக் கேட்டதும், மிக சர்வ சாதாரணமாக, ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியைச் சொல்லத்தானே போன் செய்தீர்கள்? என்றார். நான் அதிர்ந்து போனேன். வெளி உலகத்துக்குத் தெரியாத தகவல் - இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது?

சிறிது நாட்கள் கழித்து - அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்த திருப்பெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகரை நலம் விசாரிக்க நானும் சாமியும் போனோம். மரகதத்துக்குத் துளி காயம் கூட ஏற்படவில்லை. மரதகம் அம்மாள் பாசாங்கு செய்வது போலவே எனக்குத் தோன்றியது.

மரகதம் பற்றி பேச்சு எடுத்தபோது - அறையில் சொல்கிறேன் - நிறைய விஷயம் இருக்கு என்றார் சாமி. திருப் பெரும்புதூரில் - பொதுக் கூட்டத் துக்குத் தேர்வு செய்த இடம் மரகதத்துக்கேத் தெரியாது. அவருக்கே தெரியாமல் சிலர் தேர்வு செய்து விட்டனர். அது சதிகாரர்களுக்குச் சாதகமாகிவிட்டது என்றார் சாமி. இந்த அளவுக்குத் துல்லியமான தகவல்கள் சாமிக்கு எப்படித் தெரிந்தன?

பிரதமர் சந்திரசேகருக்குத் தெரியும் முன்பே எனக்கு ராஜீவ் மரணச் செய்தி தெரிந்துவிட்டது என்று சுப்ர மணியசாமி கூறியிருப்பதை கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- என்று சுப்ரமணியசாமியுடன் மிக நெருக்கமாக உடனிருந்த திருச்சி இ.வேலுசாமி தனது சாட்சியத்தில் கூறி இருக்கிறார்.

ஜெயின் கமிஷன் முன்பு தரப்பட்ட இந்த சாட்சியமும் கமிஷன் தந்துள்ள பரிந்துரையும் சுப்ரமணியசாமி மீது விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

No comments: