Sunday, May 24, 2009

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

காங்கிரஸ் கூட்டணி 261 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 157 இடங்களையும், இடதுசாரிகள் உருவாக்கிய மூன்றாவது அணி 59 இடங்களையும், லாலு - பஸ்வான் - முலாயம் சிங்கின் சிங்கின் 4வது அணி 27 இடங்களையும் பிடித்துள்ளது. தமிழ் நாட்டில் புதுவை உட்பட தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஜனநாயகம் என்பது இந்தியாவில் பார்ப்பன நாயகமாகவே இருக்கிறது என்றார் பெரியார். பார்ப்பனியம் எப்போதுமே சமத்துவத்திற்கான வாய்ப்புகளை மறுக்கும்; தமிழ்நாட்டில் இப்போது நடந்து முடிந்திருக்கிற தேர்தல், ஜனநாயகத்தை விலைபேசி வாங்கிய தேர்தலேயாகும். இது தமிழ் நாட்டில் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் தெரிந்த செய்தி தான். வாக்காளர்களுக்கு அடையாளச் சீட்டுகள் வழங்கப்படுவதுபோல், தி.மு.க. அணி பணத்தை சிவகாசியில் அச்சடிக்கப்பட்ட கவர்களில் போட்டு வழங்கியது. வழமையாக 65 சதவீத வாக்குகள் பதிவாகும் தேர்தலில், இம்முறை 76 சதவீதம் வாக்குகள் பதிவானதற்கான ‘ரகசியம்’ இதுதான். 10 சதவீத வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டு வெற்றிகளை தட்டிப் பறித்துள்ளார்கள்.
தேர்தல் நேர்மையாக நடந்தது என்றோ, வாக்குகளுக்கு பணம் தரவில்லை என்றோ தி.மு.க. கூட்டணி வெளிப் படையாக அறிவிக்கவே முடியாது. அப்படி அறிவித்தால் மக்களே சிரிப்பார்கள். அரசு அதிகாரங்கள் முறைகேடாகப் பயன் படுத்தப்பட்டன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், அதிகாரிகள் முழு ஒத்துழைப்போடு 25 சதவீத கள்ள ஒட்டுகள் போடப்பட்டன. ஓட்டுப் பதிவு எந்திரங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. கரூர் தொகுதியில் பெண்கள் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் குடும்பத்தினர் பதிவு செய்த வாக்கு எந்திரத்தில் எண்ணிக்கையில் இல்லாமல் போயிருக்கிறது.
எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த பெண்களை காவல்துறை கைது செய்துள்ளது. வைகோ போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் எண்ணிக்கையை விட 22000 வாக்குகள் கூடுதலாக விழுந்திருக்கும் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. ப. சிதம்பரம் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றுவிட்டதாக பி.டி.அய். செய்தி நிறுவனம். அறிவித்த பிறகு முடிவுகள் அறிவிப்பது நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, இறுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அணியினர் வென்ற இடங்களில் அதிகாரிகள் வெற்றி பெற்ற சேதியை அறிவிப்பதற்கே நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர்.
காங்கிரசுக்கு எதிர்ப்புப் பரப்புரை நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே, கழகத்தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், ம.தி.மு.க. பிரச்சார செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தி.மு.க. ஆட்சி கைது செய்தது. ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளை விளக்கிடும் பெரியார் திராவிடர் கழகம் தயாரிந்த குறுந்தகட்டை, தேர்தல் ஆணையம் தடை செய்ய மறுத்த நிலையில், காவல்துறை, அதை ஒளிபரப்ப தடை செய்ததோடு, குறுந்தகடுகளை விநியோகித்தற்காக பெரியார் திராவிடர் கழக ஈரோடு மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன், கோவை மாநகர கழகத் தோழரும், பெரியார் படிப்பக பொறுப்பாளருமான கதிரவன் ஆகியோரை தேச விரோத சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்தது.
கடந்த மூன்று வாரங்களாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கழகத் தோழர்களின் வீடுகளில் காவல் துறையினர் நள்ளிரவில் புகுந்து சோதனைகளை நடத்தினர். பெரியார் திராவிடர் கழகம் தயாரித்த ஈழத் தமிழர் படுகொலைக் காட்சிகளை சித்தரிக்கும் துண்டறிக்கைகளை வழங்கவும், காவல்துறை மறுத்ததோடு துண்டறிக்கை வழங்கிய தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மத்திய சென்னை தொகுதியில் துண்டறிக்கைகளை வழங்கிபரப்புரை செய்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீதும் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தின் மீதும் அங்கே இருந்த பெரியார் சிலை மீதும் தி.மு.க. ஆதரவு குண்டர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு உள்ளான கழகத்தினர் மீதே தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை தாக்கியதாக பொய் வாக்குப் போட்டு காவல்துறை கைது செய்தது. இனி தேர்தல் என்றால் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்ற மிக மேசாமான முன் உதாரணத்தை தி.மு.க.வினர் உருவாக்கி விட்டார்கள்.
இதற்கு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் பச்சைக் கொடி காட்டி அழிக்கப்பட முடியாத களங்கத்தை ஏற்படுத்திவிட்டார். தமிழ்நாட்டில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உட்படஅனைவரும் முன் வைத்த ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்க விடாப்பிடியாக மறுத்த சோனியாவின் காங்கிரசுக்கு மீண்டும் அதிகாரத்தை தி.மு.க. கூட்டணி வழங்கி மகிழ்ச்சியடைந்து நிற்கிறது. போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று கலைஞர் கருணாநிதி தனது 6 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில அறிவித்தது உண்மைதானா என்பது மக்களுக்கே தெரியும். ஆனாலும், ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு எதிராக ஆணவத்தோடு பேசிய ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன், மணிசங்கர அய்யர், தங்கபாலு போனற் காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் இந்தத் தேர்தல் களத்தில் தோற்கடிக்கப்பட்ட மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது.
பெரியார் திராவிடர் கழகம் வலிமையாக உள்ள பகுதிகளான சேலம், ஈரோடு, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை தொகுதிகளில் கழகம் மேற்கொண்ட தீவிர பரப்புரையால் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளதை குறிப்பிட விரும்புகிறோம். சென்னையில் காவல்துறை கழகத்தினரின் பரப்புரையை அடக்குமுறைகளால் முடக்கிவிட்டது. தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் கிராமங்களிடையே ஈழத்தமிழர் பிரச்சினை கொண்டு செல்லப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் பாரதிராஜா, சீமான், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட இயக்குனர்கள் மேற்கொண்ட பரப்புரை இயக்கம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெரியார் திராவிடர் கழகம், தமிழின உணர்வாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மேற்கொண்ட தீவிரமான பரப்புரைக்கு கிடைத்த வெற்றியே காங்கிரஸ் தலைவர்களின் தோல்விக்கு காரணம். தி.மு.க. - காங்கிரஸ் அணி வெற்றி பெற்றுவிட்டது என்பதாலேயே தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்கான ஆதரவு உணர்வுகள் மங்கிவிட்டதாக கருதுவது தப்புக்கணக்கேயாகும்.
அந்த உணர்வுகள் அப்படியே நீடிக்கின்றன. தேர்தல் நாடகம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்ற அரசியல் சமூக சக்திகள் மரணத்தோடு போராடிக் கொண்டு எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களையாவது காப்பாற்றிடுமாறு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இட்லர் நடத்திய இனப் படுகொலைகளையும் மிஞ்சிவிட்டது இராஜபக்சேயின் இனப் படுகொலை. இதற்கு முழு ஆதரவு வழங்கிய இந்தியாவின் துரோகத்தை வரலாறு ஒரு போதும் மன்னிக்கப் போவது இல்லை. இதை நியாயப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது இல்லை என்பதால், இனியாவது தமிழர்களைக் காப்பாற்ற தி.மு.க.வினர் முன்வரவேண்டும். தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து அதை வலியுறுத்தினால்தான், மக்கள் மன்றம் அந்த அம்மையாரின் ஈழத் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை நம்பும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அத்துடன் - தேசிய கட்சிகளை மாநிலக் கட்சிகள் வளர்த்து விடுவது தமிழர்களுக்கு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முறைகளில் ஏற்கனவே வெகு மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். நடந்து முடிந்த தேர்தல் இதை மேலும் உறுதியாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

No comments: