Friday, May 15, 2009

வன்னியில் இறுதிக்கட்ட போரை சிறீலங்கா ஆரம்பித்திருப்பதால் பாரிய மனித அவலம் - மக்களைக் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

வன்னியில் சிறீலங்கா படையினர் தமது முழுப்படைக்கல கூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

ஆட்டிலறி எறிகணை, பல்குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், துப்பாக்கித் தாக்குதல் என்பவற்றின் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வெள்ளை பாஸ்பரஸ் (phosphorous) குண்டுகளையும் பாவித்து, மக்களை பெரும் எண்ணிக்கையில் அழிப்பதற்கு படையினர் திட்டமிட்டிருப்பதாக, படைப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முன்னோடியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறான குண்டுகளைப் பாவித்து சிறீலங்கா படையினரையும், பொதுமக்களையும் படுகொலை செய்ய இருப்பதாக, முன்னெச்சரிக்கைச் செய்தி ஒன்றை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு நேற்று வெளியிட்டிருந்தது.

சிறீலங்கா படையினரது இன்றைய மிகக்கொடூரமான தாக்குலால், ஒரு இலட்சத்து 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாரிய மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.தமது இறுதிக்கப்பட்ட படை நடவடிக்கை எனக் கூறிவிட்டே, படையினர் இன்றைய தாக்குதலை ஆரம்பித்திருப்பதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரும் என அஞ்சப்படுகின்றது.
ஏற்கனவே கொல்லப்பட்ட பொதுமக்களின் பல நூற்றுக்கணக்கான உடலங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாகவும், படுகாயமடைந்த மக்களிற்குரிய மருத்துவ உதவிகளை வழக்க முடியாது பதுங்ககழிகளுக்குள் அனைவரும் முடங்கிக் கிடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அனைத்துலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க முன்னரும், இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னரும் வன்னியிலுள்ள மக்களை முற்றாகத் துடைத்தழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், சிங்களப் படைகள் மிகக்கொடூரமான தக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தடுத்து பாரிய மனிதப் பேரவலத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஒருங்கிணைந்து போராடி, அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வன்னி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: