Saturday, May 2, 2009

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய ஆயுதமா? ராணுவ வாகனங்கள் மறிப்பு

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருவது தமிழர் களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கி யுள்ளது. இந்த நிலையில்,கோவை வழியாக 80 லாரிகளில் ஆயுதங்கள் கொச்சி வழியாக கொழும்புக்கு அனுப்பப் படுகிறது என்ற செய்தி கடந்த 2 ஆம் தேதி பரவியது. செய்தியறிந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், ம.தி.மு.க.வினர், தமிழின உணர்வாளர்கள், பொது மக்கள் திரண்டு வாகனங்களைத் தடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பெரம்பலூர் லட்சுமணன், கணபதி புதூர் பொன்சந்திரன், அவரது மனைவி தனலட்சுமி, மணியக்காரம்பாளையம் கிருஷ்ணசாமி, ஆவாரம்பாளையம் விக்னேஷ், சண்முக சுந்தரம், காளப்பட்டி அம்பேத்கர், ஜெயப் பிரகாஷ், ம.தி.மு.க.வை சேர்ந்த பீளமேடு புதூர் முருகேசன், பீளமேடு சந்திரசேகரன், நீலம்பூர் பிரபாகரன், ராசிபாளையம் ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடுதல், பணி செய்ய விடாது தடுத்தல், பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல் ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. 13 பேரும் பல்லடம் நீதிபதி முன் நேர் நிறுத்தப் பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

கோவை, சேலம், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் கழகத்தினரை போலீசார் வலை வீசி தேடி வரு கிறார்கள். கோவை - நீலாம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது. 84 லாரிகளில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றப்பட்டு சாலை யில் வரிசையாக அணி வகுத்துச் சென்றதைக் கண்ட தமிழர்கள் கொதிப் படைந்தனர். ஒவ்வொரு நாளும் ஈழத்தில் இந்தியாவின் ஆயுதங்களைப் பயன்படுத்தி தமிழர்களை கொத்து கொத்தாக பிணமாக்கி வருகிறது சிங்கள ராணுவம். கொதித்துப் போய் நிற்கும் தமிழர்கள் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாது - தமிழகத்திலிருந்து கொச்சி வழியாக - ராணுவத்தினர், ஆயுதங்களைக் கொண்டு போவது வழக்கமாக இருந்து வருகிறது.

கோவை அருகே உள்ள மதுக்கரை ராணுவ முகாமைச் சார்ந்த ராணுவத்தினர், அய்தரா பாத்தில் பயிற்சியை முடித்து கொண்டு, கோவை திரும்பியதாக ராணுவத் தரப்பில் கூறப்பட்டாலும், அந்த லாரிகளில் வெடி குண்டுகளும், ஏவுகணைகளும் இருந்தன. அவைகளால் ஆத்திர மடைந்த பொது மக்கள் வெளியே தூக்கி வீசி வாகனங்களின் சக்கரங் களை சேதப்படுத்தியதாக செய்திகள் கூறுகின்றன. செய்தியறிந்த கழகப் பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் விரைந்தார்.

தோழர்களும் பொது மக்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், ஆயுதங்களை வழங்கும் இந்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டு வாகனங்களை மறித்தனர். பின்னால் வந்து கொண்டிருந்த ராணுவ வீரர்கள் சூலூரில் லாரிகளை நிறுத்தி விட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து இரும்பு கம்பிகளால், எதிர் பட்ட எல்லோரையும் தாக்கினர். காவல்துறையினர், ராணுவத் தினரைத் தடுத்து, அப்பாவி மக்களை தாக்காதீர் என்று கேட்டும், ராணுவத்தினர் தாக்கு தலை நிறுத்தவில்லை.

இராணுவத்தினர் தாக்குதலில் சன் தொலைக்காட்சி செய்தியாளர் அவிநாசிலிங்கம் மண்டை உடைந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொய்ச் செய்திகளை ஒளிபரப்பி வரும் சன் தொலைக்காட்சி, தனது செய்தியாளர் ராணுவத்தால் தாக்கப்பட்டதைக்கூட ஒளிபரப்பவில்லை. ஈழத் தமிழர் மீதான இனப் படுகொலை தொடர்பான செய்திகளை முழுமையாக இருட்டடித்து, சிங்கள ராணுவத்தை மக்களின் கோபத்திலிருந்து பாதுகாத்து வரும் சன் தொலைக்காட்சி - இதிலும், இந்திய ராணுவத்துக்கு ஆதரவாகவே செய்திகளை ஒளிபரப்பியது.

செய்தியாளர் ராணுவத்தால் தாக்கப் பட்டதை எதிர்த்து கோவை பத்திரிகை யாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டச் செய்தியையும் சன் தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்து விட்டது. இந்த வழக்கு விசாரணையை உள்ளூர் காவல் துறையினர் மேற் கொள்ள வேண்டுமே தவிர ராணுவத் தினரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று பத்திரிகையாளர்கள் வற்புறுத்தினர்.இதற்கிடையே ஆயுதம் ஏந்தி வந்த இரண்டு ராணுவ லாரிகள் கொச்சி துறைமுகம் வந்து சேர்ந்துள்ளதாக கேரள ஏடுகள் செய்தி வெளியிட் டுள்ளன.
தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், ராணுவத்தினர் ஒருவரிடம் கேட்ட கேள்விக்கு, கொச்சி துறைமுகம் போவதாகக் கூறியிருப்பது - வீடியோ காட்சிகளாகப் பதிவாகியுள்ளது. மக்கள் தொலைக்காட்சி இதை ஒளிபரப்பியது.இராணுவத்துக்கு எதிராக தமிழர்கள் நடத்திய போராட்டம் தமிழகத்தில் பேரெழுச்சியை உருவாக்கியுள்ளது. உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் - தமிழகத்தில் உருவாகியுள்ள எழுச்சியைப் பாராட்டி வரவேற்கிறார்கள்.





No comments: